இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல! - ஆசிரியர்.
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய தமிழ் மொழியின் இசை வடிவத்தில் முதன்மை பெறுவது பறையிசையாகும். 'பறை, பறைதல்' என்றால் செய்தி பகர்தல், சொல்லுதல் என்று பொருள்படுகிறது. மொழி கொண்டு மனிதன் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு முன்பே அவன் ஒலியெழுப்பி செய்தி பகர்ந்தான்.
தமிழர் பண்பாட்டு கருப்பொருட்களில் யாழும் பறையும் இடம்பெறுவதாக தொல்காப்பியம் சுட்டுகிறது.
கன்னி பறை, கொட்டு பறை, சட்டி பறை, பலகை பறை, கண்டிகை பறை' என நுாற்றுக்கும் மேலான பறை இசைக்கருவிகள் இருந்துள்ளன. இது, பஞ்ச பூதங்களையும் தன்னகத்தே கொண்ட தன்னிகரற்ற இசைக்கருவி. ஐந்திணை நிலத்தின் அடையாளமாகவும், அம் மக்களின் இசைக் கருவியாகவும் பறை இசையே இருந்துள்ளது. குறிஞ்சியில், தொண்டகச் சிறுபறை, முல்லையில் ஏறுகோட்பறை, மருதத்தில் தண்ணும்மை, நெய்தலில் மீன் கோட்பறை, பாலையில் ஆறெறி பறை என்ற பறையின் பெருமைகுறிக்கப்பட்டுள்ளது.போரில் அடைந்த வெற்றியை, பறையால் சாற்றியதை, 'இசைப் பறையொடு வென்றி நுவல...' என, புறநானுாறு கூறுகிறது.
திட்டைப் பறை, தொண்டகச் சிறுபறை, தொண்டகப் பறை, அரிப்பறை, மண்றோல் சிறுபறை, மென்பறை, இன்னிசைப்பறை, பொருநர் பறை, ஆடுகளப் பறை என, சங்க இலக்கியங்களில் பல்வேறு பெயர்களில் 'பறை' குறிப்பிடப்படுகிறது. உலகப் பொதுமறையாம் திருக்குறளில் 'அறைபறை யன்னர் கயவர்...' என்றும், 'எம்போல் அறைபறை கண்ணாரகத்து...' என்றும், 'அறைபறை நின்று மோதிட...' என்றும் பறை ஓங்கி ஒலிக்கிறது. அரசர் காலத்தில் அறிவிப்புகளை பறை அடித்து, மக்களுக்கு சொல்வது வழக்கமாக இருந்தது. பெருகி வரும் தண்ணீரை அடைக்க, உழவர் மக்களை அழைக்க, போருக்கு எழுமாறு வீரர்களை அழைக்க, உழவு செய்வோருக்கு ஊக்கம் அளிக்க, விதை விதைக்க, அறுவடை செய்ய, விலங்குகளை விரட்ட,
'பறை' என்பது ஓடும் இசையை ஒழுங்கு பெற நிறுத்தி ஓர் அளவோடு சீரோடு, ஒத்த அழகோடு நடக்க, இசைக்கு நடை கற்பிக்கும் கருவி என முனைவர் வளர்மதி தன்னுடைய "பறை' ஆய்வு நூலில் விளக்குகிறார். திருமுருகாற்றுப்படையில் 'முருகியம்' என்ற இசைக் கருவியின் பயன்பாடு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. விலங்குகளின் தோலை சுட்டு உருவாக்கப்பட்ட இசைக்கருவிதான் முருகியம். முழவு, முரசு ஆகிய பெயர்களும் பறையடித்துக் கூறும் கருவிகளுக்கு பொருந்துவனவாகும்.

தமிழினத்தின் ஆதி இசை வடிவமான பறையிசையை இன்றும் போற்றி வளர்க்கும் முன்னோடிகளுள் ஒருவர் ஆசான் வேலு அவர்கள். 'சமர்' கலைக்குழுவின் தலைவரான வேல்முருகன் என்னும் வேலு அண்ணன் அனைவராலும் மதிப்புடன் 'ஆசான்' என்றே அழைக்கப்படுகிறார். மதுரை அலங்காநல்லூரை பூர்வீகமாகக் கொண்ட வேலு ஆசான் அவர்களுக்கு பறையிசை கற்றுக் கொடுத்தது அவரின் தந்தை இராமையா அவர்கள். டூரிங் டாக்கீஸ்-இல் திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகளை பறையிசைத்து தெரிவித்து வந்தார் இராமையா. அவரிடம் தனக்கும் பறையிசைக்க கற்பிக்குமாறு வேலு அண்ணன் கேட்டுக் கொண்டதற்கிணங்கி முதன்முறையாக தீப்பெட்டியொன்றில் வாசிக்க சொன்னார்.
