Published:Updated:

இப்படியும் நடந்ததா? - என்னது மூக்கு ஜோதிடம், மச்ச ஜோதிடமா? இவையெல்லாம் அறிவியலா, ஏமாற்று வேலையா?

முக ஜோதிடம்

லாவேட்டரின் ​மூக்கு கணிப்புக்குப் பல மேலிடங்களின் ஆதரவு இருந்தது. ரோமானிய சக்கரவர்த்தியான இரண்டாம் ஜோசப் லாவேட்டரை அடிக்கடி கலந்து ஆலோசித்தார்.

Published:Updated:

இப்படியும் நடந்ததா? - என்னது மூக்கு ஜோதிடம், மச்ச ஜோதிடமா? இவையெல்லாம் அறிவியலா, ஏமாற்று வேலையா?

லாவேட்டரின் ​மூக்கு கணிப்புக்குப் பல மேலிடங்களின் ஆதரவு இருந்தது. ரோமானிய சக்கரவர்த்தியான இரண்டாம் ஜோசப் லாவேட்டரை அடிக்கடி கலந்து ஆலோசித்தார்.

முக ஜோதிடம்
சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான் இருந்துவந்திருக்கிறது. சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் நம்புவதற்குக் கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும். அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சுவாரஸ்யமான அதிசயங்களையும் மர்மங்களையும் விநோதங்களையும் இந்தத் தொடர் விவரிக்கிறது.

இந்தத் தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.

இப்படியும் நடந்ததா?

ஒருவரைப் பார்த்த உடனேயே எடை போடக் கூடாது என்பார்கள். ஒருவர் எதைச் செய்தாலும் அது வெற்றிகரமாக முடிகிறது என்றால் ‘அவருக்கு உடம்பெல்லாம் மச்சம்’ என்று வேடிக்கையாகக் கூறுவதுண்டு. வரலாற்றின் சில விநோத பக்கங்களைப் புரட்டினால் இதற்கெல்லாம் புதிய அர்த்தங்கள் கிடைக்கின்றன. ஆனால் அவையெல்லாம் உண்மையா? கட்டுரையின் இறுதியில் பார்ப்போம். முதலில் அந்த விநோதங்கள் சில...

சுவிட்சர்லாந்தின் ஜுரிச் நகரைச் சேர்ந்த காஸ்பர் லாவேட்டர் என்பவர் முகங்களைப் பார்த்துக் கணிப்புகளைக் கூறத் தொடங்கினார். முக்கியமாக மூக்கின் தோற்றத்தைக் கொண்டு ஒருவரது குண நலனைக் கூறமுடியும் என்றும் அது நூறு சதவிகிதம் உண்மையாக இருக்கும் என்றும் கூறினார்.

காஸ்பர் லாவேட்டர்
காஸ்பர் லாவேட்டர்
Unidentified engraver, Public domain, via Wikimedia Commons

அவரது கூற்றுப்படி அழகான மூக்கு இருப்பவர்கள் அற்புதமான குணநலன்கள் கொண்டவராக இருப்பார்கள். சரி, அழகான மூக்கு என்பதை எப்படித் தீர்மானிப்பது? அதற்கும் ஒரு தீர்வு கூறினார். ‘நெற்றியின் நீளத்துக்குச் சமமாக மூக்கின் நீளம் இருக்க வேண்டும். மூக்கின் நுனி மிருதுவாகச் செதுக்கப்பட்டது போல இருக்க வேண்டும். இறுகியும் இருக்கக்கூடாது. கொழகொழவென்றும் இருக்கக்கூடாது. பக்கவாட்டில் பார்த்தால் மூக்கின் அடிப்பாகம் மூக்கின் நீளத்தில் மூன்றில் ஒரு பங்கை விட அதிகம் இருக்கக் கூடாது’. இதெல்லாம் நிறைவேறினால் அது அழகான மூக்கு.

அதே சமயம் இப்படியான மூக்கு இல்லாமல் இருப்பவர்களாலும் மிகச்சிறந்த மனிதர்களாக முடியும் என்றார். ஆனால் அதற்கு அவர்கள் நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும் என்றார். இதற்கு எடுத்துக்காட்டாக அவர் கூறியது சாக்ரடீஸை!

லாவேட்டரின் புகழ் பிற நாடுகளுக்கும் பரவியது. பிரபல அமெரிக்கக் கவிஞரான ஜோசப் பார்லெட் என்பவர் ‘லாவேட்டரின் கணிப்புகள் மேலும் சீரமைக்கப்பட்டால் உலகமே சொர்க்க மயமாகிவிடும்’ என்றெல்லாம் வானளவா புகழ்ந்து கவிதைகளை எழுதித் தள்ளினார்.

