மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஏழு கடல்... ஏழு மலை... - 10

ஏழு கடல்... ஏழு மலை
பிரீமியம் ஸ்டோரி
News
ஏழு கடல்... ஏழு மலை

இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்

``பயணம் என்பதுதான் இந்த உலகின் மிக நீண்ட சொல்.

அதில் துவக்கமுமில்லை முடிவுமில்லை.''

- பராரிகள்

தந்தை வழி ( 1933 - மழைக்காலம் )

சூரியன் உதிக்கத் துவங்கும் வேளையில் காளை வழிகாட்ட இறந்தவனைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டு காடேறி கண்மாய்ப் பாதையில் கொம்பையா நடந்தார். மந்தை முழுவதும் அவர்களைப் பின்தொடர்ந்தது. இறந்த உடலிலிருந்து ஈக்கள் விலகிப் பறக்கவும், மீண்டும் வந்து உடலில் ஒட்டவுமாயிருந்தது. எதிர்த்து வந்த மனிதர்கள் பிணநாற்றம் பொறுக்காமல் ஒதுங்கி ஓடினர். எவ்வளவு தூரம் போனாலும் நாற்றம் அவர்களைத் துரத்தியது. சிலர் ஓங்கலித்து வெளியெடுத்தனர். கொம்பையா நாற்றத்தைத் தனக்குள் அனுமதிக்காமல் வழியில் கிடைத்த கிடாரங்காய் இலைகளையும், எலுமிச்சை இலைகளையும் கசக்கி கசக்கி நுகர்ந்தபடியே சென்றார். காடேறி கண்மாய் ஏழுரூக்கும் சேர்த்து ஒரே பெரிய கண்மாய். நீளமே ஒண்ணரை மைலுக்குக் குறை வில்லாமலிருந்தது. நான்கு திசைக்கும் மடையிருந்தது. ஊருக்கு இரண்டு வீதமென மடை பிரித்திருந்தார்கள். நீண்ட கண்மாய்ப் பாதை முடிந்து சரிவில் இரண்டு பர்லாங் தூரம் நடந்தால் ஊர்ப் பாதை துவங்கியது.

ஏழு கடல்... ஏழு மலை... - 10

கொம்பையா ஊருக்குள் நுழையத் துவங்கியதுமே கடம்பங்குளத்து ஆண்கள் தம் மேல் துண்டுகளாலும், பெண்கள் உடுத்துத் துணிகளாலும் மூக்கை மூடியபடி நீண்ட இடைவெளிவிட்டு பதற்றத்துடன் மந்தையைத் தொடர்ந்தார்கள். சொக்கார வீட்டுப் பெண்கள் ``ஏலே அய்யா ராசு...’’ என்று ஓங்கிக் கத்தியபடி சந்துகளுக்குள் புகுந்து ஊரின் பெரிய தலைக்கட்டு கொண்ட வீட்டை நோக்கி ஓடினார்கள். ஓரிரு ஆண்கள் கொம்பையாவை மறித்து ``நீ யாருடே...எங்கயிருந்து தூக்கிட்டு வார'' என்று கேட்டு விட்டு கொம்பையா பதில் சொல்வதற்குள் தள்ளிப்போய் வாந்தியெடுத்தார்கள். ஊரின் நடுவிலிருக்கும் ஊர்ச்சாவடியில் பழக்கம் பேசிக்கொண்டிருந்த ஆட்கள் திசைக்கொன்றாய் நாற்றம் பொறுக்கமாட்டாமல் பிரிந்து தூரமாய் ஓடிப்போய் நின்றுகொண்டார்கள்.

