Published:Updated:

இப்படியும் நடந்ததா? `இதுவரை உலகில் 100 பேர் மட்டுமே!' ஒரே உடலில் இருவர் இருப்பது சாத்தியமா?

மனித உடல்

மருத்துவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இது குறித்துப் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இரு வருடங்களுக்குப் பிறகு புதிர் விடுபட்டது.

Published:Updated:

இப்படியும் நடந்ததா? `இதுவரை உலகில் 100 பேர் மட்டுமே!' ஒரே உடலில் இருவர் இருப்பது சாத்தியமா?

மருத்துவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இது குறித்துப் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இரு வருடங்களுக்குப் பிறகு புதிர் விடுபட்டது.

மனித உடல்
சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான் இருந்துவந்திருக்கிறது. சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் நம்புவதற்குக் கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும். அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சுவாரஸ்யமான அதிசயங்களையும் மர்மங்களையும் விநோதங்களையும் இந்தத் தொடர் விவரிக்கிறது.

இந்தத் தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.

இப்படியும் நடந்ததா?

அமெரிக்காவிலுள்ள பாஸ்டன் நகரில் இயங்கி வந்தது பெத் இஸ்ரேல் மருத்துவ மையம். சுமார் இருபது வருடங்களுக்கு முன் அங்கே ஒரு வியப்பான நிகழ்ச்சி நடந்தது.

DNA
DNA
'இது என்ன உளறல்? அப்படி ஒருகாலும் இருக்க முடியாது’ என்று உரத்த குரலில் கத்திக் கொண்டிருந்தார் அந்த நடுத்தர வயது தாய். கையில் மருத்துவ அறிக்கைகளை வைத்துக்கொண்டிருந்த டாக்டர் மார்கோட் க்ருஸ்கல் என்பவரும் அதிர்ச்சி வயப்பட்டிருந்தார்.

பின்னணி இதுதான். அந்தத் தாயின் இரு சிறுநீரகங்களும் பழுதுபட்டிருந்தன. எனவே அவருக்கு மாற்றுச் சிறுநீரகம் பொருத்தி ஆகவேண்டிய கட்டாயம். நெருங்கிய உறவினரின் சிறுநீரகத்தைப் பொருத்தினால்தான் அதை அந்தத் தாயின் உடல் ஏற்கும். எனவே அவரது நெருங்கிய உறவினர்களின் ரத்த சாம்பிள்கள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. அவற்றின் விளைவுகள் தெரியவந்தபோதுதான் அதிர்வுகள் உண்டாகின. மருத்துவ அறிக்கையின்படி (அதாவது டி.என்.ஏ சோதனைகளின்படி) அந்தத் தாயின் மூன்று மகன்களில் இருவர் அவரது குழந்தைகளாக இருக்க முடியாது!

அந்தத் தாயின் மகன்களில் இருவர் அவர் தந்தைக்குப் பிறந்தவர்களாக இருக்க முடியாது என்றால் அது அவரின் ஒழுக்க மீறலாகக் கருதப்பட்டிருக்கலாம். ஆனால் இது வேறு மாதிரி ஆயிற்றே!

தன் கணவனோடு இயல்பான முறையில் இல்லற வாழ்க்கை வாழ்ந்து கர்ப்பம் தரித்து, தான் பெற்ற இரு மகன்கள் தன்னுடையது இல்லை என்றால் எந்தத் தாயால் ஏற்றுக் கொள்ளமுடியும்? ஒருவேளை பிறந்த உடனேயே குழந்தை மாறிவிட்டதா? ஆனால் அந்தப் பிரசவங்கள் மிகச்சிறந்த மருத்துவமனைகளில் நடைபெற்றிருந்தன. அதுவும் அப்படிப்பட்ட அபூர்வ நிகழ்வு இரு முறை எப்படி ஒரே தாய்க்கு நிகழ்ந்திருக்க முடியும்?

மருத்துவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இது குறித்துப் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இரு வருடங்களுக்குப் பிறகு புதிர் விடுபட்டது.
கிரேக்கப் புராணத்தில் சிமெரா (Chimera)
கிரேக்கப் புராணத்தில் சிமெரா (Chimera)
Jacopo Ligozzi, Public domain, via Wikimedia Commons

அந்த தாயின் உடலில் இரண்டு நபர்கள் இருந்திருக்கிறார்கள்! அதாவது கருவில் இரண்டு முட்டைகள் ஒன்றாக இணைந்து ஒரே உடலாக வளர்ந்துள்ளன. அவளது உடலின் சில பகுதிகள் ஒரு கரு முட்டையிலிருந்து உருவாகியிருக்க மற்றவை மற்றொரு கருமுட்டையின் தன்மைகளைக் கொண்டிருந்தன.

