மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஏழு கடல்... ஏழு மலை... - 1

ஏழு கடல்... ஏழு மலை...
News
ஏழு கடல்... ஏழு மலை...

இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்

“மனிதனுக்கான ஆதி சாலைகளை முதலில் உருவாக்கித் தந்தவை விலங்குகளின் குளம்படிகள்தான்” - பராரிகள் -தந்தை வழி (1951 -முன்பனிக்காலம் )

மூன்றாம் ஜாமம் முடிந்து விடிந்தும் விடியாத அதிகாலை. மார்கழி. எதிரேயிருக்கும் எதையும் தெளிவாகக் காணமுடியாமல் புகைமூட்டமாகப் பனி. கரியன் மூச்சிரைக்க ஓட்டமும் நடையுமாய் அந்த மண்சாலையில் மாட்டைப் பிடித்துக்கொண்டு வேக வேகமாக நடந்து கொண்டிருந்தான். மேல் சட்டை அணியாத 17 வயது இளம் உடம்பில் குளிர் அடித்து நடுங்கியது. இவ்வளவுதூரம் வந்துவிட்ட பின்னும் இன்னும் யாரும் வருகிறார் களாவென பின்னோக்கித் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நடந்தான்.இன்னும் சிறிது நேரத்தில் விடிந்துவிடும்.. அதற்குள் சந்தைக்குள் சென்று கலந்துவிட வேண்டும். நடையை இன்னும் பெரிதாய் எட்டிப் போட்டான்.

அதிகாலை பறவைகள் கத்தத் துவங்கிவிட்டன. மண் சாலையின் வழியே சென்றால் தாமதமாகும். கரியன் மண் சாலையிலிருந்து இறங்கி ஆற்றுப் பாதைக்குள் மாட்டின் பிடிகயிற்றை கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு இறங்கினான்...

ஏழு கடல்... ஏழு மலை... - 1

கோரைகள் முடியும் இடத்தில் சலனமும், ஆர்ப்பாட்டமுமில்லாமல் பழையாறு ஓடிக்கொண்டிருந்தது. ஆழமில்லாத பகுதிக்கு வந்து நீருக்குள் இறங்கினான். நீரில் கால் வைத்ததுமே குளிர்ச்சி ஏறி உடல் சிலிர்த்தது. நீருக்குள் இறங்கி கவனமாய் நடந்தான். நான்கடி வைப்பதற்குள் அவனின் கழுத்தளவு நீர் ஓடியது. மாடு அதன் கழுத்தை எக்கியபடியே அவனோடு நடந்தது. இருவரும் நீர் சொட்ட சொட்ட ஆற்றிலிருந்து கரையேறினார்கள். களைப்பில் ஈர உடலோடு அங்கு சிறு பாறைத்திட்டில் மல்லாந்து படுத்தான். ஆற்றின் கரை தாண்டி, பத்து வயல் தாண்டிவிட்டால் மாட்டுச் சந்தை நடக்கும் திடலுக்குள் நுழைந்துவிடலாம். இப்போதுதான் அவனுக்கு ஆசுவாசமாயிருந்தது. அவன் கண்கள் செருகின பத்திருபது நிமிடம் கண் அசந்திருப்பான். சட்டெனக் கண்விழித்துப் பார்க்கையில் பொழுது தெளிந்து விடிந்துவிட்டது. அருகில் மாட்டைக் காணவில்லை. பதறிப்போய் முன்பும் பின்பும் வலதும் இடதும் பார்த்தான். தரையைப் பார்த்தான். மாட்டின் தடம் எதுவும் தெரிவதாய் இல்லை. தேடி அலைந்த அவன் கண்களுக்கு, கோரைப்புற்களுக்கு இடையே மாட்டின் கொம்புகள் வந்து போனதுபோல் இருந்தது. அரவமின்றி புற்களை நெருங்கினான். சப்தமில்லாமல் நகர்ந்து சென்று புற்களை விலக்கியவனுக்கு, புற்களின் ஊடாக ஆற்றில் நீர் குடித்துக்கொண்டிருக்கும் மாடு தெரியத் தொடங்கியது. செவலை நிறத்தில் திமில் பருத்து, சதை திரட்சியாய், மேல்நோக்கி ஒரு முழத்திற்கு மேல் நீண்டு உயர்ந்த கூர்கொம்புகளுடன், சுருண்ட காட்டிலையைப் போலிருக்கும் காதுகளுடன், இளமைச் செருக்குடன் இவ்வளவு ஆகிருதியாய் இப்படியான ஒரு மாட்டை அவன் எந்த திக்கிலும் பார்த்ததில்லை. இதையா நேற்று இரவில் கொட்டாரத்திலிருந்து களவாடி ஓட்டிக்கொண்டு வந்தோமென்று காசிக்கு திடுக்கென்றிருந்தது. இப்போது அருகில் சென்று பிடிகயிற்றைப் பிடிக்கவே அவனுக்குத் தயக்கமாயிருந்தது. கயிற்றைப் பிடிக்க அவன் இரண்டு அடி நடப்பதற்குள் மாடு அவனைத் திரும்பிப் பார்த்தது. அதன் கண்களில் எந்த ஆவேசமுமில்லை. அமைதியிருந்தது.முன்னோக்கி நகர்ந்து ஜாக்கிரதையாய்க் கயிற்றைப் பிடித்தான். மீண்டும் மாட்டைப் பிடித்துக்கொண்டு மாட்டுச் சந்தை நோக்கிப் புழுதிபறக்க ஓடத்துவங்கினான். புழுதிக்கும், வெயிலின் மஞ்சள் வெளிச்சத்துக்குமிடையே ஆயிரமாயிரமாய் மாடுகளும் மனிதர்களும் சந்தை முழுக்க நிரம்பி நின்றார்கள். சந்தை கண்கொள்ளா தூரம்வரை நீண்டும் அகன்றுமிருந்தது. சந்தை, கணக்கற்ற மாடுகளின் ம்மா... ம்மா சப்தத்தோடும் வெண்கல மணி ஓசையோடும், கலந்த மனிதர்களின் இரைச்சலோடும் கண்ணுக்கெட்டாதவாறு நீண்டு அகண்டு கிடந்தது சந்தை. சந்தையின் பின் பகுதியின் வழியே நுழைந்ததால் அந்தப் பகுதி முழுக்க கறுத்த எருதுகளும், எருது வணிகர்களும் நிரம்பி இருந்தார்கள். மெல்ல சந்தையின் மையப் பகுதி நோக்கி நடந்தான். இப்போது சந்தையில் எல்லோரும் தன்னையும், தன் மாட்டையுமே பார்ப்பதுபோல் கரியனுக்குத் தோன்றியது. ஒருவன் அவனை நிறுத்தி மாட்டிற்கு விலை கேட்கலாமாவென்று கேட்டான். அப்போதுதான் கரியன் மாட்டுக்கு என்ன விலை நிர்ணயிப்பது என்று யோசிக்கத் துவங்கினான். அவனுக்கு விலை நிர்ணயிக்கத் தெரியவில்லை. தடுமாறினான். யாவாரி ஒருவர் மாட்டின் அருகில் வந்து ‘`எத்தன பல்லு போட்ருக்கு’’ என்று கேட்டபடியே கவனமாய் மாட்டின் அருகில் வந்தார். மாடு யாரையும் அருகில் விடாமல் தலையைச் சிலுப்பியது. அதன் கழுத்தில் கிடக்கும் பித்தளை மணியின் சப்தம் கிளங்... கிளங் என்று சப்தமாய் ஒலித்தது அவர் பின்னோக்கி எட்டு வைத்து நகர்ந்தார். மாட்டு வியாபாரிகளும் தரகர்களும், சந்தையை வேடிக்கை பார்ப்பவர்களும் கரியனின் மாட்டை நோக்கிக் கூடத்துவங்கினார்கள். வந்த எல்லோரும் அருகில் வரத் துணியாமல் எட்டி நின்றே மாட்டின் சுழியும் லட்சணமும் பார்க்கத் துவங்கினார்கள். ‘`மாடுனா இது மாடு. தேவ லட்சணம்... நல்ல சுழி. நல்ல செவலக்காளை. விலை கேக்குறவங்க கேக்கலாம்'' என்று சப்தமாய்க் கத்தியபடியே வெற்றிலை மென்றபடி மாட்டுத் தரகரொருவர் கூட்டத்திற்குள் நுழைந்தார்.

