சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

ஆடிஷன் - சிறுகதை

ஆடிஷன் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
ஆடிஷன் - சிறுகதை

- செந்தில் ஜெகன்நாதன்

அறை முழுவதும் குழந்தைகள். அத்தனை குழந்தைகளை ஒரே இடத்தில் பார்க்கும்போது நந்தனின் கண்கள் அகல விரிந்து ஆச்சர்யத்தில் மலர்ந்தன. எல்லாமே பெண் குழந்தைகள். மூன்று வயதிலிருந்து ஐந்து வயது மதிக்கத்தக்கவர்களாக இருந்தனர். அவன் மடிக்கணினி வைத்து எழுதும் மேஜையில், அலமாரியில், நாற்காலியில், சிதறிக்கிடந்த புத்தகங்களின் நடுவில், சமையலறையில் சிலிண்டரின்மேல் என எங்கும் குழந்தைகள். அறை முழுவதும் மலர்வனமாகிவிட்டதைப்போல பூமணமாய்க் கமழ்ந்தது. தேகத்தை எதுவோ அழுத்துவதுபோல ஒரு உணர்வு ஏற்பட்டது. கைகள், கால்கள், உடல் என அவன்மீது குழந்தைகள் ஏற ஆரம்பித்தனர். ஒரே நேரத்தில் அத்தனை பேரின் எடையும் மூச்சுத் திணறச்செய்ய முகத்தை உதறி எழுந்தான். அவன்மேல் படுத்திருந்த பூனைக்குட்டி பயந்து மேஜைமேல் தாவி ஏறியது. கண்களை நன்றாகக் கசக்கித் தேய்த்துவிட்டுச் சுற்று முற்றும் பார்த்தான். அறையில் அவனைத் தவிர வேறு யாருமில்லை. நிம்மதி நெடுமூச்சாகி வந்தது நந்தனுக்கு. கனவை நினைத்து மெலிதாகச் சிரித்துக்கொண்டான்.

முப்பத்திரண்டு வயதாகிவிட்டது, இந்நேரம் திருமணமாகியிருந்தால் குழந்தைகள் இருந்திருக்கும் என்ற ஆழ்மன ஏக்கமோ, இப்போது வேலை செய்துகொண்டிருக்கும் படத்தில் ஒரு பிரதான பாத்திரத்தில் நடிக்க குழந்தைகள் தேர்வு நடக்கிறது, நந்தன்தான் குழந்தைகளைத் தேர்வு செய்துகொண்டிருக்கிறான், அது பற்றிய உள்ளுணர்வின் வெளிப்பாடோ, அல்லது, வழியில் கண்ட முன்னறிமுகம் இல்லாத ஏதோ ஒரு குழந்தையின் புன்னகைத் துளியோ... கனவில் குழந்தைகள் வந்ததன் காரணத்தைச் சிந்தித்தவனைக் கலைத்தது அலைபேசி அழைப்பு.

அஸிஸ்டன்ட் கேமராமேன் பாலாஜி அழைத்தான்,

``தலைவா, இன்னைக்கு ஆடிஷன் எத்தன மணிக்கு?”

“ஏன் தலைவா, நேத்து போலவே 9 மணிக்குதான்.”

“இல்லை, மணி 8.45 ஆயிடுச்சு, நீங்க இன்னும் ஆபீஸ் வரலயே அதான் கேட்டேன்.”

ஒரு கணம் உடல் அதிர்ந்து நிமிர்ந்து உட்கார்ந்து அலைபேசியைப் பார்த்தான் நந்தன். மணி 8.45

“ஸாரி தலைவா, பத்து நிமிஷத்துல ஆபீஸ் வந்துடுவேன்.”

உடல் முழுக்க ரப்பரால் ஆகி விட்டதைப்போல துள்ளிக்கொண்டு கிளம்பி அடுத்த ஏழு நிமிடத்தில் பைக் கிக்கரை உதைத்தான். சரியாக ஒன்பது மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருந்தான். நடிகர்கள் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ஏகப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களிடமிருந்து போன் வந்த வண்ணம் இருந்தது. நிறைய குழந்தைகள் ஆர்வமாய் அலுவலகத்திற்கு வந்தார்கள்.

