பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

காவலர் இல்லம் - இராசேந்திர சோழன்

வீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் 70களில் தொடங்கி இன்றுவரை 50 ஆண்டுகளுக்குமேலாகத் தொடர்ந்து சிறுகதை, குறுநாவல், கட்டுரை, நாடகம், தத்துவ நூல்கள் எனப் பல்வேறு தளங்களில் இயங்கிவருபவர் இராசேந்திர சோழன். அவருடைய படைப்புகள் ஆண் - பெண் உறவுச்சிக்கல்களை மையப்படுத்தியும் இடதுசாரி மற்றும் தமிழ் தேசிய அரசியலை முன்வைத்தும் புனையப்படுபவை. இவரின் அண்மைக்கால நாவல் ‘காவலர் இல்லம்.’

ஊரில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் காவலர் இல்லத்தில் குடியேறும் காவலர்களின் தனிப்பட்ட வாழ்க்கையே நாவலின் களம். தனிப்பட்ட மனிதர்களின் கதையாகவும் அதேவேளை அதிகாரத்தை சமூகத்தில் நிறுவும் ஒரு கூட்டத்தின் கதையாகவும் விரிகிறது. தனிப்பட்ட வாழ்வியலில் சாதாரணமானவர்களுக்கும் காவலர்களுக்கும் வேறுபாடு இல்லை. அவர்களும் குடிக்கிறார்கள்; ஒழுக்க விதிகளை மீறுகிறார்கள்; சண்டையிட்டுக்கொள்கிறார்கள்; அவமானப்படவும் அவமானப்படுத்தவும் செய்கிறார்கள்.

நாவல் முழுவதும் மாறுபட்ட மனிதர்களால் நிரம்பிவழிகிறது. ஆசைகளாலும் பலவீனங்களாலும் அலைக்கழிக்கப்படும் மனிதர்கள்; பொதுச்சமூகத்துக்கு எதிராகத் தன் பாலியல் இச்சைகளை வெளிப்படையாகப் பேசுகிற பெண்கள்; வசவுகளாலும் நடத்தையாலும் தன் பிம்பத்தைக் கட்டமைத்துக்கொள்ளும் பெண்கள்; அதிகாரத்தின் கொடூரக் கரத்துக்கு இறையாகும் விளிம்புநிலை மக்கள் என நாவல் முழுவதும் மாறுபட்ட பாத்திரங்கள். அவர்களின் மூலம் அகவுலகின் சிக்கல்களைப் புனைவுக்குள்ளாக்கும் ஆசிரியர், அதன்மூலம் நுட்பமாகப் புறவுலகம் (சமூகம்) குறித்த சித்திரத்தையும் வரைகிறார்.

காவலர் இல்லம் -
இராசேந்திர சோழன்
காவலர் இல்லம் - இராசேந்திர சோழன்

நாவலின் கடைசி அத்தியாயங்களில் வரும் முதலியார், காவலர் என்றபோதும் சாமானியனின் மனதைச் சுமந்து திரிபவர். அவரின் வாழ்க்கை மூலமாக அதிகாரத்தின் இயங்கியல் முன்வைக்கப்படுகிறது. மக்களைக் காக்க வேண்டிய காவலர்படை அவர்களை அடித்து நொறுக்கவும் சுட்டுத் தள்ளவும் பயிற்றுவிக்கப்படுகிறது. முதலியாருக்கு இதில் உடன்பாடில்லை. ஆனாலும் லத்தியைச் சுழற்றுகிறார். காலம் காலமாகத் தொங்கிக்கொண்டிருந்த காந்தி, நேரு, சாஸ்திரி ஆகியோரின் படங்கள் அவர் லத்தி பட்டு உடைந்து சிதறுகின்றன என்று நாவல் முடிவடைகிறது.

இன்னும் அதிகமாக அரசியல் பேச இடமிருந்தும் அவற்றை இராசேந்திர சோழன் அமைதிப்படுத்திச் செல்வதும் தேவைக்கும் அதிகமாகச் சில பெண்களின் அடாவடிப்பேச்சுகளும் நாவலின் சிறு குறைகள் என்று சொல்லலாம். மற்றபடி காவலர் இல்லம் தனித்துவமான அடையாளங்களோடு மிளிர்கிறது.

காவலர் இல்லம்

இராசேந்திர சோழன்

வெளியீடு: தமிழினி 63, நாச்சியம்மை நகர், சேலவாயல், சென்னை - 51. 8667255103

பக்கங்கள்: 208

விலை: ரூ.190