கரியனின் அருகே வந்து மெலிந்த குரலில்

‘`எந்த ஊரு, யாரு வளர்ப்பு, விலை என்னன்னு. சொன்னா வித்துத் தாறேன். வித்தா தரகு தருவியா?’’ என்று கேட்டார். ``சொல்லு, விலை என்ன?’’

கரியன் விலை சொல்லத் தடுமாறினான். அவனுக்குத் தேவை நாற்பது ரூபாய். பத்து ரூபாய் சேர்த்து ஐம்பதாகச் சொல்லலாம் என்று நினைத்து அவரிடம் சொல்லத் தீர்மானித்தான். அதற்குள் கூட்டத்திற்குள்ளிருந்து வேறு இரண்டு குரல்கள்,

‘`யோவ் கணவதி, அங்கிட்டுப் போருமய்யா நாங்கதான் மாட்டுக்காரன்கிட்ட பேசிக்கிட்டு இருக்கோம்ல. நீரு எதுக்கு குறுக்கால வர்ரீரு... தரகுக்கு ஆசைப்பட்டு விலை ஏத்தி விடுறதுக்கா?’’

கணபதி முகத்தில் சிறிதும் சுணக்கம் காட்டாமல் சொன்னார்.

‘`பையனோட அப்பா நமக்குப் பழக்கம். அங்கின சீவலப்பேரி பக்கம். பையனுக்கு சந்தப் பழக்கம் கிடையாது, அதான் நான் குறுக்கால வாரேன்.’’

மீண்டும் கரியனின் காதருகே வந்து,

‘`நூற்றைம்பதுக்குக் கிரையம் போடலாமா? அதுக்கு மேல வந்தா நான் எடுத்துக்குறேன். தரகு தர வேண்டாம். என்ன சொல்ற?’’ என்று கேட்டார்.

