கட்டுரைகள்
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் - மயிலன் ஜி சின்னப்பன்

மயிலன் ஜி சின்னப்பனின் ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ ஒரு தற்கொலையில் தொடங்குகிறது. அந்தத் தற்கொலை பற்றி ஒரு நண்பன் காரணத்தை அறியத்துடிக்க...

மருத்துவத்துறை சார்ந்த வேறு வேறு நபர்கள் அவர்கள் கோணத்திலிருந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொல்கிறார்கள். அவற்றை எந்தப் பூச்சுமில்லாமல் பதிவு செய்கிற ஆசிரியர் “ஒரு சாவைச்சுற்றி எதற்கு இத்தனை சஞ்சலங்கள்?” என்று நாவலின் இரண்டாம் பாகத்தில் முதல் வரியில் கேட்கும் கேள்வியை, நாவல் படித்து முடிக்கும்போது நம் மனதில் விதைக்கிறார்.

தற்கொலை, அதற்கான காரணம் என்று விரியும் நாவலில் துப்பறியும் தன்மை தொனிப்பது இயல்பு. ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ நாவலும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் மருத்துவரான ஆசிரியர், தான் சார்ந்த துறை குறித்த பல விஷயங்களைக் கவனமாக வாசிப்பாளரிடம் கடத்தும் இடத்தில் நாவலில் புனைவும் நிஜமும் கலக்கும் தன்மையைக் கூட்டுகிறார்.

படிப்பறை

மருத்துவத்துறை சார்ந்து அனைத்துப் படிநிலைகளிலும் இயங்குபவர்களின் பணிச்சிக்கல், உளவியல் சிக்கல் இரண்டையும் பேசியுள்ளது இந்நாவல். ஒவ்வொரு படிநிலையிலும் இயங்குபவர்களின் அதிகார மனநிலை கொடுக்கும் அழுத்தம், அதன் விளைவு ஆகியவற்றை நாவல் பதிவு செய்கிறது. பல இடங்களில் உளவியல் விவரணைகள் கொஞ்சம் அதீதமாகத் தோன்றினாலும் துறையைப் புரியாத வாசகர்கள் பொருட்டு அவ்விவரணைகளை ஆசிரியர் கொடுத்திருப்பதாக எண்ணிக்கொள்ளலாம்.

துறை சார்ந்த உட்பூசல்கள், சக மனிதர்கள்மீதான வன்மம், மருத்துவம் படிக்கும் மாணவர்கள் சந்திக்கும் மன, உடல் ரீதியான அழுத்தங்கள் ஆகியவற்றைக் கதையெங்கும் படரவிட்டிருக்கிறார். கதைக்கு அது பொருந்திப் போகிறதென்றாலும் ஒரு கட்டத்தில் சின்ன அயர்ச்சியை வாசகர்களுக்குத் தருகிறது. ஆனாலும் மருத்துவத்துறை சார்ந்து சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ள தன்மை, நாவலின் பலம்.

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்

மயிலன் ஜி சின்னப்பன்

வெளியீடு: உயிர்மை பதிப்பகம், எண். 5 பரமேஸ்வரி நகர் முதல் தெரு, அடையாறு, சென்னை - 600020, 044-48586727, விலை: ரூ.250, பக்கங்கள்: 208