மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஏழு கடல்... ஏழு மலை... - 12

ஏழு கடல்... ஏழு மலை
பிரீமியம் ஸ்டோரி
News
ஏழு கடல்... ஏழு மலை

இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்

தந்தை வழி ( 1933 - மழைக்காலம் )

காத்தான் கொம்பையாவின் கையையும், பேச்சியம்மாளின் கையையும் இணைத்து வைத்த அதே நேரம் பெரிய வீட்டின் ஆட்கள் நாலைந்து பேர் மீண்டும் சந்தைக்குள் வந்தனர். பால்சாமி அவர்களைத் தடுத்து நிறுத்தினார்.

``சொன்னாக் கேக்க மாட்டீகளா?''

``உள்ளுக்குள்ள யாரோ ஒரு பொண்ணு நுழையுறத எங்காளு ஒருத்தன் பாத்துருக்கான். பேச்சியம்மா இங்குனதான் வந்துருக்கு.''

ஏழு கடல்... ஏழு மலை... - 12

``ஏ... இந்தாரு இங்க யாரும் வரல. பிரச்சன பண்ணாம கிளம்புங்க. அதான் அப்பவே சொல்லிட்டோம்ல நாளைக்கி காலைல பாண்டி கோயில் பஞ்சாயத்துல வச்சி பேசிக்கலாம்னு. திரும்பத் திரும்ப வந்து மல்லுக்கட்டுனா எப்படி?''

``இல்லைங்க, உண்மையாலுமே பாத்ததா சொல்றான். கொஞ்சம் நகந்து வழிய விட்டா நாங்களும் பாத்து உண்மையா இல்லையான்னு தெரிஞ்சிப்போம். சத்தியமா நாங்க பிரச்சன ஏதும் பண்ண வரல. நம்புங்க. பிள்ள அங்குன இருந்தா கையோட கூட்டிட்டுப் போய்டப் போறோம். அவ்வளவுதான். பிரச்சனலாம் பண்ண வரல. சின்ன வயசுப் பிள்ள... உங்க வீட்ல நடந்தா இப்படிப் பதற மாட்டீங்களா. சொல்லுங்க'' வந்திருந்த நால்வரில் ஒருவர் ஓங்கிய குரலில் பேசாமல் தணிந்த குரலில் பேசியது பால்சாமியின் மனதைக் கொஞ்சம் இளக்கியது.

``செரி வாங்க. நானும் வாரேன்.'' கையில் லாந்தரை வாங்கிக்கொண்டு அவரும் முன் நடந்தார்.

அவர்கள் வருவது தெரியாமல் இவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். காத்தான் இணைத்து வைத்த அவர்கள் இருவரின் கையையும் இறுக்கமாய்ப் பற்றியபடி நின்று கொண்டிருந்தார். பிணைத்த கைகளிலிருந்து கொம்பையா தன் கையை உருவிக்கொள்ள முயன்றுகொண்டேயிருந்தார்.''

``இது சரிப்பட்டு வராது காத்தான். அந்தப் பிள்ள இப்பதான் வாழ்க்கைய பறிகொடுத்திட்டு நிக்கிது. அதுக்குள்ள... வேண்டாம். சரிப்பட்டு வராது.''

``அதத்தாண்டா நானும் சொல்றேன். அந்தப் பிள்ள வாழ்க்கைய பறிகொடுத்திட்டு நிக்கிது. இப்போதான் நீ வாழ்க்க குடுக்கணும்... இப்போ அந்தப் பிள்ளைய அனுப்பிட்டா அவனுங்க என்ன பண்ணுவானுங்கன்னு யாருக்கும் தெரியாது பாத்துக்கோ... அதுக்கு மேல உன் இஷ்டம்''

அவர்கள் இருவரின் கைகளையும் பற்றியிருந்த தன் கையை சட்டென எடுத்துக்கொண்டார். இப்போது கொம்பையா இணைந்திருக்கும் கையிலிருந்து பேச்சியம்மாள் தன் கையை விலக்கிக்கொள்கிறாளா என்று கவனித்துக் கொண்டிருந்தார்.

பேச்சியம்மாள் தன் கரத்தை கொம்பையாவின் கரத்திற்குள்ளிருந்து உருவிக்கொள்ள எந்த பிரயத்தனமும் கொள்ளவில்லை. மாறாக கொம்பையாவின் கரத்தை இறுக்கமாகப் பற்றுவதுபோல் தெரிந்தது. கொம்பையா இப்போது தன் கரத்தை உருவ முயலவில்லை. பேச்சியம்மாள் கையைப் பற்றியபடியே நின்றார்.

