Published:Updated:

இப்படியும் நடந்ததா? சூரிய கிரகணம் பற்றி இப்படியெல்லாம் நம்பிக்கைகளா? விநோத சடங்குகளும் காரணங்களும்!

சூரிய கிரகணம்

எக்ளிப்ஸ் (Eclipse) என்பது கிரேக்க வார்த்தை. அதன் பொருள் தோல்வி. அதாவது எங்கோ ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதை உணர்த்தும் சொல் அது.

Published:Updated:

இப்படியும் நடந்ததா? சூரிய கிரகணம் பற்றி இப்படியெல்லாம் நம்பிக்கைகளா? விநோத சடங்குகளும் காரணங்களும்!

எக்ளிப்ஸ் (Eclipse) என்பது கிரேக்க வார்த்தை. அதன் பொருள் தோல்வி. அதாவது எங்கோ ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதை உணர்த்தும் சொல் அது.

சூரிய கிரகணம்
சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான் இருந்துவந்திருக்கிறது. சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் நம்புவதற்குக் கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும். அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சுவாரஸ்யமான அதிசயங்களையும் மர்மங்களையும் விநோதங்களையும் இந்தத் தொடர் விவரிக்கிறது.

இந்தத் தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.

இப்படியும் நடந்ததா?

சீனச் சக்ரவர்த்தி சுங் மனதில் பெரும் பீதி சூழ்ந்தது. காரணம் அரண்மனையை இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. எதனால் இந்த மாற்றம்? வேகமாக மாடிக்கு வந்தார். வானத்தை உற்றுப் பார்த்தார். அவரது வியப்பு கரை கடந்தது. சூரியனின் வடிவம் மிகக் குறுகிக் காணப்பட்டது. அது ஏதோ பிறை நிலவு போலக் காட்சியளித்தது.

சூரிய கிரகணம்
சூரிய கிரகணம்
சீன ஜோதிடத்தை அறிந்திருந்த மன்னன் நடப்பதைப் புரிந்துகொண்டார். பூமியை டிராகன் என்ற ராட்சத மிருகம் விழுங்கப் போவதற்கான அறிகுறி அது. அதன் முதல் கட்டமாகத்தான் சூரியனோடு டிராகன் யுத்தம் செய்கிறது.

இது போன்ற சூழலை சீன ஜோதிடர்கள் முன்பாகவே குறித்துக் கொடுப்பது வழக்கம். உடனே மன்னர் ஒரு ஏற்பாடு செய்வார். சிப்பாய்கள் வானத்தை நோக்கி அம்புகளைச் செலுத்துவார்கள். பலமாக முரசு ஒலிக்க விடுவார்கள். கொஞ்ச நேரத்தில் டிராகன் பயந்து சென்று விடும். சூரியனை விட்டு விலகி விடும். சூரியன் முழு வடிவத்துக்கு வந்து விடுவான்.

ஆனால் அன்று அப்படி ஒரு சூழலை ஜோதிடர்கள் குறித்துக் கொடுக்கவில்லை. சக்கரவர்த்தி திகைத்தார். நல்லவேளையாகச் சூரியன் மீண்டும் பழைய வடிவத்துக்கு வந்துவிட்டான். ஆக, டிராகன் எதனாலோ அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. ஆனால் சூரியனுக்கு நேர்ந்த ஆபத்தை முன்னதாகவே கணித்துச் சொல்லவில்லை என்பதற்காக அரண்மனை ஜோதிடர்களுக்கு மரண தண்டனை கிடைத்தது.

கி.மு 2306ல் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் என்ன என்பதை நீங்கள் யூகித்திருப்பீர்கள். சூரிய கிரகணம்! எக்ளிப்ஸ் (Eclipse) என்பது கிரேக்க வார்த்தை. அதன் பொருள் தோல்வி. அதாவது எங்கோ ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதை உணர்த்தும் சொல் அது.

சூரிய கிரகணத்தைப் பற்றிப் பல்வேறு பயங்கள் வெகு காலமாகவே நிலவி வருகின்றன. சிரியாவைச் சேர்ந்த ஒரு பழங்கால கல்வெட்டில் ‘ஹியர் (ஏப்ரல், மே) மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் அவமானகரமானது. பகலில் அப்போது சூரியன் தெரியமாட்டார்' என்கிறது. சூரிய கிரகணம் நடைபெறுவதைக் காண முடிந்த நாடுகள் பெரும் பாவம் செய்தவை என்ற நம்பிக்கையும் நிலவியது. சூரியனும் சந்திரனும் இப்படி விபரீதமாக நடந்து கொள்வது அந்த நாட்டில் பஞ்சம் மற்றும் பட்டினி சாவுகளுக்கான அறிகுறி என்ற நம்பிக்கையும் நிலவியது.

சூரிய கிரகணத்தைக் கண்டுகளிக்கும் மக்கள்
சூரிய கிரகணத்தைக் கண்டுகளிக்கும் மக்கள்
கிமு 400ல் கிரேக்கக் கவிஞரான பின்டார் என்பவர் கிரகணம் குறித்துப் பல கேள்விகளை ஒரு பாடலில் எழுப்பியிருக்கிறார். "இது போர் மூளும் என்பதற்கான அறிகுறியோ? கடும்பனி மழை விழுவதற்கான முன்னோடியோ? ஒரு பிரளயம் தோன்றி உலகை அழிக்கப் போகிறது என்பதற்கான எச்சரிக்கை மணியோ?" என்பதுதான் அந்தப் பாடல்.

