Published:Updated:

இப்படியும் நடந்ததா? Attila the Hun: பல போர்களை வென்றவன், முதலிரவு கட்டிலில் இறந்த சோக வரலாறு!

Attila the Hun

ஒரு சமூகத்தையே போரில் தன் வசமாக்கினார் அட்டிலா. அந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொண்டார். எனவே பழி உணர்ச்சியில் இது கொலையில் முடிந்ததா?

Published:Updated:

இப்படியும் நடந்ததா? Attila the Hun: பல போர்களை வென்றவன், முதலிரவு கட்டிலில் இறந்த சோக வரலாறு!

ஒரு சமூகத்தையே போரில் தன் வசமாக்கினார் அட்டிலா. அந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொண்டார். எனவே பழி உணர்ச்சியில் இது கொலையில் முடிந்ததா?

Attila the Hun
சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான் இருந்துவந்திருக்கிறது. சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் நம்புவதற்குக் கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும். அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சுவாரஸ்யமான அதிசயங்களையும் மர்மங்களையும் விநோதங்களையும் இந்தத் தொடர் விவரிக்கிறது.

இந்தத் தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.

இப்படியும் நடந்ததா?

ரோமானிய மக்களால் கடும் எதிரியாகக் கருதப்பட்டவர் மன்னர் அட்டிலா. 433-ம் ஆண்டிலிருந்து சுமார் பத்து வருடங்களுக்கு ஐரோப்பாவின் பல நாடுகளை தன் வசப்படுத்தியவர். பல போர்களைக் கண்டவர். ஆனால் அவர் இறந்தது தனது முதலிரவன்று!
Attila the Hun
Attila the Hun
Wilhelm Dilich, Public domain, via Wikimedia Commons

ரத்தம் உடலிலிருந்து வெளியேறிய நிலையில் அவர் தன் கட்டிலில் இறந்துகிடந்தார். திருமணமான அன்றிரவே அவரது இளம் மனைவி இல்டிகொ விதவையானார்.

மன்னரின் இறப்பு குறித்து பலவித யூகங்கள் இறக்கை கட்டிப் பறந்தன. ஒருவேளை அவரது மனைவியே கணவனைக் கொன்று விட்டாரா? ஆனால் நள்ளிரவில் கணவனின் நிலையைப் பார்த்து அலறி வெளியாட்களை உதவிக்குக் கூப்பிட்டவர் அவர்தான்.

என்றாலும் அவர்களது திருமணப் பின்னணி அந்த இளம் மனைவி குறித்த சந்தேகத்தை அதிகப்படுத்தியது. ஒரு சமூகத்தையே போரில் தன் வசமாக்கினார் அட்டிலா. அந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொண்டார். அதற்கு முன்பாக அந்தப் பெண்ணின் பல உறவினர்களைக் கொன்று குவித்தார். எனவே பழி உணர்ச்சியில் இது கொலையில் முடிந்ததா?

தவிர அட்டிலாவுக்கு எண்ணற்ற எதிரிகள். அவர்கள் திட்டமிட்டு இந்த கொலையைச் செய்தார்களா?

அட்டிலா என்று அழைக்கப்படும் அட்டிலா தி ஹண் (Attila the Hun), ஹண் பேரரசர்களுள் கடைசியானவர். (அட்டிலா என்றால் அந்த நாட்டு மொழியில் ‘சித்தப்பா’ என்று பொருள் என்றும் அவரை அப்படி உரிமையாக அந்த நாட்டு மக்கள் அழைத்தனரே தவிர அவருக்கென்று வேறொரு இயற்பெயர் இருந்திருக்க வேண்டும் என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்).

அவரது தந்தையின் பெயர் முன்ட்சுக். கான்ஸ்டாண்டிநோபிள் மீது (தற்போதைய துருக்கி) செய்த படையெடுப்பில் அவர் இறந்துவிட, தலைமைப் பொறுப்பு அட்டிலா மற்றூம் அவரது அண்ணன் ப்ளேடாவை வந்தடைந்தது. பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அண்டை நாடுகளை (முக்கியமாகக் கிழக்கு ரோம சாம்ராஜ்ஜியத்தை) ஆட்டிப் படைத்த ஒரு சைனியம் அவர்கள் வசம் வந்து சேர்ந்தது. சமாதானம் தொடர வேண்டும் என்பதற்காக பெரும் கப்பத்தைச் செலுத்தி வந்தார்கள் ரோமானியர்கள்.

