
துணிவின் பாடகன் - பாந்த் சிங்
சாதித்திமிரால் பாதிக்கப்பட்ட ஒருவரின் கதை. அதனாலேயே இதை இந்தியாவின் கதை என்றும் சொல்லலாம்.
பாந்த் சிங் - பஞ்சாப் மாநிலத்திலுள்ள பூர்ஜ் ஹப்பார் என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும், சுயமரியாதையுடன் வாழ விரும்பும் ஒரு தொழிலாளி; பாடகர். ஒருநாள் அவரின் மைனர் மகள் ஆதிக்கச்சாதி ஆண்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள். அந்தக் கொடுமையை மூடி மறைக்காமல், நீதி கேட்டு நீதிமன்றத்துக்குப் போனார் பாந்த் சிங். குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்தது. அதற்கு பழிவாங்குதலாக சிலரால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். அதில், இரு கைகளையும், ஒரு காலையும் இழந்தார். ஆனால், நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. ஏச்சுப்பேச்சு, எதிர்ப்பு, மிரட்டல்கள் அத்தனையையும் எதிர்கொண்டபடி அதே கிராமத்தில் வாழ்கிறார்.

கவிஞரும் பத்திரிகையாளருமான நிருபமா தத், பாந்த் சிங்கை நேரில் சந்தித்து, பல நாள்கள் அவருடன் உரையாடி இந்த நூலை எழுதியிருக்கிறார். வெகு நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கிறார் எழுத்தாளர் கமலாலயன். ஒரு தலித் தொழிலாளியிடம் இருப்பது என்ன? பணமோ, செல்வாக்கோ அல்ல; அவருடைய உடல். அதைவைத்து உழைத்துத்தான் அவர் ஜீவனம் நடத்த வேண்டியிருக்கிறது. அதுவே, தலித் பெண்ணாக இருந்தால் அந்த உடல் வக்கிரப் பார்வைக்கும், பல நேரங்களில் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகிறது. இந்தக் கொடுமைகளுக்கு எதிரான பிரசாரத்தைப் பாடல்களாக, தன் கனத்த குரலில் இன்றைக்கும் பல மேடைகளில் பாடிவருகிறார் பாந்த் சிங். மாஜாபி சீக்கியர்கள் வாழும் பகுதியைப் பஞ்சாபில் `வேஹ்ரா’ என்பார்கள். நெரிசலான, அசுத்தம் நிறைந்த சேரிப் பகுதி என்று அடையாளப்படுத்தும் இடமாம். அங்கிருந்து பாந்த் சிங் பொதுக்கூட்டங்களுக்குப் போவது, மேடையேறிப் பாடுவது, பிள்ளைகளைப் படிக்கவைக்க முனைவது... இவையெல்லாம் ஆதிக்கச்சாதியினரின் கண்களை உறுத்த, அதன் காரணமாகத்தான் அவர் குடும்பம் குறிவைக்கப்பட்டது. பாந்த் சிங்கின் கதையைச் சொல்லிக்கொண்டே பஞ்சாப் சூழல், சாதி அரசியல், மதவாத சக்திகளின் ஆதிக்க மனோபாவம், இடதுசாரி இயக்கங்களின் முன்னெடுப்புகள் எனப் பல முக்கிய அம்சங்களை நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார் கவிஞரும் பத்திரிகையாளருமான நிருபமா தத்.
துணிவின் பாடகன்
பாந்த் சிங்
நிருபமா தத்
தமிழில்: கமலாலயன்
வெளியீடு: Comrade Talkies, பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி: 044-24322424. இ-மெயில்: thamizhbooks@gmail.com
விலை: ரூ.240; பக்கங்கள்: 280