மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஏழு கடல்... ஏழு மலை... - 13

ஏழு கடல்... ஏழு மலை
பிரீமியம் ஸ்டோரி
News
ஏழு கடல்... ஏழு மலை

காத்தான் கொம்பையாவின் வாழ்க்கையைப் பற்றிப் பேசப் பேச நேரம் போனதே தெரியவில்லை.

‘`நான் உன்னைத் தேடிப் பயணித்தபோது

நீ என்னைத் தேடிப் பயணித்துக்கொண்டிருந்தாய்.’’

- பராரிகள்

தந்தை வழி (1951 - மழைக்காலம்)

காத்தான் கொம்பையாவின் வாழ்க்கையைப் பற்றிப் பேசப் பேச நேரம் போனதே தெரியவில்லை. நிமிர்ந்து வானத்தைப் பார்க்க முடியாமல் காலை வெயில் பளீரென முகத்தில் அடித்தது. நேரம் எப்படியும் ஏழு மணியைத் தாண்டியிருக்கும். ஆற்றின் அலை நரம்புகளில் வெயில் பட்டு தகதகவென வெள்ளியாய் ஜொலித்தது. கரியன் இடுப்பளவு நீருக்குள் நின்றவாறே கோவணத்தை உருவி அலசி மீண்டும் அதையே அணிந்துகொண்டான். எப்படியும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீருக்குள் கிடக்கிறான். கரையேறி வந்தபோது அவன் உள்ளங்கையும், கால் பாதமும் நீரில் ஊறி வெளுத்து சுருங்கிப்போயிருந்தது. இருவரும் ஈர வேஷ்டியை நீரில் அலசிப் பிழிந்து தலைக்குமேல் பிடித்துக்கொண்டு கோவணத்தோடு ஒற்றையடிப் பாதையில் பேசியபடி நடந்தார்கள். எதிர் வழியில் மாடுகளை ஆற்றை நோக்கி ஓட்டிக்கொண்டு போன சில ஆட்கள் காத்தானை அடையாளம் கண்டு பழக்கம் பேசினார்கள். சிறிது நேரத்திலேயே வேஷ்டியும், இடுப்புக் கோவணமும் காய்ந்துவிட்டது. வேஷ்டியை இடுப்பில் கட்டிக்கொண்டார்கள். நெடுநேரம் நீருக்குள் நின்றுகொண்டிருந்ததால் இருவருக்கும் பசி வயிற்றைக் கிள்ளியது.

ஏழு கடல்... ஏழு மலை... - 13

சந்தைக்குள் அவர்கள் நுழையும்போது சந்தை முழுக்க மாடுகளாலும் மனிதர்களாலும் நிரம்பிக் கிடந்தது. காத்தான் மரத்தடிக்கு வந்து சேர்ந்த போது பட்டறை வேலைக்கு நிறைய வண்டிகள் வந்து நின்றுகொண்டிருந்தன. அநேகம் வில் வண்டிகள்தான். அதில் பெரும்பான்மை மேலப்பாளையத்தில் பீடி கம்பெனி வைத்திருக்கும் முஸ்லிம் பெரியமனிதர்களின் வீட்டு வண்டிகள்.உடனே சரிசெய்யும்படியான சிறிய வேலைகளுக்கு மட்டும்தான் அவர்கள் வீட்டு வண்டிக்காரர்கள் இங்கே எடுத்து வருவார்கள். பெரிய வேலைகள் இருந்தால் காத்தான், அவர்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று பார்ப்பார். அப்படிப் போகும்போது அந்த வீட்டின் முற்றத்திலோ, பின்கட்டிலோ வண்டியைக் குடைசாய்த்துப் போட்டிருப்பார்கள்.

வண்டிக்காரர்களின் நடுவே ஒரு பட்டுக்கரை வேஷ்டியும் பட்டுச் சட்டையும் தனித்துத் தெரிந்தது. காத்தான் யாரென்று அருகில் போனார். அவரால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் நிச்சயம் ஏதோ ஒரு பெரிய இடத்து மனிதரைப்போலத்தான் இருந்தார்.

அருகிலிருந்தவரிடம் கேட்டார். ``பட்டும் பகட்டுமா யார் அது?''

