
இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்
‘`நான் உன்னைத் தேடிப் பயணித்தபோது
நீ என்னைத் தேடிப் பயணித்துக்கொண்டிருந்தாய்.’’
- பராரிகள்
தந்தை வழி ( 1933 - மழைக்காலம் )
அந்த மழை இரவில் யாரோ தன்னை உசுப்புவதை உணர்ந்து எழுந்து அமர்ந்தார் கொம்பையா. அங்கு பேச்சியம்மா கையில் அரிக்கேன் விளக்கை ஏந்தியபடி நின்றுகொண்டிருந்தாள். ஒரு நிமிடம் திகைப்பாயிருந்தது. சுற்றுமுற்றும் யாரும் இருக்கிறார்களாவெனக் கழுத்தைத் திருப்பிப் பார்த்தார். அடைமழை நாளென்பதால் நல்ல வேளையாக தெருக்களிலும் சாவடியிலும் யாருமில்லை. தூரத்தில் கண்மாய்ப் பக்கமாக எங்கோ பெரிய இடி விழுந்தது. அதன் தொடர்ச்சியாக வானத்தில் மின்னலும் பளிச் பளிச்செனக் கைநரம்புபோல் ஒளிக்கோடு போட்டுக் காட்டியது.
``இந்த நேரலத்துல இங்க ஏம்மா வந்த...''
மீண்டும் ஒருமுறை யாரும் வருகிறார்களா வெனப் பார்த்தார்.
``யாராவது பாத்துறப் போறாங்க. நல்லாருப்ப, வீட்டுக்குப் போம்மா.''
பேச்சியம்மாவின் முகத்தைப் பார்த்தார். வெடித்து அழுதுவிடுபவளைப்போலிருந்தாள்.உதடு நடுங்குவதைப்போல் விம்மியது. சிறியதாய் அழுதபடியே சொன்னாள். ``நீங்க போயிருப்பீங்களோன்னு நினைச்சிட்டேன்.'' அழுதாள். சப்தம் வெளியேறமுடியாமல் தன் சேலை நுனியை பெரிதாய் எடுத்துப் பற்களிடையே வைத்துக் கடித்துக்கொண்டு கேவினாள். யாராவது பார்த்தால் நிச்சயம் பிரச்னையாகிவிடும் போலிருந்தது. கொம்பையா ``அழாதம்மா... என்னன்னு சொல்லு’’ என்று சொல்லியபடி மீண்டும் மீண்டும் சுற்றுமுற்றும் பார்த்தார்.

பேச்சியம்மா பேசாமல் இன்னும் கேவிக்கொண்டிருந்தாள்.
கொஞ்ச தூரத்தில் ஏதோ ஒரு வீட்டின் மரக்கதவு மெல்லத் திறக்கும் சப்தம் கேட்டது. கதவு செருகியிருக்கும் அச்சுக்குப் பல வருடங்களாய் மசகு போட்டிருக்க மாட்டார்கள் போல. எதிலோ சிக்கிக்கொண்டு கத்தும் எலியின் குரல்போல ஒரு சப்தம். ``ஸ்ஸ்...'' கொம்பையா மெல்ல எச்சரிக்கை சப்தம் செய்தபடி பேச்சியம்மாளிடமிருந்து அரிக்கேன் விளக்கைப் பிடுங்கி மஞ்சள் வெளிச்சத்தை ஊதி அணைத்தார். மொத்த ஊரும் இருள் பிடித்து நிற்கையில் இங்கு மட்டும் சிறு வெளிச்சம் தெரிந்தால் யாராவது கவனித்து வரக்கூடும். இப்போது ஊரின் கரிய இருளுக்குள் அவர்களும் கரைந்து நின்றார்கள்.
