
நனைந்த ஆடையிலிருந்து நீர் வழிய, மனமின்றி அருவியில் இருந்து வெளியே வந்த தேவந்திக்குள் நீரின் ஈரம் உலர்வதற்குள், மனக்கவலை குடியேறியது.
மரங்கள் தூக்கத்தில் இருந்து விழிப்பதற்குள் தேவந்தி மலையிலிருந்து இறங்கத் தொடங்கியிருந்தாள். அடர் பனிக்குள் தடுமாற்றமின்றி பாதையறிந்து நடக்கும் நுட்பத்தை அவளின் பாதங்கள் அறிந்திருந்தன. அவள் கிளம்பி இரண்டு நாழிகை தூரம் கடந்தபின்தான் ஈட்டி மரத்தின் இலைகள் விரியத் தொடங்கின.
காட்டின் ஓசைகள் பெருஞ்சத்தமாகக் காதில் விழுந்தாலும், அதற்குள் கலந்திருக்கும் சிற்றொலிகளைப் பிரித்தறிவாள் தேவந்தி. மரங்கள் தூக்கச் சடவில் இருந்து மீளும் தருணத்தின் நுண்ணொலி அவளுக்கு நன்கு பரிச்சயம். மரங்கள் விழித்தெழும் நுண்ணொலியை உணர்ந்தவுடன் முதல் குரலை எழுப்பியது கரிச்சான். அதன் குரலில் காடு தன் விடியலை அறிவித்தது. அக்காக்குருவியின் இனிமையான சீழ்க்கையொலியில் உயிர்கள் தம் உறக்கத்தை உதறி, இயக்கத்திற்குத் தயாராகும் இந்த அற்புதத் தருணத்தில் வனத்தின் பேரெழில் சுடர்ந்தது. வனத்தின் அடர்பச்சைக்கு இடையில் அக்காக்குருவியின் கருநீல வண்ணமும் அதன் நெற்றியில் துலங்கும் இளநீலக் கீற்றும் அபாரமான நிறச்சேர்க்கையாகத் தெரிந்தன.
வேறு வேறு குரல் மாற்றிப் பேசும் நாகணவாய்களின் பேச்சொலியால் தேவந்திக்கு நான்கைந்து பெண்களுடன் பேசிக்கொண்டு நடப்பதுபோலவே இருந்தது. குளிரைப் பொருட்படுத்தாமல் புதர்களுக்குள் இரை தேடத் தொடங்கிவிட்ட பெட்டைகளைச் சீண்டி அழைத்தன, உறக்கம் தெளியாத காட்டுச் சேவல்கள். இருவாச்சியின் வல்லிசையை வீழ்த்தியது வால்கரிச்சானின் மெல்லிசை. சிவலை நிறத்திலிருந்த முக்குறுணி, தன் வெள்ளை வயிற்றை உலுக்கிவிட்டுக்கொண்டு எழுந்தது. மணியோசை போன்ற அதன் குரல், கண்ணகி அம்மையின் கோயில் மணியோசையைப் போலவே காதில் விழுந்தது தேவந்திக்கு.
புள்ளினங்களின் சோர்வறியாச் சுறுசுறுப்பை தேவந்தி விரும்புவாள். மரங்களிலோ புல்வெளிகளிலோ ஓய்ந்துபோய் அமரும் பறவை ஒன்றையும் அவள் பார்த்ததில்லை. சிறகுள்ளவற்றுக்கு உடல் சுமையும் இல்லை; மனச் சுமையும் இல்லை. சிறகில்லா உயிரினங்களுக்குத்தான் சுமைகள் எல்லாம்.
நாங்களும் எழுந்துவிட்டோம் என்று காடு அதிரப் பெருங்குரலில் கூக்குரலிட்டன கருங்குரங்குகள். ஒருமுறை காடு அதிர்ந்து அமைந்தது. கருங்குரங்குகளின் சத்தத்தில் அப்போதுதான் கண்ணசந்த காட்டுப்பூனை, மரநாய், முள்ளம்பன்றி, கீரி உள்ளிட்ட இரவாடிகள் லேசாக விழித்துப் பார்த்து மீண்டும் அசந்தன. புற நிகழ்வுகளைப் பொருட்படுத்தாமல் காட்டுப் பன்றிகள் வேகவேகமாய் மண்ணைக்கீறி, கிழங்குகள் நோண்டிக்கொண்டிருந்தன.