இத்தாலி மீது போர் தொடுக்கும் அட்டிலா தலைமையிலான படை
இத்தாலி மீது போர் தொடுக்கும் அட்டிலா தலைமையிலான படை
சகோதரர்கள் இருவரும் இணைந்து ஆட்சிக் கட்டிலில் ஏறினார்கள். அட்டிலா ஒரு மிகச் சிறந்த குதிரை வீரர், ராணுவத் தலைவர். தலைமையேற்ற ஆண்டுகளில் ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.

434-ம் ஆண்டிலிருந்து இறக்கும் வரை அக்காலத்து ஐரோப்பாவின் மிகப்பெரிய பேரரசை ஆண்டார். அவரது பேரரசு மத்திய ஐரோப்பாவிலிருந்து கருங்கடல் வரையிலும் டான்யூப் நதியிலிருந்து பால்டிக் வரையிலும் பரந்திருந்தது. எதிரிகளைப் பல திசைகளிலிருந்து தாக்கும் இவரது சூழ்ச்சி கிழக்கு மற்றும் மேற்கு ரோமப் பேரரசுகளைக் கதிகலங்க வைத்துள்ளது. இவர் ரோம ராஜ்ஜியத்தின் பிடியிலிருந்த பிரான்ஸ் நாட்டையும் கைப்பற்ற முனைந்தார். ஆனால் அந்தப் போரில் தோல்வியுற்றார். இதன்பிறகும் இத்தாலி மீது போர் தொடுத்து அதன் வடக்குப் பகுதியைக் கைப்பற்றினார்.

ஆக, எண்ணற்ற பகைவர்களைக் கொண்டவர் அவர். ஒருவேளை அரசனின் மெய்க்காப்பாளர்களுக்குக் கையூட்டு கொடுக்கப்பட்டு இந்த கொலை நடந்ததா?

இதற்கெல்லாம் போதிய ஆதாரம் கிடைக்காத நிலையில் அவர் இயற்கையாகவே இறந்திருக்க வேண்டும் என்று கூறியவர்களும் இருந்தார்கள். இறப்பதற்கு சில நாள்களுக்கு முன்புதான் தனது ஐம்பதாவது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடி இருந்தார் அட்டிலா. அந்த காலத்தில் சராசரி ஆயுள் குறைவு என்ற பின்னணியில் தன் இறுதி நாள்களில் அவர் திருமணம் செய்துகொண்டார் என்றே கூறலாம்.

Attila the Hun
Attila the Hun

அவர் மொடாக் குடியர் அல்ல என்றாலும் திருமண நாளன்று கொஞ்சம் அதிகமாகவே குடித்திருந்தார் என்பதைப் பலரும் கவனித்தார்கள்.

மருத்துவர்களின் கணிப்புப்படி அவர் ரத்த நாளம் வெடித்து இறந்திருந்தார். அந்த இரவில் அவர் மல்லாக்கப் படுத்துக் கொண்டு இருந்தார். அவரது மூக்கிலிருந்து ரத்தம் வடிந்த போது அவர் எழுந்திருக்கவில்லை. மூக்கில் ரத்தம் அடைபட்டுக் கொண்டிருந்தபோது அவர் சுவாசிக்க, அது போதுமானதாக இல்லை. தவிர ரத்தமும் உள்ளிழுக்கப்பட, அவர் இறந்து போனார்.

ஹண் வம்சத்தைச் சேர்ந்த அட்டிலாவின் இழப்பு, போர்க்களத்தில் நேராமல் முதலிரவில் கட்டிலில் நேர்ந்தது அவரது கதாநாயக பிம்பத்துக்கு ஏற்றதாக இல்லை என்று மக்கள் கருதினார்கள்.

- மர்மசரித்திரம் தொடரும்...