அதற்குள் கூட்டத்திற்குள்ளிருந்து ‘`நீ விலை சொல்லுப்பா’’ என்றும், ``எந்த ஊரு மாடு?’’ என்றும் மீண்டும் மீண்டும் எல்லா திசையிலிருந்தும் கேள்விகள் வரத் துவங்கின, கரியன் மிரட்சியோடு நின்றான். மாடு யாரையும் அருகில் வர விடாமல் கொம்பசைப்போடு திமிறிக்கொண்டிருந்தது. அப்போது கூட்டத்தைப் பிளந்துகொண்டு ஒருவன் வந்து ஓங்கி கரியனின் நெஞ்சில் எட்டி உதைத்தான். கீழே விழுந்த கரியனை எழ விடாமல் அவன் மேலும் மேலும் மிதிக்கவும், அடிக்கவுமாயிருந்தான். ``ஏண்டா, கொட்டாரத்தில மாட்டத் திருடிக்கிட்டு வந்து சந்தையில விக்கிறீயா?’’ ஜனமெல்லாம் கூடத் துவங்கியது. கரியன் கீழே விழுந்ததில் வைக்கோல் புழுதியும், மண்ணும் மாட்டுச் சாணமும் உடலெல்லாம் ஒட்டியிருந்தன. ஓரிருவர் விலக்கி விட்டார்கள். விலக்கி விட்டவர்கள் கரியனைப் பார்த்துக் கேட்டார்கள். ‘`யார் வீட்டு மாடுயா இது... திருடிக்கிட்டுதான் வந்திருக்கிறியா?’’

கரியன் உடலெல்லாம் காயத்தோடு மௌனமாய் நின்றிருந்தான். அடித்தவனை நோக்கிக் கேட்டார்.

‘`உனக்கு யாரு சொன்னா, இது கொட்டாரத்திலேயிருந்து திருடிட்டு வந்த மாடுன்னு” - அடித்தவன் மாட்டுக்கு லாடம் அடிப்பவரைப் பார்த்தான்.

‘`கொட்டாரத்தில எல்லா மாட்டுக்கும், குதிரைக்கும் நான்தான் லாடம் கட்டுறேன். எனக்கு நல்லாத் தெரியும். இந்தச் செவலை கொட்டாரத்துக்குச் சொந்தமானதுதான். வேணும்னா கழுத்துல கிடக்குற பித்தளமணியப் பாருங்க, அதுல என்ன அடையாளம் போட்ருக்குன்னு.’’

அதில் சங்குக் குறி அடையாளமாய் இட்டிருந்தார்கள். அதற்குள் கூட்டத்திலிருந்த ஒருவன் மாடு கட்டும் பிடிகயிற்றைக் கொண்டு வந்து கரியனின் கையைத் தோளோடு சேர்த்து இறுக்கக் கட்டி, தள்ளிக்கொண்டுபோய் சந்தையின் நடுவில் இருக்கும் பெரிய கல் விளக்கு எரியும் லாந்தக்கல்லில் கட்டி வைத்தான். கூட்டத்திலிருந்த பெரியவர் ஒருவர் கொட்டாரத்திலிருப்பவர்களுக்கு மாடு சந்தையில் நிற்பதாகத் தகவல் கொடுக்கச் சொன்னார்.

லாந்தக்கல்லில் கட்டப்பட்டுக் கிடக்கும் கரியனை செவலை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது. கரியன் அதை ஆச்சர்யம் விலகாமல் பார்த்தான்.
ஏழு கடல்... ஏழு மலை... - 1

ஓரிருவர் அதை இழுத்து அருகிலிருக்கும் மரத்தில் கட்டி வைக்க மெனக்கெட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களால் மாட்டின் அருகில்கூடப் போக முடியவில்லை. அதன் திமிலின் மீது கிடக்கும் பிடிகயிற்றை எடுக்க முயன்றுகொண்டிருந்தார்கள். அருகில் வருபவர்களை சீறி முட்டப் பாய்ந்தது. லாடம் அடிக்கும் செண்பகமூர்த்தியிடம் பிடித்துக் கட்டச் சொன்னார்கள். அவர் மாட்டைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தார். சந்தையின் தெற்கு மூலையில் முப்பது, நாற்பது பேர் கூட்டமாய்க் குழுமியிருந்தார்கள். நடுவே கொம்பையா நின்றுகொண்டிருந்தார். அருகில் இன்னும் சிறிது நேரத்தில் கன்று தள்ளும்படி சினைப்பசு ஒன்று நின்றுகொண்டிருந்தது. கொம்பையாதான் இந்தச் சந்தையை நடத்துபவர். கொம்பையாவிற்கு சந்தைதான் உலகம். எப்படியும் ஐம்பதைத் தாண்டி வயதிருக்கும். கறுத்து இறுகிய உடலோடு நெடுநெடுவென வளர்ந்திருந்தார். சிறுவயதிலிருந்து சந்தையிலேயே வளர்ந்த மனிதர். நாடுமுழுக்க எங்கெல்லாம் கால்நடைச் சந்தை நடக்கிறதோ அங்கெல்லாம் கொம்பையாவின் தலை தென்படும். மாடு மட்டுமல்ல, குதிரைகள், கழுதை, யானைகள், கோவேறு என எல்லாச் சந்தைகளுக்கும் செல்வார். எல்லாச் சந்தைகளிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு. மாட்டிற்கு மட்டுமல்ல, எல்லாக் கால்நடை களுக்கும் இனமும் சுழியும் லட்சணமும் சரியாய்க் கணித்துவிடுவார். பல ஆண்டுக் காலம் சந்தை சந்தை யாய்ச் சுற்றிக் கற்றுக்கொண்ட பாடம் அது.பசுவின் உரிமை யாளனை அதன் முகத்திற்கு நேராய் நிற்கச் சொல்லி, தாவங் கட்டையை வருடிக் கொடுக்கச் சொன்னார். பசுவின் கீழ் வயிற்றில் தடவியபடியே ``ம்...முக்கு... முக்கு, அப்படித்தான், இன்னும்...’’ மாட்டின் பின்னுறுப்பிலிருந்து கன்றின் மூக்கும், ஒரு காலின் குழம்பும் ஈரமாய்த் தெரிந்தன. கொம்பையா பசுவைத் தடவியபடி ``இந்த வந்துருச்சி...’’