விஷயம் பெரிய வீட்டு ஆட்களின் காதுக்கு எட்டி வீட்டிலிருந்து முப்பது நாற்பது ஆட்கள் திரண்டு எதிர் திசையில் ஓடி வந்தனர். ஜனத் திரளுக்கு முன் வரிசையில் இருபது வயதிருக்கும் பெண் ஒருத்தி தலைவிரிகோலமாய் ``அய்யோ என் சாமீ... என்ன விட்டுப் போய்ட்டிகளா...அய்யோஒ...'' என ஓங்கி அரற்றியபடி அழுது கொண்டே முன்னால் ஓடி வந்தாள். அவள் இறந்தவனின் மனைவியாக இருக்கக்கூடும் என்று கொம்பையா நினைத்தார். அந்தப் பெண்ணைத் தவிர மற்ற எல்லோரும் தூரமாகவே நின்று கொண்டார்கள். ஓரிரு வீட்டு ஆண்கள் மட்டும் மூக்கைத் துணிகொண்டு மூடியபடி அருகில் வந்தார்கள். நாற்றம் முகத்திலறைந்து அவர்களை நெருங்க மாட்டாமல் செய்து பின்வாங்கினார்கள்.அவளைப் பார்த்ததும் வழிகாட்டி முன்செல்லும் காளை ``ம்ம்மா... மா''வென அழுவதைப்போல் கத்தியது. அந்தப் பெண் மட்டும் கொம்பையாவை நெருங்கி வந்து அவர் தோளில் கிடக்கும் பிணத்தைத் தொட்டுத் தொட்டு அழுதபடி வந்தாள். அவன் முகத்தின் அகோரத்தைப் பொறுக்க மாட்டாமல் ``ஓ...’’வென வானத்தைப் பார்த்து அண்ணாந்து கத்தியபடி தெருவில் அப்படியே முழந்தாளிட்டு அமர்ந்தாள். ``ஏலா... பேச்சியம்மா இன்னிக்கி பொழுது இப்படியா விடியணும்'' ஊர்ப்பெண்கள் அவளை அணைத்துத் தேற்ற வந்தார்கள். அவள் தன் தலையில் அடித்துக்கொண்டு தரையில் புரண்டு புரண்டு அழுதாள். அழும்போது சில நேரம் வார்த்தை வராமல் அவள் வாய் மட்டும் திறந்து திறந்து மூடியது.

ஏழு கடல்... ஏழு மலை... - 10

பாம்படம் போட்ட முதியபெண் ஒருத்தி கம்பு ஊன்றியபடி நடந்து வந்து ``ஏலே அய்யா ராசு’’ என்று, தொங்கும் உடலின் காலைக் கட்டிக்கொண்டாள். அவள் முகத்தில் எந்த அருவருப்புமில்லை. இறந்த உடலின் ஈரம் அவள் சேலையில் பட்டு ஒட்டியது. ``ஏன்யா, என் மயனுக்கு என்ன ஆச்சி. உங்களுக்கு ஏதாச்சும் தெரியுமா?'' கொம்பையா ஏதும் பேசவில்லை. இறந்த பிணத்தை அவர்கள் வீட்டிற்குள் எடுத்துப் போகவில்லை. முற்றத்தில் ஓலைப்பாய் விரித்து அதில் கிடத்தச் சொன்னார்கள். ஊரில் ஈமக் காரியங்கள் செய்யும் மனிதருக்குத் தாக்கல் சொல்லி வீட்டின் முற்றத்தில் சாவுப்பந்தல் போட்டார்கள். இறந்தவனின் அருகில் யாரும் வர முடியாமல் எட்ட நின்றார்கள். சூடமும் வாசனைப் பன்னீரும் குடம் குடமாய்க் கலந்து சுற்றிலும் தெளித்தார்கள்.

பெரிய வீட்டின் ஆண்கள் கொம்பையாவைத் தனியே அழைத்துப் போய் அவனுக்கு என்ன ஆச்சு என்றும், அவன் எங்கே இறந்து கிடந்தான் என்பதையும் விசாரித்தார்கள். கொம்பையா எல்லோரிடமும் நடந்த காரியத்தைச் சொன்னார். அவன் கையிலிருக்கும் கோவில் மணியைக் குறித்து ஏதும் தெரியுமா எனக் கேட்டார்கள். அதற்குள் நான்கைந்து ஆண்கள் அவன் இறந்து கிடந்ததாய்ச் சொன்ன இடத்திற்குப் போய் உண்மை அறியக் கிளம்பினார்கள். அக்கம் பக்கத்துக்கு ஊர்களிலிருந்து சொந்தபந்துக்கள் வந்து சேருவதற்குள் வேகமாய் எரியூட்டிவிட்டு ஆற்றிற்கு எல்லோரும் குளிக்கக் கிளம்பினார்கள்.எல்லோரும் கொம்பையாவிடம் அதே சேதியை வெவ்வேறு விதமாய்க் கேட்டுக்கொண்டிருந்தார்கள். கொம்பையா இறந்தவன் வாசனை நீங்க கரம்பை மண் தேய்த்துக் கண்மாயில் குளித்தார். உடுத்தியிருந்த பழைய துணியை அப்படியே கழித்துப் போடச் சொன்னார்கள். பெரிய வீட்டிலிருந்து கொம்பையாவிற்கு யாரோ மாற்றுத் துணி எடுத்து வந்தார்கள்.

