Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

நூறு பக்கங்கள் தாண்டாத புத்தகத்தின் சில பகுதிகளை எறும்புகளே தின்றுவிடுகின்றன.

தொடுதலிலும் நுகர்விலும் தங்களின் இருப்பிடத்தைத் தற்காத்துக்கொள்ளும் எறும்புகள் பெரும்பாலும் உறங்குவதேயில்லை. உறங்கா இரவுகளில் அடுத்த நாளுக்கான ஆயத்தப்பணிகளில் அவை மூழ்கிவிடுகின்றன.

கணேச குமாரனின் ‘எறும்பு’ தொகுப்பில் இருக்கும் ஒன்பது கதைகளும் அதனதன் திசையில் தனித்தனியாய்ப் பயணிக் கின்றன. மனப் பிறழ்வுகளையும், மனம் சார்ந்த அகச் சுமைகளையும் மூச்சிரைக்க சுமந்து செல்லும் கணேச குமாரனின் எழுத்துகளாக புத்தகம் முழுக்க எறும்புகளை ஊர்ந்து செல்ல அனுமதித்தி ருக்கிறார்.

படிப்பறை

தான் யார் என்னும் கேள்வியில் களைத்துப் போயி ருக்கும் சிலுக்கு, தனக்கிருக்கும் பிரச்னைகள் குறித்துப் பேச மறுக்கும் வரதன், இந்த இரவைக் கடக்க முடியாமல் சிக்கித் தவிக்கும் பரோட்டா பிரியன் என, தொகுப்பில் இருக்கும் யாரொருவருக்கும் ஏதோவொரு பிரச்னை. இந்தப் பிரச்னைகளுக்கான தீர்வென எதுவுமே இன்றி, அவர்தம் இயல்பிலேயே, அவர்களின் வாழ்வில் சில அத்தியாயங்களை நாம் படித்துவிட்டு, கட்டிலில் கிடத்தப்பட்டிருக்கும் கதை மாந்தர்களைக் கடந்து ஊர்ந்து செல்லும் எறும்பைப்போல் பக்கங்களைக் கடக்க வேண்டியதிருக்கிறது. எந்தக் கதையும் பத்து நிமிடத்துக்கு மேல், நம்மை வாசிக்க வைத்து சோதிப்பவையல்ல. அதே சமயம், அந்த நிர்வாண மனிதர்களின் அழுக்குகளை நம் முன் காட்சிப்படுத்த அவை தவறுவதில்லை. ஆண்களுக்கு ஏன் மார்புகள் என்பது கேள்வியாய் ஒரு கதையில் தொக்கி நிற்கிறது. ஃபேன்டசி பயணம் எடுக்கும் பதினொன்றாம் நாள் கதைகூட இறுதியில் மனப்பிறழ்வை நோக்கி நம்மை இழுத்துச் செல்கிறது. இயல்பு நிலை மனிதர்களை இனியும் கணேசகுமாரனின் எழுத்துகளில் எதிர்பார்ப்பது தவறு என்பதை அழுத்தமாய்ச் சொல்கிறது இப்புத்தகம்.

நூறு பக்கங்கள் தாண்டாத புத்தகத்தின் சில பகுதிகளை எறும்புகளே தின்றுவிடுகின்றன. முன்னுரை, பதிப்புரை என எதுவுமற்ற புத்தகத்தில் இன்னும் சில கதைகள் இருந்திருக்கலாம் என்பது மட்டுமே குறை.

படிப்பறை

எறும்பு:கணேசகுமாரன்

நிவி பதிப்பகம்

20,மேலக்கோட்டை வாசல், பெரியார் சிலை அருகில், நாகப்பட்டினம்-611001

விலை:ரூ.100 பக்கம்:100 போன்:9600743189