லாவேட்டரின் ​மூக்கு கணிப்புக்குப் பல மேலிடங்களின் ஆதரவு இருந்தது. ரோமானிய சக்கரவர்த்தியான இரண்டாம் ஜோசப் லாவேட்டரை அடிக்கடி கலந்து ஆலோசித்தார். ரஷ்யாவின் கிராண்ட் டியூக் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த இளவரசர் எட்வர்ட் ஆகியோரும் கூட அவரின் முகம் கணிக்கும் திறமைக்குப் பெரும் அங்கீகாரம் அளித்தனர்.

நம் நாட்டிலும் முகத்தைப் பார்த்துக் கணிக்கும் கலை நெடுங்காலமாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்ல இதுதொடர்பான ஒரு பாடத் திட்டத்தையே இந்தோரில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் வேதிக் அஸ்ட்ராலஜி என்ற கல்வி நிறுவனம் மாணவர்களுக்கு அளிக்கிறது. (அது சரி!)
ஃபேஸ் ரீடிங்
ஃபேஸ் ரீடிங்

ஒருவருக்குச் சதுரமான முகம் இருந்தால் அவர் எதார்த்தமாக இருப்பார். நடைமுறைக்கு ஏற்ப முடிவெடுப்பார். ஓவல் வடிவில் முகம் இருந்தால் அவர் மிகவும் கவர்ச்சியாக இருப்பார். செவ்வக வடிவ முகம் கொண்டிருந்தால் அவருக்கு ஆசையும் ஆர்வமும் மிக அதிகம். வட்ட வடிவமான முகத்தைக் கொண்டவர்கள் எதையும் சுலபமாக எடுத்துக் கொண்டு எளிதில் கிடப்பவர்கள். இதெல்லாம் அடிப்படையானதுதான், முகம் குறித்த கலையில் வேறு பல நுட்பங்களும் உண்டு என்கிறார்கள்.

'ஃபேஸ் ரீடிங்' எனப்படும் முக ஜோதிடத்தில் வல்லவராகக் கருதப்படுபவர் பார்பரா ராபர்ட்ஸ். இவர் இது குறித்து ஆழ்ந்த ஆராய்ச்சிகளைச் செய்து ஒரு நூலையும் வெளியிட்டிருக்கிறார்.

ஜோதிடத்தில் எப்படி ஆர்வம் வந்தது என்ற கேள்விக்கு அவர் கூறிய பதில் இதுதான். "உலகப் புகழ்பெற்ற ஒரு மனவியல் நிபுணர் எனது கல்லூரி ஆசிரியராக அமைந்தார். அப்போது எனக்கு ஜோதிடத்தில் எல்லாம் நம்பிக்கையே கிடையாது. அது அறிவியலுக்கு எதிரானது என்று கருதினேன். அந்தப் பேராசிரியர் வகுப்பைத் தொடங்கும்போது எங்களில் யாருக்காவது முக ஜோதிடத்தை வைத்து எங்களின் முகம் குறித்து அறிந்துகொள்ள ஆர்வம் உண்டா என்று கேட்டார். நான் மட்டும்தான் கையைத் தூக்கினேன். ஒரு சாகச நோக்கத்தில் மட்டும்தான் நான் கையைத் தூக்கினேன். ஆனால், அதைத் தொடர்ந்து என் வாழ்க்கை குறித்த இருபது விஷயங்களை அவர் கூறினார். அத்தனையும் 100 சதவிகிதம் துல்லியமாக இருந்தது. பிறகு அந்த அறையிலிருந்த ஒவ்வொருவர் குறித்தும் அவர் மிகச் சரியாகக் கணிக்க, அடுத்த நாள் என் தந்தையின் புகைப்படத்தை அவரிடம் காட்டினேன். அதைப் பார்த்த உடனேயே ‘உன் அப்பா சிறுவயதில் அனாதையாக வாழ்ந்திருப்பார்" என்று கூறினார். அது உண்மைதான்.

பின் ஒருவரது கண்களைக் கொண்டு ஒருவரது உணர்வுகள், அவர் சந்திக்கும் சவால்கள் போன்றவற்றை அவரால் எப்படிக் கணிக்க முடிகிறது என்பதை விவரித்தார். இந்த மனிதருக்குத் தெரிந்த வித்தையை நானும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அப்போதுதான் ஏற்பட்டது" என்கிறார் ராபர்ட்ஸ்.