இரண்டு நாள்களில் நூற்றி ஐம்பதுக்கும் அதிகமான குழந்தைகளைப் பார்த்திருந்தாலும் இயக்குநர் எதிர்பார்ப்பதைப்போல ஒரு குழந்தை கிடைக்கவில்லை. கதாபாத்திரங்களை உருவாக்கியவர் என்ற வகையில் அதன் அகத்தன்மையை அறிந்தவர் அவரே. நன்றாக நடித்தவர்கள் என்று நந்தன் தெரிவு செய்துவைத்திருந்த பட்டியலில் உள்ள குழந்தைகளின் நடிப்புக் காணொலிகளைப் பார்க்கும்போது “தமிழ் முகமாக இல்லை” “குட்டை முடியாக இருக்கிறது” “கண்களில் தெய்விகத் தன்மை வேண்டும்” “அறியாமை இல்லை” என ஒவ்வொரு வீடியோவிலும் அவர் நினைத்து வைத்திருக்கும் ஏதோ ஒன்று இல்லாமலிருந்தது. நேர்முகத்திற்கு வந்த ஒரு முகத்திலும் அவர் நிலைகொள்ளவில்லை.

அலுவலகம் முழுக்க இன்றும் குழந்தைகள் நிறைந்திருந்தனர். இன்று வீட்டில் கண்ட கனவின் நீட்சிதான் இங்கே காணும் குழந்தைகளோ என்று நினைத்தவன் கனவில் கண்ட குழந்தைகளின் முகங்களை வந்திருந்த முகங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தான்.

குட்டி குட்டி தேவதைகளாக, பல வண்ண மிட்டாய்களுக்குக் கைகால் முளைத்ததைப்போல இருந்த ஒவ்வொரு குழந்தையையும் வரிசையாகப் பார்த்துப் புன்னகை செய்துகொண்டே வந்தான் நந்தன்.

மாடிப்படி சுவருக்குப் பின்புறம் நின்றிருந்த குழந்தை பனிக்குல்லா அணிந்து கையில் சாக்லேட் பிசுபிசுப்புடன் வாயோரத்தில் சாக்லேட் துணுக்கு ஒட்டியிருக்க, மருண்ட விழிகளுடன் இருந்தது. நந்தனுக்கு அந்தக் குழந்தையின் முகம் ஏற்கெனவே அறிமுகமானதைப் போலிருந்தது. அச்சிறு கண்கள் எங்கோ பார்த்த ஞாபகமாக இருந்தது. இன்று காலை கனவில் வந்த குழந்தையில் ஒன்றா, அல்லது, வேறெங்கேனும் பார்த்திருக்கிறேனா என்றெல்லாம் யோசித்தபடியே அந்தக் குழந்தையின் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்தான்.

“பாப்பா பேர் என்ன?”

“மை நேம் இஸ் ஆதிதா” என்றது குழந்தை.

“ஓ... ஆதிராவா?”

“ம்ம்ம்”

“பாப்பா யார்கூட வந்தீங்க?”

“மம்மிகூட வந்திடிக்கேன்...”

சற்றுத் தொலைவில் திரும்பி நின்று போன் பேசிக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.

”என்ன விஷயமா வந்திருக்கீங்க?” தலை சாய்த்து அவன் கேட்டவுடன்

”எனக்கு ஆக்ட் பண்ண இண்ட்டஸ்ட் இருக்கு... ஸ்கூல் டிராமா நடிச்சிடிக்கேன்” என்றது.

குழந்தைக்கு `ர’ உச்சரிப்பில் வரவில்லை. அது மழலைக் குரலுக்கு மேலும் அழகு சேர்த்தது. இந்த வயதில் தனக்கு எது வேண்டும் என்று இந்தச் சின்னஞ்சிறு குழந்தைக்குச் சொல்லத் தெரிந்திருக்கிறது. ஆனால் தான் உதவி இயக்குநராக விரும்புவதை அப்பாவிடம் சொல்ல வருடக் கணக்கில் தயங்கியதை நினைத்துக்கொண்டான் நந்தன்.

``நந்தன் சார்”

தோளைத் தட்டிய குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். ஒரு அம்மா தன் குழந்தையோடு நின்றுகொண்டிருந்தார். அவர்கள் நேற்றைய நடிப்புத் தேர்வுக்கு வந்திருந்தவர்கள். அந்த அம்மா அவனருகில் வந்து “நந்தன் சார், பாப்பா செலக்ட் ஆயிட்டாளா?” என்று ஆவலுடன் கேட்டாள். அவரின் குழந்தை வந்திருந்த மற்ற குழந்தைகளை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தது.

“இல்லங்க... டைரக்டர் இன்னும் பாக்கல.அவர் பாத்துட்டார்னா நான் உங்களுக்குச் சொல்லிடுவேன்.”