ஏழு கடல்... ஏழு மலை... - 12

அதற்குள் பால்சாமியோடு அந்த நால்வரும் கொம்பையாவை நெருங்கி பத்தடி தூரத்திற்குள் வந்துகொண்டிருந்தார்கள்.

காத்தான் இருளுக்குள் கூர்ந்து கவனித்தபடியே ``யாருயா அது?'' குரல் கொடுத்தார்.

``யாரு காத்தானா, எப்போம் வந்தீரூ'' பால்சாமி எதிர்க்குரல் கொடுத்தபடியே முன்வந்தார். கொம்பையாவும் பேச்சியம்மாளும் கைகளைப் பிணைந்தபடி நிற்பதைப் பார்த்து பால்சாமி அதிர்ந்து நின்றார். அவர்களிடம் திரும்பி ``இந்தப் பிள்ளையா?'' என்று கேட்டார். அவர்கள் பதில் ஏதும் பேசாமல் அவர்கள் இருவரையும் உக்கிரமாய்ப் பார்த்தபடி நின்றார்கள். ``நான் அப்பமே சொன்னேன்ல. அவதான்னு'' கூட்டத்தில் ஒருவன் சொன்னான். பால்சாமியைப் பார்த்து அவர்கள் ``பிள்ளைய கூட அனுப்பி வைக்கச் சொல்லு. இல்லாட்டி இங்க என்ன நடக்கும்னு தெரியாது சொல்லிட்டேன்'' என்று சொன்னார். பால்சாமிக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. ``என்ன நடக்குதுனே தெரியலையே...'' தன் மனதிற்குள்ளேயே சொல்லிக்கொண்டார்.

``காத்தான், அவக வீட்டுப் பிள்ள. அனுப்பி வச்சிடும். நமக்கு ஏன் பொல்லாப்பு. தாலி அறுத்து நாலு நாக் கூட ஆகலயாம். மக்க மனுசர பகச்சிக்கிட்டு நமக்கு எதுக்கு இந்த வம்பெல்லாம்...''

``நீ அங்கிட்டுப் போ. இங்க பஞ்சாயத்துப் பேச ஆளு இல்லன்னு உன்னக் கூப்பிட்டாய்ங்களாக்கும். பாவம்யா அந்தப் புள்ள. சும்மா அவிய்ங்களுக்கு ஏந்துகிட்டு பேசிக்கிட்டுத் திரியாத. உன் சோலிய பாத்துக்கிட்டுப் போ'' முகத்திலறைந்தாற் போல் பேசினார்.

அதற்குள் ஒருவன் பேச்சியம்மாள் கையை இறுக்கமாய்ப் பிடித்து இழுத்தான். சட்டென சுதாரிப்பதற்குள் பேச்சியம்மாள் கொம்பையாவின் கரத்திலிருந்து தன் கரத்தை உருவிக்கொண்டு தரையில் விழுந்தாள். வேறொருவன் பேச்சியம்மாளின் தலைமயிரைக் கொத்தாகப் பிடித்துக் கொண்டான். பேச்சியம்மாள் எழுந்து நிற்க முயன்றுகொண்டேயிருந்தாள். கொம்பையா முடியிலிருந்து அவன் பிடியை விடுவிக்க முயன்றார். ``ஏ... விடுயா'' கொம்பையா மல்லுக்கட்டினார்.

``இந்தாரு தம்பி. அவன் உடன் பிறந்தவன், அந்தப் புள்ளய என்ன வேணும்னாலும் பண்ணுவான். நீ உன் சோலிமயிர பாத்துக்கிட்டுப் போயிடு சொல்லிட்டேன்'' கூட்டத்தில் வேறொருவர் கத்தினார்.

மீண்டும் அவன் தலைமுடியின் பிடியை இறுக்கினான்.

``ஏண்டி... வீட்டுக்கு வா. உன் காலத் தறிச்சிப் போடுறேன்'' பல்லைக் கடித்துக்கொண்டு கருவினான்.

