ஒரு மொழியாசிரியன் தாய்மொழியைக் கற்பிக்கும்போது அதிகம் தேவைப்படாத அகராதிகள், இரண்டாம் மூன்றாம் மொழியாக ஒரு மொழியைக் கற்பிக்கும்போது தேவைப்படுகிறது என்பது அனுபவம் சார்ந்த உண்மை. தமிழ்மொழி சார்ந்த அந்த அனுபவத்துக்குப் பெருந்துணையாக இப்போதும் இருப்பது க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ள தற்காலத்தமிழ் அகராதியும் மரபுத்தொடர் அகராதியும் என்பது சொல்லப்பட வேண்டிய ஒன்று. அதைச் சாத்தியமாக்கியவர் ராமகிருஷ்ணன்.
அகராதிப் பயன்பாடு, இந்தியாவில் இந்திய மொழிகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் இருக்கும் வேறுபாடு இது. கவிதை, கதை, கட்டுரை என வாசிக்கப்படும் பனுவல்களில் இடம்பெறும் புதிய சொல்லுக்கான பொருளை அகராதிகளில் தேடும் பழக்கத்தைப் பெரும்பாலும் இந்திய மொழி ஆசிரியர்களே குறைத்து விடுகிறார்கள். வகுப்புகளில் மாணாக்கர்கள் கேட்கும் சொல்லின் பொருள் சார்ந்த வினாக்களுக்கு, மொழிக்கல்வி ஆசிரியர்களே ஒருவித அகராதிகளின் இடத்தை எடுத்துக்கொண்டு பொருள் சொல்லிவிடும் நிலையே அதிகம். ஆனால், ஆங்கில ஆசிரியர்கள் அப்படிச் செய்வதில்லை. எனக்குக் கற்பித்த ஆங்கில ஆசிரியர்களே அதற்கு உதாரணங்களாக இருந்திருக்கிறார்கள்.

வகுப்பில் எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு அன்றே பதில் தராமல் அகராதிகளைப் பார்த்துவரும்படி வலியுறுத்திவிட்டு அடுத்த நாளில் மாணவர்களின் வாயிலிருந்து பதில்களைப் பெற்ற ஆசிரியர்களைச் சந்தித்திருக்கிறேன். எனக்கெல்லாம் ஆங்கிலம் என்பது ஆறாம் வகுப்பிலிருந்துதான் அறிமுகம். அதற்கு முன்னால் என் பெயரை ஆங்கிலத்தில் எழுதத் தெரியும். எழுமலை அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு தொடங்கிப் பெரும்பாலும் வகுப்பு ஆசிரியர்களே ஆங்கில ஆசிரியர்களாக இருந்தார்கள். ஆறாம் வகுப்பின் ஆசிரியரான நீல் ஆசிர்பாண்டியன் ஆங்கிலப் பாடம் நடத்த வரும்போது மட்டும் ஆங்கில அகராதி ஒன்றைக் கையோடு கொண்டுவருவார். அவரேதான் சரித்திரம் பூகோளமும் நடத்தினார். அதற்கு அகராதியை எடுத்து வர மாட்டார்.
ஆங்கிலமொழிப் பாடத்தில் இடம்பெறும் சொற்களைச் சொல்லிவிட்டு அகராதியை வகுப்பிலேயே பயன்படுத்திப் பொருள் சொல்லச் செய்வார். ஒன்பதாம் வகுப்புக்கான ஆசிரியர் கருப்பத்தேவர், ஒருநாள் வகுப்பில் 'PUBLIC CARRIER' என்ற ஆங்கிலச் சொல்லின் பொருளை அகராதியில் பார்த்துவரச் சொன்னதோடு, அந்தச் சொற்றொடர் எங்கே பயன்பாட்டில் உள்ளது என்றும் அடுத்த நாள் சொல்ல வேண்டும் என்றார். வீட்டில் ஆங்கில அகராதி வைத்திருந்த மாணவி அதற்கான பொருளைக் குறித்து வந்து சொன்னாள். நான், 'லாரிகளின் நெற்றி போன்ற பலகையில் எழுதப்பெற்றிருக்கிறது' என்று சொன்னது நினைவில் இருக்கிறது.
அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டில் பகுதி 2 ஆங்கில வகுப்பில், கவிதையொன்றைப் படிப்பிக்க வந்த சாமுவேல் லாரன்ஸ் கையில் ஆங்கிலத் தினசரிகளான இந்து, இண்டியன் எக்ஸ்பிரஸ் இரண்டையும் கொண்டுவந்து, கவிதையில் இடம்பெற்றுள்ள VOLLY என்ற அந்தச் சொல், விளையாட்டுப் பக்கங்களில் இடம்பெற்றுள்ளது; தேடிக் கண்டுபிடியுங்கள் எனச் சொல்லிவிட்டுக் காத்திருந்தார்.
அதற்கு முந்தைய நாளில் பிரெஞ்சு ஓப்பன் டென்னீஸில், மெக்கன்ரோ தனியாள் ஆட்டத்தில் வெற்றிபெற்ற செய்தி எழுதப்பெற்றிருந்தது. அந்தச் செய்திக்கட்டுரைக்குள் 'வ்வொல்லி', 'ஹாப் வ்வொல்லி' என்ற அடிப்புகள் பற்றியும் குறிப்புகள் இருந்தன. இப்படியெல்லாம் தமிழ்ச் சொற்களின் அர்த்தங்களைத் தேடும்படி தமிழாசிரியர்கள் ஒருவரும் சொன்னதில்லை. நானே சில ஆண்டுகள் பகுதி 1 தமிழ்ப்பாடம் கற்பிக்கும் ஆசிரியனாக இருந்தபோது அகராதியைப் பயன்படுத்தும் ஆர்வத்தைத் தூண்டியதில்லை.
நல்லதோர் அகராதி ஒரு சொல்லுக்கான நேரடிப் பொருளை மட்டுமே சொல்வதல்ல. அதற்கு மாறாக அச்சொல்லின் மீதான கவனத்தைக் குவிப்பதாக இருக்கிறது. அந்த மொழியில் இருக்கும் சொல் வகைகளில் (பெயர், வினை, இடை, உரி என்பது போல) அச்சொல் என்ன வகைச் சொல் என்பதில் தொடங்கி, அதனை உச்சரிக்கும் முறை, அதன் காலப் பழைமை, பயன்பாட்டு நிலை, வேறுபட்ட பயன்பாடுகள், அதிகம் பயன்படும் பரப்பு என அனைத்தையும் உள்ளடக்கிய தகவல்களைக் கொண்டதாக இருக்கிறது தேர்ந்த அகராதி. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி அப்படிப்பட்ட அகராதி என்பதை முகத்தில் அறைந்து எனக்கு உணர்த்தியவர்கள் வார்சா பல்கலைக்கழகத்தில் தமிழ் படித்த மாணாக்கர்கள்.
எனது அனுபவம்
2011 - அக்டோபரில் வார்சா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பிரிவு மாணவர்களில் இரண்டாம் ஆண்டு மாணவர்களைத்தான் முதலில் சந்தித்தேன். அந்த வகுப்பில் மொத்தம் ஏழு பேர். ஒருவர் ஆண்; மற்றவர்கள் பெண்கள். அவர்கள் அனைவரும் வகுப்புக்குள் நுழைந்தவுடன் குளிராடைகளைக் கலைந்து வகுப்பறையின் பின் மூலைகளிலிருந்த ஆடை தாங்கிகளில் வைத்துவிட்டு அவரவர் இருக்கைகளில் அமர்ந்தார்கள். நான் என்னுடைய குளிராடையைக் கழற்றாமல் இருந்தேன். கழற்றி எங்கே வைப்பது... அவர்களது ஆடைகள் தாங்கிய அதே இடத்தில் வைக்கலாமா... எனது நாற்காலியின் பின்புறத்தில் தொங்கவிடலாமா என்ற குழப்பம். எனது குழப்பநிலையை ஊகித்துக்கொண்டு எழுந்த முன்வரிசை மாணவி எனது குளிராடையைக் களைந்து ஆடைகள் எதுவும் தொங்காமல் - கொஞ்சம் பெரியதாக இருந்த தொங்கியில் - ஹேங்கரில் - மாற்றிவிட்டு அங்கே ஆசிரியர் / இங்கே மாணவர் என்ற சொல்லி விளக்கினாள். அதன் தொடர்ச்சியாக அங்கென, இங்கென, அங்கிட்டு, இங்கிட்டு எனத் தமிழில் இருக்கும் வட்டார வழக்குகளைப் பற்றிய பேச்சாக மாறியது வகுப்பு. மாறிய உடனே ஏழு பேரும் தங்கள் கால் பக்கத்தில் வைத்திருந்த பைகளிலிருந்து க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியை தங்கள் முன்னால் விரித்துக்கொண்டார்கள். அந்தச் சொற்கள் இடம்பெறும் இடங்களை வாசித்தார்கள். நானும் பல சொற்றொடர்களை எழுதிப் போட்டு விளக்கம் தந்தேன். அதன் வேர் இ / அ என்ற சுட்டெழுத்துகள். அதை அடியாகக்கொண்டு உருவாகும் பெயர்ச்சொற்களில் இருக்கும் எதிர்நிலையை - அண்மை/சேய்மை விளக்கினேன்.