கதவைத் திறந்துகொண்டு வந்த உருவம் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அருகிலுள்ள வீட்டின் சுவரில் மூத்திரம் பெய்தது. பின் யாரும் இருக்கிறார்களாவென சாவடியை உன்னிப்பாய் கவனித்துப் பார்த்தது. இருவரும் எந்த அசைவும் காட்டாது இருளுக்குள் நின்று கொண்டார்கள். இந்த நேரத்தில் மின்னல் ஏதும் வெட்டாமலிருக்க வேண்டும். பூந்தூறலாய்ப் பெய்த மழை இப்போது பருந்தூறலாய்த் துவங்கியது. வெளியே வந்த உருவம் வீட்டிற்குள் ஓடிப்போய் மீண்டும் கதவை வேகமாக சாத்தியது. ``க்ரீச்...'' தலை நசுக்கப்பட்ட எலியின் சப்தம் போல் சிறிய சப்தம். கொம்பையாவிற்கு ஆசுவாசமாயிருந்தது. டப டபவென… வெடிமருந்து வெடிப்பதுபோல் தொடர்ச்சியான இடி சப்தம். பெரிய பெரிய மின்னல் வெட்டுகள். அந்தக் கீறல் கீறலான வெளிச்சத்தில் அழுகையும் பயமுமான பேச்சியம்மாளின் முகத்தைப் பார்த்தார்.
``இப்பவாச்சும் சொல்லு. என்ன விஷயம்?''
``நன்றி சொல்லணும். சொக்கரான், சொந்தக்காரன்கூட அருவருப்பு பாத்து தூக்கிட்டு வரமாட்டான். நீங்க அவரு உடம்ப தூக்கிட்டு வந்திருக்கீக. அதான். நன்றி சொல்லணும்'' பேச்சியம்மா கையெடுத்துக் கும்பிட்டாள்.
``இதுக்கெதுக்கு நன்றிலாம். அதெல்லாம் ஒண்ணுமில்ல. செரி நீ கிளம்பு.''
``ம்’’
கிளம்பாமல் பேச்சியம்மா அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தாள். அவளுக்கு அழுகை இன்னும் முகமெல்லாம் முட்டிக்கொண்டு நின்றது. அவள் கண்களால் மட்டுமல்லாமல் முகத்தின் அத்தனை உறுப்புகளாலும் அழுதாள். நெற்றி சுருங்கியும், மூக்கு விடைத்து விடைத்து அடங்கியும், உதடுகள் நடுங்கியபடியும், தாவங்கட்டை துடித்தபடியுமிருந்தது.
கொம்பையாவிற்குப் பாவமாய் இருந்தது. பேச்சியம்மாளைப் பார்த்துக்கொண்டிருந்தார். மீண்டும் ஒருமுறை ``போ'' என்று சொல்ல என்னவோ போலிருந்தது.
கண்ணீர் வழிய மருகியபடி சொன்னாள் ``பயமா இருக்கு...''
``எப்படி வாழப்போறேன்னு பயமா இருக்கு'' எங்கோ தொலைந்து நிற்கும் சிறு பிள்ளைபோல் தெரிந்தாள்.
``எங்கூரு பிள்ளகளோட கிண்டல், கேலி, ஊஞ்சல், நீச்சல்னு காடு கரய சுத்திக்கிட்டு... கொலுசு சத்தமும் சிரிப்பு சத்தமுமா எப்படி சந்தோசமா திரிஞ்சேன். முழுசா நாலு வருஷம்கூட வாழல... அதுக்குள்ள இப்படி ஆகணும்னு இருக்கு'' சேலையைக் கடித்துக்கொண்டு அழுதாள்.
அவருக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. அழாதே, அழாதே என்று மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேயிருந்தார். யாரும் பார்த்து விடுவார் களாவென அடிக்கொருதரம் சுற்றிச் சுற்றிப் பார்த்துக்கொண்டார்.
``கடாக்கறிய கூறு வைக்கிற மாதிரி இப்போவே என் வீட்ல கொஞ்ச நா இருந்துக்கோ, அவன் வீட்ல கொஞ்ச நா இருந்துக்கோ, என் வீட்டோட இருந்திடு... நான் உன்ன நல்லா வச்சிக்கிறேன்னு தம்பி பொண்டாட்டிய பங்கு போடு றானுங்க. ஆத்துல, கிணத்துல உழுந்து செத்துரணும் போல இருக்கு'' தேம்பினாள்.
``ந்தா இந்த மாரிலாம் பேசாதம்மா.''
அசையாது தலையைக் குனிந்தபடி நின்று கொண்டிருந்தாள். அவள் அழும் ஒவ்வொரு துளியும் ஈரத்தரையில் மழைநீரோடு விழுந்துகொண்டிருந்தது. சிறிது நேரத்தில் மழையும் நின்று மரக்கிளைகளிலிருந்து மட்டும் ஓரிரண்டு துளிகள் விழுந்தன. அப்போதும் பேச்சியம்மா அழுதுகொண்டிருந்தாள்.
