சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான் இருந்துவந்திருக்கிறது. சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் நம்புவதற்குக் கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும். அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சுவாரஸ்யமான அதிசயங்களையும் மர்மங்களையும் விநோதங்களையும் இந்தத் தொடர் விவரிக்கிறது.
இந்தத் தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.
மகாபாரத சகுனி பகடை விளையாட்டில் கைதேர்ந்தவன் என்பார்கள். அவன் ஒரு எண்ணைக் கூறிவிட்டு ஒரு நிமிடம் கண்களை மூடி பிறகு பகடையை வீசுவானாம். அந்தப் பகடை அவன் கோரிய எண்ணைக் காட்டுமாம். இது அதிர்ஷ்டமா அல்லது பகடையைத் தன் வழிக்குக் கொண்டு வரும் வித்தை சகுனிக்குத் தெரிந்திருந்ததா... அதாவது அவன் தன் மனதை ஒருமுகப்படுத்தி அதன் விளைவாகத்தான் பகடையை அவன் விருப்பப்படி விழ வைக்க முடிந்ததா?

கணிதத்தில் பிராபபிலிடி தியரி என்ற ஒன்று உண்டு. எடுத்துக்காட்டாக 42 முறை இரு தாயக் கட்டைகளை உருட்டினால் ஒவ்வொன்றிலும் ஆறு என்ற எண் வருவது 35 முறைகளுக்கு ஒரு தடவை என்கிற கணக்கில் நடைபெறும் என்பார்கள். ஆனால் ஒருவரால் தொடர்ந்து பலமுறை – அல்லது ஒவ்வொரு முறையும் - ஆறு என்ற எண்ணை வரவழைக்க முடிந்தால்? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் விஞ்ஞானிகள் திணறினர்.
சார்லஸ் வெல்ஸ் என்ற ஆங்கிலேயர் விஞ்ஞானிகளுக்கு பெரும் சோதனையைக் கொடுத்தார். இவர் ஒரு கேசினோவில் நுழைந்து ஒரு கருவியை இயக்க அவர் தொட்டதெல்லாம் பொன்னானது!
கேசினோவில் உள்ள ஒரு குறிப்பிட்ட கருவியின் மேல் ஒவ்வொரு போட்டி தொடங்குவதற்கு முன்பாகவும் ஒரு எண் தோன்றும். நீங்கள் அங்குள்ள கைப்பிடி ஒன்று அழுத்தினால் பல்வேறு எண்களைக் கொண்ட சக்கரம் ஒன்று வேகமாகச் சுழலும். அது வேகம் குறைந்த நிற்கும்போது அதன் முள்ளுக்கு எதிரே உள்ள எண்ணும் அந்த கருவியின் மேற்புறத்தில் தொடக்கத்திலிருந்தே மின்னிக் கொண்டிருக்கும் எண்ணும் ஒன்றாக இருந்தால் பெரும் பணம் உங்களுக்குக் கிடைக்கும். நம் மனதின் சக்தியைக் கொண்டு அந்த குறிப்பிட்ட எண் முள்ளின் அருகே வரும்போது சக்கரத்தை நிறுத்த முயன்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
ஆங்கிலேயரான சார்லஸ் வெல்ஸ் இதைச் சாதித்தார். இங்கிலாந்தில் வசித்து வந்தது இவர்கள் குடும்பம். இவரது தந்தை ஒரு கவிஞர் மற்றும் வழக்கறிஞர். அம்மா பள்ளி ஆசிரியை. சார்லஸின் இளம் வயதிலேயே அந்தக் குடும்பம் பிரான்சுக்கு இடம்பெயர்ந்தது. காலப்போக்கில் ஒரு பொறியாளராகப் பணியாற்றத் தொடங்கினார்.