இப்போது கொம்பையா வெறி வந்தவரைப் போல் கத்தியபடியே தலைமுடியைப் பிடித்தவனைத் தன் தலையால் அவன் வயிற்றை முட்டித் தள்ளிக் கீழே விழத் தட்டினார். அதே போல மற்ற மூவரையும் திசைக்கொன்றாய் பலம்கொண்டு எட்டிக் கீழே தள்ளினார். அவர்களுக்குள் சிறிய தள்ளுமுள்ளு நடந்தது. கொம்பையாவை நோக்கி ஒருவன் அருவாளை உயர்த்திப் பிடித்தபோது சந்தையிலிருந்த சம்சாரிகளும் யாவாரிகளும் ஓங்கி சப்தம் கொடுத்தபடியே அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள். நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த அவர்கள் நால்வரும் அந்த இடத்தை விட்டுக் கிளம்ப ஆயத்த மானார்கள். தன் உடலிலிருந்து மண்ணையும், வைக்கோல் தூசியையும் தட்டி விட்டபடியே அவர்கள் சந்தையின் நுழைவாசல் நோக்கி நடக்கத் துவங்கினார்கள். ``விடியுறதுக்குள்ள இந்த மொத்த சந்தையும் என்ன ஆகுதுன்னு பாருங்க'' எச்சரிக்கை விட்டபடியே அவர்கள் கிளம்பினார்கள். அதில் ஒருவன் பால்சாமியைப் பார்த்துச் சொன்னான். ``யோவ்... சொந்த ஜாதிக்காரன பகச்சிட்டு எவனுக்கோ உதவி பண்ணுறியா... நாளைக்கி இங்க உருள்ற மொத தல உன் தலதான்.''

பால்சாமி காத்தானிடம் கேட்டார். ``என்னயா இப்படிப் பண்ணிட்ட. இப்போ என்ன பண்ணுறது. அவன் காலைலக்குள்ள மொத்த ஊரையும் திரட்டிக்கிட்டு இங்க வந்துடுவான்.'' காத்தானும் செய்வது தெரியாமல் திணறினார்.இன்னும் கொஞ்ச நேரத்திற்குள்ளாகவே இந்த இடத்திலிருந்து இவர்கள் இருவரையும் கிளப்பி விட வேண்டும் இல்லையென்றால் அவர்கள் எப்படியும் இந்தப் பெண்ணை அழைத்துப் போய்விடுவார்கள் என நினைத்தபடியே பால்சாமியிடம் எப்படியாவது ஒரு வண்டிமாடு ஏற்பாடு செய்து தரமுடியுமா வெனக் கேட்டார். சந்தையின் முன்பக்க வாசலில் அவர்கள் இருப்பார்கள். பின்பக்கமாக மேட்டைத் தாண்டி வண்டியைக் கொண்டுவந்து விட்டால் இவர்கள் இருவரையும் தப்பிக்க வைத்துவிடலாம் என்று யோசனை சொன்னார்.

ஏழு கடல்... ஏழு மலை... - 12

பால்சாமிக்கு மனசு நிலைகொள்ளாமல் இருந்தது. வந்திருந்தவர்கள் தனது ஜாதிக்காரர்களாக இருப்பதால் இனி வரும் காலங்களில் குலதெய்வ கோயில் பூசை சடங்குகளிலிருந்து தன் குடும்பத்தைத் தள்ளிவைக்க வாய்ப்புண்டு. வேத்து ஜாதி மனிதர்களுக்கு ஆதரவாக சொந்த ஜாதி மனிதர்களைப் பகைத்துக்கொண்டால் தன் சொந்தபந்தம், சொக்காரன்கள் தன்னையும் தன் குடும்பத்தையும் பழிப்பார்கள். பால்சாமிக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. அவர் தடுமாறினார்.

காத்தான் ஒரு யோசனை கூறினார். ``மதுர கலெக்டர் பங்களாக்கு எப்படியாவது போய்ட்டா அங்க இருக்குற வெள்ளைக்கார ஆபீசருங்க இந்த மாதிரி காரியத்துக்கு உதவி பண்ணுவாங்க. இதத் தவிர வேற வழியில்ல. எல்லா ஜாதியிலயும் பொம்பளைங்க ரெண்டாம் கல்யாணம் பண்ணுறத இந்த நாட்டுல மோசமாத்தான் பாப்பாங்க. வெள்ளக்காரனுங்க அப்படி இல்ல. இல்லாட்டி இன்னொரு காரியம் பண்ணலாம். கிழக்கு வீதில இருக்குற கிறித்துவ தேவாலயத்துல அடைக்கலம் கேக்கலாம். அங்க கொஞ்சம் வெள்ளக்கார பாதிரிகளும், கன்னியாஸ்திரிகளும் இருக்காங்க.

பால்சாமி அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தபடியே நின்றார். அவருக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. இவ்வளவு சிறிய வயதுப் பிள்ளை பாவம் இன்னொரு திருமணம் பண்ணிக்கொண்டு சந்தோசமாக வாழ்ந்துவிடட்டுமே என்று அவர் மனசு சொல்லிக்கொண்டேயிருந்தது. அவர் வண்டியை ஏற்பாடு செய்ய சம்மதித்தார். அடுத்த அரை மணி நேரத்தில் மழைக்கு முந்தைய எறும்பைப் போல பரபரப்பாக இயங்கினார். வண்டியோடு பாதுகாப்புக்குச் செல்ல பத்து மனிதர்களையாவது திரட்ட நினைத்து எல்லோரிடமும் கேட்டார். ஆனால் யாரும் உடன் வர சம்மதிக்கவில்லை. அவர்களுக்கு வண்டி தரவும் சம்மதிக்கவில்லை. இப்போது நிறைய பேர் காத்தானை எதிர்த்துக் கொண்டு நின்றார்கள்.