கொம்பையாவிற்கு அந்தப் பெண்ணை எப்படி அவள் வீட்டிற்குத் திருப்பி அனுப்பி வைப்பதெனத் தெரியவில்லை.
``எனக்கு என்ன சொல்லணும்னு தெரியல. யாராவது பாத்தா தப்பாயிடும். ஊர்ல பெரிய தலக்கட்டு...''
அவர் ஏதாவது பெரியதாய் ஆறுதல் வார்த்தை சொல்வார் என்று எதிர்பார்த்திருந்த பேச்சியம்மாளிற்கு ஏமாற்றமாயிருந்தது.
``வீட்ல அவர் கையில சுத்தியிருந்தது மாதிரி நூத்துக்கணக்குல பித்தள மணி கிடக்கு. ஏன் எதுக்குன்னு தெரியல. கேப்ப போட்டு வச்சிருக்கிற தானியக் குதிர்க்குள்ள கைய விட்டா ஒவ்வொரு கை கேப்பைக்கும் ஒரு பித்தள மணி வருது. அவர் திருடிக் கொண்டாந்து வச்சாரான்னு தெரியல. மூணு தலைமுறைக்கி உக்காந்து சாப்பிட சொத்து கிடக்கு. ஏன் இந்த ஈனப் பய காரியத்த செஞ்சாருன்னு விளங்கல... நான் கிளம்புறேன்'' அழும் கண்களைத் துடைத்துக்கொண்டு விறுவிறுவென வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினாள். கொம்பையா பின்னாலேயே நடந்தார். மொத்த ஊரும் துலங்கத் தெரியும்படி பெரிதாய் மின்னலொன்று வெட்டியது.
பேச்சியம்மாள் பெரியவீட்டின் மரக்கதவைத் திறந்து கோட்டைச்சுவருக்குள் நுழைந்தாள். கொம்பையா தன் கழுத்தளவிருக்கும் கோட்டைச்சுவரின் வெளியே நின்றுகொண்டார்.
காளை மாடு ``ம்ம்மா... ம்ம்மா’’வென சப்தமிட்டு அழைத்தது. பேச்சியம்மாவிற்கு அப்போதுதான் ஏதோ ஞாபகம் வந்ததுபோல். மாட்டுத்தொழுவத்திற்குள் ஓடினாள். தன் கணவனின் உடலைத் தூக்கி வர வழிகாட்டிய அந்தக் காளையின் கழுத்தைக் கட்டி அணைத்து சப்தம் வராமல் ஏங்கி ஏங்கி ஊமை அழுகை அழுதாள். ``அய்யா பாண்டி, இனிமே நான் என்ன பண்ணுவேன். யாருகிட்டன்னு போயி அழுவேன். நாதியில்லாமப்போயிட்டேனே...’’
ஏதோ யோசித்து ``ய்யா பாண்டிசாமி, நான் கூளம் அள்ளிப்போடாம நீ சாப்பிடமாட்டீயே... நாலு நாளா சாப்பிடாமக் கிடக்குறியா...’’ விறுவிறுவென அழுத மூக்கைச் சீந்தி புடவையில் துடைத்துக்கொண்டு தலை முடியை அள்ளிக் கோடாரிக் கொண்டை போட்டுக்கொண்டு கூளம் கொண்டுவந்து போட்டாள். கழனிப் பானையிலிருந்து எடுத்துவந்து தண்ணி வைத்தாள். நான்கு நாள்களுக்குப் பிறகு காளை இன்றுதான் உணவு எடுத்தது. சாப்பிடும்போது பேச்சியம்மா அதன் நெற்றியைத் தடவிக் கொடுத்துக்கொண்டேயிருந்தாள். திடீரென ``உன்னை விட்டுட்டு நான் எப்படி சாவ...பாண்டி'' வாய்விட்டுக் கதறி அழுதாள். அதன் முன்னங்காலடியில் அழுதபடி அப்படியே அந்த மண் தரையில் உட்கார்ந்துவிட்டாள். காளை பேச்சியம்மாள் கையைத் தன் நாவால் நக்கி நக்கிக் கொடுத்தது.
