
மனுஷ்ய புத்திரன்
காலம் மாறிவிட்டது
சிநேகிதிகளின் கணவர்களுக்குப் பதில்
சிநேகிதிகளின் காதலர்களைப்பற்றி
எழுதும்படி இந்த உலகம் சிதைந்துவிட்டது
சிநேகிதிகளின் காதலர்கள்
ஏன் எப்போதும் சிநேகிதிகளுக்குத்
தகுதியற்றவர்களாகவே இருக்கிறார்கள்
என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை
அவர்கள் விரல் நகங்கள் அழுக்காக இருக்கின்றன
அவர்கள் வாசனைத் திரவியங்கள் மட்டமானவையாக இருக்கின்றன
அவர்கள் அணிந்திருக்கும் பிராண்டட் சட்டைகள்
60 சதவிகிதத் தள்ளுபடியில் வாங்கப்பட்டவை
அவர்களது ஷூக்கள் இரவல் பெற்றவையாக இருக்கக்கூடும்
அவர்களது பைக் இன்னும் தவணை கட்டி முடியாதவை
வெறுக்கிறேன்
அவர்களது முடி மண்டிய அல்லது
வழுவழுப்பாகச் சிரைக்கப்பட்ட முகங்களை
சிகரெட்டால் கருத்த அவர்களது உதடுகளை
அந்த உதடுகளால்
என் சிநேகிதிகளுக்கு இடும் முத்தங்களை
என் சிநேகிதிகளின் காதலர்கள்
என் சிநேகிதிகளைப்போலவே
எப்போதும் என்னைவிட
வயதில் இளையவர்களாக இருக்கிறார்கள்
இது என்னை எங்கோ
அந்தரங்கமாக உடைய வைக்கிறது
சிநேகிதிகள் தங்கள் காதலர்களை
நண்பர்களாக்கிக்கொள்ள நிர்பந்திக்கும்போது
சிலேட்டில் ஆணியால் எழுதுவதுபோல
கடும் பற்கூச்சத்தை உணர்கிறேன்
ஆனால் அவர்கள் கைகளை இறுகப்பற்றிக் குலுக்குகிறேன்
என் பெருந்தன்மையின் முகமூடிகளைக்
கச்சிதமாக அணிந்துகொள்கிறேன்
சிநேகிதிகளின் காதலர்கள்
வாழ்க்கையில் ஒரு புத்தகம்கூடப் படித்திராதவர்கள் என்பது
என் சிநேகிதிகளுக்கு
ஏன் ஒரு புகாராகவே இல்லை
அவர்கள் சொல்லும் மூன்றாம்தர நகைச்சுவைக்கு
ஏன் அப்படிக் கண்ணீர் மல்கச் சிரிக்கிறார்கள்?

என் சிநேகிதியை அவள் காதலனுடன் சந்திக்கும்
காபி ஷாப்பில்
பில்லை நான்தான் கொடுப்பது என்பதில்
சமரசமற்ற உறுதியைப் பின்பற்றுகிறேன்
என் சிநேகிதியின் காதலனுக்குத் தெரியாத
என் சிநேகிதிக்குப் பிடித்த ஒன்றை
அவனிடம் கூறும்போது
அவன் அசட்டுத்தனமாய்ப் புன்னகைப்பது
எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது
என் சிநேகிதியை
நான் மட்டுமே அழைக்கும் செல்லப் பெயரால்
அவள் காதலன் முன்னால் அழைக்கும்போது
என் சிநேகிதி அதைக் கேளாததுபோல பாவனை செய்கையில்
எனக்குள் ஒரு சிறுநரி கண் சிமிட்டுகிறது
வேலையில்லாமல் இருக்கும்
என் சிநேகிதியின் காதலனுக்கு
ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுத்தனுப்புகையில்
அவன் சற்றே காயப்படவேண்டும் என்று விரும்பினேன்
அவன் அவனது வேலையைப் பற்றி மட்டுமே
கவலையாக இருந்தான்
என் சிநேகிதியின் காதலன்
என் சிநேகிதிக்கு அதிக பொறுப்புள்ளவனாக
எதையோ சொல்லவந்தபோது
நான் அவனிடம்
அவள் சகோதரிகளைப் பற்றியும்
அவள் தந்தையின் இருதய நோய் பற்றியும்
அவள் தம்பியின் படிப்பு பற்றியும் பேசினேன்
சட்டென அவன் எங்கோ தூர விலக்கப்படுவது
எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது
என் சிநேகிதி அவள் காதலனுடன் சென்ற
ஒரு சுற்றுலாத்தலம் பற்றிப் பேசத் தொடங்கினாள்
நான் அவள் காதலனிடம்
பொதுவாக சாகச மனப்பான்மை அற்ற குடும்பஸ்தர்களே
அங்கு செல்வார்கள் என்பதை நாசூக்காகச் சொன்னேன்
பிறகு
அவள் காதலனுடன் பார்த்த
ஒரு சினிமா பற்றி விவரிக்க முயன்றாள்
அது ஒரு கொரிய சினிமாவின் மோசமான தழுவல்
என்பதைக் கூறினேன்
அவள் காதலனின் பிறந்த நாளுக்கு
சிறந்த பரிசொன்றைப் பரிந்துரைக்குமாறு
என் சிநேகிதி கடைக்கு அழைத்துச் சென்றபோது
என் பிறந்த நாளுக்கு அவள் எதுவுமே வாங்கித் தரவில்லை
என்பதை நினைவூட்டினேன்
ஒருமுறை என் சிநேகிதியின் காதலனை
வேறொரு பெண்ணுடன் பார்த்ததாக
அவளிடம் ஒரு கற்பனைக் கதையைச் சொல்லவந்து
அவள் முகம் வாடுவதைக் காணச் சகிக்காமல்
சட்டென பேச்சை மாற்றிவிட்டேன்
என் சிநேகிதியின் காதலன்
என்னை வெறுக்கிறான் என்று எனக்குத் தெரியும்
ஆனால் அதை அவன் அவளிடம் சொல்லமுடியாதபடி
அவள் வசீகரமாக இருந்தாள்
என் சிநேகிதி அவள் காதலனுடன்
எப்படியாவது என்னை ஒரு சமரசத்திற்குள்
கொண்டுவர விரும்பினாள்
அவர்கள் நல்வாழ்க்கையில்
நான் எங்காவது இருக்கவேண்டும் என்பதில்
பிடிவாதமாக இருந்தாள்
அவளது நல்லெண்ணம்
என்னை நெகிழச் செய்யாமல் இல்லை
அதற்காக
அவள் காதலனுடன் அருந்தும் மதுவில்
அவனது கோப்பையில் கலக்கக் கொண்டுவந்த விஷத்தை
எவ்வளவு நேரம் இறுக கையில் பிடித்துக்கொண்டிருப்பது
என்று தெரியவில்லை