``அவளுக்குக் கடவுள் குடுத்தது அவ்வளவு தான். படச்சவனுக்குத் தெரியாதா? யாருக்கு என்ன கொடுக்கணும்னு. இன்னிக்கி நீரூ ரெண்டாங் கல்யாணம் பண்ணி வெச்சீருனா நாளைக்கி எல்லா வீட்லயும் வெள்ள சீலக்காரிங்க இப்படித்தான் கிளம்புவாளுங்க. ஏன் எங்க வீட்டுப் புள்ளைங்களும் இப்படித்தான் கிளம்பும். பேசாம அந்தப் புள்ளய உரியவங்ககிட்ட ஒப்படைச்சிட்டு நீரூ உம்ம வேலையப் பாரும். இல்லாட்டி காலைல அந்தப் பிள்ள வீட்டுக்காரங்க வரும்போது நாங்களே ஒப்படைச்சிடுறோம். நீரு விலகிக்கோரும் சொல்லிட்டோம்.'' எல்லோரும் இந்தக் கருத்துக்கே ஆதரவாய் நின்றார்கள்.

சரி, காலைல பாத்துக்கலாம். நீங்க எல்லாம் போயி தூங்குங்க. கூட்டத்தைக் கலைத்தார்.

``எப்படியாவது இன்னிக்கி ராவுக்கு அந்தப் பிள்ளையையும், கொம்பையாவையும் எங்கயாவது அனுப்பிவிடப் பாப்பாரு. நாம சம்மதிக்கக் கூடாது. இன்னிக்கி யாரும் தூங்க வேண்டாம். முழிச்சிருந்து கண்காணிக்கணும்'' மற்ற எல்லோரும் ரகசியமாக முடிவெடுத்தார்கள். போனவர்கள் எந்த நேரமும் ஆட்களைத் திரட்டிக்கொண்டு திரும்ப வரலாமென்பதால், காத்தான் அடிக்கொருதரம் சந்தை வாசலைக் கூர்ந்து பார்த்தவாறே இருந்தார். சந்தையில் எல்லோரும் தூங்காமல் கண்காணிப்பதைத் தெரிந்துகொண்டார். இந்தக் காரியத்திற்கு ஆதரவாய் ஒருத்தர்கூட இல்லாமலிருப்பதை எண்ணி நொந்து கொண்டார். பால்சாமி மட்டும்தான் ஒரே ஆதரவு, அதுவும் காத்தானுக்கும் அவருக்கும் இருக்கும் பல வருட பழக்கத்தின் பொருட்டு மட்டுமே. என்ன செய்வதெனத் தெரியாமல் கையைப் பிசைந்தார். பேச்சியம்மாள் ``என்னால உங்களுக்கு ஏன் கஷ்டம்? சந்த வாசல்ல எப்படியும் என் ஜாதிக்காரன் நாலு பேரு நிப்பான். அங்க போயி நின்னா என் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போய் விட்டுடுவாங்க. அதான் விதினா அப்படியே வாழ்ந்திடுறேன்.'' கொம்பையா போகாதே என்பதுபோல் பேச்சியம்மாளைப் பார்த்தார்.

``இங்க பாரும்மா. நாங்க இருக்கோம்ல.அப்படிலாம் விட்ற மாட்டோம். கொஞ்சம் பொறுமையா இரு.’’ காத்தான் சந்தையை ஒரு சுற்று தன் கண்களால் ஓட்டினார். யாரும் தூங்குவதாக இல்லை.

பால்சாமியைத் தனியாக அழைத்துபோய் காதோடு வாய் வைத்து ரகசியமாக ஒரு யோசனை பகிர்ந்தார். பால்சாமி பதறிவிட்டார்.

``வேணாம் பிரச்னையாகிடும், சொல்லிட்டேன்.''

``பாத்துக்கலாம்யா. வேற வழியில்ல...'' அரை மனதாய் சம்மதித்தார். எங்கோ போய்விட்டு சிறிது நேரத்தில் வந்தார். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே சந்தை வாசலில் திமுதிமுவென கையில் ஆயுதங்களோடு நிறைய பேர் நுழைவது சப்தமும் இரைச்சலுமாய்க் கேட்டது... பால்சாமி அவர்கள் வந்துவிட்டார்களெனச் சொன்னார்.

