சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான் இருந்துவந்திருக்கிறது. சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் நம்புவதற்குக் கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும். அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சுவாரஸ்யமான அதிசயங்களையும் மர்மங்களையும் விநோதங்களையும் இந்தத் தொடர் விவரிக்கிறது.
இந்தத் தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.
ஷெர்லி மெக்லின் (Shirley MacLaine) ஒரு பிரபல அமெரிக்க நடிகை. 1950களில் பெரும் புகழ் பெற்றவர். கதாநாயகியை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்துப் பெயர் பெற்றவர். ஆஸ்கர் விருது கூட வாங்கியவர். நடனத் திறமை கொண்டவர். ஆனால் அவர் செய்த ஓர் அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "போன பிறவியில் நான் அட்லான்டிஸ் நகரில் வாழ்ந்தேன். ஆவிகளுடன் பேசும் சக்தி எனக்கு உண்டு" என்றார்.

அமெரிக்காவில் 1980களில் நடைபெற்ற கருத்துக் கணிப்பு ஒன்று விந்தையான ஒரு முடிவைச் சுட்டிக்காட்டியது. மூன்றில் இரு பங்கு அமெரிக்க மக்களாவது ஏதாவது ஒருவிதத்தில் ஆவி, சூனியம், பிசாசு, முற்பிறவி நினைவு என்பது போன்ற வேற்றுலக அனுபவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றது இந்தக் கணிப்பு.
இந்த கருத்துக்கணிப்பும் ஷெர்லியின் அறிவிப்பும் வெளியானபிறகு பலரும் தங்கள் வேற்றுலக அனுபவங்கள் குறித்து வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளத் தொடங்க, அது குறித்த விவாதங்களும் அதிகரித்தன.
திரைப்படங்கள் இனி வேண்டாமென ஒருகட்டத்தில் `ஞானப் பாதையை' நோக்கிச் செல்ல முடிவெடுத்தார் ஷெர்லி. ஐந்து வருடங்களுக்குப் பிறகு பெரு நாட்டில் உள்ள ஆண்டிஸ் மலைத் தொடருக்குச் சென்றபோது அங்கே அவருக்கு ஒரு தெய்வீக அனுபவம் ஏற்பட்டதாம்.

"அங்குள்ள நீரோடை ஒன்றின் அருகே இரவு தொடங்கும் நேரத்தில் உட்கார்ந்திருந்தபோது எனக்கு மயிர்க்கூச்செறியும் அந்த அனுபவம் நேரிட்டது. அப்படியும் இப்படியுமாக ஆடிக்கொண்டிருந்த ஒரு மெழுகுவர்த்தியின் ஜோதியை நான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது என் தலை மிகவும் லேசானது போல் உணர்ந்தேன். என் மூளையில் ஒரு குகை உருவானது போல இருந்தது. அந்தக் குகைப் பாதை வளர்ந்து வளர்ந்து சுற்றுப்புறத்தைத் தாண்டி விண்வெளியில் தொடர்வது போல் தென்பட்டது. மெழுகுவர்த்தியின் ஜோதி கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து என் மூளையை அடைத்துக் கொள்வது போலிருந்தது. திடீரென்று நானே அந்த ஜோதி ஆகிவிட்டது போல உணர்ந்தேன். அருவம் ஆகிவிட்டேன். விண்வெளியில் பறப்பது போல இருந்தது. ஒரு கட்டத்தில் மலைகள் எல்லாம் எனக்குக் கீழே தென்பட்டன. எனக்குள் ஒரு பெரும் உற்சாக சக்தி உருவானது. ஒரு வெள்ளி வாள் என் உடலோடு இணைந்திருந்தது. அந்தச் சமயத்தில் என் உடலுக்குள் என் உயிரைச் செலுத்தவேண்டும் என்று முடிவு செய்தேன். அடுத்த நொடியே என்னைச் சுற்றி இருந்த சக்தி அலைகள் ஓய்ந்தன. உடலுக்குள் என் உயிர் நுழைவதை உணர முடிந்தது".ஷெர்லி மெக்லின்
இதுபோன்று தனக்கு நேர்ந்த அனுபவங்கள் என்று கூறி ஷெர்லி இரண்டு நூல்களை வெளியிட்டார். அவர் மிகவும் புகழ் பெற்றவர் என்பதால் அவை தொலைக்காட்சித் தொடர்களாகவும் உருவாகின. தன் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு பல கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டார். அவரது அனுபவங்களை அறியக் கூட்டம் அலைமோதியது. மறுபிறவியில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்த புது யுக இயக்கம் என்ற அமைப்பை வேறு சிலரோடு சேர்ந்து ஷெர்லி தொடங்கினார்.

