சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

தன்னுடைய ஆராய்ச்சிகள் மூலம் காலங்காலமாக மனித இனம் சுமந்துகொண்டிருந்த நம்பிக்கைகளைத் தகர்த்தெறிந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

டைம் மெஷின், பிளாக் ஹோல், பிக்பேங் தியரி என அண்டத்தின் மிகப்பெரிய வெளிகளில் சிந்தனைகளை உலவவிட்டு, அறிவியலின் எல்லையை அடுத்த தளத்துக்கு நகர்த்தியவர். இயக்க நரம்பணு நோயால் பலமிழந்த உடலை ஒரு வீல் சேரில் இருத்திக்கொண்டு வாழ்ந்து முடிந்த ஹாக்கிங், உலகெங்குமுள்ள லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஆதர்சம்.

படிப்பறை

“இந்தப் பிரபஞ்சம் ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஒற்றைப்புள்ளியிலிருந்து உருவாகியிருக்க வேண்டும்” என்ற ஹாக்கிங்கின் ஒற்றைப்புள்ளிக் கோட்பாடு பல மர்ம முடிச்சுகளை அவிழ்த்தது. உலகெங்குமுள்ள இயற்பியலாளர்களுக்கு மிகப்பெரிய ஆராய்ச்சி வெளியையும் வெளிச்சத்தையும் உருவாக்கியது.

40 ஆண்டுக்காலம் தீவிர அறிவியலாளராக வாழ்ந்த ஹாக்கிங், தன்னை ஆய்வு நோக்கித் துரத்திய கேள்விகள் குறித்தும், தான் வாழ்ந்த வாழ்க்கை குறித்தும், அறிவியல் துறையில் சாதிக்க விரும்பும் இளைஞர்கள் எம்மாதிரியான ஆயத்தங்களில் ஈடுபட வேண்டும் என்பது குறித்தும் விரிவாகப் பதிவுசெய்கிறார் இந்த நூலில். ஒட்டுமொத்தமாக அவரின் படைப்புகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட தொகுப்பு இது.

படிப்பறை

புலப்படாத பதில்களுக்கான பாதையென்பது ஆழமான கேள்விகளில் இருந்துதான் தொடங்குகிறது. ஹாக்கிங் அப்படித்தான் தன் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். அறிவியலை நோக்கித் தன்னைத் திருப்பிய தருணங்கள், அறிவியலாளரான தருணம், சக ஆராய்ச்சியாளர்களிடம் நிகழ்ந்த கற்றல்கள் என ஒரு தோழனுக்குரிய தொனியில் தன் வாழ்க்கைக்குள் கைபிடித்து அழைத்துச் செல்கிறார் ஹாக்கிங். செயற்கை நுண்ணறிவு, கருந்துளை, காலப்பயணம், விண்வெளிமீது நிகழும் அதிகாரப் பேட்டி, கால வடிவமைப்பு என அவரின் பார்வைகள் தடையற்று விரிகின்றன.

‘வருங்காலத்தில் இந்தப்பூமியில் நாம் உயிர்பிழைத்திருப்போமா?’ என்ற கட்டுரை மிகவும் முக்கியமானது. 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியைச் சூழ்ந்திருந்த பெருங்கடல்களிலிருந்து உதித்த உயிர்களின் ஆதியிலிருந்து தொடங்கி எதிர்காலத்தில் முடிகிறது இந்தக் கட்டுரை. கட்டுரைகளின் சாரங்களை ஆங்காங்கே சிறு கேள்வி பதிலாகத் தந்திருக்கிறார்கள். தொடக்கத்தில் தன் தந்தையின் இறுதி ஊர்வலம் குறித்து ஹாக்கிங்கின் மகள் லூசி எழுதியிருக்கும் ‘சிறப்புரை’ நெகிழ வைக்கிறது. இளைஞர்கள் இந்த நூலைக் கட்டாயம் வாசிக்க வேண்டும்.

ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்

ஸ்டீபன் ஹாக்கிங் (தமிழில்: பி.எஸ்.வி.குமாரசாமி)

வெளியீடு: Manjul Publishing House, 7/32, Ground Floor, Ansari Road, Daryaganj, New Delhi-110 002; விலை : ரூ.299