சினிமா
Published:Updated:

படிப்பறை

அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்

அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்

டாக்டர் அம்பேத்கர் வெறுமனே அரசியல் செயற்பாட்டாளர் மட்டுமல்ல, அறிவாற்றலின் ஆழம் தொடும் எழுத்தாளர். சமூகப் பிரச்னைகளின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து விரிவான ஆய்வுகளை முன்வைத்த சிந்தனையாளர். அண்ணல் அம்பேத்கர் தன் நூல்களுக்கு எழுதிய முன்னுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக்கியிருக்கிறார் வாசுகி பாஸ்கர்.

‘புத்தமும் அவர் தம்மமும்’ நூல் முன்னுரையில் சிறுவயதிலிருந்து பௌத்தத்தின்மீது தனக்கிருந்த ஈர்ப்பையும் தான் பௌத்தத்துக்கு வந்து சேர்ந்த கதையையும் அவர் விளக்குவது சுவாரஸ்யம். ‘சூத்திரர்கள் யார்’ நூலின் முன்னுரையில் புதிய ஆய்வு முடிவுகளை முன்வைக்கும் அம்பேத்கர், தன் ஆய்வு முடிவுகளை ஐந்துவகையான இந்துக்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்பதையும் விரிவாக விளக்குகிறார்.

1935-ல் ஜாத்-பட்-தோடக்- மண்டல் அமைப்பின் கருத்தரங்கில் சாதி ஒழிப்பு பற்றிப் பேச அழைக்கப்பட்ட அம்பேத்கர், அவர் கருத்துகளின் தீவிரம் காரணமாகப் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அந்த உரையே ‘சாதியை அழித்தொழித்தல்’ என்னும் நூலாக மாறுகிறது (பெரியார் இதைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்). இந்த நூலின் முன்னுரையில் தனக்கும் மண்டல் அமைப்புக்கும் நடந்த கடித விவரங்களை அம்பேத்கர் பதிவு செய்திருப்பது முக்கிய ஆவணம்.

‘பாகிஸ்தான் அல்லது இந்திய பிரிவினை’ நூலின் முன்னுரை அம்பேத்கரின் மனநிலையை அறிய உதவும் முக்கியமான பிரதி. அவரை ‘இந்துத்துவ அம்பேத்கராக’க் கட்டமைக்க முயலும் முயற்சிக்கு முற்றிலும் மாறானது. பாகிஸ்தான் பிரிவினை குறித்த இருதரப்பு வாதங்களையும் முன்வைத்து சமநிலையிலிருந்து நிதானமாக அம்பேத்கர் தன் கருத்துகளை விளக்குகிறார். மேலும் மத்திய அரசு என்பது எப்படி மாநில அரசுகளின் பொருளாதாரத்தைச் சுரண்டிக் கொழுக்கிறது என்பதைப் புள்ளிவிவரங்களுடன் விளக்கும் அம்பேத்கர், எதிர்காலத்தில் மத்திய அரசு ஒழித்துக்கட்டப்படலாம் என்றும் சொல்வது ஆச்சர்யம்.

இந்த முன்னுரைகள் மட்டுமே அம்பேத்கர் குறித்த முழுமையான சித்திரத்தை உருவாக்கிவிடாது. ஆனால் அரசியல், சமூகம், சமயம், தத்துவம், மதம் எனப் பல துறைகள் குறித்தும் நிபுணத்துவத்துடனும் கவித்துவ நடையுடனும் அம்பேத்கர் எழுதிய புத்தகங்களைத் தேடிப் படிக்கும் ஆவலை இந்த நூல் உருவாக்கும். அந்தவகையில் முன்னுரைகள் நூல்களுக்கான நுழைவாயில் என்றால் இந்தப் புத்தகம் அம்பேத்கரைக் கற்பதற்கான நுழைவாயில்.

படிப்பறை

அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்

தொகுப்பு : வாசுகி பாஸ்கர்

வெளியீடு : நீலம் பதிப்பகம், 5,

நல்லதம்பி வீதி, அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600014.

பக்கங்கள் : 124

விலை : ரூபாய் 150/-