Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

மிராசு சி.எம்.முத்து

காவிரிப்படுகையின் மொழி, வழக்காறுகள், உறவுப்பிணைப்புகள், வாழ்க்கையென ஏராளமான பண்பாட்டுப் படிமங்கள் ஆகியவற்றை யதார்த்த அழகியலுடன் விளக்கும் நாவல் ‘மிராசு.’

இடையில்லாத வேளாண் பணிகள், உழவு செய்து உழவு செய்தே காளை களின் கால்களில் எப்போதும் மஞ்சள் பூத்துவிடும். காலை பத்து மணிக்கு மேல் வீடுகளில் மனிதர்களே இருக்க மாட்டார்கள். களையெடுக்க, கதிரறுக்க, நாற்று பறிக்க, உரம் வீசவென வயற்காடுகளில்தான் வாழ்ந்தார்கள். விவசாயத்தைக் கௌரமாகப் பார்த்த பூர்வகுடிச் சமூகம். வேலிக்கணக்கில் நிலம் வைத்திருக்கும் மிராசுகள் ஊரை ஆட்சி செய்வார்கள். அறுவடை முடிந்தால் மச்சுவீடு நிறைந்துவிடும். கணக்கப்பிள்ளை என்ன, கார்வாரி என்ன, ஜட்கா வண்டியென்ன, தொடுப்புகளுக்கென்றே கட்டப்பட்ட தோட்டத்து சவுக்கண்டிகள் என்ன... மிராசுகள் வாழ்க்கையோ வாழ்க்கை...

படிப்பறை
படிப்பறை

கடந்த 50 ஆண்டுகளில் படிப்படியாகச் சரிந்துபோனது எல்லாம். வேளாண்மையை நம்பி இப்போது காவிரிப்படுகையில் யாருமில்லை. மிராசு வீடுகளெல்லாம் குட்டிச்சுவர்களாகிவிட்டன. இருந்த நிலத்தை விற்று, பிள்ளைகளை வெளிநாட்டுக்கோ, நகரங்களுக்கோ அனுப்பிவைத்துவிட்டு சில மிராசுகள் இறுதிக்காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். சி.எம்.முத்துவின் ‘மிராசு’ இந்த அவலத்தைத்தான் பேசுகிறது.

ஓமந்தூரார் ஆட்சிக்காலத்தில், கும்பகோணத்துக்கு அருகிலிருக்கும் இந்தளூர் என்ற கிராமத்தில் வசித்த சேதுக்காளிங்கராயரின் ஏகபோக மிராசு வாழ்க்கையில் தொடங்கி, ஜெயலலிதா ஆட்சிக்காலம் வரையிலான அவரது சந்ததியின் பேரிடர் வாழ்க்கை வரை நீள்கிறது இந்த நாவல். மிராசுகளின் ஆண்டைத்தனம், அடிமைபோல காலுக்குச் செருப்புகூடப் போட முடியாமல் கப்பி ரஸ்தாவில் நடந்தே கால்பெயர்ந்த கார்வாரிகளின் துயரங்கள், குருணிக்கும் மரக்காலுக்கும் ஆண்டை வயலில் உழைத்தே உயிர் தேய்ந்த பண்ணையாட்களின் நிலை என நாவல், கீழத்தஞ்சை மாவட்டத்தின் வேளாண் குடி வாழ்க்கைமுறையை எந்தக் கலப்புமில்லாமல் ஆவணமாக்குகிறது.

படிப்பறை

மிராசு, அவ்வளவு வட்டாரத்தன்மையோடு, காவிரிப்படுகையின் வரலாறு, புவியியல், கணிதம், அறிவியல் அனைத்தையும் பதிவு செய்திருக்கிறது. எழுத்தாளர் சா.கந்தசாமி சொல்வதுபோல, இந்தியாவில் டாப்-25 நாவல்களை நேர்மையாக வரிசைப்படுத்தினால், `மிராசு’வும் அதில் அடங்கும். அந்த அளவுக்குக் காலத்தை உண்மைக்கு நெருக்கமாக, தன்மைசிதையாமல் அழகியலோடும் ரசனையோடும் காட்சிப்படுத்தியிருக்கிறது!

மிராசு சி.எம்.முத்து

வெளியீடு: அனன்யா, 8/37, பி.ஏ.ஒய். நகர், குழந்தை இயேசு கோயில் அருகில், புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர்-613005

தொடர்புக்கு- 9442346504

விலை: ரூ.780 பக்கங்கள்: 849