விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். அப்பகுதியில் நகைப்பட்டறை வைத்து நடத்திவருகிறார். இவர், தேசிய மற்றும் உலக அளவில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி மிகக் குறைந்த அளவு தங்கத்தில் பல்வேறு பொருள்களைச் செய்வதில் பிரபலமானவர்.
விருதுநகர் மாவட்டத்தில் தற்சமயம் பங்குனிப் பொங்கல், கோயில் கொடை மற்றும் சித்திரைத் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் ஆடல்-பாடல், கேரளச் செண்டை மேளம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. இதனால் தமிழர்களின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலையான வில்லிசைக் கச்சேரிக்கு இடமில்லாமல் போகிறது.

எனவே, நலிந்துவரும் நாட்டுப்புறக் கலையான வில்லிசைக் கச்சேரியைப் பாதுகாக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், வில்லிசை வாத்தியங்களை மிகக்குறைந்த அளவிலான தங்கத்தில் வடிவமைத்து ராமச்சந்திரன் அசத்தியுள்ளார்.
அதன்படி, 1.830 மில்லிகிராம் தங்கத்தில், 1 செ.மீ உயரத்தில் வில்லுப்பாட்டு வாத்தியம் மற்றும் துணைக் கருவிகளான உடுக்கை, வில்லுக்குடம், தாளம், வீசுக்கோல், கட்டை, மட்டை மற்றும் சிங்கி உள்ளிட்டவற்றை வடிவமைத்துள்ளார்.
இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் சிறிய அளவில் வடவமைக்கப்பட்ட வில்லிசைப் பொருள்களை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
இதுகுறித்து ராமச்சந்திரனிடம் கேட்கையில், "ஆதிகாலத்தில் வாழ்ந்த தமிழர்களின் நாகரிகம், அவர்களின் குலதெய்வ வழிபாடு, மன்னர் ஆட்சிக் காலத்தின் சுவடுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு நாட்டுப்புற இசையோடு எடுத்துச்செல்வது வில்லுப்பாட்டுக் கச்சேரிகள்தான். சொல்லப்போனால், படிப்பறிவில்லாத மக்களுக்கு வரலாற்றுப் பாடங்கள் புகட்டும் இரவுப் பள்ளிக்கூடம் வில்லிசைக் கச்சேரி. அப்படிப்பட்ட கலைக்குப் பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும்.

சமீபகாலமாக வில்லிசைக் கச்சேரிகள் புறக்கணிக்கப்படுகின்றன. இதனால், அந்தக் கலையை மட்டுமே நம்பியுள்ள கலைஞர்களும் போதுமான வருமானமின்றி சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, வில்லிசைக் கலைஞர்களையும், வில்லுப்பாட்டுக் கலையையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மிகக்குறைந்த அளவில் தங்கத்தில் வில்லிசை வாத்தியக்கருவிகளை வடிவமைத்துள்ளேன். பெரும் முயற்சிகள் மற்றும் சிரமத்திற்கு இடையில் இதை வடிவமைத்து முடித்துள்ளேன். இவற்றைச் செய்துமுடிப்பதற்கு எனக்கு ஐந்து நாள் ஆனது" என்றார்.