“ரொம்ப கஷ்டப்படுற பேமிலி சார். இவ அப்பா எறந்துட்டாரு. இப் செகண்ட் மேரேஜ் பண்ணவர்கிட்டயும் பிரச்னை ஆயிடுச்சு...கோர்ட்ல கேஸ் நடந்துகிட்டு இருக்கு சார். இவளுக்கு வாய்ப்பு கிடச்சாதான் சென்னையில இருக்க முடியும். இல்லன்னா ஊருக்கே போயிட வேண்டியதுதான் சார்” என்று உடைந்துபோய்ச் சொன்னார்.

நந்தன் அவருக்கு என்ன பதில் கூறுவதெனப் புரியாமல், “செலக்ட் ஆனா கால் பண்ணுவாங்க மேடம்” என்று அந்த இடத்திலிருந்து நீங்கினான்.

குழந்தைகளின் சத்தம் சினிமா அலுவலகத்தைப் பள்ளிக்கூடத்தைப் போல ஆக்கியிருந்தது. தன் பள்ளிக்கூடத்து மதிய உணவு இடைவேளை நினைவுக்கு வந்தது நந்தனுக்கு. திடீரென உணவு மணம். ஒரு அம்மா தன் குழந்தைக்கு இட்டிலியைப் பிட்டு ஊட்டிவிட்டுக்கொண்டிருந்தாள். அதைப் பார்த்தபடியே வந்தபோதுதான் தான் காலையில் சாப்பிடவில்லை என்பது நந்தனுக்கு உரைத்தது.

ஏராளமாக ஒப்பனை செய்துகொண்டிருந்த ஒரு குழந்தை சாக்லேட்டைப் பிரித்துத் தரச் சொல்லித் தன் அம்மாவிடம் அழுதுகொண்டிருந்தது. நந்தன் அருகில் சென்றதும். அந்த அம்மா அப்போதுதான் உருவாக்கப்பட்ட ரெடிமேட் புன்னகையை முகத்தில் வரவழைத்தாள். அருகில் நின்றுகொண்டிருந்த தன் பெண்ணிடம்,

``பப்பிம்மா... அங்கிள்ட்ட டயலாக் சொல்லுங்க.”

எதிர்பாரா கணத்தில் திடீரென மின்சாரம் வந்தவுடன் ஒலிக்கும் ரேடியோவைப்போல “ஹேய்... நல்லவனா இருந்தா பணக்காரனா ஆக முடியாது, அதான் பணக்காரனா ஆயிட்டு நல்லவனா ஆயிக்கிறேன்... சாவுடா...” என்று வசனம் பேசிக்கொண்டே விரலைத் துப்பாக்கி போல நந்தனை நோக்கிக் கைநீட்டிப் பேசியது அந்தப் பெண். வசனம் முடிந்ததும் திரும்ப குழந்தையாகி, தாயின் முகத்தைப் பார்த்தது.

ஆடிஷன் - சிறுகதை

நந்தன் முகத்தில் எந்த பாவனையையும் காட்டிவிடக் கூடாது என்று தீர்மானமாக நின்றுகொண்டிருந்தான்.

“அங்கிள்க்கு ஹேண்ட் ஷேக் கொடுத்து நேம் சொல்லுங்க” என்றார் அதன் அம்மா.

குழந்தை குழந்தைத்தனமே இல்லாமல் வெடுக்கெனக் கையை அவன் முன் உயர்த்தி நீட்டியது. நந்தன் கை கொடுத்துத் திரும்பினான். ரத்தம் குடித்தது போலிருந்த உதட்டைப் பிளந்து காவிப்பற்கள் தெரியச் சிரித்தார் அக்குழந்தையின் அம்மா. குழந்தை இன்னும் ஒரு அடி வளர்ந்தால் ஹீரோயின் ஆக்கிவிடத் துடிக்கும் உத்வேகம் தெரிந்தது அவரின் முகத்தில்.

குழந்தைகளைக் குழந்தைகளாக வளரவிடாமல், இயல்பான புனிதமான அறியாமையுடன் இருக்கவிடாமல் அவர்களைத் தொழில்முறை நடிகர்களாக ஆக்கிவிடத் துடிக்கும் பெற்றோர்கள் மீது நந்தனுக்குக் கோபமாக வந்தது.

பார்வையாளர்களுக்காகப் பழக்கப்படுத்தப்படும் விலங்குக் குட்டிகளைப் போல அங்கே நடிப்பதற்காக அழைத்து வரப்பட்ட குழந்தைகளையெல்லாம் ஒவ்வொன்றாய்ப் பார்த்துவிட்டு நடிப்புத் தேர்வு அறைக்குள் நுழைந்தான் நந்தன்.

கேமராமேன் பாலாஜி கோணமெல்லாம் தயார் செய்துவிட்டு, குழந்தைகளை வரச் சொல்லலாம் என்பதுபோல ஆபீஸ் பையனிடம் சைகை செய்தான்.