கொம்பையா வீட்டின் கோட்டைச்சுவர் வெளியே நின்று எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். யாரோ வரும் அரவம் கேட்டு அங்கிருந்து கிளம்பினார். மீண்டும் மழை பெரிதாக ஆரம்பித்தது. ஊரை விட்டு வெளியேறி கண்மாய்ப் பாதைக்கு நடக்க ஆரம்பித்தார்.
பேச்சியம்மாள் பின்னால் திரும்பிப் பார்க்கையில் இறந்தவனின் தாய் நின்று கொண்டிருந்தாள். வந்தவள் அவளின் தலையில் கைவைத்து மெல்லத் தடவிக்கொடுத்தாள்.பேச்சியம்மாளுக்குக் கண்ணீர் சுரந்துகொண்டு வந்தது. ``ஏ... அத்த எனக்கு பயமா இருக்கு. பயமா இருக்கு…’’ வந்தவளும் அவளின் அருகில் மண் தரையில் அமர்ந்தாள். அவளின் தலையை ஆதுரமாய்த் தடவிக் கொடுத்தபடியே கேட்டாள், ``இங்கயிருந்து போகணுமா?’’ பேச்சியம்மாள் ஒன்றும் பேசவில்லை. முழங்கால் போட்டு அமர்ந்தபடி அத்தையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு கேவிக் கேவி அழுதாள்.
``நாஞ் சொல்றேன், இங்கயிருந்து போயிரு…உன் அம்ம வீட்டுக்குப் போறியா?''
பேச்சியம்மாள் வேண்டாம் என்று மறுப்பது போல் தலையாட்டினாள்.

``வேணாம். நீ அங்கயும் போக வேணாம். அங்கயும் உன்ன மூலையிலதான் உக்கார வப்பாங்க. வேற எங்கயாவது போ. எப்படியாவது வாழ்ந்திரு. சாக மட்டும் முடிவெடுக்காத...செரியா?''
``நானும் புருஷன் செத்து இருபது வருசமா வெள்ளச் சீலக்காரியா, மூளியா இங்குன மூலையிலதான் கிடக்கேன். ஒரு நல்லது பொல்லதுக்கு முன்னாடி நிக்க விட மாட்டாய்ங்க.வண்ணத்துல ஏதும் உடுத்திரக் கூடாது. கழுத்துல கையில பவுன் போடக் கூடாது. போச்சி...எல்லாம் நிர்மூலமாப் போச்சி. அந்த ஆளு குடிச்சி தரங்கெட்டுச் செத்ததுக்கு என் தாலிய எதுக்கு அறுத்தாய்ங்க. பூவும் பொட்டும் வெக்கக் கூடாதுங்குறாய்ங்க... காடு கரைக்கிப் போனா இந்த வெள்ளச் சீலைல பச்சையா நாலு ஒட்டுப்புல்லு ஓட்டுனா எவ்வளவு சந்தோசமா இருக்கும் தெரியுமா?’’
``பத்து பன்னெண்டு வருசத்துக்கு முன்னாடி ஒருக்கா, வீட்ல யாரும் இல்லன்னு ஆசயா மரப் பெட்டியில இருந்து எடுத்து பட்டு உடுத்தி, கனகாம்பரம் வச்சி, நெத்தில பொட்டு வச்சி, கண்ணுல மை இழுத்து நிறஞ்ச பித்தளப் பான தண்ணில என் முகத்தப் பாக்குறேன். எனக்கு அழுகையா வந்துருச்சி. இப்படி வாழணும்னு பிரயாசையா இருந்துச்சி. எங்கயோ போன மூத்தவன் வந்து தடிச்ச வார்த்தையால எப்படி ஏசுனான் தெரியுமா? சொல்லு. முப்பத்தெட்டு வயசுல எல்லாத்தையும் இழந்துட்டு நான் ஏன் இப்படிக் கெடக்கணும். கேட்டா விதி, மயிருன்னு என்னத்தையாது சொல்றது. இவய்ங்க செத்துட்டா நமக்கும் எல்லாமே செத்துப் போயிரணுமா, ஒரு ஆச பாசம் இருக்கக் கூடாது. இவய்ங்க அறுபது வயசுல கூட கட்டிப்பாய்ங்க. நானாவது பரவால, பதிமூணுல கல்யாணம் செஞ்சிட்டு முப்பத்தெட்டுல தாலி அறுத்தேன். நீ பாவம்டி...சின்னப் புள்ள. இளங்குருத்து... இன்னும் வாழணும்.’’