‘`முக்கு முக்கு, இன்னும் கொஞ்சம்தான்...’’

‘`டே... மலையராசா இங்குன கொஞ்சம் வைக்கப்போரு அள்ளிப்போடு.’’

பசுவின் பின் காலின் அருகில் சுட்டிக் காட்டினார். கொம்பையா வளர்க்கும் மங்கு வெள்ளையில் கறுத்த புள்ளியிருக்கும் ஆண் நாயொன்று பசுவைச் சுற்றிச் சுற்றி வந்தது. பசு மிரண்டது. கொம்பையா ‘`ஏய் மல்லி, அந்தாள போ’’ என விரட்டினார். பசு இன்னும் முக்கியது. கன்றின் முகம் ஈரமாய் வெளியே வந்தது. கொம்பையா அதன் முன் கால்களையும் தலையையும் அணைத்தவாறு மெல்ல உருவி மொத்தக் கன்றையும் இழுத்துப் போட்டார். வைக்கோல்போரின் மேல் ஈரமும் பிசுபிசுப்புமாய்க் கன்று கிடந்தது. பசு திரும்பி தனது கன்றை நாக்கால் நக்கத் துவங்கியது.

கன்று தள்ளாடித் தள்ளாடி எழுந்து நிற்க முயன்று கீழே கீழே விழுந்தது. பசுவின் உரிமையாளனிடம் கன்றை நிமிர்த்தி, பால் காம்புகளின் அருகே போய் நிறுத்தச் சொன்னார். கன்று சீம்பால் அருந்தத் துவங்கியது.

கொம்பையாவோடு சுற்றிச் சுற்றி பல வருடமாய் ஈன்ற ரெத்த வாடை தெரியுமென்பதால், மல்லி மோந்துகொண்டு கன்றின் அருகில் போகவில்லை.

‘`இன்னும் கொஞ்ச நேரத்துல நஞ்சுக்கொடிய வெளிய தள்ளிடும். ரெத்த வடைக்கு நாயி கீயி வாய வச்சிடாம பொதிஞ்சி எடுத்திட்டுப் போயி எதாவது பால் மரத்துல கட்டிவிட்டுரு. உடம்புல பெலன் இல்லாமப்போயிருக்கும். முதல்ல நீராகாரமா கொடுத்திட்டு அப்புறமா எள்ளும் கருப்பட்டியும் சேத்துக் குடு.’’ கையின் பிசுபிசுப்பை மலையரசன் நீர் ஊற்ற ஊற்ற தேய்த்துக் கழுவினார்.

திடீரென சந்தை முழுக்கக் கலவரச் சூழலாய் இருந்தது.

சந்தையில் அங்கங்கே மக்கள் சிதறி ஓடத்துவங்கினார்கள். கொம்பையா மலையரசனிடம் என்னவென்று கேட்டபடியே சந்தையின் மையத்தை நோக்கி ஓடிவந்தார்.

அங்கு செவலை சந்தை முழுக்க மிரட்சியோடு அலம்பி ஓடிக்கொண்டிருந்தது. பிடி கயிற்றைப் பிடிக்க வருபவர் களை முட்டப் பாய்ந்தது. எல்லோரும் பயத்தோடு தெறித்து ஓடிக் கொண்டி ருந்தார்கள். அங்கிருந்த வர்களிடம் ``யாரின் மாடு?’’ என்று விசாரித்தார்.

ஏழு கடல்... ஏழு மலை... - 1

லாடக்காரர் செண்பகம், அது கொட்டாரத்து மாடு என்றும், அதைக் களவாடிக் கொண்டு வந்து விற்க வந்தவனைப் பிடித்து லாந்தக்கல்லில் கட்டி வைத்திருப்பதையும் சொன்னார். கொம்பையா லாந்தக்கல்லை நோக்கி நடையை எட்டிப்போட்டு வந்தார். மலையரசனும் மல்லியும் பின்னாடியே ஓடிவந்தார்கள். உறைக்க வெயில் அடித்துக்கொண்டிருந்தது. கரியனின் உடலில் காயத்தின் மேல் வெயில் பட்டு எரிந்தது. கொம்பையா அங்கு வந்து கரியனைப் பார்த்தார். மெலிந்த வலுவான தேகம் கரியனுக்கு. மலையரசனிடம், கயிற்றை அவிழ்த்து விடுவிக்கச் சொன்னார். அவிழ்த்த அடுத்த நொடியே கரியன் செவலையை நோக்கி ஓடினான். லாடக்காரர் அவன் தப்பிக்க முயல்வதாய்ச் சொல்லி, அவன் பின்னால் ஓட ஆயத்தமானார். கொம்பையா தடுத்து நிறுத்தினார். கரியன் ஓடிப்போய் செவலையின் எதிரில் நின்றான். செவலை அமைதியானது. கரியன் பிடிகயிற்றைப் பிடித்தபடி லாந்தக்கல் நோக்கி நடந்து கொம்பையாவின் முன்னால் மாட்டோடு வந்து நின்றான். கொம்பையா செவலையின் ஆகிருதியை கண்கள் விரிய பிரமிப்பாய்ப் பார்த்தார். ``களவாடிக்கிட்டு வந்த மாடுனா இவனுக்கு இவ்வளவு கட்டுப்பட்டு நிக்குமா?’’ கரியனை நோக்கிக் கேட்டார். ‘`உண்மையாவே மாட்டக் களவாடிட்டுதான் வந்தியா?’’ கரியன் ஆமாம் என்று ஆமோதிப்பதுபோல் தன் தலையை ஆட்டினான். கொம்பையா ஒன்றும் புரியாமல் இருவரையும் பார்த்துக்கொண்டு நின்றார். அதற்குள் லாடக்காரர், மாட்டையும் அவனையும் கட்டி வைக்கலாமென்றார்.