நந்தன் மிகுந்த உற்சாகத்துடன் தயாரானான். குழந்தைகள் பேசி நடிக்க வேண்டிய வசனங்களைப் பிரதி எடுத்து வைத்திருந்த தாளைப் பார்த்து குழந்தையைப் போல தன்னைக் கற்பனை செய்துகொண்டு ஒருமுறை தனக்குள் பேசிப் பார்த்தான்.

கண்களில் நட்சத்திரம் ஒளிர சிரித்த முகத்தோடு வரும் குழந்தைகள் ஒவ்வொருவரிடமும் பேசி அவர்களாகவே நடனமாடவோ, பாடல் பாடவோ சொல்லி அவர்களுக்கு அச்சூழலை எளிதாக்கிவிட்டு வசனங்களைக் கொடுத்து நடிக்க வைத்தான் நந்தன். நேரம் போனது தெரியாமல் இருபது குழந்தைகளுக்கு மேல் அன்று கடந்திருந்தார்கள்.

பட்டு நூல்கண்டால் தட்டியதைப்போல வந்த கதவு ஒலியைத் தொடர்ந்து “எக்ஸ் கியூஸ்மியோடு” அறைக்குள்ளே வந்த பெண்ணைப் பார்த்தவுடன் நந்தனின் விழிகள் விரிந்து, உருண்டு, மருண்டு நிலைகுத்தி நின்றன.

தினசரி இருபத்து நான்கு மணிநேரத்தில் தூங்கும் நேரம் தவிர எப்போதும் நினைவில் இருப்பவளை ஆறு வருடம் கழித்து நேரில் பார்த்த நந்தனுக்கு எதிர்பாராத நேரத்தில் கழுத்தை இறுக்கிப் பிடித்ததைப் போல உடல் முழுவதும் பாய்ந்த அதிர்ச்சியில் சூழல் மறந்து கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. பாலாஜிதான் அந்தக் கணத்தைச் சொல்லெறிந்து தெளிய வைத்தான்.

“தலைவரே... ரெடியா?”

``ம்ம்... ரெ...டி… தலைவரே...” வெளியில் பார்த்த `ர’ உச்சரிக்க வராத குழந்தை. திரும்பி நின்று போன் பேசிக்கொண்டிருந்தவள் இவள்தானா. உள்ளுணர்வு அப்போதே கவனிக்கத் தவறியது ஏமாற்றமாக இருந்தது நந்தனுக்கு.

சமநிலையில் உள்ளதைப்போல முகத்தை வைத்துக்கொண்டு அவளை நோக்காமல்

“பேர்... சொல்லுங்க...” என்றான்.

அவள் வாய் திறந்து சொல்வதற்கு முன்பாகவே ``அனிதா” என்று எழுதிவிட்டு அதை அடித்தான். மேலிருந்து அப்போதுதான் கீழே குதித்ததைப் போல தற்சமய சிந்தனைக்கு வந்தவனாய் குழந்தையைப் பார்த்து “பாப்பா பேர் என்ன?’’ என்று கேட்டான்.

``ஆதிதா” என்றது குழந்தை. விரல் நுனிகளால் கன்னத்தைக் கிள்ளுவதைப்போல பாவனை செய்தான். உண்மையில் கை நடுங்குவதைப்போல இருந்ததை உணர்ந்தவனாய் கையை இழுத்துக்கொண்டான்.

“ஆதிரா செல்லம் என்ன பண்ணப்போறீங்க நீங்க? உங்களுக்குதான் ஆக்டிங் இண்ட்ரஸ்ட்னு சொன்னீங்களே?”

அவன் அப்படிக் கேட்டதும் அனிதா சடாரென அவனை நேர்கொண்டு பார்த்தாள். குழந்தை எதுவும் சொல்லாமல் தலையைக் குனிந்தபடியே மௌனமாக நின்றிருந்தது.

“பாட்டு எதாவது பாடுறீங்களா? இல்லன்னா ரைம்ஸ்...” குழந்தை முகத்தை உயர்த்திவிட்டு எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றுகொண்டிருந்தது.

அவள் அவனைப் பார்த்தபடியே குழந்தையிடம் எதையோ சொல்ல வந்து வாயைத் திறந்து மூடிக்கொண்டாள். அவன் எழுதி அடித்த தன் பெயரையே பார்த்தாள்.

