பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

படிப்பறை

‘வாழும் மூதாதையர்’ 
தமிழகப் பழங்குடி மக்கள்
- அ.பகத்சிங்
பிரீமியம் ஸ்டோரி
News
‘வாழும் மூதாதையர்’ தமிழகப் பழங்குடி மக்கள் - அ.பகத்சிங்

க.சுபகுணம்

ழங்குடி மக்கள் வாழும் பகுதிகளுக்குக் கல்வியின் வெளிச்சம் இன்னும் முழுமையாகச் சென்றுசேராத சூழலில், அவர்களைப் பற்றிய வரலாறும் முழுமையாக ஆவணப்படுத்தப்படவில்லை. அதனாலேயே பழங்குடி என்றாலே ஏதோ கற்கால மனிதர்களைப்போலவே சித்திரிக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. பழங்குடிகளின் பண்பாட்டை, வாழ்வியலைப் பொதுச்சமூகத்திற்கு அச்சு அசலாகப் பகிர வேண்டிய அவசியத்தை ‘வாழும் மூதாதையர்கள்’ நூல் நமக்கு உணர்த்துகிறது.

தமிழகத்தில் பட்டியல்படுத்தப்பட்ட 36 பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். அதில் 13 பழங்குடிகளின் வாழ்வியல், கலாசாரம், அவர்களுடைய வாழ்க்கை முறையில் புதைந்துள்ள சூழலியல் அறிவு உள்ளிட்டவை அடங்கிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே ‘வாழும் மூதாதையர்கள்’ நூல். 13 பழங்குடியினச் சமூகங்களின் உணவுப் பழக்கம், சடங்கு, தாவர அறிவு என்று அனைத்து ஆய்வுத் தகவல்களையும் எளிய மொழிநடையில் எழுதியிருக்கிறார் பகத்சிங். நம் மண்ணின் பூர்வகுடிகளைப் பற்றி அறிந்தால்தான், இந்த நிலத்தின் வனப்பகுதியைப் பாதுகாக்க அவர்கள் எவ்வளவு அவசியம் என்பது புரியும்.

படிப்பறை
படிப்பறை

குறிப்பாக, பழங்குடி மக்களின் மருத்துவ அறிவு வியக்க வைக்கிறது. திண்டுக்கல் சிறுமலை, விருதுநகர், தேனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழும் பளியர்கள், 200க்கும் மேற்பட்ட மருத்துவத் தாவரங்களைக் கண்டறிந்து, சிகிச்சை முறையையும் அறிந்துவைத்துள்ளனராம். ‘நஞ்சங்கரு’ எனும் ஒருவகை காயை நீரில் கரைத்தால் அங்கு நீந்தும் மீன்கள் மயக்கமுற்றுவிடுமாம். தமிழ் நிலத்தில் வாழ்ந்த பூர்வகுடிகளை நாகரிகம் அடையாதோர் என்று ஒரு சாரார் வகைப்படுத்திப் பிரித்து வைத்து, அவர்களை எந்த அளவுக்கு ஒடுக்கி வைத்திருந்தார்கள் என்பதையும், நம் அனைவரையும்விடப் பூர்வகுடிகள் எந்த அளவுக்கு மேன்மையான சமூகமாக இருக்கின்றனர் என்பதையும் விளக்கும் இந்நூல், மானுடம் குறித்து ஒவ்வொரு மனிதரும் வாசித்துப் புரிந்துகொள்ள வேண்டிய மிகவும் அவசியமான நூலாக விளங்குகிறது. ஒவ்வொரு கட்டுரைக்கும் அப்பழங்குடியினரின் வண்ணப் படங்கள் நூலுக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கின்றன.

மானுடவியல் ஆய்வாளர் முனைவர் அ.பகத்சிங் தனது நீண்டகாலக் கள ஆய்வின் மூலமாகத் திரட்டிய தகவல்களைத் தொகுத்து எழுதி, உயிர் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘வாழும் மூதாதையர்கள்’ என்ற இந்த நூல், மானுடவியல் குறித்த மிக முக்கியமான சர்வதேச நூல்களின் பட்டியலில் சேர்க்கக்கூடிய அளவுக்குத் தரமான உள்ளடக்கத்தோடும் வடிவமைப்போடும் உள்ளது.

‘வாழும் மூதாதையர்’

தமிழகப் பழங்குடி மக்கள்

- அ.பகத்சிங்

உயிர் பதிப்பகம், எண்: 4, 5-வது தெரு, சக்தி கணபதி நகர், திருவொற்றியூர், சென்னை - 19, தொடர்புக்கு: 9092901393, பக்கங்கள் : 180, விலை : ரூபாய் 600