இப்படி இரண்டு நபர்கள் ஒரே உடலில் இருப்பதை சிமெரா (Chimera) என்றார்கள் மருத்துவர்கள். தொடர்ந்து நடைபெற்ற ஆராய்ச்சியில் உலகம் முழுவதும் சுமார் 100 பேர்கள் இப்படி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சிமெரா கிரேக்கப் புராணத்தில் இடம்பெறும் ஒரு மிருகம். நெருப்பு ஜுவாலைகளைக் கக்கிக் கொண்டிருக்கும் விலங்கு இது. பல்வேறு மிருகங்கள் ஒன்றாகச் சேர்ந்த வடிவம் அது. சிங்கம் போன்ற உடலைக் கொண்டிருக்கும். சிங்க முகமும் இருக்கும். ஆனால் அதன் கழுத்துப் பகுதியில் ஒரு ஆட்டின் முகம் பின்புறமாகத் துருத்திக்கொண்டிருக்கும். அதன் வால் பாம்பின் தலையைப் போல இருக்கும்.

அதன் பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட விலங்குகளின் உடல்களை ஒன்றாகக் கொண்ட விலங்கை சிமேரா என்று அழைக்கத் தொடங்கினார்கள். அப்படிப்பார்த்தால் நம்மூரில் அறியப்படும் யாளி என்ற விலங்கு கூட (பல தொன்மையான கோயில்களில் இந்த உருவத்தைப் பார்க்க முடியும்) சிமெராதான். இது சிங்க முகத்தில் யானையின் துதிக்கையை நினைவூட்டும் உறுப்புடன் காணப்படும். கிரேக்கத் தொன்மக் கதைகளில், சிங்க உருவமும் மனிதப் பெண்ணின் தலையும் கொண்ட மிருகத்துக்கு ‘ஸ்பிங்ஸ்’ என்று பெயர். ஸ்பிங்ஸ் மிருகம் கேட்கும் புதிர்களுக்குப் பதில் சொல்லாவிட்டால், அது அவர்களை விழுங்கிவிடுமாம். ஸ்பிங்ஸும் ஒருவிதத்தில் சிமெராதான்.

Sphinx (ஸ்பிங்ஸ்)
Sphinx (ஸ்பிங்ஸ்)

மனித சிமேராக்களின் உடலில் மாறுபட்ட இரண்டு செட் டி.என்.ஏ இருக்கும்.

பிரசவத்தைத் தவிர வேறொரு விதத்திலும் ஒரு மனிதர் சிமெராவாக மாற வாய்ப்பு உண்டு. எலும்பு மஜ்ஜை என்பதிலிருந்துதான் வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள் போன்றவை உருவாகின்றன. ஒருவரின் உடலிலுள்ள எலும்பு மஜ்ஜை மிகவும் பாதிப்படைந்திருந்தால் வேறொருவரின் உ​டலிலுள்ள எலும்பு மஜ்ஜையை அங்குப் பொருத்துவார்கள். அப்போது தானம் பெறுபவரின் உடலிலுள்ள குறைபாடு கொண்ட எலும்பு மஜ்ஜையை முழுமையாக நீக்கிவிட்டு அந்த இடத்தில் தானம் தருபவரின் ஆரோக்கியமான எலும்பு மஜ்ஜையைப் பொருத்துவார்கள். அதற்குப் பிறகு அது உருவாக்கும் ரத்த செல்களில் தானம் அளித்தவர் உடலிலுள்ள டி.என்.ஏ-வைத்தான் காண முடியும். ஆனால் அதிசயமாகச் சிலருக்கு தானம் அளித்தவர், தானம் பெறுபவர் ஆகிய இருவரின் டி.என்.ஏ-களையும் காண முடியும்.

2015இல் வாஷிங்டனில் ஒரு மனிதனின் எச்சிலில் ஒருவித டி.என்.ஏ-வையும் அவனது விந்தில் வேறொரு வகை டி.என்.ஏ-வையும் கண்டறிந்தார்கள். அவரும் சிமெரா தன்மை கொண்டவர் என்பது அறியப்பட்டது.

வெவ்வேறு நிறம்கொண்ட கண்கள்
வெவ்வேறு நிறம்கொண்ட கண்கள்
Miriam Doerr Martin Frommherz/shutterstock.com
இதுவரை இப்படி 100 கேஸ்கள் மட்டும்தான் கண்டறியப்பட்டுள்ளன என்கிறார்கள். என்றாலும் இன்னும் பலர் இப்படி இருக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இவர்களில் மிகச் சிலருக்கு இரு கண்களும் வெவ்வேறு நிறம் கொண்டவையாக இருக்கும். தோல் இருவித தன்மைகள் கொண்டதாக இருக்கும்.

- மர்ம சரித்திரம் தொடரும்...