கொரோனா வைரஸின் பாதிப்பு நேற்று ஒரே நாளில் மட்டும் பத்தாயிரத்தை தொட்டுவிட்டது. மேலும் புதிய ஓமைக்ரான் வைரஸின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து ராஜீவ்காந்தி மருத்துவமனையின் டீன் தேரணி ராஜன் ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டி இதோ
“முதல் அலையைப் பொறுத்தவரையில் அறிகுறிகள் ஏதுமற்ற பாதிப்பின் சதவிகிதமே அதிகமாகவும் நுரையீரலின் பாதிப்பு குறைந்த அளவிலேயே இருந்தது. இரண்டாவது அலையின் டெல்டா வேரியன்ட் நுரையீரலை மிக அதிக அளவில் பாதித்தது. தற்போது இந்த மூன்றாவது அலையின் ஓமைக்ரானை பொறுத்தவரை S-gene எண்ணிக்கை குறைவதால் அதையே முக்கிய இண்டிகேட்டராக எடுத்துக்கொள்கிறோம்.
டெல்டா வேரியன்ட்டிலும் இதன் அளவு குறையலாம் ஆனால் எங்களுக்குக் கிடைத்த 53 மாதிரிகளைக் கொண்டு ஆய்வகத்தில் பரிசோதித்ததில் 43 மாதிரிகளுக்கு ஓமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தான் S-gene எண்ணிக்கை குறைந்தால் அதை ஓமைக்ரானின் முக்கிய இண்டிகேட்டராக பார்க்கிறோம்.
ஓமைக்ரானைப் பொறுத்தவரையில் நோயாளிகள் பெரும்பாலும் அறிகுறிகள் அற்றவர்களாகவே இருக்கிறார்கள். ராஜீவ் காந்தி மருத்துவனையில் உள்ள ஓமைக்ரான் நோயாளிகளுக்கு சளி ஒழுகுதலும் குறைந்த அளவிலான காய்ச்சல் மட்டுமே இருந்தது. மேலும் அவர்களுக்கு Swab எடுத்துப் பார்த்தோம். முதல் அலையில் நோயாளிகளுக்கு 30 முதல் 40 நாட்கள் வரை தொடர்ந்து பாசிட்டிவ் முடிவுகள் வந்தன. ஆனால் தற்போது மூன்றாவது நாளில் எடுக்கப்படும் Swab டெஸ்டில் நெகட்டிவும் ஐந்தாவது நாளில் இருமுறை எடுக்கப்படும் rt-pcr டெஸ்டிலும் நெகட்டிவ் முடிவுகளே வருகிறது . இந்த வைரஸ் எந்த அளவிலான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அறியவே இந்த பரிசோதனைகள் செய்து வருகிறோம்.
இதே போல S-gene எண்ணிக்கை குறையும் எத்தனை பேருக்கு ஓமைக்ரான் தொற்று ஏற்படுகிறது என மற்றொரு பரிசோதனையும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய பின்பும் இந்நோய் பாதித்தால் அவர்களின் Antibody பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்நோயானது இந்த மொத்த உலகிற்கும் புதிய ஒன்றாகும். அதனால் எங்களுக்கு பரிசோதனை வாயிலாக கிடைக்கும் முடிவுகள் அனைவருக்கும் உதவும் என்பதாலேயே இத்தனையும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது வரை இதன் பாதிப்புகள் குறித்து வரும் தகவல்கள் அனைத்தும் கவலைப்படும்படியாக இல்லை. ஆனால் இதன் பாதிக்கும் அளவு மிக அதி-வேகத்தில் இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது. இரண்டாவது அலையில் இந்தியா முழுவதும் அதிகபட்சமாக 3 லட்சம் என்றிருந்த பாதிப்பு தற்போது 15 லட்சம் வரை கூட வரலாம். தமிழ்நாட்டில் 37 ஆயிரமாக இருந்த பாதிப்பு 80 ஆயிரம் வரை செல்லலாம். இந்த மொத்த எண்ணிக்கையில் 2 சதவீதம் அளவு மட்டும் தீவிர பாதிப்பாக மாறினாலும் அதற்கேற்ற உட்கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது. இவை அனைத்தையும் எங்கள் தரப்பில் நாங்கள் தொடர்ந்து செய்து வந்தாலும் மக்களின் ஒத்துழைப்பு என்பது மிக மிக அவசியம்.

தமிழ்நாட்டில் தற்போது தயார் நிலையில் உள்ள படுக்கைகள் பற்றி கூறிய அவர் “ இந்த எண்ணிக்கையில் பாதிப்பு வந்தால் இத்தனை படுக்கைகள் இருக்க வேண்டும் என்று கணக்கிட்டு நாங்கள் தயார் படுத்தி வருகிறோம். தற்போது மாநிலம் முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் அரசாணையிலும் இதுகுறித்த தெளிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. யாருக்கு எந்த அளவு பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனையில் இருக்க வேண்டும், வீட்டு தனிமையில் இருக்கவே வேண்டும் என்ற அனைத்தும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. பயணங்களை மக்கள் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். வீட்டில் தனியாக ஓய்வு எடுக்கும்போது நம் உடலில் உள்ள எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். இதைக் கருத்தில்கொண்டுதான் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது”
ஓமைக்ரான் வைரஸ் பற்றி குறிப்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில் “ கொரோனாவும் ஓமைக்ரானும் வெவ்வேறு கிடையாது. கொரோனா வைரஸின் மூன்றாம் தலைமுறையே ஓமைக்ரான். முதலில் ஆல்ஃபா பின்னர், பீட்டா பின்னர் டெல்டா, டெல்டா+ தற்போது ஓமைக்ரான் அடுத்ததாக டெமைக்ரான் என்று இந்த வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. இதற்கு கிரேக்க மொழியில் கொடுக்கப்படும் பெயர்களே இவை” என்றார்.