தன் அத்தையின் கழுத்தை இறுக்கமாய்க் கட்டிக்கொண்டு கேவிக் கேவி அழுதாள். ``சத்தம் போட்டு அழாத... முழிச்சுப் பாய்ங்க..''
கொம்பையா கண்மாய் மேட்டில் நனைந்தபடி போய்க்கொண்டிருந்தார். பெரிய இடி சப்தத்தைப் போல் ஓங்கி ஓங்கிக் கத்தி அழ வேண்டும் போலிருந்தது. கிழக்கு திசையில் வெட்டும் ஒவ்வொரு மின்னலுக்கும் அந்த வெள்ளை வெளிச்சத்தில் தூரத்தில் தெரியும் ஊரிலிருந்து பேச்சியம்மா முகம் தெரிகிறதாவென அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்தபடி போனார். ``அழாத. என்கூட கிளம்பி வா, நான் பாத்துக்குறேன்...'' என்றும் ``அவக தாய் தகப்பன் பாத்துப்பாக நமக்கென்ன அக்கற’’ என்றும் மனம் ஒத்தையா ரெட்டையா போட்டுக் கொண்டிருந்தது. ஆனாலும் பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நடந்து போனார்.
அதிகாலையில் மதுரை செக்கானூரணி கால்நடைச் சந்தைக்கு வந்து சேர்ந்தார். மழை பெய்த ஈரமண்ணைப் பார்க்கும் போதெல்லாம் முந்தைய நாளின் பேச்சியம்மா ஞாபகம்தான் வந்தது. வந்திருந்த யாரிடமோ காத்தான் வண்டிப் பட்டறை போட்டிருக்கிறாரா என்று கேட்டார். இல்லையென்று பதில் வந்ததும் கொம்பையாவிற்கு இதைப் பற்றி வேறு யாரிடம் பேசலாமென யோசனையாயிருந்தது. கயிற்றுக்கடை பால்சாமியைத் தேடினார். அவர் கயிற்று யாவாரத்தில் மும்முரமாக இருந்தார். மீண்டும் மரத்தடிக்கு வந்தார். மனம் ஒரு இடத்தில் நிலைகொள்ளாமலிருந்தது. முடிவு எடுக்க முடியாமல் குழப்பமாயிருந்தது. காலையிலிருந்து ஒரு வாய் சோறு உண்ணவில்லை. மாலை வரத் துவங்கியது. இன்னும் தீவிரமாய் பேச்சியம்மாள் ஞாபகம் வரத் துவங்கியது. ``ஆனது ஆகட்டும்னு நேற்றே கையோட அழச்சிட்டு வந்திருக்கணும். அங்கயே விட்டுட்டு வந்து மடத்தனம் பண்ணிட்டேன்'' தன்னைத்தானே திட்டிக் கொண்டிருந்தார்.
``ஆனா அப்படி அழுதுகிட்டு நின்னாலும் என்கூட வந்திடுறியான்னு ஒரு வார்த்த கேக்கத் துணிவில்லையே.’’
``அப்படியே கேட்டுட்டாலும் அந்தப் பொண்ணுக்கும் வர விருப்பம் இருக்கணும்ல.''
``நீயே சந்த சந்தையா சுத்திக்கிட்டு கிடக்குற நாடோடிப் பய. அந்தப் பொண்ண வச்சிக்கிட்டு நீ போற இடத்துக்கெல்லாம் கூட்டிட்டு சுத்தப் போறியா?’’
``அங்க கிடந்து துயரத்த அனுபவிக்கிறதுக்கு இந்த நாடோடிப் பொழப்பு தேவலதான.''
அவர் மனசுக்குள் பெரிய தர்க்கம் ஓடிக்கொண்டிருந்தது. மாலை இரவாகக் கவியத் துவங்கிய நேரத்தில் ஒரு முடிவெடுத்தவராகத் துண்டை உருமால் கட்டிக்கொண்டு சந்தையிலிருந்து கிளம்பினார்.