‘`அதெல்லாம் வேண்டாம். போய் மாட்டுக்குத் தண்ணி காட்டிட்டு வா’’ என்று சொல்லி, கல்தொட்டி நோக்கிக் கையை நீட்டினார். கரியன் கல்தொட்டியை நோக்கி நடந்தான். அவ்வளவு நீளமான கல்தொட்டியில் நிறைய மாட்டுக்காரர்கள் மாட்டுக்குத் தண்ணிகாட்டிக் கொண்டிருந்தார்கள். செவலை அருகில் வருகையில் மற்ற மாடுகள் மிரண்டு வழிவிட்டன.

செவலை கழுத்தைக் குனித்து நீர் உறிஞ்சியது. கரியனும் கல் தொட்டியின் விளிம்புகளைப் பிடித்தபடி அதன் அருகிலேயே குனிந்து உதடு குவித்து நீர் அருந்தினான். பின் நீரை இரு கைகளையும் கோத்து மொண்டு தன் முகத்தைக் கழுவினான். காயம் பட்ட இடங்களில் நீர் அள்ளி ஊற்றினான். சாணிக்கரை படிந்த முதுகையும் தலையையும் கழுவி விட்டான். அருகில் நீர் அருந்தும் செவலையை ஆச்சர்யமாய்ப் பார்த்தான். யாருக்கும் அடங்காத இந்தச் செவலை தன்னிடம் மட்டும் ஏன் இவ்வளவு அடங்குகிறது. மலையரசன் நீர்த் தொட்டிக்கு அருகில் வந்து கொம்பையா அவசரமாய் அழைப்பதாகவும் மாட்டைப் பிடித்துக்கொண்டு விரைந்து வருமாறும் கத்தினான். கரியன் அங்கு வருகையில் கொட்டாரத்திலிருந்து ஆறேழு பேர் வந்திருந்தார்கள். கரியனைப் பார்த்த மாத்திரத்தில் தங்க ஜரிகை வேஷ்டியும், பெரிய துண்டும் போட்டிருந்த சிவந்த நிறத்திலிருந்த மனிதர் மலையாளமும் தமிழும் கலந்த மொழியில் கெட்ட வார்த்தை பேசியபடியே அருகிலிருந்தவனிடமிருந்து மூங்கில் கழியை வாங்கி, கரியனை ஆவேசமாய்த் தாக்கினார். கரியன் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அடியை வாங்கிக்கொண்டிருந்தான். மல்லி குரைத்தது. கொம்பையா சப்தமிட்டுத் தடுத்தார். ஏற்கெனவே இங்க இருக்குற ஆட்களெல்லாம் அடிச்சிட்டாங்க. விடுங்க. சிவந்த நிற மனிதர் கரியனைக் கட்டிக் கொட்டாரத்துக்குத் தூக்கி வர உத்தரவிட்டார். கொம்பையா குறுக்கிட்டு,‘`அதெல்லாம் ஒண்ணும் பண்ண வேண்டாம். இனிமேல் இது நடக்காது. நான் சொல்றேன். நீங்க மாட்டக் கூட்டிட்டுப் போங்க...’’ என்றார்.

‘`அதெல்லாம் முடியாது, அவன என்கூட அனுப்பு’’ என்று பிடிவாதமாய் நின்றார். கொம்பையா பிடிவாதமாய் மறுத்தார்.

‘`அவன் பண்ணுனதுக்கு ஈட்டுத் தொகை ஏதும் வேணுமா, நான் தரேன். அவன இதுக்கு மேல ஒண்ணும் பண்ணக்கூடாது’’ என்று கறாராய்ச் சொல்லிவிட்டார்.

கூட்டத்திற்குள் வந்த லாடக்காரன், பவ்யமாய் முதுகு குனிந்து ‘`ஏமானே’’ என்று அழைத்து சிவந்த நிற மனிதரை வணங்கினான். அருகிலிருப்பவரிடம் கொட்டாரத்து சித்திரை ராமன், வணங்கிக்கோ என்று சொன்னான்.

சித்திரை ராமன் சிறிது நேரம் கரியனை உக்கிரமாய்ப் பார்த்துக்கொண்டேயிருந்துவிட்டு ‘`எந்த ஊருடா நீ?’’ என்று கேட்டார்.

கரியன் அமைதியாக இருந்தான்.

``சொல்லு, கேக்குறார்ல?’’ கொம்பையாவும் கேட்டார். சித்திரை ராமனைவிட அவனைப் பற்றி அறிந்துகொள்வதில் கொம்பையாவின் ஆர்வம் அதிகம் என்றது அவர் கேட்ட தொனி.

``இந்த நாட்டோட கடைசி ஊரு.”

“கடைசி ஊருல?”

“கடைசி வீடு”

“கடைசி வீட்ல?

“கடைசியா பொறந்தவன்.”