காத்தான் தன் அருகிலிருந்தவர்களிடமிருந்து கைப்பற்றி வந்த அரிக்கேன் விளக்குகளின் தீ நாவை நன்றாகத் தூண்டிவிட்டு ஒவ்வொன்றாய் எல்லாத் திசைக்கும் எறிந்தார். அரிக்கேன் விளக்குகளின் கண்ணாடி சிமினி உடைந்து எண்ணெய் சிதறி தீ மளமளவெனப் பிடித்து எரிந்தது. சந்தை எங்கும் வைக்கோல் சிதறல்கள் கிடப்பதால் எல்லா இடங்களுக்கும் தீ புசு புசுவெனப் பரவியது. மாட்டுக்காரர்கள் தங்கள் மாடுகளை அவிழ்த்து அருகிலிருக்கும் நீரில்லாத கண்மாய்த் திடலுக்கு ஓட்டினார்கள். காத்தானுக்கு இதைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது. எல்லோர் கண்களையும் மறைக்க அவருக்கு வேறு வழி தெரியவில்லை. எல்லோரும் அவரவர் கால்நடைகளைக் காப்பாற்றுவதிலேயே குறிக்கோளாயிருந்தார்கள். சிறிது நேரத்தில் எல்லாக் கால்நடைகளும், மனிதர்களும் ஒரு சேதமுமின்றித் தப்பினார்கள். களேபரங்களுக்கு நடுவே கொம்பையாவும் பேச்சியம்மாளும் சந்தையின் பின்பக்கமாக வெளியேறி வேறு எங்கோ சென்றுகொண்டிருந்தார்கள்.

ஏற்கெனவே காத்தான் சொன்னது போலவே காட்டுப் பாதையில் சமணமலை நோக்கி நடந்தார்கள். வழியெல்லாம் இருவருக்குள்ளும் ஒரு வார்த்தை கொடுக்கல் வாங்கல் இல்லை. அமைதியாக இருவரும் ஒருவரை ஒருவர் அவ்வப்போது பார்த்துக்கொண்டார்கள். இருளுக்குள்ளும் அவர்கள் இருவரின் கண்களும் அவ்வளவு ஒளியேறி அமைதியும், நிம்மதியுமாயிருந்தது. அதிகாலை விடி வெள்ளி தென் கிழக்கில் நகர்ந்து நின்றது. நேரம் ஐந்தை நெருங்கியிருக்கும். தெரிந்த அரைகுறை வெளிச்சத்தில் இருவரும் மலையேறத் துவங்கினார்கள். மழைக் காலமென்பதால் ஒற்றையடிப் பாதையைப் புற்கள் வளர்ந்து மூடியிருந்தன. அந்த நேரத்தில் துயிலெழுந்த அதிகாலைப் பறவைகளின் சப்தமும், காலடியில் படும் புற்களின் ஈரமும், உடலையும் மனதையும் நனைத்து பெரிய நிம்மதி அளித்தது. ஆனாலும் பேச்சியம்மாளுக்கு உள்ளுக்குள் பயமிருந்தது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்து இருவரும் சமணமலையின் உச்சியை அடைந்தார்கள். உதய சூரியனின் மெல்லிய மஞ்சள் கீற்று வானிலிருந்து தெரியத்துவங்க. பூமியெங்கும் துலக்கமாய்த் தெரிந்தது. மலையடிவாரம் முழுக்க நாவல் மரங்களும், ஆலம், அரச மரங்களும், மா, வாழைகளும் பச்சை பிடித்துக் கிடந்தது. மலையில் அங்கங்கு சிறு சிறு சுனைகளும் தடாகமுமிருந்தன. அதில் பறவைகள் சில அன்றைய முதல் நீரை அருந்த வந்தன. இடைவெளிவிட்டு அங்கங்கே புற்கள் வளர்ந்துகிடந்தன. தூரத்தில் ஊர்களும், நீர்நிலைகளும் சிறியதாய்த் தெரிந்தன. மனித நடமாட்டமில்லாமல் அமைதியாய் உறைந்து கிடக்கும் இந்த இடம் பேச்சியம்மாளுக்கு விவரிக்க முடியாத உணர்வை அளித்தது. கொம்பையா பேச்சியம்மாளைப் பார்த்தபடி அருகில் நின்றுகொண்டிருந்தார். இவரோடு கிளம்பி வந்த பின் அவள் பேசும் முதல் வார்த்தை என்னவாக இருக்கும் என யோசித்துக் கொண்டேயிருந்தார். பேச்சியம்மாள் உதடு மொட்டு விரிந்தது. என்ன வார்த்தையாக இருக்குமென நினைத்தார். அப்போதுதான் பிறந்த சிறிய பறவையின் குரலில் கேட்பதுபோல் கேட்டாள். பசிக்குது. அந்தச் சிறிய வார்த்தை முடிவதற்குள்ளாகவே அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ``அழாத. இங்க இரு வந்திடுறேன்.'' கொம்பையா அடுத்த ஆறேழு நிமிடங்கள் பம்பரமாகச் சுழன்றார். தன் தோளில் கிடந்த துண்டை பெரிய பந்து போல் சுருட்டிக் கொண்டுவந்தார். அதில் விதவிதமான கனிகளிருந்தன. இந்த நான்கு நாள்களில் நாலு வாய் சோறு தவிர வேறு ஆகாரம் ஏதும் எடுத்துக் கொள்ளவில்லை. பசியாற உண்டாள். சுனையில் போய் கையைக் கோத்து வைத்து அந்தப் பள்ளத்தில் நீரை அள்ளி அள்ளி வறண்ட நிலத்தில் முதல் மழை விழுவதுபோல் அவ்வளவு வேகமாக உறிஞ்சிக் குடித்தாள்.

