பேட்டி - கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

படிப்பறை

நான்காம் சுவர்
- பாக்கியம் சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
நான்காம் சுவர் - பாக்கியம் சங்கர்

‘நான்காம் சுவர்’

நாம் கடந்து செல்லும் எளிய மனிதர்களை மட்டுமன்றி, நம் கவனத்துக்கு வராத பல மனிதர்களையும் அவர்களோடு பழகி அதைத் தொடராக ஆனந்த விகடனில் பாக்கியம் சங்கர் எழுதியதன் தொகுப்புதான் ‘நான்காம் சுவர்.’

படிப்பறை

முதல் மூன்று அத்தியாயங்களும் படிக்கப்படிக்க நமக்குள் தடதடக்கிறது இதய ஒலி. களம் மார்ச்சுவரி. பிணங்களை அறுக்கும் திருப்பாலின் அனுபவங்கள் வரிக்கு வரி நம்மை அதிரவைக்கின்றன. அடுத்த கதாபாத்திரத்தைப் படிக்க நிச்சயம் இடைவெளி கோருகிறது இந்தத் திருப்பாலின் வாழ்க்கை. கண்டு கேட்டவர்களால் மட்டுமே இப்படி ஓர் எழுத்தை எழுதிவிட முடியாது. உடன் வாழ்ந்த ஒருவரால்தான் இது சாத்தியம் என எண்ண வைக்கிறது பாக்கியம் சங்கரின் எழுத்து. திருப்பாலின் அத்தியாயம் முடியும்போது அவர் மகன் காந்தியும் அதே வேலைக்கு வருவதாய் முடித்திருப்பார். அந்த இடத்தில் எழுத்தாளர் பேசும் அரசியல் காலத்தின் தேவை.

இப்படிப் பல மனிதர்களின் தினசரி வாழ்வை ரத்தமும் சதையுமாய் நம் கண்முன் வைக்கிறார் பாக்கியம் சங்கர். மலக்குழிக்குள் இறங்கி அடைப்பெடுக்கும் ‘டிரைனேஜ் மேன்’ மாலகொண்டையா, `சுதாம்மா’வாக மாறிய செந்தில், இளைய ராகங்களின் ஜானகி, ஒரே ஒரு போஸ்டர் மூலம் வாழ்க்கையின் போக்கை திசைமாற்றிக்கொண்டு துணை நடிகர்கள் ஏஜன்ட் ஆன ‘வைரம்’, கொடைவள்ளல் சேகர் என்று இந்த நூல் முழுவதும் விரவியிருக்கும் கதாபாத்திரங்களில் நம்மையோ நம்மைச் சுற்றியுள்ளவர்களையோ உணர்ந்துகொள்வதுதான் இதன் பலம். அதே சமயம் ஒரு சிலரின் வாழ்வில் வலிந்து திணிக்கப்பட்ட நெகிழ்ச்சி தனித்துத் தெரிவது குறை.

படிப்பறை

`அன்புதான் இன்னொரு உயிரைக் கொல்லும்... மரியாதை எப்பவுமே மரியாதையாத்தான் இருக்கும்’, ‘நெற்றிக் காசானாலும், நெல்மணிக் காசானாலும் பணத்துக்கு மட்டும்தான் இந்த உலகத்தில் மரணம் என்பதே கிடையாது’ என்று படிக்கும்போதே படிப்பதை நிறுத்தி சிந்திக்க வைக்கும் பல வரிகள் உள்ளன. கதாபாத்திரங்களின் குடும்பச்சூழலையும், அவர்களின் அசலான மொழியையும் சமரசமின்றி எழுதிய விதம் பாராட்டுக்குரியது. பல்வேறு தரப்பட்ட மனிதர்களைப் படிக்க முடிகிற வாசிப்பனுபவத்துக்காக நிச்சயம் படிக்கவேண்டிய நூல் இந்த ‘நான்காம் சுவர்.’

நான்காம் சுவர்

- பாக்கியம் சங்கர்

வெளியீடு: யாவரும் பப்ளிஷர்ஸ்

214, மூன்றாவது பிரதான சாலை, புவனேஸ்வரி நகர், வேளச்சேரி, சென்னை - 42

தொடர்பு : 9042461472.

விலை: ரூ.375

பக்கங்கள் : 320