தேவந்திக்கு இருளிலும் பாதையோரத்தில் கும்பலாக நின்றும் படுத்துமிருந்த கடமான்களும் காட்டு மாடுகளும் தெரிந்தன. பாவம், புலிகள் இருக்கும் இக்காட்டில் ஒவ்வொரு இரவும் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதுதான் இவற்றின் முதல் வேலை. தினம் அந்தி சாயத் தொடங்கியவுடன் மான்களும் காட்டுமாடுகளும் அடர்காட்டிலிருந்து வெளியேறி, காட்டின் ஓரங்களுக்கு இடம் பெயர்ந்துவிடும். விடிந்ததும் அந்த இரவில் உயிர்பிழைத்த நிம்மதியில் நீர் நிலையை நோக்கிப் பாய்ந்தோடும்.
தேவந்தி வேகநடை நடந்தாள். யானைகள் அவ்வழியில் சற்றுமுன்தான் கடந்திருந்தன. வழியெங்கும் சாணம் இருந்தது. சாணத்தில் இருந்த பசும்புல்லின் வாசம் காற்றில் கலந்திருந்தது. இளஞ்சூட்டில் இருந்த யானைச் சாணத்தின்மேல் அதிகாலைக் குளிருக்கு இதமாக, தட்டான்கள் அமர்ந்திருந்தன.
பாறையொன்றின்மேல் ஏறி நின்று சுற்றிப் பார்த்தாள். கருப்பைக்குள் இருக்கும் குழந்தை போல், மேகங்களுக்குள் மலை வெண்படலம் சூழத் தெரிந்தது. புகையும் வெண்பனியும் சூழ்ந்திருந்த அதிகாலையில் சலசலவென்று கீழிறிங்கிய சிறிய நீரோடையைப் பார்த்தாள். பார்ப்பவர்களைச் சிறு குழந்தையாக்கித் தன்னை நோக்கி ஈர்க்கும் வல்லமை கொண்டதல்லவா நீர்? தேவந்தி நீரோடையை நோக்கிப் பாய்ந்தாள்.

சில நாழிகைகளுக்கு அவள் மனத்துயரம் மறந்து இயற்கையின் அங்கமானாள். சிதறிய நீர்த்திவலைகளை மேலும் சிதறடித்து, நீருக்குள் திவலையாகப் புரண்டெழுந்தாள். அதிகாலையின் குளிரை நீரோடையின் சில்லிப்பு விரட்டியது.
நனைந்த ஆடையிலிருந்து நீர் வழிய, மனமின்றி அருவியில் இருந்து வெளியே வந்த தேவந்திக்குள் நீரின் ஈரம் உலர்வதற்குள், மனக்கவலை குடியேறியது.
செல்லும் காரியமென்ன, நீராடி நேரம் கடத்திவிட்டோமே என்று தன்னையே கண்டித்தபடி, கீழே இருந்த மூங்கில் கம்பைக் கையிலெடுத்துக்கொண்டு விரைந்தாள்.
சின்னஞ்சிறு புல்வெளிகளைக் கடந்தவளுக்கு வலப்புறம் அதே நீரோடை விரைந்து சென்றது. ‘தான் தலை நனைத்த தண்ணீர் இப்போது கால் நனைக்குமிடத்திற்கு வந்துவிட்டதே’ என்றெண்ணியபடி சிற்றோடையாய்ப் பெருகிய நீரினைக் கடந்தாள்.
சாலையோரத்தில் குளிர் அணுகாமல் தடுத்தாட்கொள்வதுபோல் மயிலொன்று தோகை விரித்து நின்றிருந்தது. அருகில் சென்ற தேவந்தியை மயில் பொருட்படுத்தவில்லை. மயிலின் கழுத்தில் ஒளிர்ந்த ஆழ் நீலத்தை உற்றுப்பார்த்தவளுக்கு, மனத்தின் கனம் குறைந்தது. நீலம், கவலை குறைக்கும் மாமருந்து.
சிற்றோடை வலப்புறத்தில் இருந்து இப்போது இடப்புறத்தில் விரைந்தோடியது. வழி முழுக்க இடமும் வலமுமாகக் காட்டை அளைந்து செல்லும் நீரோடையின் இயல்பை வியந்தபடி விரைந்தாள் தேவந்தி.
