ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

கவிதைகள்

கவிதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
கவிதைகள்

கால்களுக்கு மட்டும் குற்ற உணர்வேதும் தோன்றுவதேயில்லை!

சிறப்புப் பரிசு தவா

பாதை

முட்கள் நிறைந்த பாதைகள்

என்னவோ மிகக் கவனமாகத்தான்

கடக்கப்படுகின்றன...

பூக்களை மிதித்துச் செல்லும்

கால்களுக்கு மட்டும்

குற்ற உணர்வேதும்

தோன்றுவதேயில்லை!

- கி.சரஸ்வதி, ஈரோடு.

****

பரிசு ரூ.300

உண(ர்)வு

பசு மாட்டுக்கு வாழைப்பழம், அகத்திக்கீரை,

மொட்டை மாடி சுவரில் இலை போட்டு

வடை, அப்பத்துடன் காக்காவுக்கு சாதம்,

புரோகிதருக்கு பணத்துடன் பை நிறைய அரிசி, காய்கறிகள்,

ஆதரவற்றோர் இல்லத்திலிருப்பவர்களுக்கு

அறுசுவை விருந்து எல்லாம் முடிந்தது...

மருத்துவமனையில் பத்து நாட்களுக்கு மேலாக

அன்னம், தண்ணியின்றி சலைன் மட்டுமே ஏற்றியும்

காப்பாற்ற முடியாத அம்மாவுக்கு

இன்னிக்கு திவசம்.

- ஷாந்தினி, மதுரை-9

கவிதைகள்
கவிதைகள்

பரிசு ரூ.300

கரையும் காலங்கள்

செல்லமாகக் கொஞ்சுவதற்கு பெர்சியன் பூனை

எம்மைச்சுற்றி எப்போதும் வாலாட்டி நிற்பதற்கு

வெள்ளை பொமரேனியன் நாய்

கூண்டுக்குள்ளேயே சிறகடித்து

எங்களையும் பறக்க வைப்பதற்கு

ஆப்பிரிக்கன் காதல் பறவைகள்

காணாமல்போன நதிகளைத் தினமும் நினைவூட்டுவதற்கு

கண்ணாடித் தொட்டியில் அலங்கார மீன்கள்

குறுகிய மனம் படைத்த மனிதர்களால்

வரவேற்பறையில் சிறுத்துப்போன போன்சாய் மரங்கள்

எல்லாம் இருக்கிற தொகுப்பக வீட்டில்

நேரத்தை மட்டும் வேகமாக தின்று செரிக்கிறது

ஆளுக்கொரு தொடுதிரை அலைபேசி.

- ஃபைஹா, அவூர்.

கவிதை படைப்பவரா நீங்கள்..?

உங்கள் எண்ணங்களை வார்த்தை வண்ணங்களாக்கி,
`இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூகஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

பிரசுரமாகும் கவிதைகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு! சிறந்த கவிதைக்கு சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: கவிதைகள், அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com