சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான் இருந்துவந்திருக்கிறது. சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் நம்புவதற்குக் கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும். அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சுவாரஸ்யமான அதிசயங்களையும் மர்மங்களையும் விநோதங்களையும் இந்தத் தொடர் விவரிக்கிறது.
இந்தத் தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.
ஜுராசிக் பார்க் (Jurassic Park) என்பது உலகம் முழுதும் வெற்றிகரமாக ஓடிய ஒரு திரைப்படம். இதற்கு அடிப்படையாக அமைந்தது அமெரிக்க எழுத்தாளர் மைக்கேல் கிரைட்டன் எழுதி, 1990-ஆம் ஆண்டில் வெளியான அதே பெயர் கொண்ட அறிவியல் புதினம்.

டைனோசர்கள் வழக்கொழிந்து பல்லாயிரக் கணக்கான வருடங்கள் ஆகிவிட்டன. அவற்றைக் கொண்டு ஒரு கேளிக்கைப் பூங்காவை அமைத்தால் வசூலைக் குவிக்க முடியுமே! இந்த நோக்கில் செயல்படுவதற்காக நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டைனோசர்களை மீட்டுருவாக்கம் செய்கிறார்கள் என்று செல்கிறது அந்தக் கதை.
இது சாத்தியமா? உலகிலிருந்தே ஒட்டுமொத்தமாக மறைந்துவிட்ட உயிரினங்கள் மீண்டும் தோன்றச் சாத்தியம் உண்டா? ராட்சச ஆக்டோபஸ், டாஸ்மேனியப் புலி, யேட்டி ஆகிய மிருகங்கள் வெறும் கற்பனையே என ஒதுக்கப்பட்ட காலம் உண்டு. ஆனால் அவை இருந்திருக்கலாம் - ஏன், இருந்து கொண்டிருக்கின்றன என்னும் கருத்தும் (சில அறிவியலாளர்களிடையே கூட) நிலவுகிறது.
அப்படிக் கருதுவதோடு நிற்கவில்லை விலங்கியல் துறையினர். உலகில் ஏதாவது மனித அரவமற்ற மூலைகளில் அம்மிருகங்களில் சில இருக்கலாம் என எண்ணுவதால் அவற்றைத் தேடவும் ஆரம்பித்துள்ளனர். அவர்கள் அப்படித் தேடும் மிருகங்களில் ஒன்று மொதேலே இம்பெம்பே (Mokele-mbembe) - 30 அடி நீளமுள்ள ராட்சத டைனோசர். மத்திய ஆப்பிரிக்காவில் காங்கோ நதிக் கரையின் உள்ளடர்ந்த பகுதிகளில் இது இருப்பதாக அங்குள்ள பழங்குடி மக்கள் கூறுகின்றனர்.
1938-ம் ஆண்டு ஜெர்மன் விஞ்ஞானிகள் இம்மிருகத்தின் காலடிச் சுவடுகளைக் கண்டிருக்கின்றனர். 1980-ல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் பணியாற்றிய ராய் மகல் எனும் விஞ்ஞானி தன் உயிரையும் பொருட்படுத்தாது இம்மிருகத்தைத் தேடிப் போனார். அதன் காலடிச் சுவடுகளைக் கண்டார்.