அவர் பிரான்சில் இருந்த மான்டே கார்லோ என்று கேசினோவுக்கு ஒருமுறை சென்றார். மீண்டும் மீண்டும் அவர் வெற்றி பெற்று பணத்தைக் குவிக்க, கேசினோவின் உரிமையாளர் பதறிப்போனார். 'இன்றைக்கு இது போதும்' என்று அவர் கெஞ்ச, சார்லஸ் விடுவதாக இல்லை. அன்று 20 ஆயிரம் டாலர்களை அவர் வென்றார். அதுவும் ஒரு முறை கூடத் தோற்காமல்! இந்த நிகழ்ச்சியின் காரணமாக அந்தக் கேசினோவின் உரிமையாளர் நடத்திவந்த வங்கி திவால் ஆனது. மேற்படி அதிசயத்தை சார்லஸ் நடத்தியது ஜூலை 1891ல்.
இங்கிலாந்தில் பெரும் புகழ் பெற்றார் சார்லஸ் வில்ஸ். "The Man Who Broke the Bank at Monte Carlo" என்று அவர் குறித்துப் பாடல் இயற்றப்பட்டு அது பிரபலமானது. அவர் அளித்த பேட்டிகளில் சிறிது நாள்கள் கழித்து மீண்டும் அதே போன்ற சாதனையை வேறொரு கேசினோவில் செய்து காண்பிப்பதாகச் சவால்விட்டார். பல கேசினோக்காரர்கள் பயந்துபோனார்கள்.
கொஞ்சக் காலத்திற்குப் பிறகு சொன்னபடியே மீண்டும் ஒரு கேசினோவுக்குச் சென்றார் அவர். அப்போது உலகின் மொத்த கவனமும் அவர் மீது பதிந்திருந்தது. ஆனால் இந்தமுறை அவரால் எதையும் சாதிக்க முடியவில்லை. தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருந்தார். அத்தனை செல்வத்தையும் அதில் இழந்தார். கடன் வாங்கிய தொகையையும் வேறு இந்த சூதாட்டத்தில் பறிகொடுத்தார்.

நாளடைவில் தான் பட்ட கடனை அடைப்பதற்காக அவர் சில ஏமாற்று வேலைகளில் ஈடுபட, அவர் கைது செய்யப்பட்டார். சிறையிலேயே அவர் இறந்தார். அப்போது அவர் கணக்கில் சல்லிக்காசு இல்லை.
இது குறித்து அறிந்து கொள்ள அமெரிக்காவில் உள்ள மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு கருவியை உருவாக்கியது. அதைக் கொண்டு பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தியது. ஒரு சிலரால் மேற்படி அற்புதத்தைச் செய்ய முடிந்திருக்கிறது என்றும், ஆனால், அதேசமயம் அந்த அற்புதத்தை எப்போதுமே அவர்களால் செய்ய முடிந்ததில்லை என்றும் ஒரு முடிவுக்கு வந்தது.
**********
கேசினோ (சூதாட்டக் கிடங்கு) உரிமையாளர்கள் பலவித உளவியல் கோணங்களில் தங்களிடம் வந்து சூதாடுபவர்களை மேலும் மேலும் அதில் ஈடுபடச் செய்கின்றனர். அங்குச் சுவர்க் கடிகாரம் என்பதே இருக்காது. ஜன்னல்களே இருக்காது. `அடடா அதிக நேரமாக ஆடுகிறோமே' என்று அவர்களைப் பதறவைக்கும் படியான பின்னணியே இருக்காது. (சொல்லப்போனால் பல ஷாப்பிங் மால்கள் கூட இந்த உத்தியைப் பின்பற்றுகின்றன).
யாராவது ஒருவர் வெற்றி பெற்றால் அதைப் பெரிய அளவில் அறிவிப்பார்கள். அவரை நோக்கி ஒளி வெள்ளம் பாயும். இதனால் மற்றவர்களும் ஊக்கம் பெறுவார்கள். 'அவரால் வெல்ல முடியும் போது நம்மால் வெல்ல முடியாதா என்ன?' என்ற உத்வேகம் தோன்றும். அங்கே இலவசமாகச் சிற்றுண்டிகள் வழங்குவார்கள். சாப்பிடுவதற்குக் கூட எங்கும் செல்லாமல் சூதாட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவதற்கான உத்தி இது. மது வகைகளை இலவசமாக வழங்குவார்கள். மதுவின் வசத்தில் இருக்கும்போது அதிகப்படியான ரிஸ்குகளை எடுக்கத் தயங்க மாட்டார்களாம்.

பணத்தை வைத்து ஆடுவதற்குப் பதிலாகப் பெரும் பணத்தைக் கொடுத்து டோக்கன்களாக மாற்றிக் கொண்டு அந்த டோக்கன்களை வைத்து விளையாட வேண்டும். இறுதியில் மிகுந்துவிடும் டோக்கன்களுக்கான பணத்தை வாங்கிக்கொண்டு செல்லலாம் என்று அறிவிப்பார்கள். ஆனால் மிகப் பெரும்பாலானவர்கள் அப்படிச் செய்வதில்லை. கடைசி டோக்கன் வரை வைத்து விளையாடிவிட்டுதான் செல்வார்கள்.
இவ்வளவு உளவியல் காரணங்களைப் பின்னணியில் கொண்டு கேசினோக்காரர்கள் செயல்பட்டாலும் அவர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும் இப்படியான சம்பவங்களும் அவ்வப்போது நடக்காமல் இல்லை.