``அவரத் தெரியலயா... காருக்குறிச்சியாரு''

``காருக்குறிச்சிகாரரா''

``நல்லா பாரும். காருக்குறிச்சி அருணாசலம். பெரிய நாதஸ்வர வித்வான்’’

``ஓ... அவரா....’’ கண்களை விரித்து ஆச்சர்யத் தொனியில் கேட்டார்.

``நம்ம பட்டறைக்கு என்ன விஷயமா வந்திருக்கார்னு தெரியலயே?''

கும்பிட்ட கையைக் கீழிறக்காமல் அருகில் போனார். ``தம்பி வணக்கம். சௌக்கியமா இருக்கீகளா?''

``நல்ல சௌக்கியம்... இப்போதான் மதராஸ்லேருந்து ரயில்ல வாறேன். ரயிலடிக்கி வண்டிக்காரன் கூப்பிட வந்தான். நம்ம வீட்டு வண்டிதான். சின்னதா வண்டில ஏதோ இடைஞ்சல் இருக்கு. கொடக்கு கொடக்குன்னு சத்தம் காட்டுது. சத்தம் காதுக்கு சகிக்க முடியல. அதவிட போறப்போ ஏதும் முறிஞ்சி கிறுஞ்சி வண்டி கொட சாஞ்சிரப்போகுதுன்னு வண்டிய இங்க விடச் சொன்னேன். கொஞ்சம் வெரசா பார்த்து சரிபண்ணிக் குடுத்தா நல்லாருக்கும்.’’

``இந்தா நொடிப்பொழுதுக்குள்ள முடிச்சிருவோம்’’ வண்டிக்காரன் பின்னாலிருக்கும் அவரின் துணிப்பெட்டியை எடுத்து மரத்தடியில் வைத்தான். காருக்குறிச்சியார் வண்டிக்கு வந்து துணி போட்டு மூடியிருக்கும் நாதஸ்வரத்தைக் கண்களில் ஒற்றி எடுத்தபடிக்குத் தன் கையில் வைத்துக்கொண்டார். காத்தானும் அவர் கையிலிருக்கும் நாதஸ்வரத்தை ஒருமுறை தன் இரு கரங்களால் தொட்டு முத்தமிட்டுக் கொண்டார்.

``இங்குன வடக்கு ரத வீதில ராம.கு.வி துணிக்கடைக்காரக வீட்டுக்கு வண்டி கோளாறு பாக்கப் போகும்போதெல்லாம் பாப்பேன். அந்த முதலாளி விஸ்வநாதய்யா கிராமபோன்ல உங்க நாதஸ்வர தட்டப் போட்டு கேட்டுக்கிட்டே இருப்பாரு. அவுக வீட்டுக்கு எப்பப் போனாலும் உங்க நாதஸ்வர சத்தம்தான். அவர எப்பமாது சந்திச்சிருக்கீகளா?''

``ம்... ரெண்டு மூணு தடவ கல்யாணவிசேஷத்துல, கோயில் விசேஷத்துல சந்திச்சிருக்கேன். ரெண்டொரு வார்த்த பேசிருக்கோம்.''

``ம்...''

``உங்களப் பாத்தா சந்தோசப்படுவாக. துணிக்கடக்காரக வீட்டுக்குச் சொல்லியார ஒரு எட்டு ஆள் விடட்டுமா?’’

``வேண்டாம். சொந்த வேலையா வந்தேன். அடுத்தவாட்டி சாவகாசமா பாத்துக்குறேன்.’’

``ஆகட்டும்.’’

கரியன் காருக்குறிச்சியாரின் தோற்றத்தையும், அவரின் செல்வாக்கையும், அவருக்கிருக்கும் மரியாதையையும் ஆச்சர்யமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான்.

தணிந்த குரலில் கரியனிடம் கொம்பையாவை அழைத்து வருமாறு சொல்லிவிட்டார்.

ஏழு கடல்... ஏழு மலை... - 13

காத்தான் வண்டியைக் கவனித்தார். தெப்பக்கட்டையிலும், சக்கரத்தின் இரும்புப் பட்டையிலும் வேலையிருந்தது. காருக்குறிச்சியார் பிரயாண களைப்பிலிருந்தது அவர் முகத்தில் நன்றாகத் தெரிந்தது. ``அவசரத்துக்கு சரி பண்ணிடுறேன். சத்தம் தொந்தரவில்லாம சரி பண்ணித் தாறேன். ஆனா சீக்கிரமே வண்டிய பிரிச்சி நிச்சயம் வேல பாக்கணும். எனக்குக் கூலி கிடைக்குமேன்னு சொல்லல.''