பனி விலக விலக தேவந்தியின் முன்னால் நீண்டிருந்த பாதை துலங்கியது. அந்தியில் மலரத் தொடங்கிய வெண்நிறப்பூக்களெல்லாம் இந்த அதிகாலையில் உதிரத் தொடங்கியிருந்தன. அந்திக்கு மணமே வெண்பூக்களின் வாசம்தானே? வெள்ளை வெளேரென்று பாதையில் வெண்பட்டை விரித்ததுபோல் காடு மணந்திருந்தது. பாதை ஓரங்களில் இருந்த செடிகளில் செங்காந்தள் பூக்கள் இதழ் விரியத் தொடங்கியிருந்தன. அதிசயம் என்று சொன்னால் அது இயற்கைதான். பூமியை நோக்கி இரவு இறங்கும்போது, வெள்ளைநிறப் பூக்களெல்லாம் மலர்வதும், பகலில் வண்ணப்பூக்கள் மலர்வதும் எவ்வளவு பெரிய அதிசயம். இரவில் வெண்மைதான் துலங்கும். பகலில் வண்ணங்கள்தான் துலங்கும். சின்னச் சின்ன நுட்பத்திலும் பேரெழிலைத் தவழவிடும் இயற்கையை வழிநடத்தும் பெருந்தெய்வம்தான் யாரோ? தேவந்தி வியந்தபடி நடந்தாள்.
கையில் மூங்கிலுடன் சின்னச் சின்னப் புதர்களையும் புற்களையும் செடிகொடிகளையும் விலக்கி, தாண்டிச் சென்றாள். மானொன்று தாவிச் செல்வதுபோல் தேவந்தியின் தாவல் இருந்தது.
விடியல் இயற்கைக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் தனித்த சோபை தருகிறது. இரவின் நிச்சலனமும் தூக்கமும் முகத்தில் நாள் முழுக்கப் படிந்திருக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பின் ரேகைகளைத் துடைத்துவிடுவதால் விடியற்காலை முகம் பளிங்குபோல் ஒளிர்கிறது.
இன்றோ, தேவந்தியின் பேரழகு முகத்தில் நிலவினைத் தழுவிச் செல்லும் கருமேகங்கள்போல் குழப்பங்கள் சூழ்ந்தபடியிருந்தன. பூஞ்சாறு அரசர் வந்து சென்றதில் இருந்து அவளால் ஓரிடத்தில் நிற்க முடியவில்லை. அப்போதே எதிர்மலைக்குச் செல்ல அவள் கால்கள் அவசரப்பட்டன. எவ்வளவு துரித நடையென்றாலும் ஒரு பகல் பொழுது தேவைப்படும். இரவில் நடுக்காட்டில் தங்குவதில் அவளுக்கொன்றும் பயமில்லை. காட்டின் குளிரைத் தாங்க முடியாது. மரக்குடிலுக்குள் முடங்கினால்தான் நரம்பை முடக்கும் குளிரைத் தாங்க முடியும்.
காடுதான் ஆகச் சுதந்திரமான இடம். யாரும் யாருடைய சுதந்திரத்தையும் எடுத்துக் கொள்ளவும் முடியாது; தலையிடவும் முடியாது. மரங்களும் விலங்குகளும் அவரவர் இடத்தில் இருந்துகொள்கின்றன.
தேவந்தியின் அருகிலேயே வனவிலங்குகள் கடந்து சென்றாலும் அவளும் ஒன்றும் செய்ய மாட்டாள். விலங்குகளும் ஒன்றும் செய்யாது. ‘அவரவர் வழியில் அவரவர்’ என்பதுதான் காட்டின் விதி.
தேவந்தியின் பாதங்கள் முன்னால் நடக்க, பின்னால் வெளிச்சம் கூடிக்கொண்டு வந்தது.
கண்ணகி கோயிலில் இருந்து மேற்கு நோக்கி மலையிறங்கத் தொடங்கிய தேவந்தி, மன்னான்கள் குடியிருப்பை நோக்கி நடந்தாள். மன்னான் களின் காணியைச் சென்ற டைந்தபோது உச்சியிலிருந்து சூரியன் விழத்தொடங்கி யிருந்தது.
தேவந்தியைப் பார்த்தவுடன் வணங்கிய காணிப் பெண்கள், ஆச்சர்யப்பட்டார்கள். ‘வருந்தி அழைத்தாலும் வராத பூசாரி அக்கா, இப்போது தங்களைத் தேடி வந்திருக்கே’ என்று.
‘‘உடையானைப் பார்க்கணும்.’’
எதிரில் இருந்த பெண்கள் வியந்து ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“எங்க காணிகிட்ட சொன்னியா அக்கா? என்ன விசயம்னாலும் காணிகிட்ட சொல்லணும். தேவைன் னாதான் அவர் உடையான் கிட்ட அழைச்சிக்கிட்டுப் போவாரு.”
“ஒரு காணியில்ல, உங்க நாப்பத்தி ரெண்டு காணிக் காரங்களும் ஒண்ணா சேர்ந்து உடையானைப் பாக்க வேண்டிய நேரம் வந்துடுச்சு.”