நாலெட்டு வைத்திருக்க மாட்டார். எதிரில் பெரியவீட்டின் ஆட்கள் திபுதிபுவென இருபது முப்பது பேர் ஆவேசமாய் சந்தைக்குள் வந்தார்கள். அவர்கள் கையில் இரும்பு ஆயுதங்கள் இருந்தன. கொம்பையா அதே இடத்தில் நின்றார். இறந்த ராசுவின் அண்ணன்தான் பேசினார். ``அந்த புள்ளய எங்கடா. மரியாதையா ஒப்படச்சிட்டு போயிடு.’’
``எனக்கு சத்தியமா தெரியாதுங்க. என்கூட வரல.’’
``உன்கூட வரலயா. அப்போ என்ன மயித்துக்கு நேத்து ராவெல்லாம் சாவடில நின்னு பேசுனீங்களாம்?''
``ஏ இந்தப்பா... இவன்கிட்ட என்ன நின்னு பேசிக்கிட்டு இருக்குற. நாலு போடு போடுவியா.’’
கொம்பையா அவர்களிடம் அழுத்தமாகவும் கோபமாகவும் கத்தினார். ``சொல்றேன்ல, என்கூட வரல.''
``அப்போ ராவுக்கு அந்தப் புள்ளக்கூட நின்னு பேசலன்னு சொல்றியா?’’ அருகிலிருந்த ஒருவனைப் பார்த்து முறைத்தார். அவன்தான் அவர்களை ஒரு சேர மழை இரவில் பார்த்தாய் இவருக்குத் தாக்கல் சொல்லியிருக்க வேண்டும்.
``சாவடில நின்னு பேசுனது உண்மதான். அந்தப் புள்ள புருஷன் பொணத்த தூக்கிக் கொண்டாந்ததுக்கு நன்றி சொல்லணும்னு வந்துச்சி. மத்தபடி வேற ஒண்ணுமில்ல.’’
``பேசிக்கிட்டு நிக்கிறாய்ங்க பாரு...’’ முந்தைய நாள் குடித்துவிட்டு சண்டையிட்ட ராசுவின் சித்தப்பா ஓங்கிக் கொம்பையாவின் நெஞ்சில் எத்தினார். கொம்பையா கீழே தடுமாறி விழுந்தார். விழுந்த கொம்பையாவை மேலும் நாலைந்து பேர் கம்புகொண்டும், கயிற்றாலும் சரமாரியாகத் தாக்கத் துவங்கினார்கள். சந்தைக்குள் களேபரமாய் ஆனது. கூட்டம் கூடியது. கயிற்றுக் கடை பால்சாமி கொம்பையாவை அடிப்பவர்களை எதிர்க்க ஆள் திரட்டி நின்றார். கொம்பையாவின் பக்கம் நூற்றுக்கும் மேல் ஆட்கள் நின்றார்கள்.
பால்சாமி கறாராகச் சொல்லிவிட்டார். ``அவன அடிக்கிற சோலியெல்லாம் வச்சிக்கக் கூடாது. அப்புறம் சந்தையிலயிருந்து பொணமாத் தான் வீட்டுக்குப் போவீங்க. அவன் நல்ல பய. பொய் பேச மாட்டான். மேக்கொண்டு விசாரிக்கணும்னா நாளைக்கிக் காலையில பாண்டி கோயிலு பஞ்சாயத்தக் கூட்டுங்க. அங்குன நாலு பெரிய மனுஷய்ங்கள வச்சி பஞ்சாயத்து பண்ணிக்கலாம். இவனுக்கு நான் ஜவாப்தாரி. காலையில நான் கூட்டியாறேன். இப்போ கிளம்புங்க’’ அவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள்.

``ஏ... நீ ஏம்பா மறுகிட்டு நிக்கிற. எங்கயோ கிளம்புனன்னு நினைக்கிறேன். போயிட்டு வா. காலையில பேசிக்கலாம்.''