``நான் மதராசுக்கு ரயில் ஏறுனதும் வண்டிய உங்க பட்டறைக்கு எடுத்துவாரச் சொல்றேன்.''

``ஆகட்டுங்க''

காத்தான் மொத்த வண்டிகளையும் நிறுத்திவிட்டு இவர் வண்டி வேலையை மும்முரமாக கவனிக்கத் துவங்கினார். வேறு வண்டிக்காரர்கள் கோபித்துக் கொள்ளவில்லை. அடுத்த அரை மணி நேரத்தில் சடசடவென வேலையை முடித்துக்கொடுத்துவிட்டார்.

காருக்குறிச்சியார் எவ்வளவு கூறியும் கூலியாக ஒத்தக் காசு பணம் வாங்க மறுத்துவிட்டார். ``வண்டி சும்மா நிக்கும் போது அனுப்புங்க. பிரிச்சி மொத்த வேலையையும் நானே முன்ன நின்னு சுத்தமா பண்ணித் தாறேன். ஆனா அதுக்கும் உங்ககிட்ட சல்லிக்காசு வாங்கமாட்டேன், சொல்லிட்டேன்.’’

கூலி வாங்கிக்காட்டி வண்டிய அனுப்பமாட்டேனென்று காருக்குறிச்சியாரும் சொல்லிவிட்டார்.

``அப்படினா கூலியா உங்க நாதஸ்வரம் வாயில வச்சி ஊதுற சீவாளில ஒண்ணு தாரீங்களா?''

சுற்றி நின்றவர்கள் சீவாளி என்பது ஏதோ விலையுயர்ந்த பொருள் என்று நினைத்துக்கொண்டார்கள்.

``சீவாளி வில அரையணா. உம்ம கூலி என்ன அரையணாவா?’’

``உங்க வாயி எச்சில்ல பட்டுப் பட்டு ஊறிப்போன சீவாளிக்கி இந்த உலகத்துல வில வைக்க முடியாது''

காருக்குறிச்சியார் வேறு வழியில்லாமல் தான் சீவாளி போட்டு வைக்கும் பட்டுச் சுருக்கை எடுத்தார். அதில் நாற்பது, ஐம்பது சீவாளி கிடந்தன. அதில் இரண்டை எடுத்து காத்தானிடம் நீட்டினார். இந்தக் கோரைத்தட்டைல செஞ்ச சீவாளிக்கித்தான் காத்தான் இவ்வளவு பேசினாரா என்பதுபோல் சுற்றி நின்றிருந்தவர்கள் பார்த்தார்கள்.

கொம்பையாவைக் கூப்பிடப் போன கரியனை ஆளைக் காணவில்லை. தனது பட்டறைப் பையன்கள் யாரையாவது அனுப்பி கூப்பிட்டு வரச் சொல்லலாமா என நினைத்தார். பெரிய மனிதரைக் காக்க வைக்கக்கூடாது என்று நினைத்து காருக்குறிச்சியாரை வழியனுப்பிவைத்தார்.

காருக்குறிச்சியார் அப்போதுதான் வண்டியிலேறி நாலுருட்டு வண்டி உருண்டிருக்கும். கொம்பையா அங்கு வந்து சேர்ந்தார்.

``எங்க போன. யாரு வந்தா தெரியுமா?''

``யாரு?''

``வா...’’ கொம்பையாவின் கையைப் பிடித்து கொஞ்சம் தூரத்தில் போகும் வண்டியைக் காட்டினார். ``பின்னால் உட்கார்ந்து போறது யாரு தெரியுதா?’’

``தெரியலையே...''

``காருக்குறிச்சி அருணாசலம். பெரிய நாதஸ்வர வித்வான்.''

``ஓ''

அதற்குள் காருக்குறிச்சியாரின் வண்டி திரும்பி மீண்டும் அவர்கள் நிற்கும் இடத்தை நோக்கி வரத் துவங்கியது. ``இங்க பக்கத்துல ஏதாவது கோயில் இருக்கா?''