நான்கு நாளின் தாகம் அது. சிறிது தூரத்திலிருக்கும் மரத்தடிக்கு நடந்துபோனாள். அதன் கீழே தனது சீலை முந்தானையை விரித்துப் போட்டுத் தூங்கிவிட்டாள். நான்கு நாள்களாய் துளிக்கூட ஊண் உறக்கமின்றிக் கிடந்தவள். உலகத்தை மறந்து அப்படி ஒரு தூக்கம். கொம்பையா தடாகத்தில் நீராடி அதன் விளிம்பில் அமர்ந்திருந்தபடி பேச்சியம்மாளைக் கண்கொட்டாமல் பார்த்தபடியிருந்தார். பேச்சி பின் மதியம் நான்கு மணிக்குத்தான் எழுந்தாள்.அவள் முகம் சோர்வு நீங்கி தெளிவாக இருந்தது. உறக்கசொக்கில் கண்ணைக்கசக்கியவாறு சிறிய தடுமாற்றத்தோடு நடந்து தடாகத்திற்கு வந்தாள். ஒன்றும் பேசாமல் கொம்பையாவின் கண்களை சிறிது நேரம் பார்த்தபடியிருந்தாள். குனிந்து தடாகத்தில் நீர் அள்ளிக் கண்களை மூடிப் பருகினாள். பின் அதற்குள் அப்படியே குதித்து மூழ்கினாள். கொம்பையா பதறினார். நீருக்குள் ஆழ்ந்து போய் தரையைத் தொட்டாள். நிதானமாய் தன் தலையை வெளியெடுத்து மேலும் மேலும் அதுபோலவே மூன்று நான்கு முறை முங்கினாள். பின் கரையேறி ஈர உடையோடு கொம்பையாவின் அருகில் வந்து அமர்ந்தாள். அவரை நிதானமாகப் பார்த்துப் பேசினாள்.

``என்னோட இந்த துக்கம் எப்படி அழியும்னு தெரியல... இதுக்கு மேல எனக்கு அழத் திராணி இல்ல. ஆனா நான் சந்தோசமா இருக்கணும்னு தோணுது. வாழணும்னு ஆசையா இருக்கு. என்னக் கல்யாணம் செஞ்சுப்பீங்களா? எனக்கு யார்கிட்டயும் கெஞ்சப் பிடிக்காது. தோணுச்சு கேட்டுட்டேன். புருஷன் செத்து நாலு நாளுள்ள இப்படிக் கேக்கக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க. நான் படுக்கக் கூப்பிடல.கொஞ்ச நாளைக்கி உங்க தோளுல சாஞ்சிகிட்டா மட்டும் போதும். உங்க கை என் தலை முடி மேல ஆதரவா கிடந்தா போதும். வேற ஒண்ணும் வேண்டாம்.’’ கொம்பையாவின் தோள்மேல் சரிந்து கேவிக் கேவி அழுதாள். கொம்பையா பேச்சியின் தலையை வருடிக் கொடுத்தார்.

இருளத் துவங்கியது. கொம்பையா பேச்சியின் கையைப் பிடித்து அருகிலிருக்கும் சமணக் கோயிலுக்கு அழைத்துப் போனார். தடாகத்தில் கிடந்த அல்லி, தாமரை, காட்டரளி, வனப் பிச்சி இன்னும் சில வண்ண மலர்களைக் கொண்டு இருவரும் ஆளுக்கொரு மாலை தயாரித்தார்கள். சமண மலை குகையில் நிர்வாணமாய் நிற்கும் சமணத் துறவியின் சிலை முன் மாலை மாற்றிக் கொண்டார்கள்.