இறந்தவனின் மேல்சட்டை அவருக்குச் சரியாக இருக்கும். அதே உடல் வாகுதான் என்று யாரோ சொன்னார்கள். எப்போதும் மேல் சட்டை அணிவதில்லை என வாங்க மறுத்துவிட்டார். வேஷ்டியையும் துண்டையும் வாங்கிக் கொண்டார். இறப்பு நடந்த வீட்டிற்கு எங்கெங்கெல்லாமோவிருந்து வந்த ஜனக்கூட்டம் அம்மிக்கொண்டிருந்தது. பேச்சியம்மாள் வீட்டிலிருந்தும் பிறந்த வீட்டுக்காரர்கள் வந்திருக்க வேண்டும். அவர்கள் ``அவ சின்ன வயசுப் புள்ள… பேச்சியம்மாளுக்கு மூளிச்சடங்கு செய்யக்கூடா’’தென வாதிட்டுக்கொண்டிருந்தார்கள். கொம்பையாவிற்கு சங்கடமாயிருந்தது. அவர் கிளம்ப உத்தேசித்துக்கொண்டிருந்தார். இளந்தாரிகள் அக்கம் பக்கத்து ஊர்களில் ராசுவைக் கொன்றவர்களைப் பற்றித் துப்பு சேகரிக்கப் போயிருந்தார்கள். இன்னும் நிறைய பேர் கொம்பையாவைப் பார்த்து ``நீதான் பாத்து தூக்கிட்டு வந்தியாயா... எங்குன கிடந்தான்யா...'' என்று விசாரித்துக்கொண்டிருந்தார்கள்.

ஏழு கடல்... ஏழு மலை... - 10

துப்பு விசாரிக்கப் போனவர்கள் மாலையில் ஊர் வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்குத் துப்பு ஏதும் கிடைக்கவில்லை என்றும், ஆனால் ராசுவின் கையில் சுற்றியிருந்த பித்தளை மணி கருப்பர் கோயில்ல யாரோ வேண்டுதலுக்குத் தொங்க விட்டது என்றும் சொன்னார்கள். எல்லோரும் கொம்பையாவை இன்னும் தீவிரமாய் விசாரிக்க வேண்டுமென்றார்கள்.

``அவன் ஏன் செஞ்சிருக்கக் கூடாது. அவந்தான் செஞ்சுருப்பான். ஏதோ உறுத்தியிருக்கும், அதான் ரெண்டு நா கழிச்சி உடம்பக் கொண்டுவந்து இங்க போட்ருக்கான். ரெண்டு நாளா நாம காடு கரன்னு எங்கெல்லாம் தேடுனோம்.''

குடித்திருந்த ராசுவின் சித்தப்பா ஒருவர் விறுவிறுவென சபையிலிருந்து கிளம்பி கொம்பையாவைத் தேடி ஊர்ச் சாவடி பக்கமாய்க் கிளம் பினார். அவர் பின்னாலேயே நாலைந்து பேர் அவரைத் தடுக்க ஆயத்தமாய் பின்னாலேயே ஓடி வந்தார்கள். ``ஏ... ந்தா மூக்கையா, அவசரப்பட்டு ஏதாவது பண்ணிப்புடாத. ந்தா... யேய்...''

வழியில் யாரோ முளைக் குச்சிக்காய் தரித்துப் போட்டிருந்த கனத்த நாட்டுக் கருவேலங் கட்டையை எடுத்துக்கொண்டார். ``இன்னிக்கி அவன...''

கொம்பையா ஊர்ச்சாவடியில் நாலைந்து மனிதர்களோடு பேசியபடி அமர்ந்திருந்தார். வெறுமன பேச்சுதான். அவர் நினைப்பெல்லாம் பேச்சியம்மா தலைவிரி கோலமாய் தன் கணவனின் உடலைப்பார்த்துக் கதறி அழுதது தான் நினைவாக இருந்தது. `` டேய்...'' கத்தியபடியே கொம்பையாவை நோக்கிக் கட்டையைத் தூக்கினார். அதற்குள் சாவடியிலிருந்த மனிதர்களும், கேத வீட்டிற்கு வந்திருந்தவர்களும் பிடித்துக்கொண்டார்கள்.