வேலு அண்ணனை தவிர்த்து அவரின் குடும்பத்தில் வேறு யாரும் பறையிசை பழகிக் கொள்ளவில்லை. ஆசானையும் கல்வி கற்று வாழ்வில் முன்னேற வலியுறுத்தினர். வேண்டா வெறுப்பாக பள்ளிக்குச் சென்ற வேலு அண்ணனின் மனதிலும் மூளையிலும் பறையிசை தாளங்கள் ஒலித்தபடியே இருந்தன. முனியாண்டி, முத்தாலம்மன், அய்யனார் தெய்வங்களுக்கு வருடா வருடம் ஊரில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வருடத்துக்கான சாமி சாட்டுதல் விழாவில் சேவுகன் வாத்தியாரும் அவருடன் இருந்தவர்களும் பறையிசைத்து சாமிகளை உருவேற்றியுள்ளனர். பக்கத்தில் சிறுபிள்ளையாக நின்றுகொண்டிருந்த ஆசானுக்கும் உருவேறியுள்ளது. இதைப் பார்த்த சேவுகன் வாத்தியார் ஆசானின் கையில் பறையைக் கொடுத்துள்ளார். ஆசானும் படு உக்கிரமாகப் பறையை அடித்துள்ளார். சேவுகன் வாத்தியார் அவரை மகிழ்ந்து பாராட்டினார்.
அதேபோல் மற்றொரு முறை திண்டுக்கல் பன்னீர் வாத்தியார் முன்னிலையில் கேத வீட்டில் பறையிசைத்துக் காட்டி பன்னீர் வாத்தியாரின் பாராட்டைப் பெற்றார். கட்டபாஸ் வாத்தியார், வேலு ஆசான், மட்டப்பாறை செல்வராசு வாத்தியார் ஆகியவர்களிடம் சின்னச் சின்ன சந்துகளுக்குள் ஆடும் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார் வேலு ஆசான். பிறகு, வாத்தியார்கள் மலைச்சாமி, மகாமுனி, ராஜேந்திரன், மாரியப்பன், பாண்டி, முருகன் ஆகியோருடன் பயணித்து பறையிசையினைக் கடுமையாகக் கற்றுக்கொண்டு தனது அனுபவம் கொண்டு பறையிசைக் கலையை தழைத்தோங்க செய்வதில் முழு முனைப்புடன் செயல்படத் துவங்கினார் வேலு ஆசான்.
கேத வீடுகளுக்கும், துக்க நிகழ்வுகளுக்கும், அரசியல் ஊர்வலங்களுக்கும் பல மைல் தூரங்கள் கடந்து சென்று கச்சேரி நடத்திய ஆசான் முதன் முதலாக பெரியாரிய இயக்க நிகழ்ச்சியொன்றில் மேடையேறி பறையிசைத்தார். அந்நிகழ்ச்சிக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 'அம்மன் ட்ரம் செட்' என்ற பெயரில் தனது கலைக்குழுவைத் துவங்கினார். பின்னர் தனது மகனின் பெயரில் 'முனீஸ்வரன் ட்ரம் செட்' என்று மாற்றினார். திருமணம் குழந்தைகள் என்று குடும்பம் பெருகியதும் வருவாய் ஈட்ட வேண்டியதன் பொருட்டு அவர் பறையிசைத் தவிர்த்து பற்பல வேலைகளும் செய்தார். எவ்வேலையில் ஈடுபட்டிருந்த பொழுதும் அவரது மனதின் ஆழத்தில் பறை முன்பைவிட சப்தமாக ஒலித்தது. பறையிசைப்பதைத் தனது வாழ்வின் அடையாளமாக தெரிந்து கொண்ட வேலு ஆசான், தனது குழுவுடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து நிகழ்ச்சிகள் நடத்தினார்.

புகழ்பெற்ற நாடக கலைஞரான திரு K.C முத்து, வேலு ஆசானின் பறையிசைக் குழுவிற்கு 'சமர் கலைக்குழு' என்று பெயர் சூட்டினார். சமர் என்றால் போர் புரிதல். போர்க்கருவியான பறையை மனிதன் தொன்றுதொட்டு பயன்படுத்தி இசைத்து வந்திருக்கிறான்.
யாழ், குழல் வாத்தியங்கள் மனிதன் நாகரிகமடைந்ததும் உருவாக்கப்பட்ட கருவிகள். ஆனால் மனிதன் மண்ணில் தோன்றிய நாளிலிருந்து பறை இருக்கிறது. ஒருவேளை அதன் தொன்மைதான் அதன் பலவீனமோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது" என்று வருத்தம் ததும்ப கூறுகிறார் வேலு ஆசான். சாதிய ஒடுக்குமுறைகளையும், அடையாளப்படுத்ததல்கறையும் தகர்த்தெறிந்து தமிழனின் ஆதி இசையை உலகெங்கும் ஒலிக்கச் செய்வது தமிழர் ஒவ்வொருவரின் கடமை என்று அறுதியிட்டு கூறுகிறார் ஆசான்.
