Published:Updated:

இப்படியும் நடந்ததா? - விலங்குகளால் பேரழிவுகளை முன்னரே கணிக்க முடியுமா? வரலாற்றில் சில சம்பவங்கள்!

இப்படியும் நடந்ததா? - விலங்குகள்

விலங்குகளின் எச்சரிக்கைகளை அலட்சியம் செய்யலாமா என்பது குறித்த பட்டிமன்றக் கேள்விக்கு அடிப்படையாக அமைந்துள்ளன சில சரித்திர சம்பவங்கள்.

Published:Updated:

இப்படியும் நடந்ததா? - விலங்குகளால் பேரழிவுகளை முன்னரே கணிக்க முடியுமா? வரலாற்றில் சில சம்பவங்கள்!

விலங்குகளின் எச்சரிக்கைகளை அலட்சியம் செய்யலாமா என்பது குறித்த பட்டிமன்றக் கேள்விக்கு அடிப்படையாக அமைந்துள்ளன சில சரித்திர சம்பவங்கள்.

இப்படியும் நடந்ததா? - விலங்குகள்
சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான் இருந்துவந்திருக்கிறது. சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் நம்புவதற்குக் கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும். அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சுவாரஸ்யமான அதிசயங்களையும் மர்மங்களையும் விநோதங்களையும் இந்தத் தொடர் விவரிக்கிறது.

இந்தத் தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.

இப்படியும் நடந்ததா?

நிலநடுக்கம், புயல், சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளை மனிதர்களை விட சில விலங்குகள் முன்னதாகவே அறிந்து செயல்படுகின்றன என்பது நமக்குத் தெரியும். நிலநடுக்கத்திற்கு முன் குதிரைகள், பன்றிகள், சேவல்கள், மீன்கள் ஆகியவை மிகவும் வித்தியாசமாக நடந்து கொள்கின்றன என்பதை விஞ்ஞானிகளும் ஒத்துக்கொள்கிறார்கள்.

டோகோன் (Dogon) பழங்குடியினர்
டோகோன் (Dogon) பழங்குடியினர்
Devriese, via Wikimedia Commons
ஆனால் மற்றபடி வருங்காலத்தை விலங்குகளால் கணிக்க முடியுமா? இந்த கேள்விக்கு 'நிச்சயம் முடியும்' என்று பதில் கூறினார்கள் சில விந்தை மனிதர்கள்.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு பழங்குடி இனத்தின் பெயர் டோகோன் (Dogon). நைகர் நதிக்கரையில் சற்று உள்ளடங்கிய நிலத்தில் நான்கைந்து நூற்றாண்டுகளாக வசித்து வருகிறார்கள் இந்த இனத்தினர். இவர்களது முக்கிய தொழில் வருங்காலத்தைக் கூறுவதுதான். இதற்காக அவர்கள் கையாளும் வழி நமக்கு விசித்திரமாக இருக்கும்.

ஒவ்வொரு வாரத்தின் ஐந்தாவது நாளும் சாலை ஓரமாக இவர்கள் உட்கார்ந்துகொண்டு, சோழிகளைக் கொண்டு ஒருவரது வருங்காலத்தைக் கணிக்க முடியும் என்று கூறினார்கள். நம் நாட்டில் கூட, முக்கியமாகக் கேரளாவில் - சோழி ஜோதிடம் உண்டுதானே!

ஆனால் சோழிகளை விட மேற்படி இனத்தினர் அதிகம் நம்பியது பல்வேறு விலங்குகளைத்தான். அவர்கள் இனத்தின் தேவதையின் பெயர் அமா. அந்த தேவதை விலங்குகளின் மூலம் வருங்காலத்தை உணர்த்துவதாக ஆழமாக நம்பினார்கள் அவர்கள்.

மணற்பாங்கான இடத்தில் பலவித குறியீடுகளைக் குச்சிகளைக் கொண்டு அவர்கள் வரைவார்கள். பிறகு பட்டாணிகளை அந்த குறியீடுகளின் மீது வீசி எரிந்துவிட்டுச் செல்வார்கள். பட்டாணி தின்பதற்காக இரவில் குள்ளநரிகள் அங்கு வரும். மறுநாள் காலையில் அந்த குள்ள நரிகளின் பாதங்கள் மணலில் வரையப்பட்ட எந்தெந்த குறியீடுகளில் பதிந்திருக்கின்றன, எவ்வளவு ஆழமாகப் பதிந்திருக்கின்றன என்பதை எல்லாம் கவனித்து இவர்கள் வருங்காலத்தைக் கணிப்பார்கள். அதேபோல, கிளி ஜோதிடம் போல மெக்சிகோவில் குருவி இனத்தைச் சேர்ந்த கெனரி (Canary) என்ற பறவையை ஜோதிடத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்.

கெனரி (Canary)
கெனரி (Canary)
விலங்குகளின் எச்சரிக்கைகளை அலட்சியம் செய்யலாமா என்பது குறித்த பட்டிமன்றக் கேள்விக்கு அடிப்படையாக அமைந்துள்ளன சில சரித்திர சம்பவங்கள்.

