சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

கரடிகள் நெருப்பைக் கண்டுபிடித்துவிட்டன உலகச் சிறுகதைகள்

லகின் வெவ்வேறு மூலைகளில் இருக்கும் மனிதர்களின் வாழ்வியலை, அவர்களின் வாழ்க்கையினூடே தொலைந்துபோன உறவுகளை, அது சார்ந்த சிக்கல்களை விரிவாகப் பேசும் சிறுகதைகளின் தொகுப்பு, ‘கரடிகள் நெருப்பைக் கண்டுபிடித்துவிட்டன.’

அர்ஜென்டீனிய எழுத்தாளர் ஹூலியோ கொர்த்தசார், தென் ஆப்பிரிக்கரான ஃபராஸ் மஹொமத், அமெரிக்காவின் டெரி பாலன்டைன் பிசன், ஜப்பானின் மியீகோ கனாய், பெய்ஜிங்கின் யியூன் லீ எனப் பல நாட்டு எழுத்தாளர்களின் கதைகள் வெவ்வேறு நிலபரப்பின் மனிதர்களுக்கானவை. அந்த மனிதர்களின் நம்பிக்கைகளும் அவர்தம் வாழ்வின் அபத்தங்களும் வெவ்வேறானவை. ஆனால், அவை நமது சூழலுக்கும் பொருந்திப்போவதுதான் வாழ்க்கையின் வேடிக்கை. இந்த நிச்சயமற்ற சூழல் உலகினருக்குப் பொதுவானது என்பதுதான் இக்கதைகளின் அடிநாதம். குறிப்பாக எழுத்தாளர் இடாலோ கால்வினோ எழுதிய `செய்யச் செய்தல்’ எனும் கதையைச் சொல்லலாம். தற்போதைய இந்தியச் சூழலில் மாதக்கணக்கில் நிகழும் போராட்டங்களையும், அது சார்ந்த தடைகளையும் நுண்பகடி செய்யும் கதை அது. ஆனால், கதை நடப்பது கியூபாவில். இருவரின் வாழ்க்கையையும் அவர்தம் தனிமையின் விரக்தியையும் சொல்லும், கொர்த்தசாரின் `ஆக்கிரமிக்கப்பட்ட வீடு’ தனிமையின் மீதான பயத்தை விதைக்கிறது.

ஜோசே சரமாகோவின் `பழிதீர்த்தல்’ என்னும் சிறுகதை, ஒரு அச்சுறுத்தலான விவரிப்பை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி, பின் பேரமைதியை ஏற்படுத்துகிறது. புத்தகத்தின் மையக்கதையான `கரடிகள் நெருப்பைக் கண்டுபிடித்துவிட்டன’ என்னும் சொற்றொடர் அதன் இயல்பிலேயே, நம்முள் ஓர் ஆர்வத்தைத் தூண்டுகிறது. அதில் வரும், காற்றை மோப்பம்பிடித்து கொட்டாவி விடுபவர்கள் காவலாளிகள் போன்ற விவரணைகள் சிரிக்கவைக்கின்றன. மனிதர்களின் ஆதிக்கண்டுபிடிப்பான நெருப்புதான் அவர்களையும் விலங்கினத்தையும் பிரித்து வைக்கிறது. மற்றபடி எல்லோருக்குமான உணர்வுகள் ஒன்றுதான் எனச் சொல்கின்றன இக்கதைகள்.

கரடிகள் நெருப்பைக் கண்டுபிடித்துவிட்டன
கரடிகள் நெருப்பைக் கண்டுபிடித்துவிட்டன

ஸ்ரீதர் ரங்கராஜின் மொழிநடை எளிமையான சொற்கள் நிரம்பியவை இல்லை என்பதுதான் கதைகளில் இருக்கும் சிறு பிரச்னை. ஆனால், சில பக்கங்களிலேயே கதைகளின் வீரியம் நம்மை அதனுள் இழுத்துச் செல்கிறது. அவர் மெனக்கெட்டுத் தேர்ந்தெடுத்திருக்கும் கதைகளே, இந்தத் தொகுப்பின் மீதான ஒரு மரியாதையை உண்டாக்குகின்றன. இந்தச் சிறுகதை எழுத்தாளர்களின் பிற கதைகளையும் தேடிப் படிக்கும் ஆவலைத் தூண்டுகின்றன.

கரடிகள் நெருப்பைக் கண்டுபிடித்துவிட்டன

உலகச் சிறுகதைகள்

தமிழில்

ஸ்ரீதர் ரங்கராஜ்

எதிர் வெளியீடு:96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி

04259-226012, 9942511302, பக்கங்கள்: 200

விலை: 220 ரூபாய்