தேவந்தியின் பதற்றத்தைப் பார்த்த பெண்கள், அவளை அழைத்துக்கொண்டு, முத்தியம்மை* (மீனாட்சி) கோயிலுக்கு வந்தார்கள்.
கோயிலுக்கு முன்னால் இருந்த பாறையில் உட்கார்ந்திருந்த குப்பான் காணி, தேவந்தியையும் மன்னான் பெண் களையும் பார்த்து எழுந்து வந்தான்.
“கும்பிடறேன் காணி.”
“பூசாரி அக்காவா? கும்பிடறேன். அக்கா காணியைத் தேடி வந்திருக்கு?”
“உடையான்கிட்ட கூட்டிக் கிட்டுப் போ.”
“உடையான்கிட்டயா?”
“குப்பான், கேள்வி கேக்காத. இருவது மைல் நடந்து வந்திருக் கேன்னா சும்மாவா? உடையான் எங்க?”
தேவந்தியை மலைக் காணிகள் அனைவரும் அறிவார்கள். மன்னான்களில் ஆறேழு காணிகளுக்குக் கண்ணகி அம்மைதான் குலதெய்வம். பொங்கல் வைப்பதற்கும், குழந்தைகளுக்கு முடி இறக்கவும் கண்ணகி அம்மையின் கோயிலுக்குச் செல்வார்கள். ஊரில் அம்மை போட்டாலும் வெயில் காலத்தில் உடல் கொப்புளங்கள் வந்தாலும் தேவந்திதான் மந்திரித்துவிட்டுத் திருநீறு பூசிவிடுவாள். பூசாரியான தேவந்தி, அவர்கள் எல்லாருக்குமே அக்காதான்.
“உக்காருக்கா. உடையானைப் பாத்துச் சொல்லிட்டு வரேன்.”
தேவந்தி மேல் முந்தானையை இழுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டு பாறையில் உட்கார்ந்தாள். பொழுது வெயிலேறிக் கிடந்ததில் அவளுக்கு வியர்த்தது. தலையில் வெயில் சுள்ளென்று இறங்கியது. வடக்கில் திரும்பினால் மேகம் கருக்கொண்டிருந்தது.

“மழை இறங்கிடுச்சி” என்றாள் உடன் நின்ற பெண்.
“அதான், உடம்பு வேர்த்து நனையும்போதே தெரிஞ்சிடுச்சி.”
கோழியொன்று குஞ்சுகள் பின்தொடர, தரையை மூக்கால் கீறிக் கொத்தியபடி முன்னகர்ந்தது. தாய்க்கோழியின் கால்களில் நுழைந்து முன்னோடிச் சென்றன நான்கைந்து குஞ்சுகள்.
“இந்தா, இதைக் குடி அக்கா.” மண் சட்டியை நீட்டினாள் உடன் வந்தவள்.
“என்னா இருக்கு?”
“கஞ்சிதான்க்கா. காட்டு மிளகா ஒண்ணு போட்டிருக்கேன். நல்ல ஒரப்பு. வெறும் வயித்தோடதான் வந்திருப்ப.”
தேவந்தி மறுக்காமல் வாங்கிக் குடித்தாள். வெயிலுக்கு இதமாகக் கஞ்சி உள்ளிறங்கியது.
தேவந்திக்குப் பசி, தூக்கம், உடல் சோர்வு என்று ஒன்றும் தோன்றாது. அவளின் மனம்தான் உடல். மனம் சொல்வதை உடல் கேட்கும்.
உடையானைச் சீக்கிரம் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தவளின் தலைமேல் சடசடவென்று தூறல் விழுந்தது.
“அப்பாடா...” என்று சொல்லியபடி தேவந்தியும் காணிப் பெண்கள் இருவரும் ஆசுவாசப்பட்டார்கள். மழை அவர்களின் தலையில் விழுந்து முகத்தில் வழிந்து தரையைத் தொட்டது.
மழையில் நனைந்தபடியே குப்பான் காணி வந்தான்.
“அக்கா, உடையான் கூட்டிக்கிட்டு வரச் சொன்னாரு. பூசாரி இவ்வளவு தூரம் கெளம்பி வந்திருக்குதுன்னா ஏதோ பிராந்துன்னு* (பிரச்சினை) அர்த்தம்னு உடையான் சொன்னார்.”
“நீயும்தான் ஏழு வருஷமா காணியா இருக்க. இந்தச் சுதாரிப்பு இருக்கா?”
குப்பான் காணி அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்.
“உடையான்கூடவே இருந்து காணி பட்டம் வாங்கிக்கிட்டா போதாது. வனராஜாவோட கூர்மை இருக்கணும் புத்தியில.”
“சரி, வா வா.”