ரோம் நாட்டின் கடற்படைத் தளபதியாக விளங்கியவர் கிளாடியஸ். எதிரிகள் மீது அடுத்த நாள் போர் புரிவதாகத் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் அவரது கப்பலிலிருந்த சில கோழிக்குஞ்சுகள் உணவருந்த மறுத்தன. அவை தெய்வாம்சம் பொருந்தியவை என்று கருதப்பட்ட கோழிக்குஞ்சுகள்! அவற்றின் ‘ஒத்துழையாமை’ கிளாடியஸுக்குப் பெரும் கோபத்தைத் தூண்டியது. 'உணவு சாப்பிடாத இந்த கோழிக்குஞ்சுகளைக் கடலில் தூக்கிப் போடுங்கள். கடல்நீரைக் குடித்துத் தொலைக்கட்டும்' என்று கத்தினான்.

ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் அவனது பிரம்மாண்டமான படை அந்தப் போரில் படுதோல்வியடைந்தது. அந்த அத்தனை கோழிக்குஞ்சுகளும் உணவருந்த மறுத்ததன் மூலம் அவனது தோல்வியை முன்னதாகவே உணர்த்தின என்று பலர் கூறினார்கள்.

லண்டன் கோபுரத்தின் மேல் வெகு காலமாக ஒரு பறவைக் குடும்பம் வசித்து வந்தது. எப்போதெல்லாம் அந்த இடத்தைவிட்டு அவை குடும்பமாகப் பறந்து செல்கின்றனவோ அப்போது இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த யாராவது இறந்து விடுவார்கள் என்ற ஆழமான நம்பிக்கையும் நிலவியது.

ஜிப்ரால்டர் தீபகற்பம் பிரிட்டனின் கைவசமானது. அப்போது அந்த ஊர் ஜோதிடர்கள் 'நம்மூரில் உள்ள பார்பரி வகைக் குரங்குகள் எப்போது தானாக இந்த நாட்டை விட்டு வெளியேறுகின்றனவோ அப்போது நம் நாட்டுக்குப் பிரிட்டனின் பிடியிலிருந்து விடுதலை கிடைக்கும்’ என்றார்கள். அதேபோல் பின்னர் நடந்தது என்று கூறுபவர்களும் இருந்தார்கள்.

குறுக்கே போகும் பூனை, மேலே விழும் பல்லி ஆகியவற்றால் பலவித கெடுதல்கள் என்று நம் நாட்டிலும் பல நம்பிக்கைகள் உண்டு.

நாய்
நாய்

விலங்குகளின் தெய்வீகத் தன்மையையோ வருங்கால கணிப்பு என்ற கோணத்தையோ ஏற்றுக் கொள்ளாத விஞ்ஞானிகள் கூட விலங்குகளின் அற்புதமான சில ஆற்றல்களை முழுமையாக ஒத்துக் கொள்கிறார்கள்.

நோயில் வீழ்ந்துள்ள தனது முதலாளியின் இழப்பை நாய்களால் முன்னதாகவே அறிந்து கொள்ள முடியும் என்பார்கள். இதை முதலில் அறிவியல் ஏற்கவில்லை. ஆனால் பின்னர், இறப்பதற்கு முன் தன் முதலாளியின் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களை அறியும் அளவுக்கு நாய்களுக்குத் தீர்க்கமான மோப்ப சக்தி உண்டு என்பதைக் காரணமாகக் கூறினார்கள் சில விஞ்ஞானிகள்.

ரோம் நாட்டில் தாவரங்களுக்குக் கூட வருங்காலத்தைக் கணிக்கும் சக்தி உண்டு என்று ஒரு பகுதியினர் நம்பினார்கள். கஷ்டம் வரும்போது சம்பந்தப்பட்டவர் புன்னை இலைகளை நெருப்பில் போட வேண்டும். அவை படபடவென அடித்தால் பாதிக்கப்பட்டவரின் தோஷம் நீங்கிவிடும். எந்தச் சத்தமும் இல்லாமல் அந்த இலைகள் எறிந்துவிட்டால் அவற்றைக் கொண்டவரின் வருங்காலம் சுகமானதாக இருக்காது என்று கூறினார்கள்.

பல விலங்குகளால் முதல் மழைத்துளி மண்ணில் விழுவதற்கு முன்பாகவே சுற்றி இருக்கும் ஈரப்பதத்தில் உள்ள மாறுதல்களை உணர்ந்து கொள்ள முடியும் என்கிறார்கள். வண்டுகளும் அணில்களும் வரவிருக்கும் புயல்களை உணர்ந்து கொள்ள முடியும் என்கிறார்கள்.

சுனாமி
சுனாமி

2004 டிசம்பரில் சுனாமி ஏற்படுவதற்குச் சற்று முன்னதாக யானைகள் இங்குமங்கும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தன, நாய்கள் வீட்டுக்கு வெளியே செல்ல மறுத்தன, நாரைகள் கடற்கரையை விட்டு வெளியேறின. உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகள் தங்கள் கூடாரங்களுக்கு வெளியே செல்லாமல் இருந்தன என்பதற்கெல்லாம் ஆதாரங்கள் உண்டு. என்றாலும் மிக அண்மைக்காலத்தில் நடக்கவிருக்கும் (அல்லது தொலைவில் நடந்து கொண்டிருக்கும்) இயற்கை மாறுதல்களை விலங்குகள் உணர்வதற்கும் அவற்றைக்கொண்டு ஒருவரின் வருங்காலம் குறித்த ஜோதிடம் கூற முடியும் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா?

முன்னது வாழ்வியல் மற்றும் உயிரியல் தன்மையைப் பொறுத்தது, அதை அறிவியல் பூர்வமாகவும் அணுகமுடியும், விவாதம் புரிய முடியும். இரண்டாவது, முழுக்க முழுக்க நம்பிக்கைச் சார்ந்தது.