"என் கைகளின் உட்பகுதியில் கண்ணுக்குப் புலப்படாத பல நுண்ணுயிர்கள் இருக்கின்றன என்றால் அதை நீங்கள் அனைவரும் ஒத்துக் கொள்வீர்கள். ஆனால் மைக்ரோஸ்கோப் என்ற கருவியைக் கண்டுபிடிக்கும் வரையில் இந்த விஷயத்தை நீங்கள் ஒத்துக் கொண்டிருப்பீர்களா? அதுபோலத்தான் ஆவிகள் தொடர்பான கூற்றுகளும். இந்த உண்மைகளும் நிரூபிக்கப்படும் காலம் வரும்!"ஷெர்லி மெக்லின்
பல நூற்றாண்டுகளாகவே மூளைப் பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியில்தான் நமது மூன்றாவது கண் இருக்கிறது (ஆன்மா) என்று சிலரால் நம்பப்பட்டு வந்தது. அந்தப் புள்ளியில்தான் உயிரும் உடலும் இணைகிறது என்றார்கள். மினர்வா என்ற தேவதையின் தலையை வரைந்த பிரபல ஓவியர் செரய் லினான் 1962-ல் இதுதொடர்பான பாகங்களை வண்ணத்தில் குழைத்து வெளிக்காட்டினார்.
பீனியல் சுரப்பியிலிருந்து வெளியாகும் சக்தி அலைகள் பிட்யூட்டரி சுரப்பியால் பரவுகிறது என்றார்கள். இந்த இரு சுரப்பிகளும் நன்கு இணைந்து செயல்படும்போது ஆத்மாவின் தரிசனம் கிடைக்கும் என்றும் கூறினார்கள். ஆனால், பிட்யூட்டரி சுரப்பி பயம், காதல், அழுத்தம் ஆகியவற்றோடு தொடர்புடைய நரம்புமண்டல இயக்குநீரை (Neurohormones) வெளியேற்றுகிறது. பீனியல் சுரப்பி மெலடோனின் என்பதை உருவாக்குகிறது. இது உறக்கம் ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு ‘உறக்கத்தைத் தூண்டும் சுரப்பி'. இயற்கையான உறக்கச் சுழற்சியை ஒழுங்குப்படுத்துவற்காக உடலின் சர்க்காடியன் இசைவைச் (Circadian rhythm) சீராக்க இது உதவுகிறது. மற்றபடி இதில் அமானுஷ்யமான விஷயங்களுக்கு எல்லாம் இடமில்லை என்கிறது மருத்துவ அறிவியல்.

லட்சக்கணக்காணவர்கள் தாங்கள் அமானுஷ்யங்களை உணர்ந்ததாகவும், சாவின் விளிம்பு வரை சென்று, பல அனுபவங்களைப் பெற்றதாகவும் கற்பூரம் அடித்து சத்தியம் செய்கின்றனர். ஷெர்லி மெக்லின் போன்று பிரபலங்கள் பலரே இந்த மாதிரியான எண்ணங்களில் மூழ்கி அது தொடர்பாகப் புத்தகங்கள் எழுதுவது, ஆவணப்படங்கள் எடுப்பது, ஏன் யூடியூப் சேனல் வரைகூட வந்துவிட்டனர். ஆனால், அறிவியல் ரீதியாக இதை அணுகினால், பல சிக்கல்களும், லாஜிக் ஓட்டைகளும் வெளிப்படுவதைத் தவிர்க்க முடியாது. 'என்னுடைய அனுபவம்' என்று இதைச் சுருக்கிக்கொண்டு ரசிக்கலாமே தவிர, இதை ஒருபோதும் அறிவியல் தன்மையுடன் அணுகவே முடியாது என்பதுதான் உண்மை.