பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
பாடல்களை விரும்பி உணர்ந்து கேட்பதே அலாதியான அனுபவம்தான்.
பெரும்பான்மையான பாடல்களின் காலஅளவு ஐந்து நிமிடங்கள், நான்கு நிமிடங்கள் என இருக்கிறது. சில பாடல்களின் கால அளவு ஏன் இவ்வளவு தூரம் நீள்கிறது என்று தோன்றும். சில பாடல்களின் கால அளவை இன்னும் அதிகப்படுத்தியிருக்கலாம் என்று தோன்றும். மக்களிடம் நன்கு வரவேற்பைப் பெற்ற படங்களில், 'இன்னும் இப்பாடல் நீண்டிருக்கலாம்' என்ற உணர்வையும், 'இப்படியொரு பாடல் இந்தப் படத்தில் இருக்கிறதா?' என்ற கேள்வியையும் எழுப்பும் பாடல்கள் பல இருக்கின்றன. அவற்றுள் எனக்குப் பிடித்த பாடல்களை இங்கே பகிர்கிறேன்.

புதுப்பேட்டை - மெதுவாய் இங்கே...
குமாரின் குழந்தையைக் கொல்வதற்காகக் கடத்திய எதிரிக் கூட்டத்திலிருந்து குமாருக்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு வருகிறது. "குழந்தை உன் வீட்டுக்குப் பின்னாடி போய் கெடக்குது பாரு" என்று சொன்னவுடன் அதிர்ந்து போய், வீட்டுக்குப் பின்னால் சென்ற குமார், பயத்துடனே அக்குழந்தை இருக்கும் இடத்தை நோக்கி நடுக்கத்துடன் நகரும்போது, பின்னணியில்...
" மெதுவாய் இங்கே
வாழ்க்கை புரியும்
காலம் வந்தால்
கல்லும் பேசும்
கண்கள் திறந்தே "
என்ற வரிகளோடு யுவனின் இசையில் ஒலிக்கும் இந்தக் குறும்பாடல், பலருக்குத் தெரியாது. தெரிந்தவர்களுக்கு இந்தப் பாடலின் நீளம் போதாது.
7G ரெயின்போ காலனி - இது என்ன மாற்றம்..
தெருவில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும் அனிதாவைப் பார்த்து கதிருக்குள் ஏற்படும் காதல் உணர்வை P.B. ஶ்ரீனிவாஸ் குரலில் 'இது என்ன மாற்றம் இறைவனின் தோற்றம்' என்று நம்மை கேட்கவிட்டு,
யுவன் சங்கர் ராஜா அப்பாடலுக்கு இசையமைத்திருப்பார். இப்பாடலுக்கு P.B. ஶ்ரீனிவாஸ் அவர்களின் குரலைத் தேர்ந்தெடுத்தது ஆகச்சிறந்த ஒரு செயல்!
நாயகன் கார்த்திக்கின் மனநிலையை நா.முத்துக்குமார் "அடைமழை பெய்தால் குடை என்ன செய்யும்" என்ற வரியால் சொல்லியிருப்பார். படத்திற்காக இல்லாவிட்டாலும் கேட்பதற்காகவாவது இப்பாடலின் கால அளவை நீட்டித்திருக்கலாம். P.B.ஶ்ரீனிவாஸ் குரலும் நா.முத்துக்குமார் வரியிலும் யுவனின் இசையிலும் இப்பாடல் ஒரு பரவச நிலையை ஏற்படுத்தும்!

காதலன் - இந்திரையோ இவள் சுந்தரியோ...
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து ஷங்கர் இயக்கிய திரைப்படம் காதலன். `என்னவளே அடி என்னவளே' என்ற பாடலைத் தெரியாத தமிழ் மக்கள் இல்லை என்றளவிற்கு அந்தப்பாடல் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. முணுமுணுக்க வைத்திருக்கிறது.
வைரமுத்துவின் தமிழ், இந்தப் பாடலுக்கு பக்கபலமாக இருந்ததை நாம் மறுக்க முடியாது.
என்னவளே பாடலின் மெட்டிலே அத்திரைப்படத்தில் இன்னொரு பாடல் இடம்பெற்றிருக்கிறது. அதுதான், 'இந்திரையோ அவள் சுந்தரியோ' பாடல். கதாநாயகனும் கதாநாயகியும் பெரும் இன்னல்களுக்குப் பிறகு சந்தித்துக்கொள்ளும்போது இப்பாடல் என்னவளே மெட்டில் ஒலிக்க ஆரம்பிக்கும். பலருக்கு இப்படியொரு பாடல் இருப்பதே தெரியவில்லை.
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திரிகூடராசப்ப கவிராயர் என்பவர் எழுதிய குற்றாலக் குறவஞ்சியில் இடம்பெற்ற செய்யுள் வரிகள்தான் இப்பாடலின் வரிகளும்கூட. ஆம்! காதலி காதலனைப் பார்க்க முற்படும்போது தோன்றும் வரிகளாகத்தான் குற்றாலக் குறவஞ்சியிலும் இவ்வரிகள் இடம்பெற்றிருக்கும். திரைப்படத்திலும் கிட்டத்தட்ட அவ்விதமே.
எனை நோக்கி பாயும் தோட்டா- போய் வரவா..
மறுவார்த்தை, விசிறி, நான் பிழைப்பேனா, ஹே நிஜமே மட்டுமல்லாமல் ENPT யில் உள்ள மற்ற பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இருப்பினும் 'ஹே நிஜமே' என்ற பாடலுக்கு பதில் பாடலாக இருந்தது, 'போய் வரவா' எனும் பாடல். பலருக்கு இப்பாடல் தெரியவில்லை.
ரகுவிடம் இருந்து லேகாவைப் பிரித்து, அவரின் கார்டியன் கூட்டிக்கொண்டு செல்லும்போது மிக அமைதியாக,
"போய் வரவா
உனை நீங்கியே
தடுத்திட வழி ஆயிரம்
முயலாதே "
என்ற வரிகளின் வழியே
பாம்பே ஜெயஶ்ரீயின் குரல் கேட்கும். மிகச்சிறிய பாடல் என்றாலும் தரவேண்டிய உணர்வைத் தந்துவிடும். கார்க்கியின் வரிகளும் அதன் பங்கை கச்சிதமாகச் செய்திருக்கும்.

ஜீவா - நேற்று நான்...
டி.இமான் இசையில் வெளிவந்த திரைப்படம்தான் ஜீவா. இத்திரைப்படத்திலும் பலருக்கும் தெரியாத குறும்பாடல் ஒன்றுள்ளது.
சில வருடங்களுக்குப் பின் நாயகன் ஜீவா, நாயகி ஜெனி படிக்கும் கல்லூரியை அறிந்து, அவளைப் பார்க்க அங்கு செல்கிறான். அவளைக் கண்டதும்,
"நேற்று நான் பார்த்ததும் உன்னைத்தானா சொல்
இன்று நான் காண்பதும் உன்னைத்தானா சொல்
ஆடை மாற ஜாடை மாற
கூந்தல் பாதம் யாவும் மாற
கண்களோ உன் கண்களோ மாறவில்லை
கண்களோ என் கண்களோ ஏமாறவில்லை பொய் கூறவில்லை"
என்ற கார்க்கியின் வரிகள் ஜீவாவின் உள்ளூணர்வை அழகாக வெளிப்படுத்தும். இன்னும் பாடல் நீண்டிருக்கலாம் என்ற ஏக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கும்.
-சுரேந்தர் செந்தில்குமார்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.