Published:Updated:

இப்படியும் நடந்ததா? ரஷ்யாவிடமிருந்து அலாஸ்காவை வாங்கிய அமெரிக்கா; விலகாத தங்கப் பத்திர மர்மம்!

அலாஸ்கா

அலாஸ்காவை நல்ல விலைக்கு விற்றால் என்ன? இப்படி ஒரு கருத்து ரஷ்யப் பேரரசின் அதிகாரிகளிடையே பரவ, அந்தத் தகவல் வெளியே கசியவிடப்பட்டது.

Published:Updated:

இப்படியும் நடந்ததா? ரஷ்யாவிடமிருந்து அலாஸ்காவை வாங்கிய அமெரிக்கா; விலகாத தங்கப் பத்திர மர்மம்!

அலாஸ்காவை நல்ல விலைக்கு விற்றால் என்ன? இப்படி ஒரு கருத்து ரஷ்யப் பேரரசின் அதிகாரிகளிடையே பரவ, அந்தத் தகவல் வெளியே கசியவிடப்பட்டது.

அலாஸ்கா
சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான் இருந்துவந்திருக்கிறது. சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் நம்புவதற்குக் கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும். அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சுவாரஸ்யமான அதிசயங்களையும் மர்மங்களையும் விநோதங்களையும் இந்தத் தொடர் விவரிக்கிறது.

இந்தத் தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.

இப்படியும் நடந்ததா?

ரஷ்யப் பேரரசுக்கும் அமெரிக்காவுக்கும் நடுவே ஒருகாலத்தில் அனாதையாக அமைந்திருந்த தீவு அலாஸ்கா. அப்போது ஓரளவு பழங்குடியின மக்கள் மட்டுமே அங்கு வாழ்ந்தனர். அது அதிக குளிர் கொண்ட பகுதி.

1741-ல் புதிய நிலப்பகுதிகளின் கண்டுபிடிப்பாளரான வைடஸ் பேரிங் என்பவர் அங்கு விஜயம் செய்தார். அலாஸ்காவில் நிறைய நீர் நாய்கள் மற்றும் சீல் விலங்குகள் இருப்பதை உலகுக்குத் தெரியப்படுத்தினார். உடனே முன்னாள் ரஷ்யப் பேரரசு அலாஸ்கா பகுதிக்குச் சொந்தம் கொண்டாடியது. அதைத் தன்வசம் ஆக்கிக் கொண்டது.

Alaska Treaty
Alaska Treaty

1867ல் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி ரஷ்யப் பேரரசில் உண்டானது. அப்போது அங்கே ஆண்டது மன்னர் இரண்டாம் அலெக்சாண்டர். அலாஸ்கா பகுதியைக் கட்டிக்காப்பது பெரும் பொருளாதார இழப்புக்கு வழிவகுக்கிறது என்று அவருக்குத் தோன்றியது. அதேசமயம் இங்கிலாந்தும் அமெரிக்காவும் அலாஸ்காவை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவர விரும்புவதையும் ரஷ்யப் பேரரசு அறிந்திருந்தது. அந்த இரண்டு நாடுகளும் ஒரே சமயத்தில் தன் மீது போர் தொடுத்தால் அதை அப்போதைக்குச் சமாளிப்பது மிகக் கடினம் என்று கருதினார் மன்னர்.

அலாஸ்காவை நல்ல விலைக்கு விற்றால் என்ன? இப்படி ஒரு கருத்து ரஷ்யப் பேரரசின் அதிகாரிகளிடையே பரவ, அந்தத் தகவல் வெளியே கசியவிடப்பட்டது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஸ்வர்ட் அலாஸ்காவை அமெரிக்கா வாங்கிக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார். வருங்காலத்தில் அலாஸ்கா விலைமதிப்பில்லாத பகுதியாக மாறும் என்று அவர் நம்பினார். (அவர் நம்பிக்கை பின்னர் சரியானது. இன்று அலாஸ்கா பெட்ரோலிய வளம் நிரம்பிய ஒரு பகுதி). ஐம்பது லட்சம் அமெரிக்க டாலர்களை விலையாகக் கொடுப்பதாகக் கூறினார் அவர்.

