
கவிதை
கவிதை
வெற்றுக் கோப்பையைப் பார்க்கிறபொழுது
துயரமாக இருக்கிறது
வெறுமை தளும்புவதை
எவ்வளவு நேரம் பார்க்க முடியும்?
நீரற்றபோதும்
இந்தக் கோப்பையில்
வரையப்பட்டிருக்கும் மீன்கள்
அங்கேயே நீந்திக்கொண்டிருப்பது
கணநேர நிகழ்வு
என்றாலும்...
இந்தக் கோப்பையை
இப்படியே
விட்டுவிட்டுப் போகாதே
உன் பார்வையின் ஈரத்தால்
உன் வியர்வையின் மணத்தால்
உன் புன்னகையின் தழும்புகளால்
உன் இதழ்களின் மதுவால்
ஏதொன்றிலாவது
நிறைத்துவிட்டுப் போ
நதியில் மிதக்கும் நிலவை
குனிந்து
முத்தமிட்டு
செத்துப்போய்விட்ட
ஒரு கவிஞனின் இரவு இது.
ஒரு தூரிகையை வைத்தேன்
ஒரு எழுதுகோலை வைத்தேன்
மயிலிறகுகளைப் பரப்பினேன்
மலர்களை அடுக்கினேன்

பொய்களால்
மெய்யை அலங்கரிக்க முடியாது
என்கின்றன
கோப்பையில் மிதக்கும்
உன் கண்கள்.
கைநழுவி
விழுந்து
சிதறிக்கிடக்கிறது
நீ பரிசளித்த
கண்ணாடிக் கோப்பை
ரத்தம் வழிய
கைகளில் ஏந்துகிறேன்
உன்னை
ஒரு நூறு கோப்பைகளாக!