இந்தியவியல் துறையில் மொழி கற்கும் ஒவ்வொருவருக்கும் அந்தந்த மொழிக்குரிய முதன்மையான - பல்நோக்கு கொண்ட அகராதியை மாணாக்கர்களுக்குத் துறையிலேயே வாங்கித் தந்துவிடுகிறார்கள். அடுத்த ஆண்டு தமிழ்மொழிப் பிரிவில் புதிதாகச் சேர்ந்த 14 பேருக்கும் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி கையில் இருக்கும் விதமாகத் துறை ஏற்பாடு செய்தது. சில மாணவிகள் அதை மட்டும் போட்டு வைக்கும் விதமான கைப்பை ஒன்றை வைத்திருந்தார்கள். அதில்லாமல் துறை நூலகத்திலும் பொது நூலகத்திலும் அந்த அகராதியின் பல பிரதிகள் இருந்தன. அந்நிய மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கப் போன நான் கொண்டுபோன நூல்களில் அந்த அகராதி இடம்பெறவில்லையே என்ற வருத்தம் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், இடையில் இணையம் வழியாக அந்த அகராதியைப் பயன்படுத்தும் வாய்ப்பை க்ரியா உருவாக்கித் தந்ததால் அந்த வருத்தம் ஓரளவு நீங்கியது. அந்த அகராதிப் பயன்பாட்டில் தமிழின் இயற்சொல், வடசொல், திரிசொல், திசைச்சொற்களின் பயன்பாடு குறித்து எழும் ஐயங்களை எளிதில் தீர்த்துவிடலாம். ஆங்கிலம் உள்ளிட்ட நவீன ஐரோப்பிய மொழிகளின் சொற்கள் தமிழில் கலக்கும்போது ஏற்படும் சிக்கல்கள் சுவாரஸ்யமானவை. மதுரைத் தமிழைப் பாடம் சொல்வதற்காக புகழ்பெற்ற சுப்பிரமணியபுரம் சினிமா போட்டுப் பாடம் சொன்னபோது ஏற்பட்ட சுவாரஸ்யம் குறித்துத் தனியாக எழுதியுள்ளேன்.
க்ரியா அகராதித் திட்டமும் பதிப்பகமும்
க்ரியாவில் வேலை பார்க்கும் வாய்ப்பொன்றிருந்தது எனக்கு. ஆனால், தவறிவிட்டது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் படிக்க நான் நுழைந்தபோது தமிழியல் துறை இரண்டாகப் பிரிந்தது உறுதியானது. மொழியியல் துறை தனியாக இயங்கத் தொடங்கியது. நான் முதலாமாண்டு படிக்கும்போது கர்நாடகத்தின் சிரவணபெலகோலா, ஹம்பி, பெங்களூரு, மைசூரு எனப் போய்வந்த மூன்று நாள்கள் சுற்றுலாதான் இரண்டு துறை மாணாக்கர்களும் ஒன்றாகக் கலந்துகொண்ட கடைசி நிகழ்வு. அந்நிகழ்வின் தொடர்ச்சியாக எனது நண்பர்களில் அநேகம் பேர் மொழியியல் மாணவர்களானார்கள். அவர்களில் மூன்று பேர் - சுப்பிரமணி, அசோகன், பரசுராமன் - தங்களின் மொழியியல் முதுகலைப் பட்டத்தை முடித்தபின் க்ரியாவின் அகராதித் திட்டத்தில் வேலைக்குச் சேர்ந்தார்கள். எனக்கும் அங்கு வாய்ப்பு இருக்கிறது என்றார்கள். க்ரியா ராமகிருஷ்ணனும் அகராதித் திட்டத்தின் முதன்மை ஆசிரியரான ப.ரா.சுப்பிரமணியனும் பெரும்பாலும் மொழியியல் படித்தவர்களையே வேலைக்கு எடுப்பார்கள். ஆனால், நீ வந்து அவர்களிடம் பேசினால் உன்னை எடுத்துக்கொள்வார்கள் என்று சொன்னார்கள். அதன் பின்னரும் கூட மொழியியல் மாணவர்கள் அங்கே பணியில் சேர்ந்தார்கள். நான் அங்கு போகவில்லை. முதுகலை படிக்கும்போது நான் எழுதிய வங்கிப் பணி, தமிழ்நாடு அரசின் பணியாளர்களுக்கான தேர்வு குரூப்- 2, போஸ்டல் கிளரிகல் போன்றவற்றில் தேர்ச்சி பெற்று நேர்முகத்தேர்வுக்குக் காத்துக் கொண்டிருந்ததால் அதைப் பற்றிய எண்ணம் வரவில்லை. எல்லாவற்றிலும் வேலை கிடைக்கவில்லை. கிடைக்காமல் போனதற்குச் சிபாரிசு இல்லை; லஞ்சம் கொடுக்கப் பணம் இல்லை என்பன தனிக்கதை.