``சொல்லுடா, என் மவன என்னத்துக்குடா கொன்ன..?''

``ஏய் மூக்கையா, தடிச்ச வார்த்த பேசாத. யாராவது பண்ணுவாங்களா. யாரும் கிட்ட போகவே யோசிப்பாங்க. அந்தப் பயதான தூக்கிட்டு வந்துருக்கான். என்னன்னு விசாரிப்போம். அதுக்குள்ள கண்ட மாதிரி வார்த்தய இறைக்கக் கூடாது.''

கொம்பையாவைத் தேடி நிறைய மனிதர்கள் ஊர்ச்சாவடிக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களோடு காலையில் கண்மாய்ப் பாதையில் கண்ட மூன்று வயசாளிகளும் அதில் இருந்தார்கள்.அவர்கள்தான் அடையாளம் சொன்னார்கள். ``இந்தப் பயலத்தான் நாங்க கண்மாய்க் கரையில பாத்தோம். நாங்கதான் உட மரக் காட்டுக்குள்ள மாடுக நிக்கிறத சொன்னோம். அதுக்கப்புறம்தான் இந்தப் பய காட்டுக்குள்ள இறங்கிப் பாத்துருக்கான். இவன் எப்படி கொன்றிருப்பான், நிச்சயம் வாய்ப்பில்ல.’’ இறந்தவனின் வீட்டுக் காரர்கள் கொம்பை யாவிடம் மன்னிப்பு கேட்டார்கள்.

``நீதான் செத்தவன தூக்கிட்டு வந்துருக்க.மூணா நாள் செத்தவனுக்குப் படச்சி சாமி கும்பிடுற வரைக்கும் ஊர் தாண்டக் கூடாது. ஐதிகம்'' என்று பெரிய வீட்டுக்காரர்கள் சிறிய கண்டிப்புடன் சொல்லிவிட்டார்கள். மூன்றாம் நாள் வரை கொம்பையா பெரிய வீட்டில் தங்க ஏற்பாடானது. அன்று ஊர் முழுக்க எல்லோர் வீட்டிலும் பால் சாம்பிராணி போட்டுப் புகை பெருக்கினார்கள். என்ன செய்தாலும் இன்னும் பிணவாடை வீசுவதாய்ப் பேசிக்கொண்டார்கள். கொம்பையா இரவில் உறக்கம்கொள்ளாமல் முற்றத்து மரத்தடியில் அமர்ந்திருந்தார். இரவெல்லாம் திடீர் திடீரென பேச்சியம்மாள் அலறல் சப்தமும், யாரோ சமாதானம் செய்ய பெரிய கேவலுடன் சப்தம் அடங்குவதுமாயிருந்தது. அடுத்த நாள் காலை எல்லோரும் இடுகாட்டுக்கு சாம்பல் எடுத்து, பால் ஊற்றப் போகும்போது அவரும் உடன் போனார். நேற்றிலிருந்து யாரும் தொழுவத்தைக் கவனிக்கவில்லையென்பது தெரிந்தது. அவர் போய் மாடுகளுக்குக் கூளமும் நீரும் வைத்தார். அவருக்கு இரண்டாம் நாள் இரவு கவியத் துவங்குகையில் நெஞ்செல்லாம் பிசைந்துகொண்டு ஏதோபோலிருந்தது. பேச்சியம்மாள் அழுகையும் கேவலும் காதுக்குள் வந்து வந்து போனது. வீட்டுக்காரர்களிடம் இரவில் மட்டும் ஊர்ச்சாவடியில் படுத்துக்கொள்கிறேனென்று சொல்லிவிட்டார்.