அன்று புத்த பூர்ணிமா. வானில் அகன்ற பெரிய பௌர்ணமி நிலவு தெரிந்தது. மலை உச்சியில் இருந்து பார்க்கையில் நிலவு இன்னும் பெரிதாய் மஞ்சளும் சிகப்புமாய்க் கலந்து அருகிலிருப்பதுபோல் தோன்றியது. பேச்சி கொம்பையாவின் அருகில் அவரின் தோளில் சாய்ந்தபடி நெடுநேரம் பார்த்தபடியிருந்தாள். தன் கைக்குள் கொம்பையாவின் கையை இறுக்கமாகப் பொத்திக்கொண்டாள். கொம்பையா நிலவின் வெளிச்சத்தில் பேச்சியைப் பார்த்தார். இப்போதுதான் சட்டை கழற்றிய பாம்பைப்போல் அப்படி ஒரு வழவழப்புடன் இருந்தாள். நேற்று வரை வேறு பெண் போலவும், இன்று வேறு பெண் போலவும் தோன்றினாள். இவளை நன்றாகப் பார்த்துக்கணும். இனி எதுக்காகவும் இந்தப் பிள்ள பூமில ஒரு துளி கண்ணீர் சிந்தக்கூடாது என்று எண்ணியவாறே. பேச்சியின் நெற்றியில் அழுந்த ஒரு முத்தம் கொடுத்தார். மழைத் தூறல் போடத் துவங்கியது. மாலை மாற்றிக்கொண்ட இடத்தின் அருகே நிறைய விழுதுகள் தொங்கும் ஒரு ஆல மரமும், சிறிய குகையும், நீர்ச் சுனையுமிருந்தது. அந்த இடம் ஓய்வெடுக்க சரியானதாக இருக்குமென நினைத்து அங்கு அழைத்துப் போனார்.

அதிகாலையில் பேச்சி கண் விழித்தபோது கொம்பையா அவள் முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். பேச்சி கொம்பையாவைப் பார்த்துச் சிரித்தாள். பேச்சி சிரிக்கும் முகத்தை கொம்பையா முதன்முறையாகப் பார்த்தார். தலையை வாரி கொண்டை போட்டுக்கொண்டு சுனையில் குளிர்ந்த நீர் அள்ளி முகத்தில் தெளித்தாள். அமைதியான இந்த எளிய மலை வாழ்க்கை போதுமென்று இருந்தது. கொம்பையாவைப் பார்த்துக்கொண்டே மலையை விட்டிறங்காமல் இங்கேயே இருந்து விடலாம் போலிருந்தது. கொம்பையாவின் தோள் துண்டில் தனது முகத்தைத் துடைத்துக் கொண்டாள். ``பசிக்கிது'' என்றவளை அங்கே அமர்த்திவிட்டு கொம்பையா வனத்திற்குள் நுழைந்தார். பேச்சி தன் வாழ்வின் மிகுந்த சந்தோசம் மிகுந்த நாளாக நேற்றைய நாளை நினைத்துக்கொண்டாள். நேற்று மாலை தான் அணிந்திருந்த கதம்பப் பூக்கள் சூடிய மாலையைக் கையில் எடுத்து மீண்டும் போட்டுக்கொண்டாள். மழைக்காலமென்பதால் பூக்களில் பெரிய வாட்டமில்லை. சந்தோசமாய் உடலும் உள்ளமும் குளிரக் குளிர சிரித்தாள். குகைக்குள் சுற்றி நீண்டும் அமர்ந்துகொண்டுமிருக்கும் பெயர் தெரியாத அந்தக் கடவுள்களை நோக்கி மீண்டும் மீண்டும் கைகூப்பி வணங்கினாள்.

யாரோ வரும் அரவம் கேட்டு திடுக்கிட்டு வழியைப் பார்த்தாள். செடிகளுக்குள் ஏதோ அசைவு தெரிந்தது. பயத்தோடும் எச்சரிக்கை உணர்வோடும் பார்த்துக்கொண்டிருந்தாள். மலையில் மொத்த சப்தமும் ஒடுங்கி அவள் அருகின் செடியில் தேனெடுக்கும் வண்டின் ரீங்காரம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. செடியின் அசைவு தீவிரமாய் அசைந்து அசைந்து நகர்ந்து வந்தது. அவளின் மன உணர்வு மேலும் பதற்றமாயிருந்தது. செடியின் மறைவிலிருந்து அந்த உருவம் வெளிப்படத் துவங்கியது. பேச்சியின் முகத்தில் தாங்க முடியாத சந்தோசம். தான் வளர்த்த காளை பாண்டிசாமி அவளைத் தேடிக்கொண்டு வந்திருந்தது. ஓடிவந்து அதன் கழுத்தைக் கட்டி அணைத்துக்கொண்டாள். காளை அவளின் முகத்தைத் தன் நாவால் நக்கியது.