"லார்ட் ஆஃப் தி டீப்" என்பது மற்றொரு ராட்சத நீர் வாழ் உயிரினம். இதனைத் தேடும் முயற்சியில் இறங்கினர் நியூ செளத் வேல்ஸைச் சேர்ந்த கடல் இயல் நிபுணர்கள். இதில் அவர்கள் மிகவும் கவனமாக ஈடுபட வேண்டியிருந்தது. காரணம் அந்த ராட்சத திமிங்கிலம் சுமார் நூறு அடி நீளம் கொண்டது என அங்குள்ள உள்ளூர் மீனவர்கள் கூறுகின்றனர். கனடா நாட்டைச் சேர்ந்த இரு சுற்றுலாப் பயணிகள் எடுத்த வீடியோவில் மிகப்பெரிய ஜந்து ஒன்று நீரில் குறுக்காகப் பாய்ந்து செல்வது தெரிய வர, விஞ்ஞானிகளின் ஆர்வம் அதிகரித்துள்ளது.
ஸ்காட்லாந்திலிருந்து மலேசியா வரை பரவியுள்ள 265 ஏரிகளில் உலகிலிருந்தே மறைந்துவிட்டதாக எண்ணப்பட்ட பல ராட்சத மிருகங்கள் இன்னமும் வசிக்கின்றனவாம்.
டாஸ்மேனியப் புலி என்பது மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தது. உடலில் வரிகளும், ஓநாய் போன்ற வடிவமும் கொண்ட இவ்வகையைச் சேர்ந்த கடைசி உயிரினமும் 1936-ல் ஹோபர்ட் மிருகக் காட்சி சாலையில் இறந்துவிட்டதாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் 1986-ம் ஆண்டு வன விலங்குகளின் வாழ்க்கையை அறியச் சென்ற கேமராமேன் கேவின் கமெரான் புதரில் மறைந்து கொண்டு எடுத்ததாகச் சொல்லும் ஒரு புகைப்படத்தில் காணப்படும் உயிரினம் டாஸ்மேனியப் புலி போலவே இருந்ததைக் கண்டு விஞ்ஞானிகள் தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டுள்ளனர். அது மட்டுமல்ல. அம்மிருகத்தின் காலடித் தடங்களும் லேசாகப் புகைப்படத்தில் தெரிகின்றன.
இதேபோல்தான் புன்யிப் என்ற சிறு காண்டாமிருகத்தைப் போலத் தோற்றமளிக்கும் மிருக இனம் அழிந்துவிட்ட ஒன்று என்று பலரும் நினைத்திருக்க, அதுவும் இப்போது உயிருடன் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

1986-ல் ப்ளோரிடாவிலுள்ள கடற்கரையில் புதைக்கப்பட்ட பெரிய எலும்புக்கூடுகளை இரு சிறுவர்கள் கண்டு அதை மற்றவர்களிடம் கூற, விஞ்ஞானிகள் அவற்றைப் பரிசோதித்து அது எட்டு டன் எடை கொண்ட ராட்சச ஆக்டோபஸின் எலும்புக் கூடு எனக் கூறியுள்ளனர்.
முப்பது அடிகளுக்கு மேலுள்ள ராட்சதப் பல்லிகள் கூட சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நேச்சர் என்ற அறிவியல் இதழில் ஓர் ஆராய்ச்சி கட்டுரை சமீபத்தில் வெளியாகியுள்ளது. ஃபெர்டினான்டா தீவுகளில் ஒரு பெண் ஆமை காணப்பட்டது. அது 'அற்புத ராட்சத ஆமை' (Fantastic Giant Tortoise) என்ற அழிந்து போனதாகக் கருதப்பட்ட உயிரினத்தில் ஒன்றுதான் என்கிறது ஆராய்ச்சி.
ஒரு வகை வௌவால் கடந்த நாற்பது வருடங்களுக்கு முன்பே முழுமையாக அழிந்துவிட்டது என்று கருதப்பட்டது. ஆனால் அப்படி ஒரு வௌவாலை ஆப்பிரிக்காவில் உள்ள ருவாண்டாவில் உள்ள காடுகளில் இரண்டு வருடங்களுக்கு முன் கண்டுபிடித்திருக்கிறார்கள். நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு அது அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்ததுதான் என்று சமீபத்தில் உறுதி அளித்திருக்கிறார்கள்.

வெறும் ஐந்தரை மீட்டர் நீளம் கொண்ட பச்சோந்தி இனம் ஒன்று அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது. ஆனால் அப்படிப்பட்ட ஒன்று தெற்கு மலாவி பகுதியில் உள்ள மழைக்காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
பழங்காலத்தில் கடற்பயணிகள் தாங்கள் கடலில் சில ராட்சத மிருகங்களைக் கண்டதாகவும், அவை தங்கள் உணர்ச்சியிழைகளினால் கப்பலையே நசுக்கக்கூடியவை என்றும் கூறி வந்ததைக் கட்டுக் கதை என்று தள்ளி வந்தோம். ஆனால் அவை கற்பனைகளல்ல, உண்மையென்று கூட நிரூபிக்கப்படலாமோ?