ஒரு நிமிடம் எல்லோரும் கண்கள் விரிய அமைதியாக நின்றுகொண்டிருந்தார்கள்.

சித்திரை ராமனோடு உடன் வந்த பெரியவர் ராமனின் காதில் மெலிந்த குரலில் ஏதோ சொன்னார்.

நெசமா?

பெரியவர் ஆமாம் என்பது போல் தலையாட்டினார்.

``ஏண்டா, உங்க வீட்டு மாடுன்னு தெரிஞ்சிதான் களவாடிக்கிட்டு வந்தியா?’’ கரியன் நெற்றியைச் சுருக்கி அவரைப் பார்த்தான்.

கொம்பையா பெரியவரிடம் கேட்டான். ``அவன் வீட்டு மாடா?’’ ``ஆமாங்க. ஆறேழு வருஷம் முன்னாடி தொழுவத்துக்கு அரை மந்தை மாடுகள் வாங்கினோம். அதுல குமரியிலிருந்து வாங்குன ஒரு செவலைப் பசுவும் அதோட முதல் ஈத்துக் காளைக் கன்றும் உண்டு. அந்தக் கன்றுதான் இந்தா வளர்ந்து நிக்குது. ஆனா தொகை குடுத்து வாங்கி இத்தனை வருசத்துக்கு அப்புறம் அதக் களவாங்குறது நியாயமில்லாத விஷயம்தான.’’

`ஓ... அதான் அவனுக்கு மட்டும் பிடிகொடுத்திருக்கு போல’ என்று கொம்பையா நினைத்துக்கொண்டார்.

கரியன் செவலையைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
ஏழு கடல்... ஏழு மலை... - 1

செவலையை நெருங்கிப்போய் அதன் நெற்றிப் பொட்டைத் தடவி முத்தமிட்டான். அதற்குள் சித்திரை ராமன் தன் ஆட்களிடம் சைகை காட்ட அவரின் ஆட்கள் செவலையின் பிடிகயிற்றைப் பிடித்தபடி சந்தைக்கூட்டத்திற்குள் நடக்கத் துவங்கினர். கரியனும் கொம்பையாவும் அதைப் பார்த்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தார்கள்.சந்தையின் எல்லைக்குச் சென்று செவலை கரியனைத் திரும்பிப் பார்த்தது. கரியனின் கண்கள் நீர்கட்டி நின்றது. வெயில் உச்சிக்கு ஏறியிருந்தது.

ஏழு கடல்... ஏழு மலை...

“உறங்கும்போது எனக்கு தலைக்குமேல் நட்சத்திரம் வேண்டும்.

குளிக்கும்போது உடன் மீன்களும் நீந்த வேண்டும்.” - பராரிகள்

மகன்வழி(1977-மழைக்காலம்)

ஏழு கடல்... ஏழு மலை... - 1

ழைக்காலமென்பதால் மாலைநேரம் சுருங்கி வேகமாகவே இருளத் துவங்கியிருந்தது. கடற்கரையை ஒட்டியிருந்த அந்தக் கடைசி வீட்டை நோக்கி சூரவேல் வேகமாக நடந்துகொண்டிருந்தான். இப்போதுதான் மீசை வளரத் துவங்கி இளந்தாரியாயிருந்தான். 18 வயதைத் தாண்டியிருக்காது. தலையிலும் உடலிலும் பெருவாரியாக செம்மண் தூசி இருந்தது. அது பல வருடமாய் இருக்கிறது. எவ்வளவு குளித்தும் போகாதது அது. சூரவேல் இரட்டை யானை ஓட்டுக் கம்பனியில் ஆறேழு வருடமாய் வேலை செய்கிறான். சிறியதாய்த் தூரல் போடத் துவங்கியது.வழியிலிருந்த வாழையில் அகலமும் நீளமுமாயிருந்த பெரிய இலையை வெட்டி தலைக்குமேல் பிடித்துக்கொண்டு வீட்டை நெருங்கினான். தென்னையோலையால் வேயப்பட்ட சிறிய வீடு. இப்போது கடல் அலையின் சப்தம் சன்னமாயிருந்தது. ``ண்ணே... ண்ணே...’’ மெதுவாகக் குரல் கொடுத்தபடியே கதவைத் தட்டினான். உள்ளிருந்து சுசீந்திரன் கதவைத் திறந்து சட்டென அவனை உள்ளே இழுத்துக் கதவை மூடினான். வீடு இருண்டிருந்தது. பேச்சுக்குரல் மட்டுமே கேட்டது. ``சூரா, மலையரசன் மாமா வீட்டுக்குப் போனீயா?’’ ``ம்... மாமா கேரளத்துக்கு மாடு கொண்டு போயிட்டு இன்னும் வீடு வரலையாம். வர காலை ஆகிடும்னு அத்த சொன்னாங்க.’’ இப்போது யாரோ ஒரு தீக்குச்சியை உரசி அந்த மண் கிளியாஞ்சட்டியில் விளக்கேற்றினார்கள். வெளியிலிருந்து பார்க்கையில் ஓலைக்கிடுக்குகளின் துளைகளின் வழியே மஞ்சளாய் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. சூரவேல் அப்போதுதான் பார்த்தான். சுசீந்திரனின் அருகில் லெட்சுமி நின்றுகொண்டிருந்தாள். லெட்சுமி பெரிய வீட்டின் வளர்ப்பு என்பது அவளின் முகத்திலும் உடையிலும் நன்றாகத் தெரிந்தது. கே.சி மர டிப்போக்காரரின் மகள். சுசீந்திரன் அங்குதான் வேலை செய்தான்.

