
தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு நூற்றாண்டு இது. [1922-2022]
- பிரளயன்
தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். ஏதோ மடாதிபதியின் பெயர் போலிருக்கிறதே என இன்றைய தலைமுறையினர் சிலர் நினைக்கக்கூடும். அவர் மடாதிபதியல்ல; மடாதிபதிகளைவிட, மக்கள் அளித்த மிகப்பெரும் பீடங்களில் புகழோடும் செல்வாக்கோடும் வீற்றிருந்தவர். 1891 முதல் 1922 வரை தமிழ்நாட்டில் செயல்பட்ட தலைசிறந்த நாடகக்காரர். தமிழ் நாடக வரலாற்றை எழுதும் பலரும் அவரை ‘தமிழ் நாடகத் தலைமையாசிரியர்’ என்றே அழைக்கின்றனர்.
1894-ல், தனது 24 வயதில் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத்திற்கு வருகிறார். நடிகராக, பாடல்கள் புனைந்து இசையமைப்பவராக, நாடகங்கள் எழுதுகிறவராக, நடிப்புப் பயிற்சியளிப்பவராகப் பணியாற்றத் தொடங்குகிறார். கூத்து என்ற பெயரில் திறந்தவெளியில் ஆடிப்பாடி நடிக்கப்பட்டுக் கொண்டிருந்த நாடகங்களை மேடையில் நின்று பாடி நிகழ்த்துகிற இசை நாடகங்களாக மாற்றியது முழுதும் சங்கரதாஸ் சுவாமிகளின் பணியெனச் சொல்லவியலாது. அதற்கு முன்னே அவை மாற்றம் பெற்றிருந்தன. ஆனால் சுவாமிகள் அதற்கு ஒரு கட்டமைப்பையும் வடிவ ஒழுங்கையும் அளித்தார்.

அப்போது மும்பையில் இருந்து வந்த பார்சி நாடகக்குழுக்களின் நாடகங்கள் அன்றைய சூழலில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தன. ஆடல் பாடல்களைக் குறைத்து உரையாடல்களை அதிகமாக்கித் தமிழ் நாடகங்கள் நிகழத் தொடங்கின. அப்போது பல மொழிபெயர்ப்புகள், பல தழுவல் நாடகங்கள் எழுதப்பட்டன. ‘தமிழ் நாட்டில் வசன-நாடகங்கள் உருவான காலம் இது’ என டி.கே.சண்முகம் குறிப்பிடுகிறார்.
அப்போது எழுதப்பட்ட நாடகங்களின் உரையாடல்களை நடிகர்கள் முறையாகப் பின்பற்றுவதில்லை. பாடல்களை மட்டும் தேவையான இடத்தில் பாடிவிட்டு வசனங்களை அவரவர்கள் கற்பனைக்குத் தோன்றுகிற விதத்தில் பேசுவர். இதனால் நடிகர்களிடையே மேடையிலேயே முட்டல்களும் மோதல்களும் தோன்ற ஆரம்பித்தன.
இந்தச் சூழலில்தான் சங்கரதாஸ் சுவாமிகள் வருகிறார். புதிய நாடகங்களை எழுதுகிறார். வர்ணமெட்டுகளில் செவ்வியல் பாங்கில் பாடல்கள் எழுதுகிறார். கவிதைச்சுவையுடன் கூடிய உரையாடல்களை அமைக்கிறார். ஒப்பனையில், உடையமைப்பில் மாற்றங்கள் செய்கிறார். காட்சிகளுக்கேற்ப பின்னணித் திரைகளைப் பயன்படுத்துகிறார்.

அவர் ஆழ்ந்த மொழிப்புலமையும் இசைப்புலமையும் கொண்டவர். தமிழின் பண்டைய இலக்கியங்கள் அவருக்கு அத்துப்படி. அவர் இசை கற்றது வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் என்பவரிடத்தில். இதனால்தான், அப்போது பரவலாக அறிமுகமாயிருந்த அருணாசலக்கவிராயரின் ராம நாடகக் கீர்த்தனைகள், அண்ணாமலையாரின் காவடிச்சிந்து, வில்லுப்பாட்டு, கதாகாலட்சேபம் மற்றும் கர்நாடக சங்கீதம் போன்றவற்றில் இருந்தெல்லாம் தனக்கான இசையினை வருவித்துக்கொள்ள சுவாமியவர்களால் முடிந்தது.
