சினிமா
Published:Updated:

படிப்பறை

நீலப்பூ நாவல்
பிரீமியம் ஸ்டோரி
News
நீலப்பூ நாவல்

அமைதியும் அழகுமான அண்ணல் நகர் சாதி வன்முறைக்கு இலக்காகிறது. வீடுகள் கொளுத்தப்படுகின்றன

இயற்கைச் சீற்றங்களோ, வன்முறைகளோ... அதிகம் பாதிப்புக்குள்ளாவது குழந்தைகள்தான். குழந்தைகளுக்கென்று நம் சமூகத்தில் எந்தக் குரலும் இல்லை. அவர்களின் தவிப்பும் அழுத்தமும் உளைச்சலும் எங்குமே பதிவாவதில்லை. விஷ்ணுபுரம் சரவணனின் நீலப்பூவைப் படித்து முடிக்கும்போது இந்தப் பேருண்மை மனதை உலுக்குகிறது.

அமைதியும் அழகுமான அண்ணல் நகர் சாதி வன்முறைக்கு இலக்காகிறது. வீடுகள் கொளுத்தப்படுகின்றன. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கீர்த்தியின் அப்பா லோன் போட்டு வாங்கிய டெம்போவும், செல்வி அத்தை தினமும் பாடம் சொல்லித்தருகிற போதி இரவுப்பாடசாலையும்கூடக் கொளுத்தப்படுகின்றன. கீர்த்தியோடு படிக்கும் அருணும் அந்தக் கலவரக் கூட்டத்தில் ஒருவனாக ஆயுதம் தரித்து வந்ததைப் பார்த்துத் திகைத்துப்போகிறாள் கீர்த்தி. முதல்நாள் அருணிடம் வாங்கிய நோட்டையும், ஒரு ஓவியப்போட்டிக்காக அவன் பாதியளவுக்கு வரைந்து வைத்திருக்கும் ஓவியத்தையும் அவனிடம் சேர்த்துவிடத் துடிக்கிறாள் கீர்த்தி. ஊரை வழிநடத்தும் ஆளுமை மிக்க பெண்ணான செல்வி அத்தையிடம் இந்தக் கோரிக்கையை வைக்க, காவல் அரண்களையும் சாதி வெறியர்களையும் தாண்டி அருணைப் பார்க்க வளாகத்துக்குள் நுழைகிறார்கள் இருவரும். கீர்த்தி அந்த ஓவியத்தையும் நோட்டையும் அருணிடம் சேர்த்தாளா என்பதன் கிளையாக சாதி, ஒடுக்குமுறை குறித்து செல்வி அத்தைக்கும் கீர்த்திக்குமான எளிய உரையாடல்களில் இருக்கிறது குழந்தைகள் அறிந்துகொள்ள வேண்டிய அத்தியாவசிய அரசியல்.

படிப்பறை

குழந்தைகளை மட்டுமன்றி பெரியவர்களையும் அவரவருக்கேற்ற வகையில் வழிநடத்தும் செல்வி அத்தையை எல்லோருக்கும் எளிதில் பிடித்துப்போய்விடும். குழந்தைகளின் உலகத்தில் ஒரு வன்முறை என்ன மாதிரியான தாக்கங்களை உருவாக்கும் என்பதை கீர்த்திக்கும் சுஜிதாவுக்குமான வார்த்தைகளில் பதிவு செய்கிறார் சரவணன்.

கீர்த்தியும் செல்வி அத்தையும் பயணிக்கும் பாதை முழுவதும் நீலப்பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. நீல நிறத்திலான சங்குப்பூக்களும் லோலாக்குப் பூக்களும் வார்த்தைகளில் சொல்லப்படாத கதைகளைச் சொல்கின்றன.

நீலப்பூ, முக்கியமான சிறார் நாவல்!

நீலப்பூ

விஷ்ணுபுரம் சரவணன்

வெளியீடு: வானம் பதிப்பகம், M22, 6வது அவென்யூ, அழகாபுரி நகர், ராமாபுரம், சென்னை-600089

தொடர்பு எண்: 9176549991

பக்கங்கள்: 120 - விலை: ரூ. 80