“உடையானைத் தேடி என்னைக்காவது வந்திருக்கனா? இன்னைக்கு வந்திருக்கேன்னா என்னா அர்த்தம், காஞ்ச புல்லு மாதிரி கப்புனு புடுச்சிக்க வேணாமா?”
மழையில் நனைந்தபடி உடையான் வீட்டிற்கு வந்தார்கள்.
மரப்பலகைகளால் இருந்த வீட்டிற்கு வெளியே நாணல் புல்லால் ஆன கட்டில் போடப்பட்டிருந்தது. உள்ளே இருவர் உடையானைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள்.
தேவன் மன்னான், மேற்கு மலையின் நாற்பத்திரண்டு காணிகளுக்கும் அரசன். உடையான் என்று மன்னான்கள் அவரைச் சொல்வார்கள். நேரில் ஒருவரும் அவரை உடையான் என்று அழைக்க மாட்டார்கள். ராஜ வழக்கம். பாண்டிய அரசன் மான விக்கிரம ராஜா, தாயாதிகள் சண்டையில் மதுரையில் இருக்க முடியாமல், குலதெய்வம் மீனாட்சியையும் தன்னுடன் வரத் தயாராக இருந்த குடிகளையும் அழைத்துக்கொண்டு சேர நாட்டுக்கு வந்தார். பூஞ்சாறு எனும் புண்ணிய நதியான மீனாட்சியின் கரையில் அரண்மனையொன்றைக் கட்டிக்கொண்டு புதிய சமஸ்தானத்தை உருவாக்கினார். ஆதித் தோன்றலான பாண்டியர்கள் என்ற பெயர் மறைந்து, மான விக்கிரம ராஜாவின் வம்சாவளியினர் பூஞ்சாற்று அரசர்களானார்கள்.
சேர நாட்டின் மலைகளுக்குள் பாதுகாப்பாக ராஜ்ஜியத்தை அமைத்துக்கொண்ட பூஞ்சாற்று அரசர்கள், தங்களுடன் வந்தவர்களுக்கும் நிலபுலன்களைப் பிரித்துக் கொடுத்தார்கள். மீனாட்சியின் விக்கிரகத்தை முதுகில் தூக்கி வந்த முதுவான்கள், உடன் வந்த மன்னான்கள் என அனைவருக்கும் நிலங்களைக் கொடுத்துக் குடியேற்றினார்கள். பகைவர்கள் இல்லாமல், மலையின் மடிக்குள் காட்டின் செல்வத்திற்கிடையில் வாழ்ந்த மக்கள், விவசாயம் செய்து அமைதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

நாற்பத்திரண்டு மன்னான் ஜாதிகளுக்கும் அந்தந்தப் பகுதிகளை நிர்வகிக்க காணிகளை நியமித்திருந்தார்கள் மன்னான்கள். உடையானின் உத்தரவைத்தான் காணிகள் பேசுவார்கள். காணிகளால் தீர்க்க முடியாத சிக்கல்கள் என்றால் மட்டுமே உடையானைத் தேடி வருவார்கள். கடுமையான சட்டதிட்டங்களோடு இருப்பவன் தேவன் மன்னான்.
பச்சைநிறப் பட்டுத்துணியில் பரிவட்டம் கட்டிய உடையானை, இருவர் கட்டிலுக்கு அழைத்து வந்தார்கள். கறுத்த உடம்பில் இருந்த வேட்டி நிறம் மங்கியிருந்தாலும் எடுப்பாகத் தெரிந்தது.
உடையான் கட்டிலில் உட்கார்ந்தவுடன் தேவந்தி அவரை வணங்கினாள். உடன் நின்ற மன்னான் வீட்டுப் பெண்களும் குப்பானும் அவரின் பாதம் தொட்டு வணங்கினர்.
“அநுக்ரகம் உண்டாகட்டும்” என்றார் தேவன் மன்னான்.
“கண்ணகி அம்மைக்குப் பிரச்சினையா?”
“அம்மைக்கு இன்னும் என்ன பிரச்சினை மிச்சமிருக்கு?”
“கண்ணகிக்குப் பிரச்சினை என்றால்தான் நீ அந்த இடத்தை விட்டு நகர்வாயே?”
“உடையான், நேற்று பூஞ்சாற்றுத் தம்பிரான் மலைக்கு வந்திருந்தாங்க.”
தேவன் மன்னான் உடனே இரு கை குவித்து மேற்குப் பார்த்துக் கும்பிட்டார்.
“எங்களை வனராஜா ஆக்கின ராஜா அவங்க. அவர் இருக்கும் திசையைக் கும்பிட்டுக்கிறேன்.”