க்ரியா ராமகிருஷ்ணனை ஒரேயொரு தடவைதான் சந்தித்துள்ளேன்.

1992-ல் எனது முதல் நூல் ‘நாடகங்கள் விவாதங்கள்’ வந்தது. நாடகங்களும் நாடக இலக்கியம், அரங்கியல் குறித்த நீண்ட விவாதமும் கொண்ட அந்நூலில் இடம் பெற்றிருந்த மூன்று நாடகங்களுமே ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாற்றப்பட்ட பனுவல்கள்தான். சுந்தர ராமசாமியின் பல்லக்குத் தூக்கிகள், புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகம் என்ற இரண்டு சிறுகதைகளை நாடகமாக்கியது சாமுவேல் பெக்கெட்டின் தொலைந்துபோன ஒலிநாடா (க்ராப்’ஸ் லாஸ்ட் டேப்ஸ்) என்ற ஓராள் நாடகத்தை ஒரு நூற்றாண்டுக் கிழவனின் நினைவுக் குறிப்புகள் என்று நாடகமாக்கியிருந்தேன். அந்நூலின் 25 பிரதிகளைச் சென்னையில் உள்ள க்ரியா அலுவலகத்தில் சேர்த்துவிடச் சொல்லி சுந்தர ராமசாமி முகவரியோடு கடிதம் எழுதினார். சு.ரா. நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு வந்து சிங்கப்பூர் போகும்போது எடுத்துப் போகும் திட்டம். அந்நூலில் இருக்கும் சு.ரா-வின் பல்லக்குத் தூக்கிகள் கதையின் நாடக வடிவத்தைச் சிங்கப்பூரின் நாடகக்காரர் இளங்கோவன் தனது குழுவினரைக் கொண்டு நிகழ்த்திட திட்டம் இருந்தது.
அந்த நூல்களின் பொதியொன்றைக் கொடுப்பதற்காக அப்போது க்ரியா செயல்பட்ட 268, ராயப்பேட்டை ஹைரோடு, சென்னை என்ற முகவரிக்குப் போனேன். போனபோது அவர் இல்லை. வரத்தாமதம் ஆகும் என்றார்கள். அங்கிருந்த பலரின் முகம் தெரியாது. ஆனால், பெயர்கள் தெரியும். யாரிடமும் பேசவில்லை. வெளியில் வந்து ஒரு சுற்றுச் சுற்றிவிட்டுத் திரும்பவும் போய்ச் சந்தித்துவிட்டு வந்தேன்.
அந்தச் சந்திப்புக்கு முன்னும்பின்னும் நிறையக் கேள்விப்பட்டுள்ளேன். க்ரியாவின் தொடக்கக் கால நூல்கள் பெரும்பாலானவற்றை வாங்கிப் படித்தவன். எஸ்.வி.ஆர் (அந்நியமாதல், எக்ஸிஸ்டென்சியலிசம்), சுந்தர ராமசாமி (புளியமரத்தின் கதை, ஜேஜே: சில குறிப்புகள், நடுநிசி நாய்கள்), ந.முத்துசாமி (நாற்காலிக்காரர், அன்று பூட்டிய வண்டி), பிச்சமூர்த்தி (கவிதைகள்), மௌனி (கதைகள்), திலீப்குமார் (கதைகள்), அசோகமித்திரன், பூமணி ஆகியோரின் நூல்களைத் தாண்டி ஈழத்தமிழ்க் கவிதைகளின் வெளியீடுகள் சிலவற்றையும் (பதினொரு ஈழத்துக்கவிஞர்கள், வ.ஐ.ச.ஜெயபாலன் - நமக்கென்றொரு புல்வெளி) வெளியிட்ட நேரத்திலேயே வாங்கியதுண்டு.