ஹிட்லர்
ஹிட்லர்

என்றாலும் வெறுமனே உடலின் ஒரேயொரு பாகத்தைக் கொண்டு ஒருவரைக் கணித்துவிட முடியாதாம். ஹிட்லரைப் பொருத்தவரை அவரை எதிர்மறையானவராகக் காட்டப் பல விஷயங்கள் இருந்தன என்கிறார் இவர். முக்கியமாக அவருடைய மிகச்சிறிய மீசை. இது அவர் பெரும் கோபக்காரர் என்பதையும் மனச்சிக்கல் கொண்டவர் என்பதையும் காட்டுகிறது. (இது சார்லி சாப்ளினுக்குத் தெரியுமாங்க?!) அவரது மிகச் சிறிய காதுகள் அவர் அபாயகரமானவர் என்பதை உணர்த்துகின்றன. அவருடைய கண்ணின் தன்மை அவர் கேவலத் தன்மை கொண்டவர் என்பதையும் பிறர் துன்பத்தில் இன்பம் காண்பவர் என்பதையும் உணர்த்துகின்றன என்றார். இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட முகக் குறிப்புகள் ஒன்றோடொன்று ஒத்துப்போகும் போது அவர் ஒட்டுமொத்தமாகவே மிக அபாயகரமானவர் என்பதைக் கூறிவிட முடியுமாம்.

நவீன மருத்துவத்தின் தந்தை என்று ஹிப்பாக்ரடீஸைக் குறிப்பிடுவார்கள். அவர் பெயரில்தான் அலோபதி மருத்துவர்கள் உலகெங்கும் உறுதிமொழி ஏற்கிறார்கள். இவர் நோயாளிகளின் முகத்தைக் கூர்ந்து கவனித்து அவர்களது வியாதியைக் கண்டுபிடிக்கும் திறமை பெற்றவர் என்கிறார்கள்.

இவருக்கு இன்னொரு திறமையும் உண்டு. ஒருவரின் உடலிலுள்ள மச்சங்களை ஆராய்ந்து அதன்மூலம் அவரது இயல்புகளையும் அவரது வருங்காலத்தையும் கணிக்க முடியும் என்றார். இதுதொடர்பாக மோலியோமன்சி (Moleomancy) என்ற முறையையும் இவர் உருவாக்கினார் என்று ஒரு பரவலான கருத்து உண்டு. இவரது ஆராய்ச்சிகளின்படி ஒருவருக்கு முழங்கைக்கும் மணிக்கட்டுக்கும் நடுவே மச்சம் காணப்பட்டால் அவர் சண்டைக்கோழியாக இருப்பார். சிறிய விஷயங்களுக்கெல்லாம் பொங்கி எழுவார். அவரது வலது தொடையில் மச்சம் இருந்தால் இளம் வயதிலேயே அவர் வெற்றிகளைக் குவிப்பார். மாறாக அந்த மச்சம் இடது தொடையிலிருந்தால் அவர் வாழ்க்கையில் சோதனை மேல் சோதனைதான்.

Hippocrates | ஹிப்பாக்ரடிஸ்
Hippocrates | ஹிப்பாக்ரடிஸ்

இந்த மச்ச ஜோதிடம் குறித்து இரு வேறு கருத்துக்கள் நிலவின என்றாலும் கூறியவர் ஹிப்பாக்ரடிஸ் என்பதால் பலராலும் அதைப் புறம் தள்ள முடியவில்லை. அவர் இறந்து பல நூற்றாண்டுகள் கடந்த பிறகும் மொலியோக்ராஃபி முறைக் கணிப்பு மறையவில்லை. 1670-ல் ரிச்சர்ட் ஸ்டேட்டஸ் என்பவர் இது குறித்து ஒரு விவரமான புத்தகத்தை வெளியிட்டார்.

ஆனால் இதெல்லாம் ஏமாற்று வேலை என்று பின்னர் பலரும் கூறத் தொடங்கினர். பலரும் ஹிப்பாக்ரடிஸுக்கும் மோலியோமன்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, அவை அனைத்துமே பொய்யான வரலாறு என்றனர். இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் பாராளுமன்றம் 1743-ல் இந்த முறையைத் தடை செய்தது. அதுமட்டுமல்ல இந்த மச்ச ஜோதிடத்தைக் கணிப்பவர்கள் நாற்சந்தியில் நிற்க வைக்கப்படுவார்கள். அவர்களுக்குச் சவுக்கடி கொடுக்கப்படும் என்றும் சட்டம் இயற்றினர்.

எப்படியோ அறிவியல் பெயரால் உள்ளே நுழைந்த இவ்வாறான மூடநம்பிக்கைகள் ஒருவழியாகக் களையப்பட்டன என்பது ஆறுதலான விஷயம்!

- மர்மசரித்திரம் தொடரும்...