சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான் இருந்துவந்திருக்கிறது. சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் நம்புவதற்குக் கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும். அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சுவாரஸ்யமான அதிசயங்களையும் மர்மங்களையும் விநோதங்களையும் இந்தத் தொடர் விவரிக்கிறது.
இந்தத் தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.
உலகின் தலைசிறந்த மேஜிக் நிபுணர்களில் ஒருவர் ஹேரி ஹுடினி (Harry Houdini). இவர் பிறந்தது ஹங்கேரியில் என்றாலும் தன் சாகசங்களை நடத்திக் காட்ட அவர் தேர்ந்தெடுத்தது அமெரிக்காவை.

தன்னைச் சங்கிலியால் கட்டி ஏதாவது ஏரிக்குள் தூக்கிப் போடச் சொல்லுவார். ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்துக்கொண்டிருக்க, அவர் சங்கிலியை உடைத்துக்கொண்டு வெளியே வருவார். அவர் உடலில் எந்த ஒரு காயமும் இருக்காது. இந்த வித்தையை சுமார் இரண்டாயிரம் முறை பல இடங்களில் செய்து காட்டியிருக்கிறார். அதுவும் நீண்ட நேரம் ஏரியில் தொடர்ந்து இருந்துகொண்டே இருந்து அனைவரையும் பதற வைப்பது இவருக்குக் கை வந்த கலை. மூச்சை வெகு நேரத்துக்கு அடக்கிக் கொள்ளும் வித்தையில் மிகவும் கை தேர்ந்தவராக இருந்தார் அவர்.
எரிச் வைஸ் (Erich Weisz) என்பதுதான் பெற்றோர் அவருக்கு வைத்த பெயர். சிறுவயதிலிருந்தே மேஜிக் செய்வதில் மிகவும் நாட்டம் கொண்டார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன்-யுகேன் ராபர்ட் ஹுடின் (Jean-Eugène Robert-Houdin) என்ற மேஜிக் நிபுணரின் பெயரில் இருக்கும் 'ஹுடின்' என்பதைச் சற்றே நீட்டி தனதாக்கிக்கொண்டார்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஹுடினி தன்னிடம் தெய்வ சக்தி இருப்பதாகவோ அற்புத சக்தி இருப்பதாகவோ என்றுமே கூறிக் கொண்டதில்லை. தீவிர பயிற்சி செய்தால் யாராலும் அந்த வித்தையைச் செய்து காட்ட முடியும் என்றே அவர் சொல்வதுண்டு. ஆனாலும் அவர் எட்டிய உயரத்தை இன்னும் மற்றவர்கள் பிடிக்கவில்லை.

1926ல் நாளிதழில் வெளியான ஒரு செய்தி அவர் கவனத்தைக் கவர்ந்தது. எகிப்து நாட்டைச் சேர்ந்த சாமியார் ரஹ்மான் பே (Rahman Bey) என்பவர் தனக்கு அதீத மாயசக்தி இருப்பதாகவும், தன்னை ஒரு பெட்டியில் வைத்து மூடி தண்ணீருக்குள் போட்டு விட்டாலும் ஒரு மணி நேரம் வரை தன்னால் உயிரோடு இருக்க முடியும் என்றும் அவர் கூறினார். கூடவே சுவாசமே இல்லாத அரிதான ஒரு நிலையை தன்னால் எட்ட முடிந்ததால்தான் இந்த அற்புதம் நிகழ்கிறது என்றும் கூறினார். இதைப் படித்ததும் ஹுடினிக்குப் பெரும் கோபம் ஏற்பட்டது. போலிகள் என்றாலே அவருக்கு ஒரு வெறுப்பு. தன்னாலும் அந்த வித்தையைச் செய்ய முடியும் என்று சவால் விட்டார். அதற்காக மூன்று வாரங்கள் தீவிர பயிற்சி எடுத்துக் கொண்டார். குறிப்பிட்ட அந்த நாளும் வந்தது.
அறிவியலின் அற்புதமும், சரியான பயிற்சி முறையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தாலும் இந்த விஷயத்தில் எந்த ரிஸ்க்கையும் மேற்கொள்ள ஹுடினி விரும்பவில்லை. தான் படுத்துக் கொண்டிருந்த சவப்பெட்டிக்கும் அவரது உதவியாளர் ஜிம்மி என்பவருக்கும் தொலைபேசி தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.
ஹுடினி படுத்துக் கொண்டு நீண்ட சவப்பெட்டியின் மூடி நன்கு அழுத்திச் சாத்தப்பட்டது. தவிர ஆணிகள் அடித்து அந்த மூடியைத் திறந்து விட முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர். பிறகு அந்தப் பெட்டி நியூயார்க் நகரில் உள்ள ஷெல்டன் ஹோட்டல் (Shelton) நீச்சல் குளத்துக்குள் இறக்கப்பட்டது.