கொம்பையா எங்கேயும் போகாமல் மீண்டும் மரத்தடிக்குப் போனார். சந்தை இருளத் துவங்கியது. அங்கங்கு ஒரு சிலர் அரிக்கேன் விளக்கை ஏற்றி வைத்தார்கள். சிறியதாய் மழைத் தூறல் போடத் துவங்கியது. அப்போது யாரோ இருவர் கொம்பையாவை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். யாராக இருக்குமென்று இருளுக்குள் உன்னிப்பாகப் பார்த்தார். நெருங்கி வரும்போது கண்டுவிட்டார். அவர் முகம் ஆச்சர்யமும் சந்தோஷமுமாய் பிரகாசமானது. பேச்சியம்மாளும் காத்தானும் வந்து நின்றார்கள். ``நீ சந்தையிலதான் கிடப்பன்னு தெரிஞ்சி அந்தப் புள்ள திருப்புவனம் சந்தைக்கி வந்துருச்சி. இங்க பக்கத்துல எங்க சந்த நடக்குதுன்னு விசாரிச்சிருக்கும்போல... நான் பாத்துக் கூட்டியாந்தேன்.’’
கொம்பையா பேச்சியம்மாளைப் பார்த்தபடி நின்றார். அந்தப் பெண் நேற்றைப்போலவே அப்போதும் குனிந்தபடி அழுது கொண்டுதானிருந்தாள். ``இப்போம் என்ன பண்ணுறதா உத்தேசம்?’’ கொம்பையாவிடம் கேட்டார்.
``அந்தப் பொண்ணுகிட்டயும் பலதடவ கேட்டுட்டேன். பொறந்த வீட்டுக்கும் போகமாட்டேன். புருஷன் வீட்லயும் வாழ மாட்டேன்னு சொல்லிடுச்சி.''
இருவரும் நெடுநேரம் அமைதியாக இருந்தார்கள். ``நான் ஒண்ணு சொல்றேன்.ஏத்துக்குவீங்களா..?'' அப்போதும் அமைதியாக இருந்தார்கள். சட்டென இருவரின் கையையும் பிடித்து ஒருவர் கைக்குள் ஒருவர் கையைத் திணித்து வைத்தார். பேச்சியம்மாள் சட்டென நிமிர்ந்து கொம்பையாவைப் பார்த்தாள்.
அதே நேரம் கொஞ்சம் முன்பு கிளம்பிய பெரிய வீட்டின் ஆட்கள் நாலைந்து பேர் மீண்டும் சந்தைக்குள் நுழைந்தார்கள்.
``உன்னோடு உடன் பயணிக்க எத்தனை ஆண்டுகளாய் இந்தச் சாலையில் காத்திருக்கிறேன்.’’
- பராரிகள்
மகன் வழி (1977 - மழைக்காலம்)
வேம்புவிற்குக் கற்பூரம் காட்டி சாமி இறக்கினார்கள். சூரவேலுக்குக் குழப்பமாயிருந்தது. ஒரு நேரம் பன்றி பிடிக்க சேற்றுக்குள்ளயும் சகதிக்குள்ளயும் இறங்குறா. அடுத்த நிமிஷமே சாமி இறங்கி ஆடுறா. இவ யாருன்னு ஒண்ணும் புரியலயே என்று மன ஓட்டமாயிருந்தது.

``ஏன், பன்னி பிடிக்கிறவளுக்கு சாமி வரக் கூடாதா?''
மனசுக்குள் பேசியது இவளுக்கு எப்படிக் கேட்டது என்று சூரனுக்கு ஆச்சர்யமாயிருந்தது. கல்லெறிந்ததால் அவன் நெற்றியில் பட்டிருந்த காயத்தை அருகில் வந்து பார்த்தாள். இப்போது அவளின் முகத்தில் அன்பும் காருண்யமும் ஒரு சேர சுரந்துகொண்டு வந்தது. அவன் காயத்தைப் பார்த்தபடியே கேட்டாள்.
`` இங்கயிருந்து எப்போ கிளம்புறதா உத்தேசம்...ம்’’ சிரித்துக்கொண்டே கேட்டாள். தன் தலையை மெல்ல சாமி ஆடுவதுபோல் ஆட்டியபடியே கண்களை மேல் நோக்கிச் செருகிக்கொண்டு ``சொல்லு... என் எல்லைய விட்டுப் போயிருவியா...ம்... இங்கயிருந்து போயிருவியா... ம்... சொல்லு போயிருவியா?’’
