கட்டுரைகள்
பேட்டிகள்
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

24 சலனங்களின் எண் - கேபிள் சங்கர்

முன்பெல்லாம் மூன்றுமணி நேரம், இப்போது இரண்டு அல்லது இரண்டரைமணி நேரம் ஓடக்கூடிய ஒரு சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்வையாளர்கள் புரிந்துகொள்கிறார்கள். ஆனால் அந்த சினிமாவுக்குப் பின்னால் உள்ள உழைப்பு, மனிதர்கள், உறவுநிலைகள், உணர்வுநிலைகள், அதிகார மனங்கள், வக்கிரம், நிச்சயமின்மை, துரோகங்கள், தன்னகங்காரம் எனப் பலவற்றைப் பற்றியும் விரிவாகப் பேசும் நாவல் ‘24 சலனங்களின் எண்.’

படிப்பறை

‘சினிமா வியாபாரம்’ என்னும் நூல் மூலம் அறிமுகமான கேபிள்சங்கர் வலைப்பூ மற்றும் சமூகவலைதளங்களில் சினிமா குறித்துத் தொடர்ந்து எழுதிவருபவர். நீண்டகாலம் தமிழ்த் திரைத்துறையில் பணிபுரிந்துவருபவர் என்னும் முறையில் அந்தத் துறையின் உள்ளும் புறமுமான அனுபவங்களை இந்தக் கதையில் வெளிப்படுத்துகிறார். இளமைத்துடிப்பு, புதிய சிந்தனை கொண்ட இளம் இயக்குநர் ஸ்ரீதர், நீண்டகால அனுபவம் இருந்தும் தனக்கான வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடும் ராமராஜ் என்ற அனுபவம் வாய்ந்த இயக்குநர் - இருவரின் கதைகளை முன்வைத்து இவற்றுக்கிடையில் வரும் மனிதர்களின் வழியாக செல்லுலாயிட் சித்திரங்களைத் தீட்டியிருக்கிறார்.

24 சலனங்களின் எண் - கேபிள் சங்கர்
24 சலனங்களின் எண் - கேபிள் சங்கர்

பாலியல் வக்கிரமும் ஆணவமும் ஏராளமான பணமும் கொண்ட தயாரிப்பாளர் சுரேந்திரனிடம் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவமானப்படும் புது இயக்குநர் ஸ்ரீதர், அதிகாரத்தால் வதைபடும் அதேநேரத்தில் மற்றவர்கள்மீது அதிகாரம் செலுத்தவும் தயங்குவதில்லை. திரைத்துறையைப் புரிந்துகொள்ள இந்தப் பாத்திரப்படைப்பைப் புரிந்துகொண்டால் போதும்.

சினிமா என்பது கவர்ச்சிகரமான கருங்குழி. எத்தனையோ படைப்புகள் இதில் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. எத்தனையோ மனிதர்கள் இதில் மாயமாய் மறைந்திருக்கிறார்கள். எத்தனையோ கலைஞர்கள் கடைசிவரை கவனம் பெறாமலே போயிருக்கிறார்கள். அதேநேரத்தில் சினிமா நினைத்துப் பார்க்காத உயரத்திலும் பலரை அமர்த்தியிருக்கிறது. நம்பிக்கையூட்டும் விதத்தில்தான் நாவலை முடித்திருக்கிறார் கேபிள் சங்கர். 24 கலை தொழில்நுட்பங்கள் இணைந்து உருவாகும் தமிழ் சினிமா என்பதை நினைவுபடுத்தும் தலைப்பு. ஆனால் இன்னும் இசை, படத்தொகுப்பு தொடங்கி பெரிதும் அறியப்படாத துறைகளையும் நாவல் தொட்டுப் பேசியிருக்கலாம். சினிமா குறித்து ஒரு விறுவிறுப்பான சினிமா போலவே எழுதப்பட்டிருக்கிறது ‘24 சலனங்களின் எண்.’

24 சலனங்களின் எண்

கேபிள் சங்கர்

வெளியீடு: ஸ்வாஸ் பப்ளிகேஷன்ஸ், எஸ் 2, அனுபம் ப்ளாட்ஸ்,

ஆர்.ஆர்.தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை - 600 015.

விலை: ரூ.300, பக்கங்கள்: 320