Published:Updated:

இப்படியும் நடந்ததா? இரட்டையர்களில் பூமியில் ஒருவர், விண்வெளியில் ஒருவர் - நாசா ஆராய்ச்சி சொல்வதென்ன?

ஸ்காட் கெல்லி, மார்க் கெல்லி

இந்த ஆராய்ச்சியில் மேலும் வியப்புகள் காத்திருந்தன. ஸ்காட்டின் மரபணுவில் சில மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன.

Published:Updated:

இப்படியும் நடந்ததா? இரட்டையர்களில் பூமியில் ஒருவர், விண்வெளியில் ஒருவர் - நாசா ஆராய்ச்சி சொல்வதென்ன?

இந்த ஆராய்ச்சியில் மேலும் வியப்புகள் காத்திருந்தன. ஸ்காட்டின் மரபணுவில் சில மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன.

ஸ்காட் கெல்லி, மார்க் கெல்லி
சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான் இருந்துவந்திருக்கிறது. சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் நம்புவதற்குக் கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும். அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சுவாரஸ்யமான அதிசயங்களையும் மர்மங்களையும் விநோதங்களையும் இந்தத் தொடர் விவரிக்கிறது.

இந்தத் தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.

இப்படியும் நடந்ததா?

அவர்கள் இருவரும் சகோதரர்கள். இரட்டையர்கள். இருவருமே விண்வெளி வீரர்கள். ஆனால் இருவருக்கும் இரு வேறு பணிகள் அளிக்கப்பட்டன.
ஸ்காட் கெல்லி, மார்க் கெல்லி
ஸ்காட் கெல்லி, மார்க் கெல்லி

ஸ்காட் கெல்லி என்பவர் 2015-2016 காலகட்டத்தில் 340 நாள்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்க வேண்டும். அதாவது கிட்டத்தட்ட ஒரு வருடம் பூமியில் இருந்து விலகி இருக்க வேண்டும். மார்க் கெல்லி அந்தக் காலகட்டத்தில் பூமியில் மட்டுமே இருக்க வேண்டும். விண்வெளி தொடர்பான எந்தப் பணியிலும் அவர் ஈடுபடக்கூடாது.

இந்தப் பணிகளை இவர்கள் செய்வதற்கு முன்பு அவர்களது எடை, உயரம் போன்ற விவரங்கள் துல்லியமாக அளக்கப்பட்டன. அதிகப்படியாக அவர்களது ரத்தம் மற்றும் எச்சில் சாம்பிள்களையும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா சேகரித்தது.

விண்வெளி நிலையத்துக்கு அதற்கான பயிற்சி பெற்ற ஒருவர் செல்வது இயல்பான ஒன்றுதான். ஆனால் எதற்காக இரட்டையர்களைத் தேர்ந்தெடுத்து ஒருவரைப் பூமியில்தான் இருந்தாக வேண்டும் என்று கூற வேண்டும்? இதற்குக் காரணம் உண்டு.

ஜப்பானிய விண்வெளி வீரரான நோரிஷிகே கனாய் என்பவர் விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பிய பிறகு ‘இன்று நான் என் உயரத்தை அளந்து பார்த்தபோது விண்வெளிக்குச் செல்லும் போது இருந்ததைவிட ஒன்பது சென்டிமீட்டர் அதிக அளவில் உயரமாக இருக்கிறேன்’ என்று கூற, அது பரபரப்புச் செய்தியானது. பின்னர் அதைச் சரிபார்த்த போது அவர் மிகைப்படுத்திக் கூறியிருக்கிறார் என்றும் அவர் இரண்டு சென்டிமீட்டர்தான் அதிக உயரமாக இருக்கிறார் என்றும் கூறப்பட்டது.

