சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகதான் இருந்து வந்திருக்கிறது. சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் நம்புவதற்கு கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும். அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சுவாரஸ்யமான அதிசயங்களையும் மர்மங்களையும், விநோதங்களையும் இந்தத் தொடர் விவரிக்கிறது.
மாதாஜி என்று மரியாதைக்குரிய பெண்களை நாம் அழைப்பதுண்டு. ஆனால் குஜராத்தில் உள்ள அம்பாஜி என்ற பிரபல தலத்தில் அப்படி அழைக்கப்பட்டவர் ஓர் ஆண். அவர் பெயர் பிரகலாத் ஜனி.
1929ல் பிறந்தவர் இவர். தனது பதினோராவது வயதில் இருந்து உணவு சாப்பிடுவதை நிறுத்திவிட்டதாகக் கூறினார். தண்ணீர் கூட அருந்துவதில்லை என்றார். அம்பாஜி எனப்படும் காளிமாதா தனக்கு இந்த அபூர்வ தன்மையை கொடுத்தாராம். 2020இல் அவர் இறக்கும் வரை உணவு தண்ணீரும் உட்கொண்டதில்லை என்று உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள்.

ஏழு வயதில் தன் வீட்டைவிட்டு கிளம்பி சென்று காடுகளில் வசித்தவர் இவர். தனது பன்னிரண்டாவது வயதில் ஏற்பட்ட ஒரு ஆன்மிக அனுபவத்தைத் தொடர்ந்து அம்பா என்கிற நாமம் சூட்டிக் கொண்டார். சிவப்பு வண்ணப் புடவையைக் கட்டிக்கொண்டார். நகைகளை அணிந்து கொண்டார். தன் நீளமான கூந்தலில் பூக்களையும் சூடிக் கொண்டார். அப்பகுதி மக்களால் அன்புடனும் மரியாதையுடனும் மாதாஜி என்றழைக்கப்பட்டார்.
தனது தொண்டையின் மேற்புறத்தில் உள்ள ஒரு துவாரம் வழியாக கடவுள் தனக்கு தினமும் நீரை வழங்குவதாகவும் அதைக் கொண்டு தான் உயிர் வாழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுதிர் ஷா என்பவர் குஜராத்தில் உள்ள ஒரு நரம்பியல் மருத்துவர். அகமதாபாத்தில் உள்ள ஸ்டெர்லிங் மருத்துவமனையில் பணிபுரிபவர். இவர் 'மிக அதிகமான சக்திகள் கொண்ட மனிதர்களை' ஆராய்ச்சி செய்தார். பிரகலாத் ஜனியையும் தன் ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். பத்து நாள்கள் பிரகலாத் ஜனியை மூடப்பட்ட அறைக்குள் வைத்திருந்தனர். இந்தக் காலகட்டத்தில் அவர் சிறுநீர் கழிக்கவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரால் உணவும் தண்ணீரும் இல்லாமல் தொடர்ந்து வாழ முடிகிறது என்பதைத் தன் ஆராய்ச்சிக்கு பிறகு சுதிர் ஷா அறிவித்தார். ஆனால் அவர் தனது ஆராய்ச்சிகளை எந்த அறிவியல் இதழுக்கும் அனுப்பவில்லை.
"ஒரு மனிதனால் சில நாள்களுக்கு உணவு தண்ணீர் இல்லாமல் இருந்துவிட முடியும். ஆனால் வருடக்கணக்கில் அப்படியிருக்க முடியாது. மூளை இயங்க வேண்டுமென்றால் அதற்கு குளுகோஸ் சத்து நிச்சயம் தேவை." எனவே பிற மருத்துவர்களுக்கு அவநம்பிக்கை தொடர்ந்தது.

2003ல் மேற்படி முதல்கட்ட ஆராய்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் 2010ல் இதே டாக்டர், 35 ஆராய்ச்சியாளர்கள் கொண்ட ஒரு குழுவோடு மீண்டும் தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். ராணுவ வீரர்கள், இயற்கைப் பேரிடரை சந்தித்தவர்கள், விண்வெளி வீரர்கள் ஆகியோர் நீண்ட காலத்துக்கு உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் வாழ வேண்டி வரலாம். அவர்களுக்கு நன்மை கிடைப்பதற்காக இந்த ஆராய்ச்சி என்றும் கூறப்பட்டது.
பிரகலாத் மேலும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். சிசிடிவி கேமரா அவர் இருக்கும் அறையில் பொருத்தப்பட்டது. நடுநடுவே சூரிய வெளிச்சத்தில் அவர் நிற்க வைக்கப்பட்டார். இந்த ஆராய்ச்சியில் தொடர்ந்து 15 நாள்கள் அவர் எதுவும் உட்கொள்ளாமல், கழிவறைக்குச் செல்லாமல் இருந்தார். மருத்துவச் சோதனைகளில் அவருக்கு எந்தக் குறைபாடும் இருப்பதாகக் கண்டறியப்படவில்லை. 2017ல் அவரது மூளை ஸ்கேன் செய்யப்பட்டு ஆராயப்பட்டது. இதிலும் எந்தத் தெளிவும் கிடைக்கவில்லை.
மேற்படி ஆராய்ச்சிகளின் முடிவுகளை பிரபல பகுத்தறிவாளரான ஜேம்ஸ் ரண்டி ஏற்றுக்கொள்ளவில்லை. தான் நடத்தும் சோதனையில் பிரகலாத் ஜெனி தான் கூறுவதை நிரூபித்தால் அவருக்கு ஒரு மில்லியன் டாலர் வழங்குவதாகக் கூறினார்.

சுதிர் ஷா தன் ஆராய்ச்சிகளை பிறர் இப்படிக் குறை கூறுவதை விரும்பவில்லை. ஆஸ்திரியா மற்றும் ஜெர்மனி நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தியாவுக்கு வந்து பிரகலாத் ஜனியை ஆராய்ச்சிக்கு உட்படுத்த விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் அந்தக் குழுவில் அமெரிக்க விஞ்ஞானிகளும் இணைந்து இருப்பதாகவும் அவர்கள் வருகையை பிரகலாத் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அறிவித்தார். ஆனால் கடைசிவரை, அவர்கள் வந்ததாகத் தெரியவில்லை.
2011ல் காந்திநகரில் ஒரு பெரிய மத ஊர்வலம் நடைபெற்றது. அதில் பரம பூஜ்யர் என்று பிரகலாத் ஜனி கௌரவிக்கப்பட்டார்.
பின் துறவியைப் போல ஒரு குகையில் தன் வாழ்க்கையைக் கழித்தார். அவர் இறந்த பிறகு அம்பாஜியில் அவருக்கு சமாதி எழுப்பப்பட்டது.