சுமார் ஐம்பது நிமிடங்களுக்குப் பிறகு சுவாசிப்பதில் தனக்குச் சற்று சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் மேலும் பத்து நிமிடங்களுக்கு அவரால் அந்தப் பெட்டிக்குள் இருப்பது சாத்தியமாக இருக்குமெனத் தோன்றவில்லை என்றும் அவர் தன் உதவியாளரிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
என்றபோதும் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் அந்தப் பெட்டியிலிருந்து காண்பித்தார். அந்தப் பெட்டியிலிருந்த மிகச் சிறு துவாரங்கள் வழியாகத் தண்ணீர் வேறு உள்ளே வந்து கொண்டிருந்தது. இருந்தும் ஹுடினி அசரவில்லை. பலரது உதவியுடன் பெட்டி நீரிலிருந்து வெளியே எடுக்கப்பட்டது. அதிலிருந்த ஹுடினி நனைந்திருந்தார். சற்றே களைப்புடன் காணப்பட்டாலும் "நான் ஓகே" என்றார்.
இதை அறிந்ததும் எகிப்து சாமியார் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்தது. பெட்டிக்கு உள்ளே ஆக்சிஜனை வெளிப்படுத்தும் ரசாயனங்களை ஹுடினி மறைத்து வைத்திருந்தார் என்றது எதிர்த்தரப்பு. இதை எதிர்பார்த்தோ என்னவோ அப்படி எதுவும் நடந்து விடவில்லை என்பதை விஞ்ஞானிகளை விட்டு பெட்டியைச் சோதனை செய்ததன் மூலம் ஏற்கெனவே உறுதி செய்திருந்தார் ஹுடினி.
இந்த நிகழ்ச்சி நடைபெற்ற மூன்றே மாதங்களில் அவர் இறக்க நேரிட்டது வேறு விஷயம். அவர் இறந்த விதமும் துரதிர்ஷ்டவசமானது.

அவரது பெருமைகளைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்த ஒரு இளைஞன் அவரை அணுகினான். "என் வயிற்றுப்பகுதியில் எவ்வளவு வலுவாகக் குத்துவிட்டாலும் என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியும்" என்று ஹுடினி அறிவித்ததுண்டு. அதாவது தன்னை ஒருவர் குத்த வரும்போது வயிற்றுப்பகுதியில் உள்ள தசைகளை இறுக்கி கல் போல ஆக்கிக் கொண்டு விடுவது அவரது வழக்கம். ஆனால் மேற்படி இளைஞன் எதிர்பாராத ஒரு நொடியில், அவரைப் பரிசோதிக்க எண்ணிக்கொண்டு, அவர் வயிற்றில் ஓங்கி ஒரு குத்துவிட்டான். கடும் வலியில் துடித்தார். தனது ஷோக்களை நடத்திக்கொண்டே சில நாட்கள் அந்த வலியைப் பொறுத்துக் கொண்டாலும் நிலைமை விபரீதமாக, அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.