சீனா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயணித்து அங்கு வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்லாது மற்ற நாட்டவர்க்கும் பறையிசையின் மேன்மையையும் அது தழைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
வேலு ஆசானின் உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக பல விருதுகள் அவரை அலங்கரித்துள்ளன. அய்யா அழகர்சாமி விருது, சிறந்த மக்கள் கலைஞன் விருது, ஞானப்பறை, பறையிசை சிற்பி, கிராமிய கலைச்சுடர், தந்தை பெரியார் விருது, பாவலர் ஓம் முத்துமாரி விருது என்று பல விருதுகளைப் பெற்றுள்ளார் வேலு ஆசான். அவரின் மாணவர்கள் பலர் இன்று உலகெங்கும் பரவியிருக்கின்றனர். ஆசானின் எண்ணத்தை அவர்கள் செயலாக்கி வருகின்றனர்.
திருஞானசம்பந்தர் இயற்றிய தேவார பாடலொன்றில் "பறைகொள் பாணியர்
பிறைகொள் சென்னியர்"
என்று சிவபெருமான் பறையிசைத்து ஆடுவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். இறைவன் இசைத்த கருவியான பறைக்கு இழிவான அடையாளம் சூட்டப்படுவது அறியாமையின் வெளிப்பாடன்றி வேறென்ன.
"மனுஷன் நிரந்தரமில்லாதவன். கலை மட்டும்தான் நிரந்தரம். ஒரு கலை ஒசத்தி மத்த கலையெல்லாம் கொறச்சல்ன்னு சொல்லி தாழ்த்தி நடத்தக் கூடாது. மற்ற இசைக்கலைக்கும், இசைக் கலைஞர்களுக்கும் தர்ற மரியாதையையும், அங்கீகாரத்தையும், பொருளாதாரத்தையும் நம்ம மண்ணோட ஆதியிசையான பறைக்கும் தரணும். இசையும் ஆட்டமும் சேர்ந்து மனசையும், உடம்பையும் ஒரே நேரத்துல சீரா வச்சுக்கிற கலையிது." என்று ஆதங்கம் நிரம்பிய குரலில் கூறும் வேலு ஆசான், தனது இசைப்பயணத்தில் சற்றும் தளர்வில்லாமல் பயணிக்கிறார். அவரின் மகன், முனீஸ்வரன் தனது தந்தையின் பாதையை தேர்வு செய்து பறையிசை பயின்று மற்றவருக்கும் பயிற்றுவிக்கிறார்.

மற்ற இசைக்கருவிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள ஒழுங்முறைகள் போல் பறையிசைக்கும் அமைக்கப்பட வேண்டும் என்று கருதும் வேலு ஆசான், பறையிசையின் தாளகட்டுகளையும், சொற்கட்டுகளையும் ஒழுங்குப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதே சமயத்தில் பறையிசையின் அடிப்படையான விடுதலையுணர்வை எவ்வித ஒழுங்குமுறைகளும் கட்டுப்படுத்திவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார்.
``இன்னிக்கு தமிழ்நாட்டுல பறை சார்ந்த கலைக்குழுக்கள் நெறையா வந்துக்கிட்டு இருக்குறது ரொம்ப சந்தோசம். அதேநேரத்துல நம்மளோட பாரம்பரிய இசையான பறைக்கு பிளாஸ்டிக் தோல் மாட்டி அடிக்கிறது, கலையோட அழிவுக்கு வழிபண்ற வேல அது. நம்ம கலையோட வரலாறு, பெருமைய நம்ம மொதல உள்ளூற உணரணும்." என்று வேலு ஆசான் கூறிய பொழுது அவரின் கண்களில் ஆசானுக்கே உரிய கண்டிப்பு மிகுந்திருந்ததைக் காண முடிந்தது. இவ்வளவு அன்பையும் மனத்திட்பத்தையும் அவருக்குள் விதைத்த பறையை ஒரு முறை வணங்கத் தோன்றியது.
"விலங்கு விரட்ட பிறந்த
பறை
கைவிலங்கு உடைக்க
பிறந்த பறை.
கடைசித் தமிழன்
இருக்கும் வரை
காதில் ஓலிக்கும்
பழைய பறை.
வீரப் பறை.
வெற்றிப் பறை .
போர்கள் முறிக்கும்
புனிதப் பறை".
வேலு ஆசானின் பறையிசை ஆட்டத்தை நெடுநேரம் பார்த்தபின்பு என்னையுமறியாமல் மனம் இவ்வரிகளை முணுமுணுத்தபடி இருந்தது. உயிர்வரை பாயும் வல்லமை பறையிசைக்கு மட்டுமே உண்டு என்பதற்கு இதுவே சான்று.
(இவர்கள்... வருவார்கள்)