பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வாழ்க்கை குறித்த தேடல் இருக்கிறது. அந்தத் தேடலை சரியான திசையில் மடைமாற்றம் செய்து விடுவதில் எழுத்தாளர்களின் பங்கு அளப்பரியதாகும். வாசிப்பனுபவம் என்பதைத் தாண்டி, ஒரு எழுத்தில் வாசிப்பவர் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று இருக்கும்போது அந்த எழுத்து தனித்துவமான ஒன்றாக மாறிவிடுகிறது.
"ஒரு எழுத்தாளன் படைப்பைத் தொடங்கி வைக்கிறான். வாசகன் அதனை முடித்து வைக்கிறான்" என்பார்கள். ஒரு எழுத்தாளர் பொய்களையும், தான் அறியாதவற்றையும் எழுதுவதைவிட, தான் அறிந்த உண்மைகளை எழுதும்போது அந்த எழுத்தின் வீச்சு வாசகர்களை அதிகம் தாக்கும் என்பது நிஜம்.

அந்த வகையில்தான் அறிந்ததை வாசகர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் ஒரு ஆசானாக, தேடல் மிக்க வாழ்க்கையின் கலங்கரை விளக்கமாக, வாசிப்பனுபவத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திய எழுத்தாளராக அறியப்படுபவர் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.
இரண்டு பக்கங்களுக்கு ஒருமுறை புத்தகத்தைக் கவிழ்த்து வைத்துவிட்டு சிந்திக்கச் செய்யக்கூடிய ஒன்றாகவே பாலகுமாரனின் கதைகள் எப்போதும் இருக்கும்.
தான் கற்றுக்கொண்டதை தன்னுடைய வாசகர்களுக்குக் கற்றுக் கொடுத்துவிட வேண்டும் எனும் உயரிய நோக்கு அவருடைய எழுத்துகளின் ஊடே பளிச்சிடும்.
ஒரு தந்தை தன் குழந்தையை மடியில் அமர வைத்துக் கற்றுக்கொடுப்பது போன்று, தன் வாசகர்களுக்குக் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுத்தவர் பாலகுமாரன்.
இரும்புக் குதிரைகள் போன்ற சமூக நாவல்கள் ஆகட்டும் அல்லது உடையார் போன்ற ஆன்மிக, வாழ்க்கை வரலாற்றுப் புதினங்கள் ஆகட்டும் தனது சுவையூட்டும் கதைகளின் ஊடே அவர் இடையறாது ரசிகர்களுக்கு எதையேனும் கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் இருந்தார்!
பாலகுமாரனின் ஒவ்வொரு புதினமும் தனித்தன்மை வாய்ந்தது என்றாலும், அவருடைய பெண்ணாசை என்னும் நாவல் எனக்கு மிகவும் பிடித்தமான மனதுக்கு நெருக்கமான கதைகளில் ஒன்று.

பெண்ணாசை நாவலில் நான் ரசித்தவை
# பீஷ்மர் என்னும் கதாபாத்திரத்தை நாம் மகாபாரதத்தில் பார்த்திருப்போம்.
அத்தனை உறுதியான பீஷ்மர் எப்படி உருவானார் என்பதையும், அவருடைய வாலிபப் பருவத்தையும் பெண்ணாசை நாவலில் மிக அற்புதமாக பாலகுமாரன் விவரித்திருக்கிறார்.
# காங்கேயன் தன்னுடைய தந்தையின் நலனுக்காக அரியணையை விட்டுக் கொடுக்கிறான். ஆனால் பிற்காலத்தில் அவனுடைய வாரிசுகள் ஒருவேளை அரியணைப் போட்டிக்கு வந்து விடுவார்களோ என்னும் மீனவர்களின் அச்சத்தைப் போக்க "திருமணமே செய்துகொள்ள மாட்டேன்" என்று அவன் சபதமேற்கிறான். இந்தக் காங்கேயன் என்னும் பீஷ்மரின் சபதத்திற்கான நியாயமான காரணங்களை பாலகுமாரன் அழகாக விவரித்துள்ளார்.
# சத்திரியர்களுக்கு இடையேயான அரியணைச் சண்டையில் நான்காவது வருணத்தவர் படும் அவலங்களும்,
அந்தக்கால சமூக, பொருளாதார நிலையும் அப்பட்டமாக கண்முன் தெரிகிறது.
# பிரம்மி என்னும் நினைவாற்றல் தரும் மூலிகை குறித்த அடிப்படையான புரிதலை நாவல் நமக்கு உண்டாக்குகிறது.
# ஒரு தனிமனிதனின் தவ வலிமை எத்தனை உயர்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
# நாவலில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதற்குரிய நியாயங்கள் கற்பிக்கப்பட்டு இருக்கிறது.
# கடவுள் மற்றும் வாழ்க்கை குறித்த பல்வேறு விளக்கங்கள் வழக்கம்போலவே நாவலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
# ஒரு ஆட்சியாளன் எப்படி இருக்க வேண்டும்,எப்படி இருக்கக் கூடாது என அற்புதமாக விவரித்து இருப்பார் பாலகுமாரன்.
# அக்காலம் முதல் இக்காலம் வரை போர்களுக்கான காரணங்களுக்கு உரிய அடிப்படைப் புரிதலை நாவல் நமக்கு வழங்குகிறது.
# நிலையாமைத் தத்துவத்தை வாசகர்களுக்குப் புரியும்படி மிக சிறப்பாக கையாண்டிருப்பார்.