``ஒரு மைல் போனா இருக்கு. பக்கத்துலன்னா பழைய மசூதிதான் இருக்கு.''

``சரி வாங்க.” அவர் கீழே இறங்கி நடந்தார்.

காத்தான் ஒன்றும் புரியாமல் முழித்தார். ஆனால் மறு பேச்சில்லாமல் அவரோடு நடந்தார். கொம்பையாவுக்குக் கண்களால் சைகை செய்து உடன் அழைக்க, அவரும் கரியனோடு நடந்தார். என்ன நடக்கப் போகிறதோவென ஆர்வத்தோடு வேறு சிலரும் அவர்களோடு நடந்தார்கள். மேலப்பாளையம் பெரிய குப்தா மசூதியை நோக்கி கும்பலாய் மனிதர்கள் வருவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் முகத்தில் சிறு குழப்பத்தோடு அங்கே குழுமத் துவங்கினர்.

மசூதியின் வாசலுக்கு வந்த காருக்குறிச்சியார் வண்டியிலிருந்த தன் நாதஸ்வரத்தை எடுத்து மல்லாரியிலிருந்து வாசிக்கத் துவங்கினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எல்லோரும் மெய்மறந்து மயங்கிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். வாசித்து முடிந்ததும் நிறைய முஸ்லிம் பெரியவர்கள் அவருக்குக் கைகூப்பி மரியாதை செய்தார்கள். தங்கள் வீடுகளுக்கு அழைத்தார்கள். காருக்குறிச்சியார் சிரித்தபடியே எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு வண்டியில் ஏற வந்தார். காத்தான் அவரைக் கைகூப்பி வணங்கினார். காருக்குறிச்சியார் அவரைத் தனியாக அழைத்துப் போய் ``நீங்க பணம் வேண்டாம்னு சொல்லிட்டீங்க. ஆனா எனக்கு ஏதோ உங்களுக்குக் கடன்பட்டுட்டுக் கிளம்புனது மாதிரி தோணுச்சி. நீங்க என் இசைக்கி பெரிய ரசிகரும்கூடத்தான, அதான் உங்களுக்காக வாசிச்சேன். வாசிக்கணும்னா சிவன் கோயிலோ, பெருமாள் கோயிலோதான் இருக்கணும்னு அவசியம் இல்லல. எல்லாமே சாமிதான, அதான் இங்குனயே வாசிச்சேன். அப்போ நான் கிளம்புறேன்.’’ கொம்பையா உட்பட எல்லோரும் அவரை ஆச்சர்யமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஏழு கடல்... ஏழு மலை... - 13

கூட்டம் கலைந்து எல்லோரும் சந்தைக்கும், வீட்டுக்குமாக நடக்கத்துவங்கினார்கள். ஒரு பேச்சு சப்தம் இல்லை. மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்போல் எல்லோரும் அமைதியாக நடந்துபோனார்கள். மரத்தடிக்கு வரும்வரை இவர்கள் மூன்றுபேரும்கூட எதுவும் பேசவில்லை. மூவருக்கும் காதில் சந்தை இரைச்சல் எதுவும் விழவில்லை. நெடுநேரத்திற்கு காருக்குறிச்சியாரின் நாதஸ்வர ஓசைதான். ஆளுக்கொரு திக்கில் மரத்தடியில் அமர்ந்தார்கள். மலையரசன் மும்முரமாக சந்தை வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்த்துவிட்டு மரத்தடிக்கு வந்தான். அவன் கையில் இலை போட்டு மூடிய ஒரு குத்துச் சட்டியில் கேப்பைக் களி இருந்தது. மூவரும் கனவில் சஞ்சரிப்பதைப் போல் இருப்பதைக் கண்டு அவர்களை சப்தமாய் அழைத்தான். அதன்பிறகே மூவரும் உஷாருக்கு வந்தார்கள். ``என்ன மனுஷன்யா...கொன்னுட்டான்'' காத்தான் சொன்னார். கொம்பையா ஆமோதிப்பதுபோல் தலையாட்டினார்.

கொம்பையா ஒரு யாழ்ப்பாணச் சுருட்டையெடுத்துப் பற்ற வைத்தார். ``சாப்பிடுற நேரம் இப்போ ஏன் சுருட்டு?''