சூரனுக்குக் கோபமாய் வந்தது. ``ஏய்... சாமி இறங்குன மாதிரி நடிச்சியா? சொல்லு... சாமி விசயத்துல போயி இப்படி ஏமாத்துறியே... ச்சே’’
``இப்போ ஏமாத்தி உன்கிட்டயிருந்து என்னத்த எடுத்துக்கிட்டுப் போய்ட்டேன் சொல்லு... ம்’’ நக்கலும் சிறிய கோபமுமாய்க் கேட்டாள்.

``அப்பப்போ எனக்கு சாமி வரும். எப்பயுமே இல்ல.’’
``இன்னிக்கி வந்ததது உண்மையான சாமியா?’’
``அது எதுக்கு உனக்கு. மயிலாத்தாளோ, வேம்பாத்தாளோ... மனுஷியோ, சாமியோ...கேட்டதுக்கு உங்கிட்ட என்ன பதில்?’’
``எதுக்கு என்ன பதில்?''
``என் எல்லைய விட்டுப் போயிருவியா?''
``ஆமா... போகத்தான் போறேன்.''
``ஏன் போற... இங்குன இரு.''
``எனக்கு உன்னப் பத்தி ஒண்ணுமே புரியல.. வேம்பு.’’
``என்ன புரியணும்... என்ன தெரியணும், கல்யாணம் ஆகிடுச்சான்னு, அதான..?''
சூரன் அமைதியாக இருந்தான்.
``அதான... கேக்குறேன்ல. சொல்லேன்.''
``ம்’’
``ஆமா கல்யாணம் ஆகிடுச்சு. அதுக்கென்ன இப்போ...''
விருட்டென அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான்.
``அதுக்கென்னவா...''
கோபமாய்க் கேட்டாள். ``உங்களுக்கெல்லாம் என்னதாண்டா பிரச்சன. இந்த மஞ்சக் கயறா. ம்... ஆமாண்டா, இது முத்தாளம்பட்டிக்காரன் கட்டுன தாலிதான். அவன்கூட படுத்துருக்கேன். ஒரு நா, ரெண்டு நா இல்ல, மாசக்கணக்குல. ஏன், நெதம் நெதம்... மாசத்துல மூணு நாளக்கூட விடமாட்டான். வராட்டி அடிப்பான். இந்த முழங்காலுக்கு மேல முழுக்க அவன் பீடிக் கங்குல வச்ச சூட்டுத்தடம்தான்...
எனக்கு உடம்பு இருக்குன்னு மட்டும்தான் அவனுக்குத் தெரியும் மனசுன்னு ஒண்ணு அவனுக்குத் தெரியாது. ஏன் இங்க எவனுக்கும் தெரியாது. உனக்கும் சேத்துதான் சொல்றேன்...

முத்தாளம்பட்டிக்காரன் எந்த மனுஷனுக்கும் பயப்பட மாட்டான். ஆனா சாமிக்குனா மட்டும் பயந்து சாவான். அதான் அவன் எப்போ படுக்கக் கூப்புட்டாலும் மயிலாத்தா இறங்குனதா பாசாங்கு போடுவேன். சாமி தொடையில சூடு வெய்க்க பயப்படுவான்ல... இவளோட வாழ முடியாதுன்னு கொஞ்ச நாளுல அவனே கொண்டாந்து விட்டுட்டுப் போய்ட்டான்.
எப்பாவது உண்மையி லேயே மயிலாத்தா என் உடம்புல இறங்குவா தெரியுமா? எனக்குள்ள மட்டும் இல்ல, எல்லாப் பொம்பளைங்களுக்கும் இறங்குவா...''
சூரன் அதிர்ச்சியும் இரக்கமுமாய் வேம்புவைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
வேம்பு அழவில்லை. இறுமாப்பாய் இருப்பது போல் உடல் மொழியை வைத்துக்கொண்டாள்.
``சும்மா இந்தப் பார்வைலாம் பார்க்காத... நீதான் போறேன்னு சொன்னேல்ல... போ.’’
சூரன் பதில் ஏதும் பேசாமல் இருந்தான்.
தூரத்தில் வாழை இலையை எடுத்துக்கொண்டு வரிசையாய் எல்லோரும் மரத்தடியில் சாப்பிட அமர்ந்தார்கள். எல்லோரும் வேம்புவை அழைத்தார்கள். வேம்பு சூரனை சாப்பிட அழைத்தாள்.
- ஓடும்