வெளியே நன்றாகப் பேசிய குழந்தை உள்ளே வந்தவுடன் அடைக்கப்பட்ட அறை, ஏ.சி சத்தம், கேமரா, பாலாஜி, கூடவே தான் என இவையெல்லாம்தான் குழந்தையின் மௌனத்திற்கும், தயக்கத்திற்கும் காரணம் என்பதை உணர்ந்தவனாய் குழந்தை முன் மண்டியிட்டு சட்டைப் பையிலிருந்து சாக்லேட் ஒன்றை எடுத்து குழந்தையின் முன் நீட்டினான். குழந்தை உடனே தன் அம்மாவைப் பார்த்தது. அனிதா `வாங்கிக்கோ’ என்பதைப்போல கண்ணால் சைகை செய்தவுடன் வாங்கிக்கொண்டது.

குழந்தை சாக்லேட் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தான் நந்தன். சாப்பிட்டு முடித்தவுடன் “இப்போ சொல்லுங்க பாப்பா பாட்டு பாடுறீங்களா? டான்ஸ் ஆடுறீங்களா?”

“பாட்டு பாடுடேன்” என்று பாதியாக உடைந்த பல் தெரிய “நீ பாத்த பாவைக்கொடு நன்டி” எனப் பாடத் தொடங்கியது குழந்தை. தனக்கு மிகவும் பிடித்த அந்தப்பாடலை குழந்தை பாடிக் கொண்டிருக்கும்போது, இதே பாடலை அனிதா முதன் முறையாகத் தன்னிடம் பாடிக்காட்டிய வாய்ஸ்-ஓவர் கேட்டது நந்தனுக்கு. “அப்படின்னா இந்தப் பாட்ட அடிக்கடி அவ கேட்டுக்கிட்டே இருந்திருக்கணும்” என்பதைத் தனக்குள் சொல்லிக் கொண்டவன் குழப்பமும் தயக்கமும் சமமாகக் கலந்து அனிதாவின் முகத்தைப் பார்த்தான். அனிதா அகலாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். தொடர்ந்து வந்துகொண்டிருந்த அவள் பார்வைக் கத்தியிலிருந்து தலையைத் திருப்பிக் கொண்டான் நந்தன்.

“ஆதிரா செல்லம் இப்போ நான் ஒரு கான்ஸெப்ட் சொல்லுவேனாம் அதை நீங்க நடிச்சுக் காட்டுறீங்களா?” என்று வயிற்றுக்குள் சென்று விழுந்து கிடந்த குரலை தொண்டைக்குள் சிரமப்பட்டு வரவழைத்துச் சொன்னான்.

அனிதா, குழந்தையை ஒரு கண்ணும், அவனை அடுத்த கண்ணுமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“நீங்க இப்டி சேர்ல உக்காந்துக்கோங்க மேடம்” பாலாஜி சொன்னதும் அவள் தயங்கியபடியே உட்கார்ந்தாள். தான் சொல்ல மறந்துவிட்டதை எண்ணி “உட்கார்” என்பதாக அவளை நோக்கினான் நந்தன்.

குழந்தைக்கு வசனத்தைச் சொல்லிக் கொடுத்தான். ஆதிரா கழுத்தில் கிடந்த செயினை விரல்களால் உருட்டியபடி பார்வையை சுவர்களின் மேலே ஓடவிட்டு என்னவோ யோசனை செய்வதுபோல பாவனை செய்தது. நந்தன் தன் கண்முன்னே நிற்பது அனிமேஷனில் செய்த அனிதாவின் மினியேச்சரோ என்பதைப்போல ஆச்சர்யத்தில் சிலிர்த்தான். சிட்டுக்குருவி மெல்ல தலை திருப்பி சத்தம் வந்த திசையைப் பார்ப்பதைப் போன்ற குழந்தையின் மெனக்கெடலற்ற சிறுசிறு அசைவுகளில் அவன் அனிதாவையே உணர்ந்தான்.

எரியும் சுடரை நோக்கி நீண்டிருந்த மத்தாப்பு திடீரென ஒளியைச் சிதற விடுவதைப் போல மௌனமான யோசனையிலிருந்த குழந்தை சட்டென்று படபடவென வசனங்களைப் பேசியது. சில நொடிகளில் பல பாவனைகளை வார்த்தைக்கு வார்த்தை குழந்தை மாற்றிக்கொண்டே இருந்தது. பேசிக்கொண்டே வந்த குழந்தை, கடைசி சில வரிகள் மறந்துவிட மனதுக்குள் வீழ்படிவென தங்கிய வார்த்தையையே திரும்பத் திரும்பச் சொல்லியது. குழந்தை தயங்கியதும் அதே வசனத்தை வாய்க்குள் முணுமுணுத்து அனிதா பாவனைகள் செய்துகொண்டிருந்தாள். தனக்குத் தோன்றிய வார்த்தைகளைப் போட்டு ஒரு வழியாக நடித்து முடித்தது குழந்தை.