தேவன் மன்னான் கண்மூடி இரு கை உயர்த்தி வணங்கினார். குப்பான் காணியும் பெண்களும் மேற்குத் திரும்பி வணங்கினர்.
சில நிமிடங்கள் கழித்துக் கண் திறந்த தேவன் மன்னான், தேவந்தியைப் பார்த்தார். தொடர்ந்து சொல் என்ற குறிப்பு அப்பார்வையில் இருந்தது.
“மலையில பேரியாத்தைத் தடுத்து நிறுத்தி அணை கட்டப் போறாங்காளாம் டாமிங்க.”
“பேரியாத்தைத் தடுத்து நிறுத்தியா?”
குப்பான் பெருங்குரலில் கேட்டான்.
“ஆமாம். அணை கட்ட ஆரம்பிச்சா, கண்ணகி அம்மை கோயிலும் இருக்காதாம். அதைச் சுத்தியிருக்கிற உங்க மன்னான் வீடுங்களும் இருக்காதாம்.”
“ரெண்டு மூணு நாளாவே ராத்திரியில கூவிலான் கூவிக்கிட்டே இருக்கு. எந்தக் காணியில என்ன தீக்காரியமோன்னு நெனைச்சிக் கிட்டுத்தான் இருந்தேன்...” காணிப் பெண் ஒருத்தி சொன்னாள்.
“சும்மா இரு...” என்ற உடையான், “பூஞ்சாறு தம்புரான் சொன்னத முழுசாச் சொல்லு தேவந்தி” என்றார்.
“மல மேல அடிக்கடி டாமிங்க நடமாட்டம் இருக்குன்னு நானும் ஒண்ணு ரெண்டு வருசமா பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன். இப்போதான் காரணம் தெரியுது. பேரியாத்து குறுக்கே அணை கட்டப் போறாங்களாம்.”
உடையான் முகத்தில் யோசனை படர்ந்தது.
“ஓடற ஆத்தத் தடுக்கிறது ரொம்பப் பாவம். பேரியாறுதான் நமக்குச் சாமி. அதைத் தடுத்தம்னா பெரிய பிரளயம் வரும். ஆத்த தடுத்தம்னா வரப்போற பிரளயத்துல பெரிய அழிவு வரும்.”
“வெள்ளக்காரங்கள மேல விடாம பாத்துக்க வேண்டியது உன் பொறுப்பு. இல்லன்னா ஆயிரம் வருசமா கண்ணகி அம்மைக்கு நடக்கிற பூசை நடக்காமப் போயிடும்னு தம்புரான் சொன்னாரு. எனக்குத் தூக்கமே வரல உடையான். அதான் விடியறதுக்கு முன்னாடியே கிளம்பி வந்துட்டன். என்ன செய்யலாம்னு உடையான்தான் சொல்லணும்.”
தேவந்தி சொன்னதைக் கேட்டதும் உடையானின் முகத்திலும் கவலை படர்ந்தது.
“கண்ணகி அம்மை கோயிலோட சுத்து வட்டாரத்துல மொத்தம் ஏசாத்து* (ஏழு) காணிங்க இருக்கு. அதுல ஆறு காணிங்க மன்னான்களுக்கும் ஒரு காணி ஊராளிங்களுக்கும்னு இருக்கு. அந்த ஏசாத்து காணிங்கள வரச் சொல்லிப் பேசுறேன்.”
உடையான் சொன்னாலும் தேவந்திக்கு நிறைவு உண்டாகவில்லை.
“உடையான், இதத் தள்ளிப்போட வேணாம். இந்த மலையில இருக்க உங்க காணிங்க மொத்தப் பேரையும் வரச் சொல்லுங்க. இப்ப ஆளனுப்பினாலும் விடியறதுக்குள்ள வந்துடப் போறாங்க.”
உடையான் யோசித்தார்.
“அப்படி அவசரப்படுத்த வேணுமா?”
தேவந்தியின் முகத்தில் வேதனை படர்ந்தது.
“பூஞ்சாற்றுத் தம்புரான் அவரே கிளம்பி வந்து சொல்லிட்டுப் போறாரு. இதுல திருவாங்கூர் பெரிய சமஸ்தானத்து ராஜாவோட சூழ்ச்சியும் இருக்காம்.”
