சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான் இருந்துவந்திருக்கிறது. சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் நம்புவதற்குக் கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும். அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சுவாரஸ்யமான அதிசயங்களையும் மர்மங்களையும் விநோதங்களையும் இந்தத் தொடர் விவரிக்கிறது.
இந்தத் தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.
17-ம் நூற்றாண்டின் இறுதியில் நடந்ததாகச் சொல்லப்படுகிற கதை இது. அயர்லாந்தைச் சேர்ந்த பெண்மணி மார்க்கோரி மெக்கால், ஒரு மருத்துவரைத் திருமணம் செய்தவர். அவர்களின் வாழ்க்கை இனிமையாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் 1705ல் ஒருவித தொற்று நோயினால் மார்க்கோரி பாதிக்கப்பட்டார். தன் மனைவி உடல் நலமில்லாமல் படுத்த படுக்கையான போது கணவன் பக்கத்திலிருந்து அவரை கவனித்துக் கொண்டார்.

ஒரு கட்டத்தில் மார்கோரியின் உடல் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. அவரது உடலை அதற்கு மேல் வைத்திருப்பது ஆபத்து என்று அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் கருதினார்கள். காரணம் அவரை பாதித்த தொற்றுநோய் பிறருக்கும் விடக்கூடாதே என்கிற தவிப்பு. எனவே அவரை அவசரம் அவசரமாக இடுகாட்டில் புதைத்தார்கள்.
இறந்தவரின் கையில் ஒரு மோதிரம் இருந்தது. புதைப்பதற்கு முன் என்ன முயன்றும் அவர் கணவரால் அந்த மோதிரத்தைக் கழற்ற முடியவில்லை. அவரது அந்த விரல் வீங்கியிருந்ததுதான் அதற்குக் காரணம். அந்த மோதிரம் போனால் போகிறது என்று கணவர் விட்டுவிட்டார். சுற்றியிருந்தவர்கள் தொற்று நோய் பயம் காரணமாக மார்கோரியை விரைவில் புதைக்க வேண்டும் என்று அவசரம் காட்டியதும் மற்றொரு காரணம். மார்க்கோரியின் உடல் அன்று மாலை புதைக்கப்பட்டது.
இதோடு முடிந்திருந்தால் அதை இந்தப் பகுதியில் நாம் குறிப்பிட்டு இருக்கவே மாட்டோம். ஆனால் நடந்தது வேறு.
அப்போது அந்த நாடு வறுமையின் பிடியில் சிக்கி இருந்தது கல்லறைகளைத் தோண்டி உள்ளே இருக்கும் உடலில் ஏதாவது நகை மிச்சம் இருந்தால் அவற்றையும் எடுத்துச் செல்லும் கல்லறைத் திருடர்கள் (Grave Robbers) அங்கு அதிகமாக இருந்தார்கள். அப்போது எல்லாம் புதைக்கப்பட்ட பிணத்தை தங்கள் ஆராய்ச்சிகளுக்கு அளித்தால் கணிசமான பணம் தருவதற்குத் தயாராக இருந்தார்கள் சில மருத்துவ விஞ்ஞானிகள். அதுவும் இந்தக் கல்லறைத் திருட்டுகள் அதிகரிக்க ஒரு காரணம்.
மார்க்கோரி புதைக்கப்பட்ட ஓரிரு மணி நேரத்தில் அங்கு சில திருடர்கள் வந்தார்கள். அந்தக் கல்லறை பகுதியைத் தோண்டினார்கள். கல்லறைப் பெட்டியை வெளியே எடுத்தார்கள். அதன் மூடியைத் திறந்தார்கள். உள்ளே இருந்த பெண்மணியின் கைவிரலில் கம்பீரமாகக் காட்சியளித்தது அந்த மோதிரம். அதை நீக்க முயற்சி செய்தார்கள். ஆனால் மோதிரம் கையை விட்டு வரவேயில்லை. யாராவது வந்து விடுவார்களோ என்ற பயம் வேறு சூழ்ந்துகொள்ள, திருடர்கள் சட்டென்று அந்த விரலை அறுத்தார்கள். அப்போதுதான் அவர்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்குச் செல்லும்படி ஆனது.