முடிந்தவுடன் கேமராவை நோக்கி “மை நேம் இஸ் ஆதிரா.. ஐயம் ஃபோர் இயர்ஸ் ஓல்ட்... மை போன் நம்பர்” என்று ஒரு நம்பரைச் சொன்னது. அதைக் குறித்துக் கொண்ட நந்தனுக்கு அனிச்சையாய் அவன் கல்லூரி படிக்கும்போதே மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் நகர்ந்துகொண்டிருக்கும் பேருந்துக்குள் இருந்து அனிதா அவளது போன் நம்பரைச் சொன்ன காட்சி மண்டைக்குள் ஓடியது.

அனிதா “தேங்க்ஸ்” என கடுகுக்குள் கடலைப் புகுத்தியது போல ஒற்றை மொட்டு வார்த்தையை உதிர்த்துவிட்டுச் சென்றாள். குழந்தை “பை” சொல்லிவிட்டு விழிகளால் சிரித்து அறையை விட்டு வெளியேறியது. சென்னை சாலிகிராமத்தில் தான் வேலை செய்யும் திரைப்பட அலுவலகத்திலிருந்து ஒரே பாய்ச்சலில் நந்தனின் உடல் மனம் எல்லாமும் பத்து வயது கரைந்து அனிதாவின் காதலனாக மயிலாடுதுறையில் இருந்தான்.

ஆடிஷன் - சிறுகதை

கல்லூரியில் கருத்து மோதலில் ஆரம்பித்து, பின் ஒன்றுபட்ட ரசனைகளால் ஒருவரால் ஒருவர் ஈர்க்கப்பட்டு நந்தனும் அனிதாவும் காதலிக்கத் தொடங்கினார்கள். பெரும்பாலான திரைப்பட உதவி இயக்குநர்களின் காதல்களில் நிகழும் அதே க்ளைமாக்ஸ்தான் அவர்கள் காதலிலும் ஏற்பட்டது. எந்த ரசனையால் ஈர்க்கப்பட்டு அனிதா நந்தனைக் காதலிக்கத் தொடங்கினாளோ அதே ரசனை பல்கிப் பெருகி திரைப்பட இயக்குநர் ஆகவே வேண்டுமென்ற அவனது கனவை எதிர்க்கத் தொடங்கினாள். அவன் சினிமாவைத் தொழிலாக எடுத்துக்கொள்வதை அவள் விரும்பவில்லை. ``காதலா, சினிமாவா?” என்பதில் சினிமாவே ஜெயித்தது. ஆறு வருடங்களுக்கு முன் ஒருமுறை ஊருக்குச் செல்லும்போது திருவிடைமருதூர் கோயிலில் அவள் கணவனோடு லாங் ஷாட்டில் பார்த்தவன் இப்போது குளோஸ் அப்பில் பார்க்கும்போது நான்கு வயதுக் குழந்தைக்குத் தாயாகியிருக்கிறாள்.

அடுத்தடுத்து வந்த குழந்தைகளில் சிலர் சிறப்பாகவே நடித்தனர். ஒரு குழந்தை நடித்தது அனிதாவின் குழந்தையைப் போலவே இருந்தது அல்லது நந்தனுக்கு அப்படித் தோன்றியது.

இயக்குநர் எப்போதுமே இரவு எட்டு மணி வாக்கில் அன்றன்றைக்கு எடுத்த காணொலிகளைப் பார்ப்பது வழக்கம்.

“இன்னைக்கி ஆடிஷன் பண்ணுன வீடியோவையெல்லாம் பார்த்திடலாமா நந்தா” என்றார் இயக்குநர். மடிக்கணினியை இயக்குநரின் முன்பு விரித்தான் நந்தன். ஒவ்வொரு காணொலியாகப் பார்த்துக்கொண்டே வந்தார். அந்தக் காணொலிகள் எல்லாமே அன்றைய நாளில் சரியாக வசனம் பேசி நடித்த குழந்தைகளுடையவை. ஆனால் அதில் அவரை எந்தக் குழந்தையின் காணொலியும் கவரவில்லை என்பது கணினி வெளிச்சத்தில் அவர் முகத்தில் தெரிந்தது.

“நேத்து ஒரு குழந்தைய காட்னீங்களே.. அதைத் தவிர வேற எதுவும் தேறாது போலிருக்கே.”