“ஆத்த தடுத்து அண கட்டுறது பெரிய பாவம். இந்தக் காட்டுல இருக்க எதையுமே தொந்தரவு பண்ணக்கூடாதுன்றதுதான் எங்க ஜாதியோட சட்டம். ஆனயோட வழித்தடத்த மறிச்சாலே அதுக்குக் கோவம் வந்து மரங்கள முறிச்சித் தள்ள ஆரம்பிச்சிடும். ஓடற ஆத்தோட தடத்த மறிச்சா என்ன நடக்கும்னு தெரியலை. பெரிய பெரிய தம்புரானுங்க சம்பந்தப்பட்டிருக்காங்கன்னு சொல்ற. என்ன செய்யறதுன்னு புரியலையே.”
உடையான் முகத்தில் குழப்பம். யோசனை. கால்நாழிகை நேரம் கழித்துச் சொன்னார்.
“பெரிய தம்புரானுங்ககிட்ட நாம மோதிக்கிட முடியாது தேவந்தி. என்ன பிரச்சினைன்னாலும் நாம நம்ம தெய்வங்ககிட்ட முறையிடறதுதான் நடைமுறை. தெய்வங்கதான் நமக்குத் துணையா இருக்கிறது. முத்தியம்மையைத்தான் நாம மதுரையில இருந்து வரும்போது கூட கூட்டிக்கிட்டு வந்தது. இந்த மலையில பாதுகாப்பா நாம இருக்கோம்னா எண்ணூறு தெய்வங்க நம்மகூட இருக்கிறதுதான் காரணம்.”
“என்ன உடையான் சொல்றீங்க” திகைத்தாள் தேவந்தி.
“பூஞ்சாற்றுத் தம்பிரான் நமக்கு எடம் கொடுத்து, குடிவச்சி, நமக்குன்னு ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கிக் கொடுத்ததுல இருந்து, நாமதான் நம்ம ராஜ்ஜியத்தைப் பாத்துக்கிறோம். அதுக்குத்தான் நம்ம முன்னோருங்க ஒவ்வொரு மலையையும் ஒவ்வொரு காணிங்ககிட்ட குடுத்ததோட, ஒவ்வொரு காணிக்கும் ஒரு தெய்வத்தையும் குடுத்திருக்காங்க. முன்னோருங்க ஒவ்வொரு தெய்வத்தைக் கொடுத்ததுக்குக் காரணம், அவங்கவங்க பிரச்சினையை அவங்கவங்க தெய்வத்துக்கிட்ட முறையிட்டுத் தீர்க்கிடணும்ன்றதுக்காகத்தான்.”
தேவந்திக்குக் கோபம் வந்தது.
“உடையான், உங்க எண்ணூறு தெய்வங்களும் இருக்கிறதுக்கு மலை இருக்கணும்ல்ல?”
“மலை எங்க போவும் தேவந்தி? அதென்ன தண்ணியா, ஓடிப் போறதுக்கு?”
“தண்ணிய நிறுத்தி வெச்சா மலை ஓடிப்போவும்தான்.”
என்ன சொல்கிறாள் என்பதுபோல் அங்கிருந்தவர்கள் பார்த்தார்கள்.
மழை ஓய்ந்திருந்தது. சூல்கொண்ட மேகத்தைக் காற்று அடுத்திருந்த மலையுச்சிக்கு இழுத்துச் சென்றிருந்தது.
நனைந்திருந்தவர்களின் உடைகள், சுள்ளென்று அடித்த வெயிலில் உலரத் தொடங்கின.
“ராஜமன்னானாகிய நான்தான் இங்கிருக்கிற எல்லா மலைக்கும் அதிபதி. ஆகாயம் எதுவரைக்கும் பரந்து விரிந்திருக்கோ அதுவரைக்கும் என்னோட அதிகாரம் இருக்கும். தெய்வத்துக்கு முன்னால இப்படிச் சொல்லித்தான் ஒவ்வொரு ராஜமன்னானுக்கும் பரிவட்டம் கட்டிவிடுவாங்க. மலைக்கு அதிபதியான எங்களை விட்டு, மலை எங்கயும் போவாது தேவந்தி. இந்த மலையும் காடும்தான் எங்க கர்ப்பஸ்தலம்.”
உரத்த குரலில் உடையான் சொன்னதும், தேவந்தி ஓடிப்போய் உடையானின் காலைப் பிடித்துக் கொண்டு காலருகில் அமர்ந்தாள்.
