Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

கொச்சிக்கட Vs கும்மிடிபூண்டி; ஈழவாணி

லங்கையில் இறுதிப்போரில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகள், எண்ணற்ற படைப்புகள் வழியே எழுதப்பட்டிருந்தாலும் இன்னும் தீராத வலிகளும் சோகங்களும் இருக்கவே செய்கின்றன என்பதை ‘கொச்சிக்கட Vs கும்மிடிபூண்டி’ எனும் நாவல் வழியே அழுத்தமாகச் சொல்கிறார் ஈழவாணி.

கொழும்பு தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையின்போது குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்ட நாளில் நாவல் தொடங்கினாலும், கதையின் போக்கு காலத்தின் முன்பின் நகர்வதாகவே இருக்கிறது. கானவி எனும் இளம்பெண் ஒரு குழந்தையுடன் ஒருவரைத் தேடிப் பயணிக்கிறாள். அது அவளின் குழந்தையா அல்லது தேடிச்செல்பவரின் குழந்தையா எனும் கேள்வி எழுப்பச் செய்து, கானவி வாழ்க்கையின் பல்வேறு தருணங்களை விவரிக்கிறது நாவல்.

கானவியின் உடன்பிறந்தவர்கள் ஐந்துபேர். அண்ணன்கள் இருவர் வெளிநாடுகளில் குடியேறிவிட, இன்னொருவர் இயக்கத்தில் சேர்கிறார். மற்றோர் அண்ணன் வெளிநாட்டுக்குச் செல்ல ஏற்பாடு செய்கையில் அப்பாவும் அவரும் காணாமல் ஆக்கப்படுகின்றனர். மீதமிருக்கும் இருவரையும் தொலைத்துவிடாதிருக்க, கானவியை வவுனியாவிலுள்ள தூரத்து உறவினர் வீட்டில் இருக்க வைக்கிறார். அங்கு அவளுக்கு ஏற்படும் காதலும் அதனால் ஏற்படும் பிரச்னைகளுமாக நாவல் பயணிக்கிறது.

கொச்சிக்கட Vs கும்மிடிபூண்டி;
ஈழவாணி
கொச்சிக்கட Vs கும்மிடிபூண்டி; ஈழவாணி

தமிழர் - சிங்களர் இரு இனங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ‘இளைஞர் கழகம்’ சார்பாக சில நாள்கள் நடக்கும் பயிற்சிப் பட்டறைக்குச் செல்கிறார்கள். அந்த நிகழ்ச்சிக்கு அரசு ஏராளமான நிதி செலவிடுகிறது. உண்மையான காரணம், ‘உண்மையில் இனக்கலப்பினை ஏற்படுத்தி பெளத்தத்தைத் தழுவ வைத்துவிடுதல் என்பதே’ என்று வெளிப்படையாகச் சொல்கிறது நாவல். போரின் பல்வேறு சூழல்களில் தப்பிக்கும் இக்கட்டையும் அவஸ்தையையும் மிக நெருக்கமாக உணர வைக்கிறது.

ஈழத்தமிழர் அவலத்தின் இன்னொரு வலுவான சாட்சியாகத் திகழ்கிறது இந்நாவல்

சில பகுதிகளில் விவரக்குறிப்புகள் படிப்பதுபோன்ற சோர்வைத்தருகிறது. இன்னும் சில இடங்களில் விரித்துச் சொல்ல வேண்டிய அம்சங்கள் சுருக்கமாக எழுதப்பட்டும் இருக்கின்றன. ஆயினும் ஈழத்தமிழர் அவலத்தின் இன்னொரு வலுவான சாட்சியாகத் திகழ்கிறது இந்நாவல்.

கொச்சிக்கட Vs கும்மிடிபூண்டி

ஈழவாணி

வெளியீடு: பூவரசி பப்ளிகேஷன்ஸ், எண்: 2, இரண்டாவது மாடி, முதல் குறுக்குத் தெரு.

புஷ்பா காலனி, சாலிகிராமம், சென்னை - 93, 044 48604455, விலை: ரூ 250, பக்கங்கள்: 224