ஏழு கடல்... ஏழு மலை... - 1

``வீட்டில் உங்க அம்மா அப்பா படம் எதாவது இருக்கா’’ லெட்சுமி இப்போது வாய் திறந்து கேட்டாள். சுசீந்திரன் இல்லை என்று மறுத்துத் தலையாட்டினான். அதற்குள் சூரவேல் நார்ப்பெட்டியைத் திறந்து ஒரு கொக்கரையையும், மயில் கழுத்து நிறத்திலிருக்கும் அந்தப் பட்டுச் சேலையையும் எடுத்து விளக்கின் முன் வைத்தான். ``இது என்ன மாட்டுக் கொம்பா?’’ என்று லெட்சுமி கேட்டாள். ``இல்ல இது கொக்கர. மாட்டுக் கொம்புல துளையிட்டு ஊதுற வாத்தியம். என் அப்பா கரியனோடது.'' ``ம்... இந்தச் சேல உங்க அம்மவோடதாம். ரெம்ப அழகா இருக்கு. பெரிய ராஜாக்க குடும்பத்துல உடுத்துற மாதிரி.’’ சுசீந்திரன் ஆமோதிப்பது போல் தலையாட்டினான். சூரவேல் தான் வாங்கி வந்திருந்த வாழை இலையில் மடித்த பொட்டலத்தை அவிழ்த்து அதிலிருந்து இரண்டு கதம்ப மாலைகளை எடுத்தான். மாலையிலிருந்து ஓரிரண்டு இதழ்கள் உதிர்ந்தன. வெளியில் மழை வலுத்துப் பெய்யத் துவங்கிவிட்டது. ``மாலைய மாத்திக்கோங்க.’’ சுசீந்திரனும் லெட்சுமியும் ஒருவர் மாற்றி ஒருவர் மாலையைத் தலைக்குள் வாங்கிக்கொண்டார்கள். பின் அப்பனின் கொக்கரையையும், அம்மையின் மயில்கழுத்துநிறச் சேலையையும் தொட்டு வணங்கிக் கொண்டார்கள். சூரன் சந்தோசத்தோடு தன் அண்ணனைக் கட்டித்தழுவிக்கொண்டான். லெட்சுமியை நோக்கிக் கரம் கூப்பிக் கும்பிட்டான். வீட்டின் மூலைக்குச் சென்று ஓலைக் கொட்டானில் கையை விட்டு, பனங்கருப்பட்டியை இரண்டு துண்டு எடுத்து வந்து இருவருக்கும் வாயில் போட்டான். கூடவே இரண்டு கனிந்த ரசகதலி வாழைப்பழத்தை உரித்து ஆளுக்கொன்றாய்க் கொடுத்தான். வெளியில் மழை சற்றுக் குறைந்திருந்தது போலிருந்தது. சரி கிளம்பலாம். எந்த நேரமும் மரக்கடை முதலாளி தேடி வர வாய்ப்பிருக்கு. கிளம்பி அப்படியே கடலோரம் நடந்தா மணக்குடி போயிடலாம். அங்குன ஒரு வண்டில கேட்டு ஏறுனா ஒரு மணி நேரத்துக்கெல்லாம் கேரள செக் போஸ்ட் தாண்டிடலாம். வேகமா இங்க இருந்து கிளம்பணும். வீட்டின் மூலையிலிருந்து நனையாமல் இருக்க ஒரு சருவத்தாளைத் தேடினான். எதையோ நகர்த்துகையில் பல நாள்களாய்ப் பயன்படுத்தாத அந்தச் சிறு மண்சட்டியில் குட்டி குட்டியாய் இன்னும் கண்திறக்காத நிறைய எலிக்குஞ்சுகளைப் பார்த்தான். ஆள் அரவம் கேட்டுத் தாய் எலி எங்காவது பதுங்கி நிற்கும்.அதை எதுவும் செய்யாமல் அருகில் கிடந்த சருவத் தாளைத் தேடி எடுத்தான். விளக்கின் அருகிலிருந்து எடுத்து அம்மையின் மயில்கழுத்துநிறச் சேலையை வைத்து லெட்சுமியிடம் நீட்டினான். சூரன் தன் அப்பா கரியனின் கொக்கரையை எடுத்துத் தோளில் குறுக்கிடையாகத் தொங்கவிட்டுக்கொண்டான். யாரும் வந்துவிடக்கூடாது என்ற பதற்றத்துடன் மூவரும் அங்கிருந்து உடனே கிளம்பி கடற்கரையோரமாக நடக்கத் துவங்கினர். ஊரைக் கடந்து சிறிது தூரம் சென்றதும் சுசீந்திரன் சூரனை வீட்டிற்குத் திரும்பிப் போகச் சொன்னான். ``இனி நான் பார்த்துக்குவேன் நீ கிளம்பு சூரா. கவனமா இருந்துக்கோ.’’ சூரன் முட்டிக்கொண்டு வந்த அழுகையோடு அண்ணனைக் கட்டித் தழுவி விடைபெற்றான். இரவில் அவன் வீட்டை நெருங்கும்போது ஊர் அடங்கிப்போயிருந்தது. வீட்டிற்குள் போகப் பிடிக்காமல் கடற்கரையில் கிடந்த பாறைத்திட்டில் வந்து படுத்தான். படுத்தபடியே வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்..ஒரு வெள்ளியும் இல்லாமல், நிலவும் எங்கோ மறைந்தபடி வானம் கறு கறுவென்றிருந்தது. சட்டென தான் அனாதைபோலாகிவிட்டதாக நினைவு தோன்றித் தோன்றி அடங்கியது. அம்மையும் அப்பாவும் இறந்த பின் அண்ணன் சுசீந்திரன்தான் அவனுக்கு அம்மையப்பனாயிருந்தான். வானத்தை நோக்கி தன் அப்பாவின் கொக்கரையை எடுத்து ஊதினான். ஒரு பெரிய உயிரின் அழுகையைப் போலிருந்தது அந்த சப்தம். தாலாட்டைப் போலிருந்த அலையோசையைக் கேட்டபடி நடு இரவு வரை கண்ணயர்ந்து கிடந்தான். கொஞ்சம் தூரத்தில் ஆள் அரவம் கேட்டு விழித்துப்பார்க்கையில் அவன் குடிசை எரிந்துகொண்டிருந்தது. எழுந்து ஓட எத்தனிக்கையில் பத்திருபது பேர் கையில் கம்புகளுடனும், இரும்பு ஆயுதங்களுடனும் அந்த இடத்தில் நின்றுகொண்டிருந்தார்கள். குடிசை கொழுந்துவிட்டு எரிந்து அடங்கி முடிக்க இருக்கையில் அவர்கள் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் இவர்களுக்கு பயந்து வீட்டிற்குள்ளேயே இருந்துகொண்டார்கள். அவர்கள் தலை மறையத் துவங்கியதும் குடிசை நோக்கி ஓடி எலிகள் இருக்கும் மண் சட்டியைத் தேடினான். வெம்மையில் கருகிக்கிடந்தன. இப்போது தாய் எலியும் அதனோடு கருகிக்கிடந்தது. அப்போதுதான் யாரோ சப்தம் கொடுத்தார்கள். ``லேய் மக்கா வாங்களே, இந்தா நிக்கான்.''