ரஷ்யப் பேரரசின் அப்போதைய வெளியுறவு அமைச்சரான பேவன் ஸ்டார்செல் மேலும் அதிக விலை கோரினார். பேரம் நடந்தது. 72 லட்சம் டாலருக்கு அலாஸ்காவை ரஷ்யப் பேரரசு ஒத்துக்கொண்டது. ஒப்பந்தப் பத்திரம் தயாரிக்கப்பட்டு அது அமெரிக்க செனட்டின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டனர். சிலர் எதிர்த்தனர். அலாஸ்கா ஒரு தேவையில்லாத ஐஸ் பெட்டி என்றனர் சிலர். அமெரிக்காவுக்கு இது வீண் செலவு என்ற கருத்து அதிகரித்தது.

அமெரிக்கா கொடுத்த 72 லட்சம் டாலருக்கான செக்
அமெரிக்கா கொடுத்த 72 லட்சம் டாலருக்கான செக்

அமெரிக்கச் சட்ட வெளியுறவு அமைச்சர் அலாஸ்காவுக்குச் சிலரை அனுப்பி அதன் வளங்கள் பற்றியும் அதை வாங்குவதால் அமெரிக்காவுக்கு எந்த அளவுக்குப் பலன் இருக்கும் என்பதையும் அறிந்து கொள்ள முயற்சி செய்தார். தவிர அலாஸ்காவை வாங்குவது வருங்கால அமெரிக்காவுக்குப் பொருளாதாரக் கோணத்தில் நன்மை தருமா என்பதை அறிய ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார். அதற்குத் தலைவராக ராபர்ட் வாக்கர் என்பவரை நியமித்தார். கமிஷனின் தலைவர் என்ற முறையில் வாக்கர் தன் குழுவினருடனும், தனியாகவும் ரஷ்யாவுக்கும் அலாஸ்காவுக்கும் பலமுறை விஜயம் செய்தார்.

ஒரு முறை இவர் அமெரிக்காவில் ஆளரவமற்ற சாலை ஒன்றில் நடந்துகொண்டிருந்தபோது ஒரு பிக்பாக்கெட் திருடன் இவர் வைத்திருந்த ஒரு நீண்ட பையைத் திருடிக் கொண்டு ஓடினான். அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்து திருடனைப் பிடிக்க வைத்தார்கள். அந்தப் பையில் பணத்தோடு சில ஆவணங்களையும் கைப்பற்றினார்கள் காவல்துறையினர். கூடவே பல ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தங்கப் பத்திரங்களும் அவற்றில் காணப்பட்டன. திருடன் மீது வழக்கு தொடர எவ்வளவோ எடுத்துக் கூறியும் மறுத்துவிட்டார் வாக்கர். தங்கப் பத்திரங்கள் குறித்து எதையும் பேச மறுத்தார்.

அலாஸ்கா நாடாளுமன்றம்
அலாஸ்கா நாடாளுமன்றம்

இந்தத் தங்கப் பத்திரங்களை யாருக்காக யார் கொடுத்தார்கள், எதற்காகக் கொடுத்தார்கள், கமிஷனின் தலைவர் விலை போய்விட்டாரா அல்லது யாரைச் சரிக் கட்டுவதற்காக இவை கொடுக்கப்பட்டன - இந்தக் கேள்விகளுக்கு இன்றுவரை விடை தெரியவில்லை. இதனிடையே அமெரிக்க அதிபர் ஜான்சனின் தலைமையும் மாறிவிட்டது. பதில்கள் புதைக்கப்பட்டுவிட்டன.

- மர்மசரித்திரம் தொடரும்...