ஓமைக்ரான் குறித்து பயப்பட வேண்டும் என்றாலும் மிக அதிக அளவிலான பாதிப்பை இந்த வைராஸ் தான் ஏற்படுத்த போகிறது என்ற வகையில் வெளியாகும் செய்திகள் குறித்து பதிலளித்த அவர் “ இந்த வைரஸ் புதுமையானதால் இப்போதுள்ள தகவல்களை வைத்துதான் எதையும் சொல்ல முடியும். அனைத்து நாடுகளில் இருந்து இந்த வைரஸால் பாதிக்கும் நோயாளிகள் பற்றிய தகவல்களை உலக சுகாதார அமைப்பு திரட்டி அதன் மூலமாக தான் நமக்கு நெறிமுறைகள் தரப்படுகிறது. முன்பு சொன்னது போல பெரும்பாலும் அறிகுறிகள் இல்லை என்றாலும் தென்னாப்பிரிக்காவில் இருந்து கிடைத்த தகவல் படி இதயத்தின் வேகம் கூடியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் ஒட்டுமொத்தத்தில் இதன் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது என்பதே ஆராய்ச்சியாளர்களின் கருத்து. காரணம் இதை எதிர்கொள்கின்ற சக்தி அனைவருக்கும் வந்துவிட்டது. ஆனால் கொடுக்கப்படும் சிகிச்சையிலும் நாங்கள் எந்த வித மாற்றத்தையும் செய்யவில்லை.ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படுவது மூன்று காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. வைரஸினுடைய அளவு, உடலின் எதிர்ப்பாற்றல், மூன்றாவது Cytokine Storm எனப்படும் நம் உடலில் ஏற்படுகின்ற வேதிப்பொருட்களின் மாற்றம். இந்த வைரஸை நான் எதிர்கொள்வதும் நீங்கள் எதிர்கொள்வதும் அவரவர் உடலை பொறுத்தே அமையும். மூன்றாவது அலையில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு அதிகம் என்று கூறப்பட்டாலும் அதற்கான வாய்ப்பும் குறைவே.
இந்த பேரிடர் காலத்தில் மட்டும் மொத்தம் 58 ஆயிரம் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தோம். பல்வேறு சவால்களைச் சந்தித்தோம். ஒரே நேரத்தில் 244 ஆம்புலன்ஸ் வரை வெளியே நின்றது. அதை குறைக்க முதல்முறையாக zero delay வார்டை இங்கே தான் தொடங்கப்பட்டது. ஒரு தளத்தில் இருப்பவர்கள் மற்றொரு தளத்தை தொடர்பு கொள்ள மொபைல் போன், வாக்கி டாக்கி வாங்கப்பட்டது. அதே போல பேட்டரி கார்கள், உடலை சுமந்து செல்ல ஆம்னிக்கள் ஆகியவை வாங்கபட்டன, மேலும் மருத்துவர்களின் மனநலனை பாதுகாக்க வாரம் ஒரு முறை கட்டாயமாக்க விரச்சுவலாக மீட்டிங் நடத்தப்பட்டது. இவை அனைத்தையும் செய்ய மிகவும் உதவிகரமாக இருந்து துணை செய்தது தமிழக அரசு. இதுபோன்ற ஒரு பேரிடரை நாம் அனைவரும் சந்திப்பது இதுவே முதல் முறை. நான் கொரோனா உச்சத்தில் இருக்கும் வேளையில் தான் இங்கு மாற்றலாகி வந்தேன். இப்பணியை செய்து தர கடவுள் நமக்கு வாய்ப்பு தந்துள்ளார் என்று நினைத்துக்கொண்டு அதற்கான நான் உண்மையாக உழைத்தேன்.

ஒவ்வொரு நாளன்றும் இதை எல்லாம் செய்து முடிக்க வேண்டுமென்று டார்கெட்டை எனக்கு நானே தீர்மானித்து பணிபுரிந்தேன். மேலும் இது ஒரு தனி நபரால் மட்டுமே சாத்தியமாகாத ஒன்று. அனைவரின் கூட்டு முயற்சியிலேயே இதை வெல்ல முடியும். அதற்காக அனைவரையும் அனுசரித்து அரவணைத்து வேலை வாங்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முதல் அனைவரும் இங்கே வந்து சேர்க்கப்பட்டார்கள். இங்கு வந்து சிகிச்சை எடுத்துக்கொண்ட மக்களிடம் இருந்து மட்டும் 11 லட்சம் நன்கொடையாக வந்துள்ளது. அத்தொகையை வைத்து இம்மருத்துவமனையின் உட்கட்டமைப்பை இன்னும் சிறப்பாக்கினோம். தடுப்பூசி செலுத்திக்கொண்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்தாலே இந்த கொரோனவை எளிதாக வென்றுவிடலாம்.