பெண்ணாசை நாவலின் சில சிந்தனைச் சிதறல்கள்:
* போர் அற்ற அமைதியான வாழ்க்கை என்பது உலகத்தின் எந்த மூலையிலும் இல்லை. எந்த நாளும் இல்லை!
* கடவுள் என்பவன் எல்லாவற்றையும், எல்லா மனிதர்களையும், எல்லாமுமாய் பார்ப்பவன்!
* உலகத்தின் எல்லாக் காலங்களிலும், எல்லா தேசங்களிலும் ஆட்சியாளர்களால்தான் அதிக கொலைகள் நடக்கின்றன.
* கடவுள் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். கடவுளைத் தெரிந்துகொள்வதன் மூலம் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவேண்டும்!
* ஒரு வம்சம் அல்லது குலம் அதன் வளர்ச்சியின் உச்ச கட்டத்திற்கு வரும்போது அங்கே தேக்க நிலை ஏற்பட்டு விடுகிறது!
* மனம் சுத்தமாய் இருப்பவர்களுக்கு வீணாக எந்த எண்ணமும் ஏற்படாது. காமம் இல்லாதவருக்குக் காமம் தோன்றினால் அருகே உள்ளவருக்குக் காமம் இருக்கிறது என்று அர்த்தம்!
* மனதை மனிதனால் கோபித்துக் கொள்ள முடியுமா? அப்படி உள்மனதைக் கோபித்து அடக்கினால் அவன் மனிதனாக இருக்க முடியுமா?
* ஒருவன் தர்மத்தைக் காக்க வேண்டும். அவனை தர்மம் காக்கும். தர்மத்துக்கு அடிப்படை தியாகம். தியாகத்திற்கு அடிப்படை வைராக்கியம்.
வைராக்கியத்திற்கு அடிப்படை மன அமைதி. மன அமைதிக்கு அடிப்படை தானற்ற நிலை!
* இறையருள் உன்னதமானது. ஒவ்வொரு காலத்துக்கும் யாரேனும் ஒரு தனி மனித உற்பத்தி செய்து உயர்த்தி, வழிகாட்டியாய் வாழவைக்கும்!
* இந்த உலகம் மிகத் தொன்மையானது.
இந்தப் பிரபஞ்சத்திற்கு தெரியும் இந்த உலகத்தை என்ன செய்ய வேண்டும் என்று!

காமம் குறித்து துளி விரசமில்லாமலும் கூற முடியும் என்பதற்குப் பெண்ணாசை நாவல் ஒரு மிகச்சிறந்த சான்றாகும். ஒரு அரசனின் காதல் மற்றும் காமம் குறித்த கதையாக இருந்தாலும், காமத்தை மனதை தாக்காத செயலாக, மகத்தான தூய்மையாக, யோகமாக, தவமாக மாற்றச் சொல்லும் பெண்ணாசை நாவலை எத்தனை முறை படித்தாலும் சலிப்பே தட்டுவதில்லை.
தன்னுடைய நாவல்களின் மூலமாக உலகிற்கு மிகச்சிறப்பான வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுத்த பாலகுமாரன் மறைந்து விட்டாலும், அவருடைய சொற்களின் வீச்சு இன்னும் பல காலங்களுக்கு இந்த பூமியில் இருக்கும்! அவரின் எழுத்துகள் எங்கேனும் ஒருவருக்கு, எதையேனும் ஒன்றைக் கற்றுக்கொடுத்துக் கொண்டேதான் இருக்கும்!
- அகன் சரவணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.