பல்வேறு நாடுகள் மற்றும் இனக்குழுக்களின் நம்பிக்கைகள் மற்றும் விநோத சடங்குகள்

* 4000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சால்டியன் இனத்தைச் சேர்ந்தவர்கள் நிலவு திடீரென்று மறைவதற்குக் காரணம் ஏழு அசுரர்கள் அதை விழுங்கி விடுவதுதான் என்று நம்பினார்கள். இதற்காக சில சடங்குகளைச் செய்தார்கள். கோயிலில் விளக்கு ஏற்றி வைப்பார்கள். அந்தப் பகுதி மக்கள் எல்லாம் கூடி தங்கள் தலைப்பாகையைக் கழற்றி வைத்துவிட்டு வானத்தை நோக்கி விதவிதமாக கூச்சல் இடுவார்கள். இந்தச் சடங்கின் விளைவாக (!) எப்போதுமே சூரியனோ, நிலவோ மீண்டும் முழுமை அடைந்து விடும்.

* மெக்சிகோவில் கிரகணம் என்றாலே உயரம் குறைந்த மனிதர்களுக்கு கிலி. காரணம் கிரகணம் ஏற்பட்டால் அப்படியிருக்கும் ஒருவரை உடனடியாக பலி கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கை ஒரு காலத்தில் அங்கு உண்டு.

* வடமேற்கு அமெரிக்காவைச் சேர்ந்த பழங்குடியினர் கிரகணத்தின் போது தீயைச் சுற்றி நடமாடினால் கிரகணம் நீங்கிவிடும் என்று நம்பி செயல்பட்டார்கள்.

* பண்டைய கிரேக்கர்கள் சூரிய கிரகணம் என்பது சூரியன் உலகத்தை விட்டுச் சென்று விடுவது என்று கருதினர். இதனால் மன்னராட்சி கவிழ்ந்துவிடும் என்றும் உலகில் மாபெரும் சோகங்கள் நிகழும் என்றும் கருதினர். என்றாலும் வேறு சிலர் சூரிய கிரகணத்தை நம்பிக்கை தரும் விதமாகவும் பார்த்தார்கள். சூரியனையும் சந்திரனையும் தவிர்த்து, நிறைய நட்சத்திரங்கள் இருக்கின்றன என்றும் நம்பினார்கள்.

சூரிய கிரகணம்
சூரிய கிரகணம்

* ட்ரான்சில்வேனியா என்ற நாட்டில் ‘மனிதர்கள் செய்யும் பாவம் கரை கடந்து செல்லும் போது சூரியன் விஷத்தன்மை பொருந்திய துணி ஒன்றை உருவாக்கும். அதுதான் கிரகணம்’ என்றும் கருதினார்கள்.

* அஸடெக் மரபைச் சேர்ந்த பூசாரிகள் சூரிய கிரகணம், நிலநடுக்கம் ஆகிய இரண்டுமே நடைபெறும் போது அது உலகின் அழிவுக் காலம் என்று நம்பினார்கள்.

* மற்றபடி நம்மூரில் கிரகங்களுடன் ராகு, கேது ஆகிய பாம்புகளைத் தொடர்புப்படுத்தி இங்கு நிலவும் நம்பிக்கைகள் ஏற்கெனவே தெரிந்திருக்கும்.

நாளடைவில் கிரகணத்தின் காரணத்தை மட்டுமல்ல, அவை எப்போது நிகழும் என்பதைக் கூட வெகு துல்லியமாகக் கணிக்கும் வானியல் துறை செயல்படத் துவங்கியது.

இந்தியாவில் நிலவும் பிற நம்பிக்கைகள்

இந்தியாவின் பல பகுதிகளில் சூரிய கிரகணத்தின் போது மக்கள் எதுவும் சாப்பிடமாட்டார்கள். அப்போது சாப்பிடப்படும் உணவு உடலுக்குள் நஞ்சாக மாறும் என்ற நம்பிக்கை. கருத்தரித்துள்ள பெண்கள் சூரிய கிரகணத்தின் போது வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். இல்லை என்றால் அப்போது சூரியக்கதிர்கள் அந்தப் பெண்மணிக்கும் குழந்தைக்கும் பெரும் கேடு விளைவிக்கும் என்று நம்புபவர்கள் உண்டு. ஆனால் இவற்றுக்கு எல்லாம் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவுமில்லை. இது நம்பிக்கைச் சார்ந்தது மட்டுமே.

ஆனால் இத்தாலியில் சூரிய கிரகணத்தை ஆக்கப்பூர்வமாகப் பார்க்கும் ஒரு நம்பிக்கையும் இருக்கிறது. சூரிய கிரகணத்தின் போது நடப்படும் செடிகளிலிருந்து மிக வண்ணமயமான பூக்கள் பூக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

Fred Espenak | ஃப்ரெட் எஸ்பெனெக்
Fred Espenak | ஃப்ரெட் எஸ்பெனெக்
NASA Goddard Space Flight Center from Greenbelt, MD, USA, via Wikimedia Commons
நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானி ஃப்ரெட் எஸ்பெனெக் என்பவர் கிரகணங்கள் தொடர்பாகப் பல ஆராய்ச்சிகள் செய்தவர். அவர் இப்படிச் சொல்கிறார்...
"இந்த வகை ஆராய்ச்சிகளைச் செய்யும்போதெல்லாம் எனக்கு மிகுந்த தன்னடக்கம் உண்டாகிறது. சூரியக் குடும்பம் போன்ற பிரமாண்டத்தின் முன் நாமெல்லாம் எவ்வளவு சிறியவர்கள் என்ற எண்ணம் உண்டாகிறது. கிரகணங்கள் போன்ற வானியல் நிகழ்வுகளை நாம் எந்த விதத்திலும் பாதிக்க முடியாது, தடுத்து நிறுத்த முடியாது என்பதே நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை உணர்த்துகிறது!"
ஃப்ரெட் எஸ்பெனெக்

- மர்ம சரித்திரம் தொடரும்...