அந்தப் பெண்மணி உண்மையில் இறந்து விடவில்லை. கோமா எனப்படும் ஆழ்நிலை மயக்கத்திலிருந்திருந்தார். இப்போது அவருக்கு முழிப்பு வந்துவிட்டது. திருடர்களைப் பார்த்து அவர் அலறினார். திருடர்களோ அதைவிடப் பெரிதாக அலறியபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்கள்.
கஷ்டப்பட்டு மார்கோரி மேலே வந்து தன் வீட்டை அடைந்தார். உள்ளே அவரது கணவர் டாக்டர் ஜான் தன் குழந்தைகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். மார்கோரி வீட்டுக் கதவைத் மூன்று முறை குறிப்பிட்ட இடைவெளிகளில் தட்டினார். அதுதான் அவர் பாணி.
உள்ளே அவர் கணவர் பெருமூச்செறிந்தார். "உங்கள் அம்மா மட்டும் உயிரோடு இருந்தால் அவள் கதவைத் தட்டுவது இதே போலத்தான் இருக்கும்" என்றபடி வந்தது யார் என்பதைக் காணக் கதவைத் திறந்தார். யாராவது துக்கம் விசாரிக்க வந்திருப்பார்கள் என்பது அவரது எண்ணம்.
அங்கே மார்க்கோரி நின்று கொண்டிருந்தார். புதைக்கும் போது அணிவிக்கப்பட்டிருந்த அதே ஆடைகளுடன் காட்சி அளித்தார். அவரது ஒரு விரலிலிருந்து மட்டும் ரத்தம் கொட்டிக் கொண்டே இருந்தது. இதைப் பார்த்ததும் அவர் கணவர் மயக்கம் போட்டு விழுந்தார்.
மருத்துவமனையில் அவர் இறந்து விட்டதாக அறிவித்துவிட்டார்கள். அவர் இறந்ததை உறுதிப்படுத்திக்கொண்டு மார்கோரி புதைக்கப்பட்டிருந்த அதே பகுதியில் இவரைப் புதைத்தார்கள்.

காலப்போக்கில் மார்க்கோரி மறுமணம் செய்து கொண்டாள். பல குழந்தைகளுக்குத் தாய் ஆனாள். பின்னர் ஒரு கட்டத்தில் இறந்தாள்.
அயர்லாந்தின் லுர்கன் என்ற பகுதியிலிருந்த, முன்பு அவர் புதைக்கப்பட்ட அதே இடுகாட்டில் இம்முறை புதைக்கப்பட்டார் (இந்த முறை அவர் நிஜமாகவே இறந்திருந்தார்!). அவரது கல்லறை வாசகம் இப்படி இருந்தது. ‘வாழ்ந்தது ஒரு முறை, புதைக்கப்பட்டது இருமுறை’. (Lived once, buried twice).
ஒருவரது இறந்த நிமிடத்திலிருந்து புதைக்கப்படும் வரை அனைத்து செயல்முறைகளையும் செய்யப்படுவதை மேற்பார்வை இடுபவரை ஃப்யூனரல் டைரக்டர் என்று அந்த நாட்டில் குறிப்பிடுவார்கள். அந்த வேலையைப் பலகாலம் செய்து கொண்டு வந்திருந்த ஒருவர் தன் சுயசரிதையை ‘கன்பஷன்ஸ் ஆஃப் எ ஃப்யூனெரல் டைரக்டர்’ என்ற பெயரில் வெளியிட்டார். அதில்தான் மேற்படி நிகழ்வு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதுடன் மேலே குறிப்பிட்ட வாசகங்களுடன் ஒரு கல்லறையும் காணப்படுகிறது.