ஏழு கடல்... ஏழு மலை... - 10

மூன்றாம் நாள் படையல் வச்சி சாமி கும்பிட சொந்தபந்துக்கள் கூடியிருந்தார்கள். ராசுவின் அம்மா ஏகத்துக்கும் அழுதாள். மூன்று நாள்களாய் அழுதும், உணவெடுக்காமலும் பேச்சியம்மா உடலில் திராணியில்லாமலிருந்தாள். பதிமூன்று பந்திக்கு இலையெடுத்தார்கள். கொம்பையாவை சாப்பிட வரச்சொல்லி அடிக்கொருதரம் ஊர்ச் சாவடிக்கு ஆள் விடவே எல்லா மனிதர்களும் உண்டு முடித்த பின் இறுதி ஆளாய் கொம்பையா பந்தலுக்கு சாப்பிட வந்தார். தனி ஆளாக அவருக்கு இலைபோட்டுப் பரிமாறினார்கள். பேச்சியம்மா வீட்டு ஆட்கள் ``அவருக்குப் படைச்ச சாப்பாடு ஒரு வா சாப்பிடாட்டி இறந்தவங்களுக்கு மனசு சாந்தி கிடைக்காது'' என்று சொல்லி அவளை வற்புறுத்தி சாப்பிட அழைத்து வந்தார்கள். அவளும் தளர்ந்த நடையோடு பந்தலுக்கு வந்தாள். பேச்சியம்மாளின் அம்மா பிசைந்து ஒரு வாய் எடுத்து ஊட்ட வந்தாள். அப்போதுதான் நிமிர்ந்து கொம்பையாவைப் பார்த்தாள்.கொம்பையாவும் பேச்சியம்மாவைப் பார்த்தார். பேச்சியம்மாளின் கண்களில் அழுகை கட்டிக்கொண்டு நின்றது. எந்த நொடியிலும் மீண்டும் அழத் துவங்கிவிடுவாள் என்பது முகத்தில் தெரிந்தது. பேச்சியம்மாளின் அம்மா உணவை அவள் வாயருகே வைத்தபடி நீட்டிக்கொண்டிருந்தார். கொம்பையா என்ன நினைத்தாரோ,

``ஒரு வாயி சாப்பிடும்மா. மூணு நாளா வாயில சோறுதண்ணி படாம இருக்குற. வாங்கிக்க'' என்று சொன்னார். அடுத்த நிமிடமே வாய்திறந்து ஒரு வாய் வாங்கி மென்றாள். அவள் கண்களில் நீர் வழிந்துகொண்டேயிருந்தது. நான்கைந்து வாய் வாங்கியிருப்பாள், போதுமென்று சொல்லிவிட்டாள். கொம்பையாவிற்கு உண்க மனசு ஏலாமல் இலையை மடித்துவிட்டு எழுந்தார்.

ரத்த உறவுகளும் நெருங்கிய உறவினர்களும் தவிர எல்லோரும் கிளம்பிவிட்டார்கள். கொம்பையாவும் கிளம்ப ஆயத்தமானார். துக்க வீட்டிற்கு வந்து கிளம்புகையில் சொல்லிவிட்டுக் கிளம்பக்கூடாது என்ற ஐதிகமிருப்பதால் அவர்கள் கண்ணில்பட்டுவிட்டு கண் அமைதி கட்டிவிட்டாவது கிளம்பலாமென்ற முடிவுக்கு வந்தார். மற்ற எல்லோரையும்விட அவருக்கு பேச்சியம்மாளை இறுதியாய் ஒருமுறை பார்த்துவிட்டுக் கிளம்பலாமென்று தோன்றியது. பரந்த அந்த வீட்டிற்குள் நுழைந்தார். வீட்டின் நடுக்கூடத்தில் பெரிய வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. இதற்குப் பின் பேச்சியம்மாளின் வாழ்க்கை சார்ந்து கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். ``வருஷம் திரும்புனதும் அவள கூட்டிக்கிட்டுப் போங்க'' என்பது இறந்தவனின் வீட்டு வாதமாயிருந்தது. ``ஒரு வருசத்துக்கு அவ இங்குனயிருந்தா இறந்தவர நினைச்சி நினைச்சி அழுது அழுதே அவளும் வேகமா இறந்துபோயிடுவா. அதனால...'' என்று பேச்சியம்மாளை அழைத்துப் போக தீர்மானமாய்ப் பேசினார்கள்.