வழக்கமாய் மலையரசன் இப்படிச் சொன்னால் ``உனக்கென்ன, உன் சோலியப் பாரு'' என்பதுபோல் ஏறிட்டுப் பார்ப்பார். ஆனால் இப்போது அப்படியில்லை. அவர் முகத்தில் அமைதியும், சிறு கிறக்கமுமிருந்தது. அவரின் தலை லேசாக ஆடியபடியேயிருந்தது. அவர் மனசுக்குள்ளிருந்து இன்னும் அந்த நாதஸ்வர ஓசை வெளியேறவில்லை. காத்தானுக்கு குத்துச்சட்டியைப் பார்த்ததும் மீண்டும் பசி ஞாபகத்துக்கு வந்தது. கொம்பையாவை அவசரப்படுத்தினார். கொம்பையா சுருட்டுக் கங்கைத் தன் கால் பாதத்தில் வைத்து அணைத்து விட்டு அப்புறம் ஆகுமென அரை சுருட்டை எடுத்து மரப் பொந்தில் செருகி வைத்துவிட்டு குத்துச்சட்டியைத் தன் கையில் வாங்கினார். ``நீ உக்காரு. நான் போடுறேன்.'' மலையரசனை அமர்த்தினார். ``நீங்க இருங்க, உங்களுக்குக் கை வலி வேற இருக்கும். நான் போடுறேன்.'' ``அதெல்லாம் ஒண்ணும் இல்ல உக்காரு.’’ மறுபேச்சில்லாமல் மலையரசன் அமர்ந்தான். மலையரசன் முழு இலையைத் துண்டு போட்டு எடுத்து வந்திருந்தான். பெரிய அகப்பை போலிருக்கும் தன் கையால் களியை அள்ளிப் பெரிய உருண்டை திரட்டி ஒவ்வொரு இலைக்கும் வைத்தார். பின் அதன் மேல் எருமைத் தயிர் விட்டு, கடிக்க சிறிய வெங்காயமும் பொரிந்த சீனி அவரை வற்றலும் வைத்தார். கரியனைப் பார்த்துச் சொன்னார் ``சாப்பிடு, நல்லா வயித்துக்குச் சாப்பிடு.'' கொம்பையாவின் மேல் தகப்பன்உணர்வு மிதமிஞ்சித் தெரிந்தது. காத்தான் கேட்டார் ``என்னடா ரெம்ப நாளக்கி அப்புறம் ரெம்ப சந்தோசம் தெரியுது முகத்துல?'' உண்மையில் இன்று கொம்பையா அதே உணர்வை நிறைய உணர்ந்தார். ``அதெல்லாம் ஒண்ணும் இல்ல. இலயப் பாத்து சாப்பிடுங்க'' பொய் அதட்டலாய் காத்தானை அதட்டினார்.``நீங்க மூணு பேரும் இப்படியே இருந்துடணும்டா.''

``நீரு கம்முனு இரும். அவிய்ங்க சின்னப்பயலுக. கல்யாணம் கில்யாணம் பண்ணிக்கிட்டு வேற திசைக்கிப் போக வேண்டாமா? நம்மள மாதிரி சந்த சந்தயா சுத்திக்கிட்டு இந்த நாடோடிப் பொழப்பு இவிய்ங்களுக்கு வேண்டாம். மலையரசனுக்குப் பறக்கக் கத்துக்குடுத்தாச்சி. இப்போ இவன் வந்து சேந்துருக்கான். இவனுக்கும் கத்துக் கொடுத்துட்டா இவனும் பறந்து எங்கயாவது போயி பொழச்சிப்பான்.''

கரியனுக்கு மனசுக்குள் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

``உங்களத் தேடிட்டு வந்திருக்காங்க'' சந்தைத் தரகர் ஒருவர் அவர்களை அங்கே நிறுத்திவிட்டுக் கிளம்பினான். யாரோ இரண்டு பேர் வந்திருந்தார்கள். அசலூர்க்காரர்கள் என்பது அவர்கள் முகத்தைப் பார்க்கும்போதே தெரிந்தது. அதில் ஒருவர் நெடு நெடுவென நனைந்த பனை மர நிறத்திலிருந்தார்.

