Published:Updated:

நெய்தல் கலைவிழா: ``உணவும் கலைகளும்தான் நம் வாழ்வின் பண்பாட்டுக் கூறுகள்" - கனிமொழி

கனிமொழி

”நம் வாழ்வின் சின்னச்சின்ன கனவுகள் என அத்தனையும் பதிவு செய்வது மண் சார்ந்த கலைகள்தான். உணவும் கலைகளும்தான் நம் வாழ்வின் பண்பாட்டுக்கூறுகள்” என, தூத்துக்குடி நெய்தல் திருவிழாவில் கனிமொழி எம்.பி., கூறியுள்ளார்.

Published:Updated:

நெய்தல் கலைவிழா: ``உணவும் கலைகளும்தான் நம் வாழ்வின் பண்பாட்டுக் கூறுகள்" - கனிமொழி

”நம் வாழ்வின் சின்னச்சின்ன கனவுகள் என அத்தனையும் பதிவு செய்வது மண் சார்ந்த கலைகள்தான். உணவும் கலைகளும்தான் நம் வாழ்வின் பண்பாட்டுக்கூறுகள்” என, தூத்துக்குடி நெய்தல் திருவிழாவில் கனிமொழி எம்.பி., கூறியுள்ளார்.

கனிமொழி
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், ஸ்பிக் மற்றும் க்ரீன் ஸ்டார் நிறுவனங்களுடன் இணைந்து தமிழகத்தின் தனித்துவம், பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்படும் ‘நெய்தல் – தூத்துக்குடி கலை விழா’, வ.உ.சிதம்பரனார் கல்லூரி மைதானத்தில் நேற்று (7-ம் தேதி) மாலை தொடங்கியது.

வரும் 10-ம் தேதி வரை நடக்கிறது. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், குச்சியாட்டம், துடும்பாட்டம், தெருக்கூத்து, ஜிம்பளா மேளம், பொய்க்கால் குதிரை, வில்லிசை, சிலம்பாட்டம், கணியான் கூத்து, கைச்சிலம்பம், களியல் ஆட்டம், கிராமிய நிகழ்ச்சி ஆகிய 40-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

தூத்துக்குடி கலை விழா
தூத்துக்குடி கலை விழா

தமிழகம் முழுவதிலும் இருந்து 300-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இத்திருவிழாவில் பங்கேற்கிறார்கள். இந்த நெய்தல் விழாவினை முன்னிட்டு கலைசூழ் மாவட்டத்தினை உருவாக்கிடும் நோக்கத்தோடு ‘அரவாணி ஆர்ட் புராஜக்ட்’ என்ற அமைப்பினரோடு இணைந்து, தூத்துக்குடி தருவைகுளம் பகுதி வீட்டு வசதி வாரியக் குடியிருப்புச் சுவர்களில் சுவரோவியம் வரையும் பணிகளும் நடந்து வருகிறது.

இந்த விழாவினை தொடங்கிம் வைத்துப் பேசிய கனிமொழி, “இந்த நெய்தல் விழா தூத்துக்குடியில் ஏன் நடத்தப்பட வேண்டும், ஏன் உங்களுக்கு இவ்வளவு ஆர்வம் என்று பலரும் என்னிடம் கேட்டார்கள். மண் சார்ந்த கலை வடிவங்கள், மக்களின் கலை வடிவங்கள் நம் வாழ்வின் பொக்கிஷங்கள். இவை நம் வாழ்வை விவரித்துக்கொள்கிறது. வேறு கலை வடிவங்கள் மதம் சார்ந்த, இறை சார்ந்தவற்றைப் பிரதிபலிக்கும் சூழலிலே நாட்டுப்புறக் கலை வடிவங்கள்தாம் நம் வாழ்வை பிரதிபலிக்கின்றன. புதிதாக நம் நாட்டுக்கு ரயில் வந்தபோது, ஸ்விட்ச் போட்டால் மெஷின் ஓடும் தொழிற்சாலைகள் வந்தபோது இந்த ஒவ்வொரு அனுபவத்தையும் நம்முடைய கிராமிய பாடல்கள்தான் பதிவு செய்தன.

கரகாட்டம்
கரகாட்டம்

வெள்ளம், வறட்சி, வெளியூர் போய் வேலை செய்ய வேண்டிய நிலை, மீனவர்களின் வாழ்க்கை, நம் வாழ்வின் சின்னச் சின்ன கனவுகள் என அத்தனையும் பதிவு செய்வது மண் சார்ந்த கலைகள்தான். இந்த கலைகளில்தான் கேள்விகள் இருக்கின்றன. நம்முடைய சமூகத்தின் மீதான கேள்விகளை முன் வைக்கின்றன கானா பாடல்கள். தொடர்ந்து நம்முடைய வாழ்க்கையுடன் பயணிக்கும் மண் சார்ந்த கலை வடிவங்கள், அடுத்த தலைமுறையை நோக்கியும் பயணிக்கின்றன.

அடுத்த தலைமுறைக்கான பாடல்களும் வந்து கொண்டிருக்கின்றன. நம்முடைய கேள்விகளை, நம் அரசியலை முன் வைக்கும் கலை வடிவங்கள் இவை. இவற்றை நம் அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதால்தான் தலைவர் கலைஞர் இதை தன் ஆட்சியில் நடத்திட ஊக்கப்படுத்தினார். தளபதி அவர்களும் இப்போது வாழ்த்து தெரிவித்திருக்கிறார். நம் பண்பாட்டில் உணவும் சேர்ந்ததுதான். கலைகளும், உணவும்தான் நம் வாழ்வின் பண்பாட்டுக் கூறுகள். அதை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி” என்றார்.

நிகழ்ச்சியில் கனிமொழி, அமைச்சர்கள் மற்றும்  பார்வையாளர்கள்
நிகழ்ச்சியில் கனிமொழி, அமைச்சர்கள் மற்றும் பார்வையாளர்கள்

இந்நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் கண்களுக்கும், செவிகளுக்கும் கலைஞர்கள் விருந்து வைக்கும் அதே நேரத்தில், வயிற்றுக்கு உணவளிக்க பல்வேறு வகையான பாரம்பர்ய உணவுக் கடைகளும் இடம் பெற்றுள்ளன. பார்வையாளர்களின் சிந்தனையை செழிப்பாக்கிடவும் புத்தகக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு தலைப்புகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.