பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

கர்வாச்சௌத் : இந்தி தலித் சிறுகதைகள்

சாதி எனும் தீ, நம் தேசத்தை இரண்டாகப் பிளந்து ஒரு பாதியைச் சுட்டுக்கொண்டிருக்கிறது. அந்தப் பாதிச் சமூகத்தினுள்ளும் ஆண் எனும் அதிகாரத்தீ, பெண்களை எவ்வாறு பொசுக்கிக்கொண்டிருக்கிறது என்பதை ஒன்பது சிறுகதைகளின் வழியாக உணர்த்துகிறது `கர்வாச்சௌத்.’ எட்டுப் பெண் எழுத்தாளர்கள் இந்தி மொழியில் எழுதிய ஒன்பது கதைகளை, தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார் எழுத்தாளர் நாணற்காடன்.

சர்க்கஸுக்கு விற்கப்பட்ட ஒரு சிறுமியின் கதை, கம்யூனிஸ்ட் கணவனால் அடக்குமுறைக்கு ஆளாகிற அம்பேத்கரிஸ்ட் மனைவியின் கதை, பள்ளி பொதுத்தேர்வின்போது பிரசவ வலியில் துடித்த ஒருத்தியின் கதை, ஆதிக்கச்சாதி மிருகங்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் கதை, தன் சாதியின் காரணமாக சக ஆசிரியைகளால் புறக்கணிப்பைச் சந்திக்கும் ஓர் ஆசிரியையின் கதையென சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகளில் வாழும் தலித் பெண்களின் அழுகுரலையும், எதிர்க்குரலையும் பதிவு செய்கிறது இப்படைப்பு.

படிப்பறை
படிப்பறை

கர்வாச்சௌத் என்பது தன் கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டுமெனப் பெண்கள் விரதமிருக்கும் வடமாநிலத்துப் பண்டிகை, நம் ஊரின் சுமங்கலி பூஜை போல. இதுபோன்ற பண்பாட்டுக் கயிறானது எப்படி பெண்களை சமூகப் பாரம்பர்யத்தினை உயிர்ப்போடு வைத்திருக்கப் பழக்கப்படுத்துகிறது, அவர்களின் இருத்தலை ஆணுக்குள் கரைத்து, இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் இணைத்துக்கொள்ளப் பழக்கப்படுத்துகிறது என்பதைத் தெளிவாய் விளக்குகிறது `உன்னதமான கர்வாச்சௌத்’ எனும் சிறுகதை. யாரும் சீண்டாத, ஒரு பழைய கட்டிலை உவமையாகக் கொண்டு ஒரு பெண்ணின் வாழ்க்கைக் கதையைச் சொல்கிறது `கட்டில்.’ இவை மட்டுமல்ல, இத்தொகுப்பில் இருக்கும் அத்தனை சிறுகதைகளையும் நம் தமிழ்ச் சமூக வாழ்வியலுடன் அப்படியே பொருத்திப்பார்க்க முடிகிறது. படிப்பவர்களின் கண்களிலிருந்து நீரை வரவைக்கும் `கர்வாச்சௌத்’ நிச்சயம் படிக்க வேண்டிய நூல். தலித் என்பதையும் கடந்து, பெண் என்பதாலேயே எவ்வளவு கொடூரமான அடக்குமுறைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதைத் தெள்ளத்தெளிவாய்க் சொல்கின்றன இக்கதைகள்.

கர்வாச்சௌத் :

இந்தி தலித் சிறுகதைகள்

பதிப்பகம் : அணங்கு பெண்ணியப் பதிப்பகம்

3, முருகன் கோவில் தெரு, கணுவாப்பேட்டை, வில்லியனூர், புதுச்சேரி - 605110

மின்னஞ்சல் : anangufeministpublication@gmail.com

தொலைபேசி : 9599329181, 9560583749

பக்கங்கள் : 128

விலை : ரூ.130