``கொம்பையா...''

``நாந்தான். சொல்லுங்க, என்ன காரியமா வந்தீக?''

``வணக்கம் அண்ணாச்சி. எம் பேரு ஆத்தியப்பன். விருதுநகர்லேருந்து வாறேன்.''

``ம்''

``நமக்குப் பஞ்சுப் பேட்டைல நாலஞ்சி கிட்டங்கியிருக்கு. பெரிய யாவாரம். இந்த வருஷந்தான் யாவாரம் கொஞ்சம் சூடு பிடிக்குது. எல்லா ஊர்லயும் பருத்திக்கு நல்ல டிமாண்ட் இருக்கு. பருத்தி வாறதும், போறதும் ரயிலடி இருக்குற ஊருக்குப் பிரச்னையில்ல. ரயிலடி இல்லாத ஊர்லேருந்து பருத்தி கொண்டு வரப் போக சிரமமாய் இருக்கு. ஏற்கெனவே கூலிக்குத்தான் மாடும் வண்டியும் பிடிச்சுக்குறோம். இப்போ வண்டியும் மாடும் சொந்தமா வாங்குனா தேவலன்னு தோணுது.''

``ம்''

``ஒரு பத்துச் செட்டு மாடு தேவப்படுமா?''

``இல்லிங்க அண்ணாச்சி. நூத்தம்பது செட்டு மாடு வேணும். எழுபது பார வண்டி. பத்து மாடு ஒண்ணு மாத்தி ஒண்ணு சும்மா இருந்துக்கட்டும்.’’ எல்லாரும் ஆச்சர்யமாய்ப் பார்த்தார்கள். கொம்பையா வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. வந்தவர்மேல் அவருக்கு முழுமையாக நம்பிக்கை வரவில்லை. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுத் தனது மேல் சட்டையை உயர்த்தி இடுப்பைச் சுற்றிக் கட்டியிருந்த துணியைப் பிரித்துக் காட்டினார். பத்து நூறு ரூபாய்க் கட்டுகளிருந்தன.

கொம்பையாவிற்கு அவர்மேல் இப்போது நம்பிக்கை வரத்துவங்கியது. உடன் வந்திருந்தவரைக் கேட்டார் ``இது யாரு?’’

``இது அந்தோணி. உசிலங்குளத்துக்காரரு. பொழைக்கன்னு நம்ம ஊருக்கு வந்தவரு. நம்பிக்கையான மனுஷன். அதான் கூடவே இழுத்துப் போட்டுக்கிட்டேன்.''

``ம்... சரி இப்போ உங்களுக்கு நான் என்ன பண்ணணும்?''

``அதான் சொன்னேனே. மாடு வாங்கணும். நீங்க பாத்து வாங்கிக் குடுத்தா சரியா இருக்கும்னு சொன்னாங்க. சிவகாசி பட்டாசு கம்பனிகாரங்க வீட்டுக்கு நீங்கதான் தேனிப் பக்கம் சந்தைலேருந்து பிடிச்சிக் குடுத்தீங்கன்னு சொன்னாங்க.''

``ம்... எனக்குக் கொஞ்சம் கைல அடிபட்டிருக்கு. புண்ண ஆத்தணும்.’’

``உங்கள நம்பித்தான் வந்திருக்கோம் அவ்வளவு தூரம்.''

``ம்... அங்குன கன்னிச்சேரிபுதூர்ல நல்லதா கிடைக்கலயா?''

``அதுலயும் ஒரு நாலு செட்டுக்கு எடுத்தோம்.அதுக்கு மேல அமையல. அங்கிட்டு என்ன வானம் பாத்த பூமி. பச்சய பாக்குறதே அபூர்வமா ஆகிப்போச்சி. இங்கன்னா காடு கர, தாமிரபரணி தண்ணின்னு கெதியா இருக்கு. மாடுகளும் நல்லா தெளிச்சியா இருக்கு.''