“கண்ணகி அம்மைக்கு அனுதினமும் பூஜை பண்றவ நான். அவளோட திருப்பாதம் தவிர மனுஷங்க யாரோட காலையும் நான் வணங்கக் கூடாது. ஆனா உன் காலப் பிடிச்சிக்கிட்டுக் கேக்குறேன் உடையான். கண்ணீரோட வந்த கண்ணகி அம்மையோட கடைசி மூச்சி இந்த மலையோட காத்துல இருக்கு. அவ தெய்வமா மாறுன புண்ணிய மலை இது. இந்த மலை இருந்தாத்தான் என் அம்மை இருப்பா. அவ பேர் நிலைக்கணும்னா இந்த மலை நிலைக்கணும். இதுக்குள்ள வேத்தாளு யாரும் வந்துடக் கூடாது. நான் காட்டுல திரியுற ஒத்தாளு. இந்த மலையோட மூச்சறிஞ்சவங்க நீங்க. இந்தக் காட்டோட ரகசியம் அறிஞ்சவங்க உங்க ஜனங்கதான். நீங்க எல்லாம் ஒண்ணாச் சேந்தாத்தான் டாமிங்கள வரவிடாம செய்யலாம்.”
தேவந்தி அழுதாள். மன்னான் வீட்டுப் பெண்களும் உடன் அழுதார்கள்.
“என்ன செய்யணும் நான், சொல்லு தேவந்தி.”
“பேரியாத்தத் தடுத்து அணை கட்டப் போறதா சொல்றாங்க. அதைச் சுத்தி ஏழு காணிங்க இருக்கு. ஒங்களோடது ஆறு. ஊராளிங்களோடது ஒண்ணு. அதுக்குள்ளதான் கண்ணகியம்மை கோயிலும் இருக்கு. நம்ம தம்புரான் சொல்றார்... ஆத்தோட வழியில இருக்கிற ஒரு இடத்தையும் விட மாட்டாங்க. சுத்தியிருக்கிற காணிங்களையும் விட மாட்டாங்கன்னு. அப்படின்னா ஏழு காணியும் போயிடும். கோயிலும் போயிடும்.”
“தம்புரான் சொல்றது சரியாத்தான் இருக்கும். ஆனா யார்கிட்ட போய், இத நிறுத்துங்கன்னு நாம கேக்கிறது?”
தேவந்திக்குத் திடுக்கிட்டது.
‘ஆமாம், யார்கிட்ட கேக்குறது?’
மனத்திற்குள் கேட்டுக்கொண்டாள்.
“தம்புரான் மலைக்குக் கீழே போறவர். நாலு பேரைப் பார்க்கிறவர். இதுக்கெல்லாம் காரணம் யார் என்னான்னு தெரிஞ்சவர். அவர் நம்மகிட்ட சொன்னா? நம்ம சொல்லக் கேக்குறது யாரு?”
தேவந்திக்குக் குழப்பம் அதிகரித்தது.
“உடையான், நீ சொல்றது சரிதான். எனக்கு வழி தெரியாது. ஆனா மலையும் ஆறும் என்னோட அம்மையும் இருக்கணும். அதுக்கொரு வழி சொல்லு.”
“மனுசங்களால முடியாதது தெய்வங்களால முடியும். அதுவும் மதுரைல இருந்து ஊழ் நம்மை விரட்டியடிச்சாலும் முத்தியம்மா நம்மள இந்த நடுக்காட்டுல காப்பாத்துறாளே, அவளே காப்பாத்தட்டும். அவெகிட்டயே சொல்லுவோம்” என்று சொன்ன உடையான், குப்பான் காணியிடம் திரும்பி, “எல்லாரும் வர்ற அமாவாசை அன்னைக்கு நேர்ச்சைக்கு அவங்கவங்களால ஆனதைக் கொடுக்கணும்னு சொல்லு. அன்னிக்குப் பூசை போடுவோம்” என்றார்.
“முத்தியம்மா...” பெண்கள் இருவரும் வானத்தைப் பார்த்து அதிர்ந்து, கூக்குரலிட்டனர். தன்னிச்சையாக இருகரங்களும் குவித்து வான் பார்த்துத் தொழுதனர்.
தேவந்தி பதறியடித்து எழுந்து நின்றாள்.
“என்னாச்சு?”
குப்பான் எழுந்து வந்து வானத்தைப் பார்த்தான். மழை குறைந்து வெளுத்திருந்த வானத்தில் கிருஷ்ணப் பருந்தொன்று வட்டமிட்டுக்கொண்டிருந்தது. தாழ்ந்த உயரத்தில் இவர்கள் இருந்த பகுதியில் சுற்றிச் சுற்றி வந்த பருந்து சிறகு அசைக்காமல் பறந்தது.
பருந்து பறப்பதைப் பார்த்த தேவந்தியும் அதிர்ந்தாள்.
“மழை பேய்ஞ்சு முடியலை. அதுக்குள்ள பருந்து நம்ம தலைக்குமேல பறக்குதே. யாருக்கு என்ன நடக்கப்போதோ?”
குப்பானும் வானம் பார்த்துக் கும்பிட்டான்.
- பாயும்