மூச்சிரைக்க இருளுக்குள் ஓடினான். மொத்தக் கும்பலும் திரும்பி அவனை ஆயுதங்களுடன் விரட்டியது. வெகுநேரம் நிற்காமல் ஓடியவன் ஊரின் புற வெளிப் பகுதியான ஆற்றுப்பாலத்திற்கு வந்தான். தூரத்தில் துரத்தி வருபவரின் சத்தம் கேட்டது. சாலையை விட்டுக் கீழிறங்கி ஆற்றோரம் ஓடினான். ஏதோ ஒரு கொடி காலில் சிக்க, தவறிக் கரையில் துவண்டு விழுந்தான். உடலெல்லாம் வேர்த்திருந்தது, விடாத அந்த மழையிலும். எழத் திராணியில்லாமல் தவழ்ந்து ஆற்றுக்குப் போய்ப் படுத்தபடி நீர் அருந்தினான். கொஞ்சம் ஆசுவாசமாயிருந்தது. புரண்டு படுக்க இயலாமல் ஆற்றில் வாய் வைத்தவாறே கிடந்தான். பாலத்தின் மீதிருந்த டார்ச் லைட் வெளிச்சம் அவன் மீதும் ஆற்றின் மீதும் பட்டது. சுளீரென்று எங்கிருந்தோ ஒரு சிறு கல் அவன் உடல் மேல் வந்து விழுந்தது. ``ஏய்... அங்க இருக்கான்.'' வேறுபக்கம் திரும்பி மற்றவர்களை டார்ச்காரன் அழைப்பது கேட்டது. இனி ஓட முடியாது என்று தோன்றியது. ஆற்றல் மொத்தத்தையும் திரட்டி ஆற்றுக்குள் இறங்கி தள்ளிப் போய் நீருக்குள் அசைவில்லாமல் நின்று கொண்டான்.

ஏழு கடல்... ஏழு மலை... - 1

தீப்பந்தங்களுடனும், டார்ச் விளக்குகளுடனும் நிறைய பேர் அங்கு ஓடிவந்தார்கள். நீரின் மேல் தீவட்டியின் தீப்பிழம்பின் நிழல்கள் அலை அலையாய் மிதந்தன. அவர்கள் கரையில் நின்று ஆற்றுக்குள் வெளிச்சம் காட்டித் தேடினார்கள். வெளிச்சம் தன்னருகே வருகையில் சூரன் நீருக்குள் மூழ்கவும், விலகிப்போகையில் மேலெழும்பி மேல் மூச்சு வாங்கவுமாக இருந்தான். ``எதிர்க்கரைக்குப் போயிறப்போறான்ப்பா, கரையில நின்னு விளக்கு புடிச்சு என்ன புடுங்கறீங்க.’’ யாரோ ஒருவர் பலமாய்க் குரல் கொடுக்க, தீப்பந்தத்துடன் இருவர் ஆற்றுக்குள் இறங்க, இன்னும் நான்கைந்து பேர் ஆற்றுக்குள் குதித்தார்கள். சூரவேல் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு எல்லாக் கரைகளும் வளைக்கப்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல் ஆற்றின் இருண்ட பகுதியில் நின்று கொண்டிருந்தான்.

பெரும் மின்னல் ஒன்று ராட்சத வெளிச்சத்தோடு ஆற்றில் பாய, நீருக்கு அடியில் போனான்.

மழை மேலும் வலுக்கத் தொடங்கியது.

- ஓடும்