``செரி... இங்குன ஒரு இருபது முப்பது செட்டுக்குப் பாப்போம். அப்படி இல்லாட்டி கோவில்பட்டி பக்கம் ஒரு ஜமீன்ல ரெண்டு மந்த மாடு நிக்கிது. பங்காளிச் சண்டைல அத்தனையையும் வித்து முடிக்கப் போறாங்களாம். இன்னிக்கி காலைல சந்தைக்கி வந்த யாவரிங்க சொன்னாங்க. யாவாரிங்க கேட்டதுக்கு நாலு அஞ்சிலாம் தர முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம். அங்க போயி பாக்கலாமா?’’

ஆத்தியப்பன் சந்தோஷமடைந்தார். எல்லோரும் கிளம்பத் தயாரானார்கள்.

``பாதைகள் ஒருபோதும் பயணத்தைத் துவக்குவதில்லை; பயணம் செய்ய முற்பட்டவர்களால்தான் பாதைகள் துவங்கின.''

~ பராரிகள்

மகன் வழி ( 1977 - மழைக் காலம் )

சாப்பிட்ட இலைகளை எடுத்து எல்லோரும் பன்றிக்கு உணவாகப் போட்டார்கள். கங்கையனைப் பார்க்க வந்திருந்தவர்கள். நெடு நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் போனதும் கங்கையன் வேம்புவை சப்தமிட்டு அழைத்தார். சூரவேல் மரத்தடியிலமர்ந்து பார்த்துகொண்டேயிருந்தான். வேம்பு எதற்கோ சரி சரி என்று சொல்லித் தலையாட்டுவதுபோல் தெரிந்தது. கங்கையனிடம் பேசி முடிந்த கையோடு நேராக சூரவேலைப் பார்க்க வந்தாள். ``சித்தப்பா உனக்கு ஒரு வேல குடுத்திருக்காரு... மொத வேல. கூடப் போனா போதும்.''

``ம். என்ன வேல?''

``சொல்லுவாங்க. பொழுதடைய கிளம்பணும். தூக்கம் வந்தா இப்போவே போயி தூங்கிக்கோ. ராவெல்லாம் முழிச்சிருக்க வேண்டியிருக்கும்.''

ஏழு கடல்... ஏழு மலை... - 13

``இப்போ எனக்குத் தூக்கம் வராது.''

``யேன்?’’

``நீ அங்கிட்டும் இங்கிட்டும் சுத்தித் சுத்தி வரும்போது எனக்கு எப்படி தூக்கம் வரும்?''

``சரி அப்ப நீ தூங்காம கொட்ட கொட்ட முழிச்சிக்கிட்டு இரு. நான் போயி தூங்குறேன்.''

``இந்த மதியத்துலயா?''

``நேரம் கிடைக்குறப்போ தூங்கிக்கணும்.''

``எனக்குத்தான் இன்னிக்கி ராவுக்கு வேல இருக்கு. நீ ஏன் தூங்கப் போற?''

``ம்... எனக்கும்தான் வேல இருக்கு.’’

``என்ன வேலைக்குப் போறோம்?''

``தூங்கு. அது கிளம்புறப்போ சொல்லுவாங்க'' வேம்பு அங்கிருந்து கிளம்பினாள்.

அவளைப் பார்த்தபடியே சூரன் நெடுநேரம் தூக்கம் வராமல் பார்வையை உருட்டி சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடியே புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தான். எப்போது உறங்கினான் என்பது தெரியவில்லை. எழுந்து பார்க்கும்போது முழுக்க இருட்டியிருந்தது. நேரம் என்ன என்பது தெரியவில்லை. செங்கல் அடுக்கும் இடத்தில் வேம்புவின் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. எழுந்து அவளிருக்கும் திசைக்கு நடந்தான். வேம்பு அங்கு பம்பரமாகச் சுழன்று வேலை பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு இடத்தில் மூன்று நீளமான டார்ச் லைட்டுகள், இரண்டு சூரிக் கத்திகள், ஒரு வேல்கம்பு, கதிர் அறுக்கும் அருவா ஒன்று. எல்லாவற்றையும் ஓரிடத்தில் வரிசையாக அடுக்கச் சொல்லி யாருக்கோ கட்டளையிட்டுக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு டார்ச்சாக எடுத்து தூரத்தில் செடிகளுக்குள் அடித்து எவ்வளவு தூரம் வெளிச்சம் போகிறது என சோதித்துப் பார்த்தாள். ஒரு டார்ச்சை சூரன் வரும் திசைக்கு வேண்டுமென்றே அடித்துப் பார்த்தாள். சூரனின் முகத்தில் வெளிச்சம் பட்டு, புறங்கையை எடுத்துத் தன் கண்களுக்குக் குறுக்காக வைத்து மறைத்தான். அவள் சிரித்தாள்.