``பாண்டிசாமி, என்னத் தேடிக்கிட்டு வந்துட்டியா. என் வயித்துல பொறக்காத பிள்ளடா நீ...'' அதன் முகம் முழுக்க முத்தமிட்டாள். செடிகளுக்குள்ளிருந்து மேலும் மேலும் வெவ்வேறு இடங்களில் அசைவுகள் தெரிந்தன. செடியின் உயரத்தைத் தாண்டி ஒரு குத்தீட்டியின் கூர்மை மட்டும் வெளியே தெரிந்தது. பேச்சி கத்துவதற்கு வாயைத் திறந்தாள். அதற்குள் பின்னாலிருந்து வந்த யாரோ ஒருவன் கத்த விடாமல் அவளின் வாயை இறுக்கப் பொத்தினான். செடியின் மறைவிலிருந்து பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆயுதங்களுடன் வெளியே வந்தார்கள். பேச்சியம்மாளின் குரலுக்கு பதிலாய் காளை கொம்பையாவை அழைப்பதுபோல் கனத்த குரலில் கத்தத் துவங்கியது... ம்ம்ம் மா... ம்ம் மா... நாலைந்து பேர் அதன் கழுத்தில் குத்தீட்டியால் ஓங்கி ஓங்கிக் குத்தினார்கள். கொம்பையாவிற்கு சப்தம் கேட்டு, சரசரவென ஒரு மரத்திலிருந்து கீழிறங்கி குகையை நோக்கி ஓடி வந்தார். அவர் அங்கு வந்த பொழுது. காளை துடிதுடித்தபடி ரத்த வெள்ளமாய்க் கீழே கிடந்தது. அதன் கழுத்திலும் வயிற்றிலும் ஆறேழு இடங்களிலிருந்து நீரூற்று போல் ரத்தம் மேலே பொங்கிப் பொங்கி வந்து கொண்டிருந்தது.

பேச்சியம்மாளைத் தேடினார். ``ஏலா... பேச்சி... பேச்சி...'' குரல் நெடுந்தூரம் போய் எந்த மறுகுரலுமில்லாமல் அமைதியாய் முடிந்தது. கொஞ்சம் தள்ளி நெஞ்சளவு வளர்ந்த புற்களுக்குள் அசைவும் துடிப்பும் தெரிந்து ஓடிப் போய் புற்களை விலக்கினார். அங்கே பேச்சியம்மாள் உடல் தலையில்லாமல் கழுத்தில் நேற்று போட்ட மாலையெல்லாம் ரத்தமாய் வழிந்தபடி துடித்துக்கொண்டிருந்தது. காடதிரப் பெருங்குரலெடுத்துக் கத்தினார்.

``பேச்சீ.....''

மலை உச்சிக்கு ஓடிப்போய் மனித நடமாட்டம் தெரிகிறதாவென நாலாபக்கமும் சுற்றிப் பார்த்தார். கிழக்குப் பள்ளத்தில் நுனியில் ரத்த ஈரமிருக்கும் இரும்பு ஆயுதங்களுடன் ஒரு பெரிய கும்பல் சென்றுகொண்டிருந்தது.

ஏழு கடல்... ஏழு மலை... - 12

``டேய்...’’ கொம்பையா கத்தினார். அவர்கள் மலை உச்சியை விழித்துப் பார்த்தபடி வேகமாய் நடக்கத் துவங்கினார்கள்.

தன் தலைமுடியை வேறொருவரின் கையில் பிடிக்கக் கொடுத்தபடி தலையோடு மட்டும் செல்லும் பேச்சி தன் திறந்த கண்களால் அந்த சமண மலையையும், வழியெல்லாம் பாறைகளில் சிலையாய் நிற்கும் சாமிகளையும், மரங்களையும் பறவைகளையும் பூக்களையும் பார்த்தவாறே சென்றாள்.

‘`வேறு எங்கெங்கோ இருந்து அழுதுகொண்டிருப்போம் நாம் ஒரே கண்களால்.’’

- கொம்பையா

- ஓடும்

(நீண்ட துயரத்தில் தந்தை வழி ரத்தம் தோய்ந்திருப்பதால் அடுத்த வாரம் சின்ன ஆசுவாசத்துக்குப்பிறகு மகன்வழியுடன் இணைந்து பயணிக்கும்.)