சங்கரதாஸ் சுவாமிகளுக்கு நன்கு கறுத்த தேகம். நெடுநெடுவென நன்கு வளர்ந்து, வாட்ட சாட்டமாகத் தோற்றப்பொலிவோடு இருப்பார். எந்த வேடமிட்டாலும் அப்படியே பொருந்திவிடும். ஒரு முறை இரண்யனாக நடிக்கும்போது மடியில் அமர்ந்திருந்த பிரகலாதனாக நடித்த சிறுவனைத் தூக்கி வீசிவிடுகிறார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி, ‘அடப்பாவி, பிள்ளைய கொன்னுட்டியே’ என மூர்ச்சையாகி விழுந்துவிடுகிறார். பின்னொரு சமயத்தில் சனீஸ்வரன் வேடமிட்டு நடித்துவிட்டு அதிகாலையில் ஒப்பனையைக் கலைக்க கிணற்றடிக்கு வரும்போது ஒரு பெண், இவரது உருவத்தைப் பார்த்து பயந்துபோய் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போகிறார். இவைபோன்ற சம்பவங்களாலோ என்னவோ ஒரு கட்டத்தில் நடிப்பதையே விட்டுவிடுகிறார். நாடகம் எழுதுதல், நடிகர்களுக்குப் பயிற்சியளித்தல் என்பதாகவே இவர் பணி தொடர்கிறது.

என்னதான் இவர் பயிற்சியளித்து உரையாடல்களை இறுதி செய்திருந்தாலும் நடிகர்கள் சில நேரங்களில் தங்களது விருப்பப்படி வரம்பு மீறி உரையாடல்களைப் பேசத்தொடங்கினர். இதனால் விரக்தியுற்ற சுவாமிகள், காவியுடை தரித்துக்கொண்டு புண்ணியத்தலங்களுக்குத் தீர்த்தயாத்திரை கிளம்பிவிடுகிறார். இப்படித் துறவறம் பூண்டு காவியுடையை வரித்துக்கொண்டதால்தான் சங்கரதாஸ் சுவாமிகள் எனப் பெயர் வருகிறது.
இவர் துறவறம் பூண்டதை அறிந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த மான்பூன்டியா பிள்ளை எனும் இசையறிஞர் சுவாமிகளைத் தன் வீட்டிற்கு அழைத்துச்செல்கிறார். இந்த மான்பூன்டியா பிள்ளைதான் ‘கஞ்சிரா’ எனும் வாத்தியத்தை உருவாக்கி அதனைக் கச்சேரிகளில் அறிமுகப்படுத்தியவர். அவர் சுவாமிகளைப் பாடச் சொல்லி கஞ்சிரா வாசித்துக் கொண்டேயிருப்பார். பிள்ளையவர்களுக்கு சுவாமிகளது இசைத்திறன் மீது ஓர் ஈர்ப்பு வந்துவிடுகிறது. கடைசியில் சுவாமிகளை தனது மகனாகத் தத்து எடுத்துக்கொள்கிறார். அவருக்கு இசையின் நுணுக்கங்களையெல்லாம் கற்றுத்தருகிறார். தம்மைச்சுற்றி நிகழும் சாதி வெறித்தனங்கள், சமயக்காழ்ப்புகள் இவற்றின் மீது கடும் அதிருப்தி கொண்ட சுவாமியவர்களுக்கு இயல்பாகவே வள்ளலார்மீது பெரும் ஈடுபாடு வருகிறது. 1910-ல் தொடங்கப்படுகிற தனது நாடகக் குழுவிற்கு ‘சமரச சன்மார்க்க சபா’ என்று பெயரிடுகிறார். அப்போது சில பாய்ஸ் கம்பெனிகள் தொடங்கப்பட்டன. அவற்றில் இணைந்து பயிற்சியளிக்கிறார். பிறகு 1918-ல் தத்துவ மீன லோசனி வித்வ பால சபா எனும் தனது பாலர் சபையைத் தொடங்குகிறார்.