ஏழு கடல்... ஏழு மலை... - 13

வாளியிலிருந்த நீரைக் கைகளில் மொண்டு உறக்கக் கலக்கம் போக முகத்தைக் கழுவினான்.

``என்ன தூங்கி எந்திரிச்சிட்டியா... வேகமா சாப்பிட்டு முடி. இப்போ வண்டி வந்திடும். கிளம்பணும்.''

எங்கு என்பதுபோல் பார்த்தான்.

``முருகண்ணே எல்லாத்தையும் தயாரா வச்சிக்கோங்க. நான் சாப்பாடு போட்டுட்டு இந்தா வந்திடுறேன்.’’ அருகிலிருந்தவர் அவளை ஒருமாதிரியாகப் பார்த்தார்.

``ஏண்ணே ஒரு தினுசா பாக்குறீங்க. சாப்பாடுதான் போடப் போறேன். நீங்க வேலயப் பாருங்க. இன்னிக்கிதான் முத வேல. வெவரம் சொல்லணும்.''

மதியம் சாமி கும்பிட்டுப் படைத்த விருந்துச் சாப்பாட்டை அவனுக்கு மட்டும் தனியாக எடுத்து வைத்திருந்தாள்.

தட்டில் சாப்பாடு வைத்தாள். ``ஏன், வாழ இல இல்ல?’’

``இது என் தட்டுதான். இதுல போட்டு சாப்பிடு. நாளைக்கி யாராவது திருநவேலிக்கி போனா வாங்கியாரச் சொல்வோம்.''

``உன் தட்டுனா சாப்பிட்டுக்குறேன்.''

``தட்ட சாப்பிட்டுடாத. கீழ வையி.'' சாதம் போட்டாள்.

ஏழு கடல்... ஏழு மலை... - 13

ஒரு நிறை கரண்டி சாதம் வைத்துக் குழம்பு ஊற்றி அவன் பிசைவதற்குள்ளாக அவசரப்படுத்தினாள்.

``வேகம்... வெக்கு வெக்குனு சாப்பிட்டுட்டுக் கையக் கழுவு.''

``இது எப்படி எனக்குப் போதும். இன்னும் கொஞ்சம் சாதம் போடு.''

``அறிவு இல்ல... வயிறு முட்ட சாப்பிட்டா எப்படி வேல பாப்ப?''

``இப்போ என்ன வேலைக்கி போகப் போறோம்.''

``இருளி விட. வயிறு முட்ட சாப்பிட்டா யாராவது விரட்டுனா எப்படி ஓடுவ?''

``நான் ஏன் ஓடணும்? இந்த வேலக்கி நான் வரல.''

``சரி. யாராவது என்ன விரட்டுனா நீ காப்பாத்த வர வேண்டாமா?''

அவள்மேலிருந்து பார்வையை நீக்காமல் உறைந்து பார்த்தபடியிருந்தான்.

வெளியே ஏதோ வாகனம் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. அவள் சட்டென அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு ஓடினாள். அவன் சாப்பிட்டுக் கை கழுவிவிட்டு வெளியே வரும்போது வேம்பு பன்றியைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்துக் கொண்டு வந்தாள். அவள்தான் வளர்த்தவள் என்பதால் பன்றி எந்த முரண்டுமில்லாமல் அமைதியாக வந்தது. பன்றியை வண்டியில் ஏற்றினார்கள். மேலே மூடியிருக்காமல் பாரம் ஏற்றும் அந்தச் சிறிய வேனில் எல்லோரோடும் சூரனும் ஏறி அமர்ந்தான். வண்டி நகர்ந்தது. தலையை உயர்த்தி வானில் நிலாவைப் பார்த்தபடி வந்தான். ‘ச்சே... என்ன வாழ்க்க இது’ என்பது போல் தோன்றியது. யதார்த்தமாய்த் திரும்புகையில் வேம்பு அவனை வைத்த கண் எடுக்காமல் பார்த்தபடி வந்தாள்.

- ஓடும்