ஊர்ப் பெரியவர்கள் கூடி, பேச்சியம்மாளை ஒரு வருடம் கழித்துத்தான் அனுப்பிவைக்க முடியும் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்கள். இன்னும் ஒரு வருசத்துக்கு அந்தப் புள்ள வீட்ட விட்டே வெளிய வரக்கூடாது. இல்லாட்டி இறந்தவனுக்கு ஆகாது.என்று ஐதிகம் சொன்னார்கள். வேறு வழியில்லாமல் பேச்சியம்மாளின் பிறந்த வீட்டுக்காரர்கள் அவளை அங்கேயே விட்டுவிட்டுக் கிளம்பிச் சென்றார்கள்.

மாலையாகிவிட்டது. கொம்பையா ஊர்ச் சாவடியில் வந்து அமர்ந்திருந்தார். துக்கவீட்டுப் பந்தலைக் கூடமாடப் பிரித்துப் போட்டுவிட்டு களைப்பு தீர சாவடியில் அமர்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டிருந்த ஊர் அழுக்கெடுக்கும் தொழிலாளி மெல்ல கொம்பையாவிடம் பழக்கம் பேசத் துவங்கினார்.

‘`கிழக்க எங்கயோ மழபெய்துன்னு நினைக்கேன். நல்ல ஈரக் கரிசல் மண் வாசன.’’

``ம்'' கொம்பையா வானத்தை அண்ணாந்து பார்த்தார். பெரிய பெரிய யானைகள்போல் கரியமேகம் திரண்டிருந்தது.

``ஏன்யா... இனிமே இந்தப் பிள்ளைய யாரு கவனிச்சிப்பா சொல்லு. நம்ம நாட்ல புருஷன் செத்துட்டா அவ்வளவுதான். ஆயுசுக்கும் மூலையில உக்கார வச்சிருவாங்க. ஒரு காரியமா போறேன் குறுக்க வராத. அபசகுனம் அங்கிட்டு நடக்காத. இங்கிட்டு நடக்காத... எங்கயும் நல்லது கெட்டதுக்குக் கூப்பிட மாட்டாங்க. அதே பொம்பள செத்து ஆம்பள இருந்தா அப்படியா நடக்கும். மாசம் திரும்புறதுக்குள்ள அடுத்த கல்யாணம் பண்ணிக்கிறாங்க. நம்ம நாட்ட வெள்ளைக்காரன்தான ஆள்றான். அந்தப் பொம்பளைங்களாம் அப்படி இல்லயாம்ல. புருஷன் செத்துட்டா கொஞ்ச நாளுல நம்ம ஆம்பளைங்க மாதிரி வேற கல்யாணம் பண்ணிக்கிறாங்களாம்ல.''

``ம்... கேள்விப்பட்டுருக்கேன்''

``ஏன் தம்பி, அந்த மாரில்லாம் இங்க வராதா? பாவம்யா இந்தப் பொம்பளப் பிள்ளைங்க. வயசுக்கு வாரதுக்கு முன்னாடியே நண்டு சிண்டுமா இருக்குறப்பவே அதுகளுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிட்டு அவன் எங்கயாவது நீச்ச தெரியாமலோ, நோயிலயோ, மாரியாத்தா வந்தோ சின்ன வயசுலயே செத்தா, பாவம் இந்தப் பொம்பளப் பிள்ளைங்கதான் தாலி அறுத்துக்கிட்டு மூளியா எங்கயாவது மூலையில இருட்டுக்குள்ள சாகுதுங்க.

இப்போம் செத்தானே அவன்தான் வீட்ல கடக்குட்டி. இறந்தவனோட அண்ணனுங்க மூணுபேரு... இப்போவே இந்தப் புள்ளைய நான் வச்சிக்கவா... நீ வச்சிக்கவான்னு அவங்களுக்குள்ள ஒரு பேச்சு ஓடுறதா கேள்வி.''

``ம்''

``இன்னும் ஒரு வருஷம் அந்தப் பிள்ளை இங்க கிடந்து என்னன்னு சீரழியப் போகுதோ, பாவம்.’’

வானம் இருட்டிக்கொண்டு பெரிதாய் இடி இடித்தது.

``ஆமா இளவட்டம், உனக்கு என்ன வயசு?’’ கேட்டு முடிப்பதற்குள் சோவென மழைபெய்யத் துவங்கியது.

``சித்திர முடிஞ்சா இருபத்தி நாலு...’’

பதிலைக் கேட்காமலேயே ``மழ பெருசா வரும் போல இருக்கு, நான் கிளம்புறேன்'' சொல்லிவிட்டுத் தன் வீட்டிற்கு ஓடினார்.