இயக்குநர் சொல்வது, காலையில் இரண்டாவது கணவனுடனும் பிரச்னை என்று வந்திருந்த பெண்மணியின் குழந்தையைத்தான். நந்தன் உடனே உற்சாகமாகி “சார் அப்டீன்னா அந்தக் குழந்தையவே பேசிடலாம் சார்...காலையிலகூட அந்த அம்மா கொழந்தையோட வந்திருந்தாங்க. பாவம் கஷ்டப்படுற பேமிலி சார்” இயக்குநர் அவனை ஒரு பார்வை பார்த்தார். படாரெனக் கதவைத் திறந்து உள்ளே வந்தான் பாலாஜி. ``தலைவரே, இந்த சுமாரா பண்ணின குழந்தைங்க வீடியோஸ் எல்லாம் காப்பி பண்ணிடலாமா இல்ல டெலீட் பண்ணிரவா? அதான் கேட்டுட்டுப் போலாம்னு வந்தேன்” என்று பாலாஜி கேட்க “எங்க இங்க காட்டுய்யா” என்று இயக்குநர் கேமிராவை வாங்க, நந்தனுக்கு இதயத்துக்குள் யாரோ காற்றடிப்பதுபோலிருந்தது. அதிலிருக்கும் அனிதாவின் குழந்தை நடித்த காணொலியை இயக்குநர் பார்த்துவிடக் கூடாது எனத் தவிப்படைந்தான் நந்தன்.

இயக்குநர் கேமராவில் உள்ள காணொலிகளை ஒவ்வொன்றாய்ப் பார்க்கத் தொடங்கினார், குழந்தைகளின் பிழைகளோடு கூடிய உரையாடல்களில் தன்னை மறந்து சிரித்தார். அடுத்தடுத்த காணொலியை அவர் சொடுக்கும்போதும் நந்தனுக்குப் பதற்றம் அதிகரித்தபடி இருந்தது. ஆதிராவின் காணொலி வந்தவுடன் அவர் முகம் பளீரிட்டது. அதைப் பார்த்த நொடியில் தன் காதலியின் குழந்தைதான் இந்தப் படத்தில் நடிக்கப்போகிறது என்பது நந்தனுக்குப் புரிந்துவிட்டது. நந்தன் எதிர்பார்த்த சொல்லைத்தான் இயக்குநர் கூறினார், “யோவ்... இந்தக் குழந்தைதான்யா” அவர் சொன்னது இதுதான் இறுதி என்பதாக இருந்தது.

``ஓ… சரிங்க சார்...”

“தப்புத் தப்பா பேசினாலும் இந்தக் குழந்தை கிட்டதான்யா நான் எதிர்பார்த்த ஆன்மா இருக்கு... அதானே அந்த கேரக்டருக்கு ரொம்ப முக்கியம்.”

“ஆமாம் சார்.”

“குழந்தையோட பேரண்ட்ஸுக்கு இப்பவே போன் பண்ணுங்க.. நடிப்புக்கு ட்ரைன் பண்ணிக்கலாம்..நாளைலருந்து குழந்தைக்கு டயலாக் ரிகர்ஸல் ஆரம்பிச்சுடலாம்...”

ஆடிஷன் - சிறுகதை

நந்தனுக்கு விழிகள் வெளியே வந்து விழுந்துவிடும்போலிருந்தது. போன் செய்தான். ஒரு ஆண்குரல்... எடுத்தது அனிதாவின் கணவன்! நந்தனுக்கு திடுக்கிட்டது.

``சார், உங்க குழந்தையைத்தான் எங்க படத்துல ப்ரைமரி கேரக்டருக்கு ஃபிக்ஸ் பண்ணியிருக்கோம்...” நந்தன் சொற்றொடரை முடிப்பதற்குள்,

“நோ... படிக்கிற குழந்தைய நடிக்க வைக்கிறதாவது. என் டாட்டர் நடிக்க மாட்டா சார். நீங்க வேற கொழந்த பாத்துக்கோங்க” உரத்துச் சொல்லிவிட்டு போன் துண்டிக்கப்பட்டது.

நந்தனுக்கு குழந்தை நடிக்காது என்று அவன் கூறியதைவிடவும் போனைத் துண்டித்த கையோடு அவன் அனிதாவை அடிப்பது போலவும், அவளைத் திட்டுவது போலவும் நினைவுகள் காட்சிகளாகத் தலைக்குள் ஓடின.

குழந்தை நடிக்காது என்ற தகவலைச் சொல்ல இயக்குநர் அறையை நோக்கி நடந்தான். போன் அடித்தது அதே எண்ணிலிருந்து. மறுபடியும் திட்டுவதற்காக போன் செய்கிறானோ என பதிலளிக்கத் தயங்கினான். திரும்பத் திரும்ப இரண்டுமுறை அடிக்கவும் போனை எடுத்தான்.