சர்வதேச விண்வெளி நிலையம்
சர்வதேச விண்வெளி நிலையம்

பொதுவாக 16 வயதிற்குப் பிறகு (மிக அதிகபட்சமாக மேலும் இரண்டு வருடங்கள் இருக்கக்கூடும்) ஆண்களின் உயரம் உச்சத்தை அடைந்து விடும். அதற்குப் பிறகு அவர்களின் தசைகள் வளரலாம், ஆனால் எலும்புகள் வளராது. அப்படியிருக்க சில சென்டிமீட்டர் என்றாலும் முப்பது நாற்பது வயதில் இருக்கும் விண்வெளி வீரர்கள் உயரம் அதிகமாவது என்பது உலக மகா அதிசயம் (முதுமை அடைந்த பிறகு தசைகள் மிகவும் குறுகுவதால் உயரம் சில சென்டிமீட்டர்கள் குறைய வேண்டுமானால் வாய்ப்பு உண்டு!).

இதைத்தொடர்ந்து இது குறித்து ஓர் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என்ற கருத்து நாசாவில் பரவலாக எழுந்தது. மேற்படி இரட்டையர் சகோதரர்கள் இதற்கு உடனடியாக ஒத்துக்கொண்டனர். தான் பூமியிலேயே இருக்கப் போவதால் இதற்காக தனக்கு எந்த ஊதியமும் வேண்டாம் என்று மா​ர்க் கூறினார் என்றாலும் குறைந்த பட்ச ஊதியமாக மணிக்கு பத்தரை டாலர் என்று அவருக்கு வழங்க நாசா ஒத்துக்கொண்டது.

விண்வெளி நிலையத்தில் தங்கிய ஸ்காட்டுக்கு அதற்குரிய ஊதியம் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வருடம் விண்வெளி நிலையத்திலிருந்துவிட்டு ஸ்காட் திரும்பியவுடன் அவரது உயரம் அளந்து பார்க்கப்பட்டது. பலருக்கும் வியப்பை ஏற்படும்படி அவரது உயரம் அதிகமாகி இருந்தது. அதாவது விண்வெளிக்குக் கிளம்பும்போது இருந்த உயரத்தை விட முழுமையாக இரண்டு அங்குலம் (5.08 சென்டிமீட்டர்) அதிக உயரம் கொண்டிருந்தார்.

சர்வதேச விண்வெளி நிலையம்
சர்வதேச விண்வெளி நிலையம்

எப்படி இது சாத்தியமானது?

புவியீர்ப்பு விசைதான் காரணம். சொல்லப்போனால் புவியீர்ப்பு விசை இல்லாததுதான் காரணம். அவர் புவியீர்ப்பு விசை சிறிதும் இல்லாத ஒரு இடத்தில் (அதாவது சர்வதேச விண்வெளி நிலையத்தில்) ஒரு வருடம் இருந்திருக்கிறார். இதன் காரணமாக அவரது முதுகெலும்பு நீட்டப்பட்ட நிலையிலேயே இருந்திருக்கிறது. நமது முதுகெலும்பு என்பது பல சிறிய எலும்புகளால் ஆனது. இந்தச் சிறிய எலும்புகளுக்கு நடுவே குஷன் போன்ற (டிஸ்க்குகள்) அமைப்பு இருக்கும். பூமியில் இருக்கும் போது புவியீர்ப்பு விசை காரணமாக இந்த எலும்புகள் ஒன்றோடொன்று அழுத்தப்பட்ட நிலையில் காட்சி தரும். அதனால்தான் விண்வெளியில் அதிக உயரம்.

ஆராய்ச்சியில் மேலும் வியப்புகள் காத்திருந்தன. ஸ்காட்டின் மரபணுவில் சில மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன. மரபணுக்களில் டெலோமியர்ஸ் (Telomeres) என்ற பாகம் உண்டு. இதைக் கொண்டு ஒருவரின் வயதைக் கணித்துவிட முடியும். இந்த மரபணுப் பகுதி ஸ்காட்டின் மரபணுவில் அதிக நீளமாகக் காணப்பட்டது. இது நாசா விஞ்ஞானிகளுக்குப் பெரும் வியப்பை அளித்தது.

ஏனென்றால் விண்வெளியில் உள்ள கதிரியக்க அளவு காரணமாக இந்தப் பாகம் மேலும் சுருங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அவை மேலும் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக அவரது வயதும் உயரமும் மாறி இருக்கிறதா என்பது குறித்து ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

- மர்மசரித்திரம் தொடரும்...