மழை பெரிதாகப் பெய்யத் துவங்கியது. ஊர் மெல்ல இருளத் துவங்கி நடமாட்டமில்லாமல் போனது. ஊர்ச்சாவடியில் அவரைத் தவிர யாருமேயில்லை. அடைமழை என்பதால் எல்லா மனிதர்களும் வீடுகளுக்குள் போய் முடங்கிக் கொண்டார்கள். கொம்பையா தன் மேல்துண்டை விரித்து அங்கேயே உறங்கத் துவங்கினார். நள்ளிரவில் யாரோ தன்னை எழுப்புவதுபோல் உணர்ந்து சட்டென எழுந்து அமர்ந்தார். ஊரே கரிய இருட்டாக இருந்தது. மழை அப்போதுதான் நின்றிருக்க வேண்டும். பூந்தூறல் போட்டுக்கொண்டிருந்தது. தன்னை யார் எழுப்பினார்கள் எனச் சுற்றிப் பார்த்தார். கையில் அரிக்கேன் விளக்கை ஏந்திக்கொண்டு அந்த மஞ்சள் வெளிச்சத்தில் பேச்சியம்மா நின்றுகொண்டிருந்தாள்.

``எங்கு என்பதைவிட யாரோடு என்பதில்தான் பயணத்தின் அத்தனை சுவாரசியங்களுமிருக்கிறது.''

- பராரிகள்

மகன் வழி (1977 - மழைக்காலம்)

வேம்புவின் கழுத்தில் ஆடிக்கொண்டிருந்த தாலியைக் கண்டதும் சூரவேல் தான் பிடித்திருந்த பன்றியை மெல்ல கைநழுவ விட்டான். ஆனால் வேம்பு துள்ளி அதன் கால்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். பன்றி தன்னைப் பிடித்துவிட்டார்களென வீல் வீலெனக் கத்தியது. ``உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா'' வேம்புவிற்கு சூரன் என்ன கேக்கிறான் என்பது பன்றியின் சப்தத்தில் பிடிபடவில்லை. அல்லது, கேட்டும் கேட்காதது போலிருந்தாள். அதற்குள் எல்லா ஆட்களும் வந்து பன்றியின் கால்களைக் கட்டி அதை மரத்தடிக்கு எடுத்துப் போனார்கள். அது வழியெல்லாம் சப்தமிட்டுக் கொண்டேயிருந்தது. வேம்பு அவர்களிடம் கேட்டாள். ``இருளிய அவுத்துவிட இன்னும் எத்தனை நாள்ணே இருக்கு.''

ஏழு கடல்... ஏழு மலை... - 10

``தெரியல வேம்பு. அடுத்த வாரம்னு சித்தப்பா சொன்னாரு.''

``ம்... போயி நல்லா பருத்த கயிறு வச்சிக் கட்டிப் போடுங்க. திரும்ப அறுத்துக்கிட்டு ஓடிறப்போகுது.''

ஏழு கடல்... ஏழு மலை... - 10

``செரி''

வேம்பு தன் சித்தப்பாவிடம் ``உடம்பெல்லாம் சேறு ஆகிடுச்சு. போயி குளிச்சிட்டு வாரேன். வந்து மயிலாத்தாளுக்கு சாமி கும்பிடலாம்'' என்று சொல்லிவிட்டு ஆற்றுக்குக் கிளம்பினாள்.

சூரனுக்கு என்னவோ போலிருந்தது. தனக்குள் எரிந்துகொண்டிருந்த ஏதோவொன்று சட்டென அணைந்துவிட்டதைப்போல் உணர்ந்தான். அங்கிருந்த பெண் ஒருவள் அவன் நெற்றியிலிருந்து காயத்திற்கு மஞ்சள் அரைத்து வைத்தாள். அவன் தன் சேற்றுக்கரை படிந்த அதே உடையோடு அப்படியே அமர்ந்திருந்தான். தூரத்திலிருந்து கெங்கையன் அவனை அழைத்தார்.

