கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

காலமற்ற வெளி திரைப்படங்கள் - ஆளுமைகள் - அனுபவங்கள் - மருதன் பசுபதி

“நாம் வாழும் இந்த பூமி சமநிலையற்றதாக இருக்கிறது. அதை சமன்செய்யும் பொருட்டே கலைகள் தோன்றின. இவை சமனாகுமா என்றால், ஆகாது. ஆயினும் அது தெரிந்தே அம்முயற்சியில் ஒரு கலைஞன் ஈடுபடுகிறான்.” ரஷ்ய இயக்குநர் ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கியின் இந்த வாக்கியங்களின் வழியே பயணித்து, சினிமா குறித்த விரிவான பார்வையை முன்வைத்திருக்கிறார் மருதன் பசுபதி.

மலையாள இயக்குநர் கெ.ஜி.ஜார்ஜ், சார்லி சாப்ளின், ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கி, பிரேசிலிய இயக்குநர் வால்டர் சாலஸ், வங்க இயக்குநர் மிருணாள் சென், அமெரிக்க இயக்குநர் க்விண்டின் டெரெண்டினோ, மகேந்திரன், ஜெர்மானிய இயக்குநர் வெர்னர் ஹெர்ஸாக், பிரெஞ்சு இயக்குநர் டோனி கத்லிப் போன்ற திரை ஆளுமைகளின் கலை இயல்பு, வாழ்க்கை மற்றும் கலையைப் பற்றிய அணுகுமுறை, அவர்களுடைய படைப்புகள், அவை ஏன் சிறந்தவை என விவாதித்துச் செல்கிறார் நூலாசிரியர்.

படிப்பறை
படிப்பறை

பாலுமகேந்திராவுடனான இறுதி சந்திப்பு, அவர் மரணமுற்ற நாள் குறித்த பதிவு நெகிழ்ச்சியானது. அவ்வப்போது நினைவில் எழுந்துவரும் சினிமா, ஆளுமைகள், காட்சிகள், கவிதைகள், ஆதங்கங்கள், அரசியல் கருத்துகளைக் கட்டுரைகளின் போக்கில் இணைத்து எழுதிச்செல்வது சுவாரஸ்யமான வாசிப்புக்கு வாய்ப்பளிக்கிறது. நந்திதா தாஸின் ‘மண்ட்டோ’ படம், பழங்குடிகளை சினிமா சித்திரிக்கும் விதம், ஆவணப்பட அறிமுகங்கள் போன்றவை அளவில் சிறிய கட்டுரைகள் என்றாலும் செழுமையானவை.

ஒரு செயல், பொருள், ஆக்கம் எந்த இடத்தில் கலையாகப் பரிணமிக்கிறது... கனவுகளுக்கும் கவிதைகளுக்கும் சினிமாவுக்குமான தொடர்பு எத்தகையது... ஆன்மிகம், உளவியல், வரலாறு, போன்றவற்றுடனான சினிமாவின் ஊடாட்டம் என, திறனாய்வு வகையிலான கட்டுரைகள் என்றபோதும், சுவாரஸ்யமானவை; படைப்பூக்கம் கொண்டவை.

காலமற்ற வெளி
காலமற்ற வெளி

தன் படைப்புகளில் காலத்தை ஒரு அர்த்தமாக, பாத்திரமாக, புதிராக, ஆன்மிகமாக, அழகியலாக முன்வைத்தவர் ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கி. ‘காலமற்ற வெளி’ என்ற இந்தப் புத்தகம் முழுக்கவும் ஆந்த்ரே ஓர் ஊடிழையாக வருவது புத்தகத்தை மற்றொரு பரிமாணத்திற்கு இட்டுச் செல்கிறது. பாலுமகேந்திராவின் மாணவர்களில் ஒருவரான மருதன் பசுபதி, உலகளாவிய சினிமாவை அதன் உயிர்ப்புமிக்க தீவிரத்தோடு எழுத்துவழியே நமக்குக் கடத்துகிறார்.

காலமற்ற வெளி

திரைப்படங்கள் - ஆளுமைகள் - அனுபவங்கள்

மருதன் பசுபதி

பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ், எண். 6, மகாவீர் காம்ப்ளக்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர், சென்னை - 600 078.

விலை: ரூ.250

பக்கங்கள்: 240