சினிமா
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

எழுதாப் பயணம் : லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

குழந்தை வளர்ப்புப் புத்தகங்கள் பெரும்பாலும் இயல்பான குழந்தைகளுக்காகவே எழுதப்படுகின்றன. சிறப்புக்குழந்தைகள் பற்றி நுட்பமாகக் கூறப்படுவதில்லை. ஆட்டிசக் குழந்தைகள் பற்றிய நூல்கள் வரத்தொடங்கியிருந்தாலும், அவற்றுள் லக்ஷ்மி பாலகிருஷ்ணனின் ‘எழுதாப் பயணம்’ நூல் தனித்துவமானது.

படிப்பறை

தன் மகன் கனிவதமுனுக்கு ஆட்டிசம் என்று தெரிந்ததும் அவனுடைய ஒன்றரை வயதில் இருந்து பத்து வயது வரை, தெரபிஸ்ட், இசை, சிறப்பு ஆசிரியர்கள் என்று, தான் முயற்சி செய்த அத்தனை விஷயங்களையும் நூலாக எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

மகன் சுயமாக வாழ்வதற்கான வழிகளைத் தேட ஆரம்பித்தது, சிறப்புக்குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டியவர்களாலேயே தானும் தன் சிறு மகனும் பட்ட கஷ்டங்கள், ‘நூறு சதவிகிதம் ஆட்டிசத்தைக் குணமாக்கிவிடுவோம்’ என்கிற பொய் விளம்பர மோசடிகள், இவற்றின் எதிரொலியாகத் தன் குடும்பத்தில் ஏற்பட்ட மன வருத்தங்கள், பாலைவனத்தில் கண்ட நீர்நிலைபோலத் தன் மகனுக்குக் கிடைத்த தெரபிஸ்ட், சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியர், ஆட்டிசம் தொடர்பாகத் தான் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகள் என்று தன் அனுபவங்களை, வாசிப்பவர்களிடம் பகிர்ந்தபடியே நகர்கிறார் லக்ஷ்மி பாலகிருஷ்ணன். அவருடைய எளிமையான எழுத்து நடை அவற்றை உணர்வுபூர்வமாகக் கடத்த உதவுகிறது.

‘ஆட்டிசக் குழந்தைகளை, ஒவ்வொரு நொடியும் மனத்தால் தொடர்வதன் மூலமே அவர்களின் விருப்புவெறுப்புகளை நம்மால் அறிய முடியும்; மற்றவர்களுக்குப் புரிய வைப்பதற்குத் தேவையான தகவல் தொடர்பாற்றல் இல்லாமையால்தான் பெரும்பாலான ஆட்டிச நிலையாளர்கள் நடத்தைச் சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்’ என்கிற வரிகள், ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கான சரியான திசையை வழிகாட்டுபவை. ‘பாப்பா, பிரஷ் பண்ணுங்க’, ‘தம்பி, பல் விலக்குங்க’ என்று ஒற்றை வரியில் மற்ற அம்மாக்கள் கடந்துவிடுகிற ஒரு விஷயத்தை, தன் மகனுக்கு 28 ஸ்டெப்களாகப் பிரித்துச் சொல்லிக்கொடுத்திருக்கிறார் இப்புத்தகத்தின் ஆசிரியர் என்பதை வாசிக்கையில், மனம் கனத்துவிடுகிறது.

படிப்பறை

இயல்பான குழந்தைகளே பெற்றோரைப் பிரிந்தால் அழுவார்கள், இருட்டைக் கண்டால் பயப்படுவார்கள் எனும்போது, சிறப்புக்குழந்தைகள் இந்த விஷயத்துக்கெல்லாம் இன்னும் அதிகமாக ரியாக்ட் செய்வார்கள் என்பதைச் சிறப்புக்குழந்தைகளின் சிகிச்சையாளர்களும் இந்தச் சமூகமும் புரிந்துகொண்டால், லக்ஷ்மி பாலகிருஷ்ணனைப் போன்ற அம்மாக்கள், இரவு முழுதும் ரயிலில் கழிவறையருகே அமர்ந்தபடி பயணம் செய்ய வேண்டிய அவலம் நிகழாது.

இந்தப் புத்தகத்தை ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோர்கள் மட்டுமல்லாமல், இயல்பான குழந்தைகளின் பெற்றோர்கள் வாசிப்பதும் அவசியம். அப்போதுதான், ஆட்டிசப் பிடியிலுள்ள குழந்தைகளைக் காயப்படுத்தாமல், அவர்களை நம் சராசரி உலகத்துக்குள் உலவ அனுமதிக்கும் மனநிலை வாய்க்கும்.

எழுதாப் பயணம்

லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

வெளியீடு : கனி புக்ஸ்

84/1, ஐஸ்வர்யா தெரு, ஷீலா நகர், மடிப்பாக்கம், சென்னை - 91

தொடர்பு : 9940203132

விலை: ரூ.100

பக்கங்கள் : 112