அனிதாதான் பேசுகிறாள் “ஹலோ... சார்...ஸாரி சார்... அவங்க அப்பா பேசுனத நீங்க எதுவும் எடுத்துக்காதீங்க. குழந்தைய எப்போ கூட்டிட்டு வரணும் சார்?”

சற்று அமைதிக்குப் பிறகு சுதாரித்த நந்தன்,

“நாளைக்... நாளைக்கு ஆபீஸ் வந்துருங்க.டைரக்டர மீட் பண்ணிரலாம்.”

நந்தனின் குரல் எதிர்முனையில் அனிதாவையும் மௌனமாக்கியது.

நந்தனிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கு முன்னாலும் மன்னிப்பு கேட்டுவிட்டுத்தான் பேசவேண்டும் என நினைவெழுந்தது அனிதாவுக்கு.

தான் சினிமாவில் உதவி இயக்குநராக முயற்சி செய்யப்போகிறேன் என்றபோது தன்னை விட்டுப் பிரிந்தவள் இன்று தன் குழந்தையின் விருப்பத்திற்கென அதே சினிமாவுக்குள் வருவதும் அதிலும் தன்னிடமே வருவதும்... நந்தனுக்கு தான் படித்த, எழுதிய, எந்த திரைக்கதையை விடவும் சுவாரஸ்யமானதாகப்பட்டது.

ஆடிஷன் - சிறுகதை

மறுநாள் காலை.

அலுவலகத்தில் மடிக்கணினியில் தட்டச்சு செய்துகொண்டிருந்தான் நந்தன். வெளியில் வாசலில் “செப்பலக் கலட்ட முடில மா” என்ற குழந்தையின் குரல். இருப்புகொள்ளாது எழுந்தவனுக்கு உடலெங்கும் ரோமக்கால்கள் குத்திட்டு நின்றன. அவளின் பிறந்த நாளுக்கு நந்தன் வாங்கிக் கொடுத்திருந்த கடல் நீலவண்ணச் சுடிதாரை அணிந்து வந்திருந்தாள் அனிதா. அவளை நேருக்கு நேர் பார்த்ததும் நந்தனின் முகத்தசைகள் புன்னகைக்க இயலாமல் திமிறிக்கொண்டிருந்தது. அன்றைய நாளை விடவும் இன்று அலங்காரம் சற்றுக் கூடியே இருந்தது. புருவங்களுக்கிடையே குங்குமத்தால் குட்டியூண்டு பாலம் போட்டிருந்தாள். கேமரா ஃப்ளாஷ் போல பிரகாசித்த அனிதாவின் கண்களுக்குள் பரிதாபமாய் நின்றிருந்தது நந்தனின் உருவம்.

நந்தனைக் கண்டவுடன் புன்னைகையுடன் ஓடி வந்தாள் குழந்தை ஆதிரா. நெடுநாள் பழகியவனைப் போல அவனைத் தூக்கச் சொல்லி அவனது கரத்தில் அமர்ந்துகொண்டாள். அவன் முகத்தை நோக்கி “ஒங்க பேரு டன்டனா?”

``ஆம்” என்பது போல இமைகளை மூடித்திறந்து குழந்தையைப் பார்த்துப் புன்னகை செய்தான் நந்தன்.

இயக்குநர் வந்துவிட்டார். அலுவலகமே பரபரப்பானது. குழந்தைகளுக்கான நடிப்புப் பயிற்சியளிக்கப்போகும் பெண்மணி வந்திருந்தார். இயக்குநர், அனிதாவிடமும் குழந்தையிடமும் பேசிய பிறகு மிகுந்த திருப்தி அடைந்தவராக பயிற்சியாளரிடம் “இன்னைக்கே டிரெயினிங் ஆரம்பிச்சுடுங்கம்மா” என்றார்.

“ஓகே சார்” என்றார் பயிற்சியாளர். குழந்தை எப்படியெல்லாம் நடிக்க வேண்டும், அதன் உடல் மொழி எப்படி இருக்க வேண்டும், வசன வெளிப்பாடு எப்படி இருக்க வேண்டும்” என்பதைத் தன் தரப்பின் தேவையைச் சொன்னார் இயக்குநர். ``இப்படி இருக்கலாமா சார், இப்படிப் பேசலாமா” என்று தன் தரப்பைக் கூறினார் பயிற்சியாளர். இயக்குநரும், பயிற்சியாளரும் பேசுவதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது குழந்தை. அந்த அறையில் அதைவிடவும் தத்ரூபமான நடிப்பை நடித்துக்கொண்டிருந்தார்கள் நந்தனும் அனிதாவும்!