சங்கரதாஸ் சுவாமிகளால் பயிற்றுவிக்கப்பட்ட பலர் திறன்மிக்க நடிகர்களாக உருவானார்கள். எஸ்.ஜி.கிட்டப்பா, பி.யூ.சின்னப்பா, கே.சாரங்கபாணி, டி.எஸ்.துரைராஜ், எம்.ஆர்.ராதா, டி.கே.எஸ் சகோதரர்கள் என அழைக்கப்படும் டி.கே.முத்துசாமி, டி.கே.சண்முகம், டி.கே.சங்கரன், டி.கே.பகவதி, பாலாம்மாள், பாலாமணி அம்மையார், வி.பி.ஜானகி என உச்சம் தொட்ட பல கலைஞர்கள் உருவாயினர்.
சுவாமியவர்கள், ஒரே இரவில் ஒரு நாடகத்தை எழுதி முடிக்கும் வல்லமை பெற்றவர். ஒரு நாள் மாலை மீனாட்சியம்மன் கோயிலருகில் உள்ள கடைக்குச் சென்று ‘அபிமன்யூ சுந்தரி’ அம்மானைப் பாடல் நூலை வாங்கிவருகிறார். மறுநாள் காலை பார்த்தால் அசந்து உறங்கிக்கொண்டிருக்கிறார். அவர் பக்கத்தில் புதிதாக எழுதப்பட்ட அபிமன்யூ என்கிற நாடகப் பிரதி கிடக்கிறது. 80-க்கும் மேற்பட்ட பாடல்கள், உரையாடல்கள் கொண்ட நாடகத்தை ஒரே இரவில் எழுதி முடித்திருக்கிறார். சங்கரதாஸ் சுவாமிகள் 50-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதினார். இன்று அச்சில் நமக்குக் கிடைப்பவை 18 நாடகங்கள்தாம்.
‘காயாத கானகத்தே’ எனத் தொடங்கும் வள்ளி திருமண நாடகப் பாடல் சுவாமிகளுடையது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ‘நவராத்திரி’ திரைப்படத்தில் சிவாஜிகணேசன் - சாவித்திரி நடிக்கும் சத்தியவான்-சாவித்திரி நாடகப்பாடல் முழுதும் இவருடையதுதான். திருவிளையாடல் படத்தில் வருகிற ‘ஞானப்பழத்தைப் பிழிந்து’ என்கிற பாடலும் இவருடையதுதான்!
கட்டபொம்மனுடன் இருந்த வெள்ளையத்தேவன் வம்சாவளியில் வந்த சிலர் இவரிடம் வந்து சில பழைய ஓலைச்சுவடிகளைத் தருகின்றனர். அதைக் கொண்டு புதிய நாடகம் எழுதுங்கள் என்கின்றனர். அதை எழுதுகிற முயற்சியில் இருக்கும்போதுதான் நோய் வாய்ப்படுகிறார். சென்னைக்குச் சிகிச்சைக்காக அழைத்து வரப்படும்போது, அந்நாடகத்தை எழுதிக்கொண்டிருக்கிறார். சிகிச்சைக்குப் பிறகு சரியாகப் பேசமுடியாத, சுயமாக நடமாட முடியாத நிலையிலே பாண்டிச்சேரிக்குக் குழுவோடு பயணமாகிறார். நலிவுற்ற நிலையிலும் நாடகங்கள் நடத்தி, நடிகர்களை வழிநடத்துகிறார். 1922 நவம்பர் 13 அன்று அவர் உயிர் பிரிகிறது. மறுநாள் பாண்டிச்சேரிக் கருவடிக்குப்பத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறார். அவரது நாடகங்கள் இன்றைக்கும் தென் மாவட்டங்களில் இசை நாடகங்கள் என்ற பெயரில் நடந்து கொண்டிருக்கின்றன.
சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களை மட்டுமே நடத்துகிற நூற்றுக்கும் மேற்பட்ட, பதிவு செய்யப்பட்ட குழுக்கள் தற்போது மதுரையை மையங்கொண்டு செயல்படுகின்றன. இன்றும் அவர் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார், அவருடைய நாடகங்களின் ஊடாக.