``என்னடா அடி பெலமா'' அவன் நெற்றியைப் பார்த்தார். ``வேஷ்டிலாம் சகதியா இருக்கு ஆத்துல போயி கழுவிட்டு ரெண்டு முங்கு முங்கிட்டு வா. போ''

அவன் இதுதான் சமயம் என்று நினைத்துக் கொண்டு ஆறிருக்கும் திசை நோக்கி நடந்தான். பாதி வழியில் எதிர் திசையில் அலசிய ஈர உடையைப் பிழிந்தபடி வேம்பு வந்து கொண்டிருந்தாள். அவள் அவனைப் பார்க்காதது போல் நடக்கத் துவங்கினாள். அவனைக் கடந்து செல்லும் போதும்கூட அவன் முகத்தைப் பார்க்காமல் எங்கோ பார்த்தபடி கடந்து வேகமாகப் போனாள். பின்னால் திரும்பி ஓட்டமும் நடையுமாய்ச் செல்லும் வேம்புவை அழைத்தான்.

``வேம்பு...''

அவள் கேட்டும் கேட்காதது போல் நடந்தாள். பொறுமையிழந்தவனைப்போல் கனத்த குரலில் கத்தி அழைத்தான். ``வேம்பு’’

இப்போது அவள் நின்றாள்.

வேகமாக அவள் அருகில் போனான். ``நான் இங்கயிருந்து போகப்போறேன். எனக்கு இந்த வேல வேண்டாம்.''

``செரி. அத ஏன் என்கிட்ட சொல்ற. என் சித்தப்பாகிட்ட சொல்லிட்டுக் கிளம்பு.'' சூரனுக்கு அவள் பேச்சு முகத்திலடித்தாற்போலிருந்தது.

``வேம்பு, உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சா?'' அவள் அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு பதில் பேசாமல் நடந்து போனாள். சூரனுக்குக் கோபம் கோபமாய் வந்தது. வேகமாய் ஓடி ஆற்றில் பொத்தெனக் குதித்தான்.

குளித்துவிட்டு அதே துணியை அலசிப் பிழிந்து உடுத்தி மீண்டும் சூளைக்கு வந்தபோது அங்கு எல்லோரும் மாமர நிழலில் நின்று கொண்டிருந்தார்கள்.

ஏழு கடல்... ஏழு மலை... - 10

வேகமாக அவன் அங்கு சென்ற போது வேம்பு மயிலாத்தா சாமிக்கு தீபம் காட்டிக் கொண்டிருந்தாள். காலையில் இருந்ததைப் போலவே அவளுக்கு சன்னதம் வந்து கொண்டிருந்தது. உடல் ஒரு இடமாய் தரையில் நிற்காமல் அதிர்ந்துகொண்டேயிருந்தது.எல்லோரிடமும் தீபத்தை நீட்டினாள். எல்லோரும் தொட்டு கண்களில் ஒத்திக் கொண்டார்கள். இறுதியாக சூரனின் முன் தீபத்தைக் காட்டி நின்றாள். அவனுக்கு வணங்குவோமா வேண்டாமா என்று இருந்தது. வேறு வழியில்லாமல் தீபத்தைத் தொட்டு கண்களில் ஒத்திக்கொண்டான். வேம்பு எல்லோர் முன்னிலும் விபூதியைத் தொட்டு அவன் நெற்றியில் இழுவினாள். வேம்புவிற்கு இப்போது உச்சமாய் சன்னதம் வந்தது.

சூரனின் முன்னால் கண்களை இறுக்கமாய் மூடியபடி நிலைகொள்ளாமல் ஆடியபடி நின்றாள். அடிக்கொருதரம் ஸ்ஸ்... ஸ்ஸ்ஸ் என்று மூச்சை வெளியேற்றி ஏதோ பேசத் துவங்க ஆயத்தமாவதைப்போல் நின்றாள். எல்லோரும் வேம்புவை நோக்கிக் கும்பிட்டவாறு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

``ஏன்டா என் எல்லைய விட்டுப் போகணும்னு தீர்மானிச்சிட்டியா. என்ன விட்டுட்டு எங்க போவ... ம்ம்... போயிருவியா... ம்... இங்கயிருந்து போயிருவியா... ம்... சொல்லு போயிருவியா'' அதட்டலுடன் கேட்டாள்.

சூரன் தன் நெற்றியைச் சுருக்கியபடி முகத்தில் சிறிய கலவரத்தோடு வேம்புவைப் பார்த்தபடி நின்றான். அவன் கரங்கள் அவளை நோக்கிக் கும்பிட்டபடியிருந்தது.

- ஓடும்