
கற்றல் என்பது யாதெனில் - கல்வி 4.0
கல்வி என்பதும் பாடத்திட்டம் என்பதும் யாரோ நான்கைந்து பேர் சேர்ந்து உருவாக்கும் செயல்திட்டம் அல்ல. அடுத்த நூற்றாண்டுகளின் போக்கைத் தீர்மானிக்கப்போகும் இந்தக்கூறுகளை உலகத்தின் போக்கும், தொழில்நுட்பமும், சர்வதேச அரசியல் போக்குகளுமே தீர்மானிக்கின்றன. இதுநாள் வரை இருந்த நம் பள்ளிக்கல்வி முறையை கண்ணுக்குத் தெரியாத ஒற்றைத் தீநுண்மி மாற்றிப்போட்டது. ஒட்டுமொத்த உலக சமூகமும் கல்வியைக் கையாளத் திணறிப்போனது. நம்மையறியாமல், எவ்விதத் திட்டமிடலும் இல்லாமல் நாம் டிஜிட்டல் கல்விக்குள் நுழைய வேண்டியதாகிவிட்டது.
இந்தத் தருணத்தில் நின்று, அடுத்த நூற்றாண்டுக்கான கல்விச் செயல்திட்டத்தை வகுக்க வேண்டிய அவசியமிருக்கிறது. அதன் தேவையை, எதிர்காலக் கல்வி எப்படியிருக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலை அறிவியல் கண்ணோட்டத்தோடு நூலாக்கி சமூகத்தின் முன் வைத்திருக்கிறார் ஆயிஷா இரா. நடராசன்.

செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், செயற்கை மரபணுவியல், குவாண்டம் கம்ப்யூட்டிங், தகவல் தொழில்நுட்பவியல் உட்பட பல புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய நான்காம் தொழில்புரட்சி, கல்விச்செயற்பாடுகளில் என்னென்ன தாக்கத்தை உருவாக்கியுள்ளது என்று பகுப்பாய்வு செய்ததோடு, அவற்றைக் கற்றலில் இணைக்கும் உத்திகளையும் அலசுகிறார். பாதி மனிதன், பாதிக் கருவியென வாழப்போகும் 2010 கிட்ஸ்களின் இயல்புகளை நடராசன் பட்டியலிடும்போது, அதிர்ச்சியும் வியப்புமாக இருக்கிறது. நாம் அவர்கள் இழந்தது பற்றி நிறைய பேசுகிறோம். நடராசன் குழந்தைகள் பெற்றவற்றையும் பட்டியலிடுகிறார். மூன்றரை வயதுக் குழந்தைகளால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடிகிறது. இரண்டு வயதிலேயே தங்களுக்கான செயலிகளை அடையாளம் காணமுடிகிறது.
அதேநேரம், தொற்றுக்காலம் கல்வியில் ஏற்படுத்திய பாகுபாடுகளையும் வகைப்படுத்துகிறார் நடராசன். மதிய உணவுத்திட்டம் நிறுத்தப்பட்டதால் பட்டினியில் வீழ்ந்த குழந்தைகள், தாய் தந்தையரின் தொழிலுக்குள் தள்ளப்பட்ட குழந்தைகள், பிறரிடம் வேலைக்குச் சென்ற குழந்தைகள், தொற்று பாதித்து, மன அழுத்தத்துக்கு உள்ளான குழந்தைகளைக் கல்விச் செயற்பாடுகளில் இணைக்கும் சவால் பற்றியும் எழுதுகிறார்.
தொழிற்புரட்சியை மையப்படுத்திய 4.0 கல்விப்போக்கை, வரலாறு, அறிவியல், புவியியல் காரணிகளைக் கொண்டு மிகவும் ஆய்வுபூர்வமாக முன்வைக்கும் இந்த நூல், அரசு, கல்வியாளர்கள், பெற்றோர் என அனைத்துத் தரப்பினரும் வாசித்து விவாதிப்பதற்கான அவசியமான முன்னெடுப்பு!
கற்றல் என்பது யாதெனில் - கல்வி 4.0
ஆயிஷா இரா.நடராசன்
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன், 7 - இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை- 600018
தொடர்புக்கு: 044-24332424, 24332924