Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

ஞாயிறு கடை உண்டு - நாவல் கீரனூர் ஜாகிர்ராஜா

தற்கால நிகழ்வுகளைக் கதைக்களமாகக் கொண்டு, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களைத் தொட்டுச் செல்கிறது இந்த `ஞாயிறு கடை உண்டு’ நாவல்.

படிப்பறை
படிப்பறை

தவணை வசூல் செய்யும் மனிதர்களுக் கிடையே நடக்கும் யுத்தம்தான் நாவலின் பேசுபொருள் என்றாலும், அது கதையில் வரும் நேரம் என்பது மிகவும் சொற்பம். தவணை வசூல் செய்யும் பையன்கள், மீன்சந்தைத் தொழிலாளர்கள், ஜவுளிக்கடை ஊழியர்கள் என நாம் பெரிதாய் கண்டுகொள்ள மறுத்த நைந்துபோன ஜனங்களின் வாழ்வியலைப் பேசுகிறது இந்த நாவல். அரசியல் சட்ட நையாண்டிகள், மதம் குறித்த கருத்து வேறுபாடுகள் இந்த நாவல் முழுக்கவே விரவிக்கிடக்கின்றன.

அசலூரிலிருந்து தஞ்சைக்கு வாழ வழியற்று வரும் பிற மாவட்டக்காரர்கள்; அவர்களுக்குள் அங்கு ஏற்படும் சிக்கல்கள் எனக் கதை நகர்கிறது.

ஞாயிறு கடை உண்டு
ஞாயிறு கடை உண்டு

தி.ஜா, தஞ்சை பிரகாஷ் என நாம் பார்த்துப் பழகிய தஞ்சை மண், கீரனூர் ஜாகிர்ராஜாவின் நிகழ்கால வரிகளில் வறண்டு போயிருக்கின்றன. ஆனால், நக்கல்களும், நையாண்டிகளும் விவரணைகளும் அவர்தம் எழுத்து வளமையைப் பறைசாற்றுகிறது. கதையின் பெரும்பான்மை நாயகர்கள் இஸ்லாமிய சமூகத்தவர்கள்தான். வசூல் செய்யும் சிக்கந்தர், எல்லோரையும் அடக்கி ஆளும் நாச்சியார், சாப்பாட்டை அள்ளியே போடும் பண்டாரி அபுபக்கர், ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் மரியம், வாழ ஏங்கும் நாசர், மீன் வெட்டும் வகாப்பு என ஒவ்வொரு நபரின் வாழ்க்கையும் நாவலுக்குள் ஆங்காங்கே விரிகின்றன. யாருக்கும் பெரிய பகுதியைக் கொடுத்துவிடாமல், கதாபாத்திரங்கள் அவ்வப்போது எட்டிப் பார்க்கின்றன. ஆனால், அதீதமாகச் செல்லும் இந்தக் கதாபாத்திரங்கள் ஒரு கட்டத்தில் யார் எந்தக் கதாபாத்திரம் எனக் குழப்பவைத்து பின்னர் தெளிவடைய வைக்கிறது.

இஸ்லாமியர்களின் வாழ்க்கைச் சூழலை மையப்படுத்தி அவ்வப்போது வெளியாகும் நாவல்களில் நம்மை கவனிக்க வைக்கும் இந்நாவலை ஓர் இரவில் படித்துமுடித்துவிடலாம் என்னும் அளவுக்கு மிக எளிமையான சொற்களையே முழுமைக்கும் பயன்படுத்தியிருக்கிறார் ஜாகிர் ராஜா. வாசிக்க பெரிய மெனக்கெடலை ஏற்படுத்தாமல் எளிய கதைசொல்லலில் சில புதிய விஷயங்களைக் கற்பிப்பதில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கிறது இந்த நாவல்.

ஞாயிறு கடை உண்டு

நாவல்

கீரனூர் ஜாகிர்ராஜா

பதிப்பகம்:

டிஸ்கவரி புக் பேலஸ்,

எண். 6, மகாவீர் காம்ப்ளக்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர், சென்னை - 600 078.

விலை: ரூ.240

பக்கங்கள்: 200