
மனம் அழுத்தும் எல்லாச்சுமைகளையும் துடைத்தெறிந்து சிக்கன வார்த்தைகளில் எல்லோருக்குள்ளும் உறைந்துகிடக்கும் காதலை உயிர்ப்பிக்கிறார் கவிஞர்
இலக்கியங்கள் தளும்பத் தளும்ப காதலைப் பாடிக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும் வெற்றிடங்களிலெல்லாம் உள்நுழைந்து நிரப்பும் காற்றைப்போல வற்றா நதியாகச் சுரந்துகொண்டேயிருக்கிறது காதல். பழநிபாரதியின் மொழியழகில் காதல் இன்னும் வெட்கி முகிழ்ந்து அன்பின் பெருவெளியில் பிரவகித்து ஓடுகிறது. அவரது சமீபத்திய நூலான ‘பூரண பொற்குடம்’, பறவையின் மெல்லிய சிறகசைவின் இசையில் காதலைப் பாடுகிறது.
முதலில் ஒரு கவிதை நூலுக்குரிய வடிவத்திலேயே மனம் ஈர்க்கிறது இந்த நூல். மணியம் செல்வனின் முகப்போவியம், திளைக்கும் ஒரு சங்கக்காதலியை உயிர்ப்பிக்கிறது. நீட்டி முழக்காமல் சின்னச் சின்ன வார்த்தைகளில் காதலைத் தளும்ப வைக்கிறார் பழநிபாரதி. நூல் முழுக்க, மலர்களைச் சூடிக்கொண்ட பறவைகள் காதலைச் சுமந்துசெல்கின்றன. சில கவிதைகள் சில்லெனக் குளிர்தந்து சிலிர்க்க வைக்கின்றன.

‘...மழையைக் காலத்தின் கூத்து என்று சொன்னவன் யாரெனக் கேட்டாய்... உனக்கும் முன்னால் உன்னைப்போல் ஒருத்தியைப் பார்த்த என்னைப்போல் ஒருவன்தான்... வேறு யார்’ என்று முடியும் ஒரு கவிதை ஏற்படுத்தும் உள்ளக்கிளர்ச்சி, ‘... பிரியும் தருணம் வலைகொண்ட மீனின் சோர்வான கடைசி அசைவு உன் கண்களில்... அப்போது உள்வாங்கிய கடல் அதன் பிறகில்லை...’ என்ற வரிகள் ஏற்படுத்தும் மெல்லிய சோகம், ‘...உன்னருகில் கிடந்த கூழாங்கல்லை எடுத்தபோது / வேண்டாம் தண்ணீரிலிருந்து அதைப் பிரித்துவிடாதே ஒவ்வொரு கல்லும் ஒரு காதல் என்றாய்... அப்போது உன் பாதங்களை மீன்கள் முத்தமிட்டுக் கொண்டிருந்தன...’ என்ற வரிகள் நிகழ்த்தும் ரசனை... ‘மலரற்ற காம்பின் பாலில் வழிகிறது நீயற்ற தனிமை’ என்கிற வரிகளில் ததும்பி நிற்கும் ஏக்கம் என ‘பூரண பொற்குடம்’ முழுக்க முழுக்க காதல் நுண்ணுணர்வுகளின் படிமங்களால் நிரம்பியிருக்கிறது.
மனம் அழுத்தும் எல்லாச்சுமைகளையும் துடைத்தெறிந்து சிக்கன வார்த்தைகளில் எல்லோருக்குள்ளும் உறைந்துகிடக்கும் காதலை உயிர்ப்பிக்கிறார் கவிஞர். காதலைப்பாடும் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் நிற்கிறது பூரண பொற்குடமும்!
பூரண பொற்குடம்
- பழநிபாரதி
வெளியீடு: தமிழ்வெளி, எண்-1,
பாரதிதாசன் தெரு,
சீனிவாசா நகர், மலையம்பாக்கம்,
சென்னை-600122
தொடர்புக்கு: 9094005600
பக்கங்கள்: 133
விலை: ரூ.140