அதையெல்லாம் தாண்டி க்ரியா வெளியிட்ட மொழிபெயர்ப்பு நாடகங்களான சார்த்தரின் மீள முடியுமா, கிரிஷ் கர்நாடின் துக்ளக், சீக்பிரிட் லென்ஸின் நிரபராதிகளின் காலம், சுரேந்திரவர்மாவின் சூரிய அஸ்தமனம் முதல் சூரிய உதயம் வரை, பாதல் சர்க்காரின் மீதி சரித்திரம், அயனெஸ்கோவின் காண்டாமிருகம் எனப் பெரும்பாலான நாடகப் பிரதிகளையும் அந்நியன், விசாரணை போன்றனவெல்லாம் நவீனத் தமிழ் வாசிப்பிலும் எழுத்து முறையிலும் இயங்குநிலைகளிலும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திய பனுவல்கள். தரமான அச்சாக்கத்துக்காக மட்டுமல்லாமல், அந்நூல்களின் உள்ளடக்கத்துக்காகவும் எப்போதும் பேசப்படக்கூடிய நூல்கள் அவை.

புதுச்சேரிக்குப் போன பின்பு அங்கு செயல்பட்ட புதுச்சேரி இந்தியவியல் நிறுவனத்துக்கு வேலைக்கு வந்த கண்ணன் எம். அவர்களின் பேச்சில் எப்போதும் க்ரியாவும் ராமகிருஷ்ணனும் வந்துபோய்க்கொண்டே இருப்பார்கள். 1992-ல் புதுச்சேரியில் நடந்த நாடக நிகழ்வில் சந்தித்த இமையம் அடிக்கடி சந்திக்கும் நபராக இருந்தார். அவர் பணியாற்றிய பள்ளி அருகில்தான் இருந்தது. அவரது முதல் நாவல் கோவேறு கழுதைகளை (1994) க்ரியாதான் வெளியிட்டது. ஓர் இளைஞரின் முதல் நூலை க்ரியா வெளியிட்டது ஆச்சர்யமாகப் பேசப்பட்டது. அது தொடங்கி இப்போது வந்துள்ள அவரின் 13-வது நூலான வாழ்க வாழ்க வரை வேறு பதிப்பகத்தைத் தேடி இமையம் போனதில்லை. இமையத்தின் மூன்றாவது நாவலான செடல் வெளியான ஒரு மாதத்திற்குள்ளாக தீராநதியில் ஒரு விமர்சனக் கட்டுரையை எழுதினேன். அக்கட்டுரையை வாசித்துவிட்டு, “நல்ல கட்டுரை; சரியாக முன்வைத்துள்ளார்” என்று சொன்னதாக இமையம் என்னிடம் சொன்னார். புதுச்சேரியிலிருந்து சென்னைக்குப் போய்வரும்போது – கூத்துப்பட்டறை நிகழ்வுகளிலும் புத்தகக்காட்சி அரங்குகளிலும் அவரைப் பார்த்திருக்கிறேன். கூத்துப் பட்டறைக்கு ஃபோர்டு பவுண்டேஷன் நிதியுதவி கிடைத்ததில் அவரது பங்களிப்பு இருந்தது.
அவரோடான சந்திப்பு எனக்கு நினைவில் இருக்கும் அளவுக்குக் கூட அவருக்கு இருக்க வாய்ப்பில்லை. என்னை வெளிப்படுத்திக் கொள்ளும் விதமாக அவரோடு பெரிய அளவு உரையாடியதில்லை. ஆனால், அவரது இயக்கத்தின் காரணமாகக் கிடைத்த அகராதிகளோடும் மொழிபெயர்ப்பு நூல்களோடும் புனைவுகளோடும் அதிகம் உரையாடியிருக்கிறேன். நான் மட்டுமல்ல; நவீனத்தமிழின் வாசகர்கள் ஒவ்வொருவரும் உரையாடலை நடத்தியிருப்பார்கள் என்பதும் உண்மை. 75-ம் ஆண்டை நிறைவு செய்துள்ள ராமகிருஷ்ணன் பங்களிப்பு தமிழின் பரப்புகளில் சில பக்கங்களைப் பிடித்துக்கொள்ளக் கூடிய பங்களிப்பு.
- அ.ராமசாமி